நான் டயட் கான்சியஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 2 Second

‘‘உணவு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் நிறைய சாப்பிடுவாங்க. ஆனால் எப்போதும் பார்க்க சிக்குன்னு இருப்பாங்க. அவங்க சாப்பிடுறது எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது. நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சாப்பிட்டா போதும், உடனே அதன் வெளிப்பாடு என்னுடைய உடலில் தெரிந்திடும். அதனாலேயே நான் நிறைய சாப்பிட மாட்டேன். அதே சமயம் பிடிச்ச உணவை மட்டும் ஒரு பிடி பிடிப்பேன்’’ என்று தன் உணவு பயணத்தை பற்றி பேச ஆரம்பித்தார் நடிகை மஹிமா நம்பியார்.

‘‘நான் நீங்க நினைக்கிற மாதிரி பெரிய ஃபுட்டீ எல்லாம் கிடையாது. சாப்பிடும் போது மட்டும் கொஞ்சம் கவனமா சாப்பிடுவேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கு, காலை எழுந்தவுடன் பெட் காபி வேணும். அது சாப்பிட்டா தான் எனக்கு அன்றைய பொழுது நல்லா விடியும். என்னோட அம்மா ஒரு பெரிய டம்ளரில் நல்ல சுவையான ஃபில்டர் காபி தருவாங்க. அது சாப்பிட்டாலே போதும். வயறு ரொம்பிடும். அதனாலேயே நான் காலை சிற்றுண்டியை சாப்பிட தவிர்த்திடுவேன். பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்.

காலை, மதியம், இரவுன்னு மூன்று வேளையும் சலிக்காம சாப்பிடுவேன். அதை மட்டும் என்னால் டயட் இருக்க முடியாது. சிலர் அசைவ உணவினை விரும்பி சாப்பிடு வாங்க. நான் சைவம், அசைவம் என எல்லா உணவையும் விரும்பி சாப்பிடுவேன். இது வேண்டாம்ன்னு ஒதுக்க மாட்டேன். அதுவும் காய்கறிகளை எப்போதுமே வேண்டாம்ன்னு சொல்ல மாட்டேன். என்ன அளவோட தான் சாப்பிடுவேனே தவிர இது வேண்டாம்ன்னு ரெஸ்ட்ரிக்‌ஷன் எல்லாம் கிடையாது’’ என்றவர் சின்ன வயசில் சாப்பிட அடம் பிடிப்பாராம்.

‘‘சின்ன வயசில் நான் சரியாவே சாப்பிட மாட்டேன்னு அம்மா சொல்லுவாங்க. அதனாலேயே அம்மா என்னை கட்டாயப்படுத்தி தான் சாப்பிட வைப்பாங்க. எனக்கு பிடிச்ச சாப்பாட்டை பார்த்து பார்த்து சமைச்சு தருவாங்க. அப்ப நான் காரசாரமான உணவு எல்லாம் ரொம்ப சாப்பிட மாட்டேன். சாப்பாட்டில் பால், சர்க்கரை போட்டு கலந்து, அதில் வாழைப்பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக போட்டு உடன், நிறைய நட்ஸ், உலர்ந்த திராட்சை எல்லாம் போட்டு தருவாங்க. அப்படி சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு பெயர் எல்லாம் கிடையாது. எனக்கு பிடிக்கும்ன்னு அம்மா செய்து தருவாங்க. இப்பக்கூட அம்மாக்கிட்ட அந்த சாப்பாட்டை செய்து தரச்சொல்லி சாப்பிடுவேன்.

அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க சமைக்கிற எல்லா உணவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் கேரளாவில் மாம்பழம் ேபாட்டு ஒரு குழம்பு வைப்பாங்க. மாம்பழ கூட்டான்னு சொல்லுவாங்க. இனிப்பு, காரம், புளிப்பு கலந்து இருக்கும். பொதுவா மோர் குழும்பில் தான் தயிர் சேர்ப்பாங்க. ஆனா இந்த மாம்பழக் குழம்பிலும் அம்மா தயிர் சேர்த்து செய்வாங்க. மாம்பழம் சின்னச் சின்ன துண்டா வேற இருக்கும். சாப்பாட்டுக்கு சேர்த்து சாப்பிடும் போது ரொம்ப நல்லா இருக்கும். அது எனக்கு ெராம்ப பிடிக்கும். அதை சாப்பாட்டிலும் போட்டு சாப்பிடுவேன்.

தனியாவும் ஒரு கப்பில் வச்சு சாப்பிடுவேன். வீட்டில் விசேஷம், இல்லைன்னா என்னோட பிறந்தநாள்ன்னா அம்மா அதை கண்டிப்பா செய்வாங்க. விசேஷ நாட்களில் மாம்பழ குழம்பு எங்க வீட்டில் இல்லாமல் இருக்காது’’ என்றவருக்கு சமையல் செய்வது பிடித்தமான விஷயமாம். ‘‘நான் அளவோடுதான் சாப்பிடுவேன். ஆனா எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும். ஆனால் அம்மா என்னை சமையல் அறை பக்கமே விடமாட்டாங்க. ஒரு முறை நான் சமைக்கிறேன்னு என் கையில சூடு பட்டுவிட்டது. அந்த தழும்பு இன்னும் இருக்கு. அதனாலேயே அம்மா கொஞ்சம் பயப்படுவாங்க. நான் சமையல் அறைக்குள் போனாலே அம்மா டென்ஷனாயிடுவாங்க. அதனால நான் சமைக்க மாட்டேன்.

ஆனா அம்மா கூட இருந்து அவங்க எப்படி செய்றாங்கன்னு பார்த்துக் கொண்டு இருப்பேன். அம்மா சமைப்பதை வேடிக்கை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். நாங்க கேரளா என்பதால், எங்க வீட்டில் ஓணம் ரொம்பவே விசேஷமா இருக்கும். பெரிய வாழை இலையில் தான் சாப்பாடு பரிமாறுவாங்க. அன்று சத்யான்னு ஸ்பெஷல் சாப்பாடு செய்வாங்க. அதில் பல வகை உணவு ஐட்டம், சாப்பாடு இலையில் இருக்கும். அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது கூட்டுக்கறி. இரண்டு மூணு காய் சேர்த்து தேங்காய் அரைச்சு செய்வாங்க. கூட்டு மாதிரி தான் இருக்கும். எனக்கு அது ரொம்பவே பிடிக்கும். சத்யாவில் இது இல்லாமல் இருக்காது. அது சாப்பிடாம எனக்கு சத்யா சாப்பாடு இன்கம்ப்ளீட்டா இருக்கிற மாதிரி இருக்கும்.

அப்புறம் பப்படம் ரொம்ப பிடிக்கும். பூரி மாதிரி உப்பி வரும், மொறுமொறுன்னு இருந்தாலும் சாப்பிடும் ேபாது சாஃப்டா இருக்கும். சாம்பார் சாதம் பப்படம் இருந்தா போதும் எனக்கு. எனக்கு ஊறுகாய் பிடிக்காது. நான் சின்ன வயசில் இருந்தே அதை சாப்பிட்டது கிடையாது. அப்புறம் பாயசம். எங்க வீட்டில் அடை பிரதமன், பால் பாயசம், பருப்பு பாயசம்னு விதவிதமா செய்வாங்க. எல்லாரும் அதை விரும்பி சாப்பிடுவாங்க. நான் மட்டும் பாயசம் சாப்பிட மாட்டேன். என்னவோ எனக்கு அது பிடிக்காது. என் ஃபிரண்ட்ஸ் கூட கிண்டல் செய்வாங்க. பாயசம் சாப்பிட பிடிக்காதுன்னு சொல்ற முதல் ஆளா நீயாதான் இருப்பேன்னு. இது தவிர மற்ற எல்லா சாப்பாடும் சாப்பிடுவேன்’’ என்றவர் வெளியே அவர் சுவைத்த உணவினைப் பற்றி விவரித்தார்.

