நல்வேளைக்கீரை!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 15 Second

வேளைக் கீரை என்பது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் சிறு பூண்டு(செடி) வகை ஆகும். இதன் இலைகள் பச்சையாகவே உபயோகப்படக் கூடியது. இச்செடியிலிருந்து ஒருவித காரமான எண்ணெய் எடுப்பதுண்டு. இந்த எண்ணெய் எளிதில் ஆவியாகக் கூடியது. இதற்கு பூண்டு அல்லது கடுகெண்ணெயின் குணம் உண்டு. இதன் இலைச்சாற்றைப் பிழிந்து காதுகளில் இரண்டொரு சொட்டு விட சீழ் வடிதலும் காது வலியும் குணமாகும். குடலேற்றம் நீக்குவதற்கும் இது பயன்படும். வயிற்றுக்கிருமிப் பூச்சிகளை விரைந்து கொல்லும்.வேளைச்செடியின் சூரணம் குழந்தைகளுக்கு கொடுப்பதுண்டு. வெள்ளைப் பூண்டு சேர்த்து கஷாயம் போல் காய்ச்சி அதினின்று தயாரித்த எண்ணெயை பெருநோய் எனப்படும் குஷ்டம் முதலான தோல் நோய்களுக்கு உபயோகப்படுத்தலாம். இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுழுக சீதளம், வாத சிலேத்துமம், பல்வேறு தோஷங்கள், வாயு ஆகியன விலகிப் போகும். நல்வேளை என்னும் ஒருவித வேளையின் வேரால் பல் துலக்க பற்கள் ஆரோக்கியம் பெறும். முகமும் வசீகரம் பெறும். வேளைப் பூக்கொண்டு தீநீர் வைத்துக் குடிக்க மார்பு சளி, வயிற்று உபாதைகள், ஜலதோஷம் நீங்கிப் போகும்.

வேளைக் கீரையின் வகைகள்தை வேளை, நல்ல வேளை, நாய் வேளை, முக்கா வேளை, கொள்ளுக்காய் வேளை ஆகியன இதன் வகைகள் ஆகும். இவற்றுள் நல்ல வேளையும் நாய் வேளையும் சாதாரணமாக எங்கும் கிடைக்கக்கூடியன ஆகும்.நல் வேளை கீரைநல்வேளை என்னும் இம்மூலிகைச் செடி வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் எகிப்தை தாயகமாகக் கொண்டது என்பர். Cleome viscosa என்பது இதன் தாவரப் பெயர் ஆகும். Dog mustard என்பது இதன் ஆங்கிலப் பெயர். பசுகந்தி, அஜகந்தா என்று வடமொழியில் குறிப்பிடுகிறார்கள்.தமிழில் இதை வேளை என்றும், நல்வேளை என்றும் அழைப்பர். மருத்துவத்தில் நல்வேளைஆயுர்வேத மருத்துவத்தில் குன்மம் என்னும் கட்டிகள், வீக்கங்கள், அஸ்திலா, கிருமி ரோகம், அரிப்பு காது நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தப் பயன்படுத்துவர். கென்யாவைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இதன் இலைகளை அரைத்து சாறு எடுத்து அல்லது தீநீராய்க் காய்ச்சிக் குடிப்பதால் ஸ்கர்வி போன்ற நோய்களைத் தீர்க்கத் தெரிந்து வைத்துள்ளனர். பல நாடுகளில் இதைக் கீரையாகவே சமைத்து உண்கின்றனர்.

சில இடங்களில் இலைகளைக் கொதிக்க வைத்து தீநீராக்கி அத்துடன் மோர் சேர்த்து உள்ளுக்கு சாப்பிடுவதால் நல்ல பலம் கிட்டுவதோடு கண்பார்வையும் தெளிவு பெறும் என நம்புகின்றனர். சில இடங்களில் இதன் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் கருவுற்ற பெண்மணிகளுக்கு சுகப்பிரசவம் ஆவதோடு பிரசவகால வலியும் வேதனையும் குறையும் என்று நம்புகின்றனர். மேலும் குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் விரைவில் தம் பழைய ஆரோக்கியத்தைப் பெறுவர் என்றும் நம்பப்படுகிறது.