‘‘அப்பெல்லாம் வீட்டு சாப்பாடு தான். ஒன்னு எங்க வீட்டில் சாப்பிடுவேன். இல்லைன்னா என் ஃபிரண்ட் வீட்டில் சாப்பிடுவேன். அவ அம்மா கப்பக்கிழங்கில் பிரியாணி செய்வாங்க. ரொம்ப நல்லா இருக்கும். அவங்க வீட்டுக்கு போனா நான் வரேன்னு சொன்னா போதும் ஆன்டி கப்ப பிரியாணி கண்டிப்பா செய்து வச்சுடுவாங்க. இங்க கேரளாவில் எனக்குன்னு இருக்கிறது ஒரே ஃபிரண்ட் தான். நானும் அவளும் தான் கேரளாவில் எங்க வேணும்னாலும் சுத்திக் கொண்டு இருப்போம். அப்படி நாங்க விரும்பி போகும் இடம் மில்க்‌ஷேக் ஜாயின்ட். நாங்க எங்க போனாலும் மில்க் ஷேக் தான் முதலில் சாப்பிடுவோம். கேரளாவில் ஒரு இடம் இருக்கு. அங்க பல விதமான மில்க்‌ஷேக் கிடைக்கும். அதில் எனக்கு பிடிச்சது ஓரியோ மில்க் ஷேக். நிறைய ஓரியோ போட்டு செய்து தரச்சொல்வேன்.

சென்னைக்கு நான் ஷூட்டிங் போது தான் வருவேன். அப்படி வரும் போது, இங்க சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் சான்தே ஸ்பா க்விசீல் ஒரு உணவகம் இருக்கு. அங்க சைவ உணவு தான் இருக்கும். அதுவும் எல்லாமே டயட் சாப்பாடு சாப்பிடறவங்களுக்காகவே இயங்கும் பிரத்யேகமான உணவகம். என்னோட ஃபிரண்ட் சொல்லிதான் இங்க போய் சாப்பிட்டேன். இப்ப என்னோட ஃபேவரெட் உணவகமா மாறிடுச்சு. எப்ப சென்னை வந்தாலும் இங்க போய் சாப்பிடாம இருக்க மாட்டேன். டயட் சாப்பிடும் போது நிறைய வெரைட்டி இருக்காது. ஆனா அங்க நிறைய இருக்கும். தர்பூசணி சட்னி, ஆஸ்பராகஸ் சூப், ஆஸ்பராகஸ் வெள்ளரி ரோல், ஆக்டிவேடெட் சார்கோல், தேங்காய் மில்க்‌ஷேக்னு நாம நினைச்சு பார்க்க முடியாத வெரைட்டி எல்லாம் அங்க இருக்கும்.

ஷூட்டிங் வரும் போது, இங்க சேட்டா கடைன்னுதான் சொல்வாங்க. அங்க இருந்து தான் எனக்கு சாப்பாடு வரும். அது சின்ன மெஸ் மாதிரி. அது எங்கேன்னு தெரியாது. அங்க மீன் வறுவல் ரொம்ப நல்லா இருக்கும். கேரளாவை விட இங்க ரொம்ப நல்லா இருக்கும். நான் விருது வழங்கும் விழாவுக்காக மலேசியா போனேன். அப்ப நான் நடிகை ஆனந்தி மற்றவங்க எல்லாரும் மலேசியாவில் தெருவில் உள்ள உணவகத்தில் தான் போய் சாப்பிட்டோம். அங்க ஒரு ெதரு முழுக்க உணவகமா இருக்கும். டம்பிளிங்ஸ் சூப்ல போட்டு கொடுத்தாங்க. கூட சிக்கன், மீன் எல்லாமே இருந்தது. ஒரு பெரிய கின்னத்தில் ேபாட்டு கொடுத்தாங்க. என்னால அதை முழுசா சாப்பிட முடியல. அவ்வளவு நிறைய இருந்தது.