நல் வேளை பற்றிய அகத்தியர் பாடல்
‘சிரநோய் வலிகுடைச்சல் தீராச் சயித்தியம்
உரநோய் இவைக ளொழியும் – உரமேவும்
வில்வேளைக் காயும் விழியாய்! பசிகொடுக்கும்
நல்வேளை தன்னை நவில்’
– அகத்தியர் குணபாடம்

நல்வேளையால் தலையைப் பற்றிய நோய்கள், உடல் வலி, கை, கால் மற்றும் மூட்டு இணைப்புகளில் ஏற்படும் குடைச்சல், காது மற்றும் தொண்டையைப் பற்றிய தொற்றுநோயான தீராத சயித்திய நோய், உர நோய் என்கின்ற சுளுக்கு அல்லது மூச்சுப் பிடிப்பு ஆகியன குணமாவதோடு உடலுக்கும் வலிமை உண்டாகும். பசியையும் தூண்டிவிடும் என்பது மேற்கண்ட பாடலின் பொருளாகும்.நல் வேளையின் மருத்துவ குணங்கள்

*இதன் இலை மற்றும் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. இலைகள் மேல் பூச்சாகப் பயன்படும். தலைவலி, நரம்பு இசிவு மூட்டுகளின் வலி, காது வலி, காதின் மையப் பகுதியினின்று சீழ் வடிதல், கொப்புளங்கள், பித்த சம்பந்தமான நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தக்கூடியது.

*இதன் விதைகள் வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொன்று வெளித்தள்ள, விட்டு விட்டுத் தொல்லை தரும் கடும் கடுப்பு நோயைத் தணிக்க, உடல் தோற்ற, வாயுக்களை வெளித்தள்ள, ேமற்பூச்சுத்தைலமாக, வட்டப் புழுக்களை வெளித்தள்ள, சுளுக்கு தணிக்க, வலிப்பு நோய்கள் விலக, டைபாய்டு காய்ச்சல் மற்றும் இருமல் குணமாகப் பயன்படுகிறது.

*நல்வேளையில் Sitosterol, Amyrin, Lupeol, Kaempferol, Beta carotene, Ascorbic acid ஆகிய வேதிப்பொருட்களும் மிகுந்துள்ளன.

*நல்வேளை ஒரு நுண்கிருமிகளை ஒழிக் கவல்ல சிறந்த மருத்துவ மூலிகை ஆகும். கடுப்பைப் போக்கக் கூடியது; வீக்கங்களை வற்றச் செய்வது; பூஞ்சைக் காளான்களைப் போக்கக்கூடியது; காய்ச்சலைத் தணிக்கவல்லது; சிறந்த வலி நிவாரணி; ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது; பூச்சிகளைக் கொல்லவல்லது ; இதினின்று தயாரிக்கப்படும் Alcoholic extract என்னும் மருத்துவப் பொருள் புற்றுநோயைப் போக்கும் குணம் கொண்டது.

100 கிராம் நல்வேளையில் உள்ள மருத்துவ வேதிப் பொருட்கள்

புரதச்சத்து – 7.7 %, நார்ச்சத்து – 1.4% வரை, மாவுச்சத்து- 6.4 % வரை, பொட்டாசியம் 410 மி.கி., சுண்ணாம்பு சத்து – 434 மி.கி., மெக்னீசியம் – 86 மி.கி., சோடியம் – 33.6 மி.கி., பாஸ்பரஸ் – 12 மி.கி., இரும்புச்சத்து – 11 மி.கி., துத்தநாகம் – 0.76 மி.கி., செம்புச்சத்து – 0.46 மி.கி., பீட்டா கரோட்டின் – 18.9 மி.கி., வைட்டமின் சி – 484 மி.கி., Oxalates – 8.8 மி.கி. மற்றும் Palmitic acid – 11.2%, Palmitoleic acid – 0.3%, Stearic acid – 6.6%, Oleic acid – 21.8%., ஆகியனவும் நல்வேளையில் பொதிந்துள்ளன.

நல்வேளையின் மருத்துவப் பயன்கள்

*பெரும்பாலான இடங்களில் நல் வேளைக் கீரையை வேகவைத்து கருத்தரித்த மாதர்களுக்கு பிரசவத்துக்கு முன்பாகவும், பிரசவித்த பிறகும் உண்ணக் கொடுப்பதுண்டு. ஏதேனும் ஒரு காரணத்தினால் ரத்தம் இழக்கிறபோது உடலுக்கு பலம் தந்து புத்துணர்வு தருவதற்காகவும் இதைக் கொடுப்பதுண்டு.

*பண்டைக்காலத்தில் போரில் காயமுற்று ரத்தம் இழந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு உடனடி நிவாரணமாக இக்கீரை பயன்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அது போல ரத்தசோகையை போக்குவதற்கும் இக்கீரை மிகவும் பயனுடையதாக விளங்குகிறது.

*புற்றுநோய் வந்தவர்களுக்கும், மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கும், பாம்புக் கடியினால் பாதிக்கப்பட்டோருக்கும் இது உதவிக்கரம் நீட்டும் உத்தம மூலிகை ஆகும். இலைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் இன உறுப்புகள் மற்றும் சிறுநீரகப்பழுது போன்றவையும் தீர்க்க உதவுகிறது.

* உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வல்லது. எச்.ஐ.வி. எனப்படும் பால்வினை நோய்க்கு இது நல்ல மருந்தாகும் என்பதை உறுதி செய்யவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

*இதன் வேரை தீநீர் இட்டுக் குடிப்பதால் சாதாரண காய்ச்சல் முதல் டைபாய்ட், மலேரியா காய்ச்சல் வரை குணமாகின்றன.

*நல்வேளைக் கீரையை உள்ளுக்கு சாப்பிடுவதன் மூலமும், தீநீர் இட்டு கண்களைக் கழுவுவதன் மூலமும் கண்ணில் பீளை என்னும் புளிச்ச வாடையுடன் அழுக்கு வெளிப்பட்டு கண்கள் வீங்கிச் சிவந்து காணப்படுகிற கண் நோய்(மெட்ராஸ் ஐ) விரைவில் குணமாகும்.

*மேலும் இக்கீரை சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்துபவன் போல உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் ஆரோக்கியம் பெற உதவுகிறது. வயது முதிர்வால் ஏற்படும் மறதிக்கு இது ஓர் அற்புத மருந்தாகும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும், இதய நோயாளிகளுக்கும், சிறுநீரக நோயாளிகளுக்கும், வயிற்றுப்புண் உடையோர்க்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.

நல்வேளை மருந்தாகும் விதம்

*சீதத்தால் உண்டாகும் கொடுமையான தலைவலிக்கு நல்வேளை இலையை நசுக்கி அதன் சாற்றைப் பிழிந்து எடுத்துவிட்டு திப்பியை தலை உச்சியில் வைத்து அதற்கு மேல் ஒரு புதுப்பானை ஓட்டை வைத்து ஒரு துணியால் இறுக்கி கட்டி வைக்க ஒரு வகை வேகம் உண்டாகும். 5 அல்லது 10 நிமிட நேரத்தில் கட்டை அவிழ்த்து அந்த திப்பியைப் பிழிய நீர் வடியும். தலை பாரமும் குறையும். சைனஸ் என்று சொல்லக்கூடிய தலையில் நீரேற்றம் கொண்டு அவதிப்படுவோர்க்கும் இது பெரிதும் பயனுள்ளதாகும்.

*காதில் சீதளத்தாலோ, கிருமிகள் தொற்றாலோ வீக்கம், வலி இவற்றோடு சீழ் பிடித்து நாற்றத்துடன் வடிகிறபோது நல்வேளை இலைச் சாற்றில் ஓரிரு துளிகள் விட விரைவில் குணம் உண்டாகும்.

*பூவை நெய் விட்டு வதக்கித் துவையல் செய்து உணவுடன் கலந்துண்ண வாயு நோய்கள் தீரும்.

*பூவை வதக்கி அதன் சாற்றைப் பிழிந்து குழந்தைகளின் வயது மற்றும் நோயின் தன்மைக்கேற்ப ஐந்து முதல் பத்து துளிகள் வரை தாய்ப்பாலுடன் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வயிறு மாந்தம், நெஞ்சகச் சளி, மாந்தக் காய்ச்சல், ஜலதோஷம் ஆகியன குணமாகும்.

*கட்டிகள் சீழ் பிடிக்காது விரைவில் வலியும் வீக்கமும் குறைந்து குணமாக நல்வேளை இலையை அரைத்து மேலே வைத்துக்கட்ட விரைவில் குணம் உண்டாகும்.

*நல்வேளை விதையை வேகவைத்தோ வறுத்தோ எவ்வகையிலாவது 2 முதல் 4 கிராம் எடை அளவு எடுத்து நெய் சிறிது உப்பு சேர்த்து நீருடன் உள்ளுக்குக் கொடுக்க சுளுக்கு முதலியன குணமாகும்.

*நல்வேளை விதையைப் பொடியாக்கி 2 முதல் 4 கிராம் அளவு எடுத்து சர்க்கரை சிறிது சேர்த்து அந்தி சந்தி என இருவேளையும் இரண்டு நாள் உள்ளுக்குக் கொடுத்து மூன்றாம் நாள் 10 முதல் 30 கிராம் வரை(உடல் தகுதிக்கேற்ப) விளக்கெண்ணெய் உள்ளுக்குக் கொடுப்பதால் வயிற்றில் இருந்து வேதனை தரும் பல்வேறு புழுக்களும் வெளியேறும்.

*நல்ல வேளையாக நாம் மறந்து போன நல்வேளையை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டோம். சாலையோரங்களில் எங்கு பார்த்தாலும் மண்டிக் கிடக்கும் வேளையின் உயர்ந்த மருத்துவ குணங்களை மனதில் நிறுத்துவோம். நோயற்ற நிலையில் நீண்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுக்கு பலம் தரும் முருங்கை கீரை!! (மருத்துவம்)
Next post அவசியமா ஆண்மை பரிசோதனை? (அவ்வப்போது கிளாமர்)