அப்புறம் கொச்சின்ல இருந்து கொஞ்சம் உள்ளே போகணும். அங்க தரவாடுன்னு ஒரு இடம். அந்த இடத்தில் டோடி கடை ரொம்ப ஃபேமஸ். அதாவது கள்ளோட நல்ல காரசாரமா சாப்பாடு கிடைக்கும். நான் வேற இடத்தில் அப்படி ஒரு காரமான சுவையான உணவு சாப்பிட்டது இல்லை. அங்க போகும் போது எல்லாம் வயறு முட்ட சாப்பிடுவேன். அவ்வளவு நல்லா இருக்கும். பெரிய ரெஸ்டாரன்ட் எல்லாம் கிடையாது. சின்ன கடைதான். அங்க குடும்பத்தோட போய் சாப்பிடலாம். நாங்க எல்லாருமோ அங்க போய் சாப்பிட்டு இருக்கோம். அங்க அசைவம் எல்லா வகையும் இருந்தது. முட்டை, சிக்கன், மட்டன், மீன் எல்லாமே தேங்காய் எண்ணையில் செய்யப்பட்ட பாரம்பரிய கேரளா சமையலா இருக்கும்.

எனக்கு எப்போதுமே கேரளா உணவு தான் ரொம்ப பிடிக்கும். இங்க சென்னையில் தொடர்ந்து ஷூட்டிங் இருந்தாலும், எனக்கு நாலு நாளுக்கு ஒரு தடவையாவது கேரளா சாப்பாடு சாப்பிடணும். அது தவிர பட்டர் சிக்கன் பிடிக்கும். அப்புறம் முன்னே சொன்னது போலவே, பிரியாணி என்னோட ஆல்டைம் ஃபேவரெட். எப்ப எங்க போனாலும் முதல்ல பிரியாணி தான் ஆர்டர் செய்வேன். அதன் பிறகு தான் மற்ற உணவுக்கு பிரையாரிட்டி கொடுப்பேன். அப்பறம் சிஸ்லர்ஸ் பிடிக்கும். காய்கறி மற்றும் அசைவம் இரண்டுமே இருக்கும். வயறும் நிறையும்’’ என்றவருக்கு எக்சாடிக் உணவுகளை சாப்பிடணும்னு விருப்பமாம்.

‘‘அடுத்த மாசம் சீனாக்கு போறேன். அங்க எக்சாடிக் மற்றும் வியர்ட் உணவுகளை சாப்பிடணும்ன்னு திட்டமிட்டு இருக்கேன். அதாவது தேள், பூச்சி, வண்டு போன்ற உணவுகள் எல்லாம் தெருவில் ஸ்னாக்ஸ் மாதிரி பொரிச்சு வச்சு இருப்பாங்க. அதை சாப்பிடணும்ன்னு இருக்கேன். இப்ப வரைக்கும் யோசிச்சு வச்சு இருக்கேன். அங்க போன பிறகு தான் தெரியும். சாப்பிட முடியுமான்னு தெரியல. பார்க்கலாம். அது மட்டும் இல்லை அங்க உணவுகள் எல்லாம் பிளாண்டா இருக்கும். எனக்கு காரசாரமான உணவு வேணும். ஆனாலும் அந்த உணவையும் டிரை செய்யணும்ன்னு எண்ணம் இருக்கு’’ என்றார் நடிகை மஹிமா நம்பியார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா? (அவ்வப்போது கிளாமர்)
Next post ஹீரோயின்னா ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கணும்!! (மகளிர் பக்கம்)