By 11 July 2021 0 Comments

பருப்புக்கீரை!! (மருத்துவம்)

பரவலாக எல்லா நாடுகளிலும் காணக்கூடிய கீரை வகைகளில் ஒன்று பருப்புக்கீரை. அகிலம் எங்கும் ஆரோக்கியமான கீரையாக அறியப்பட்ட இதன் மருத்துப் பயன்களை பட்டியல் இடுவதுடன், அதைக் கொண்டு சுவையான 3 ஆரோக்கிய உணவுகளையும் செய்து காட்டியிருக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ.

“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது. பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும்.

மலச்சிக்கல் நீங்கும். குறிப்பாக வயதான காலத்தில் மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு பருப்புக்கீரை மசியல் போன்று மகத்தான மருந்து வேறில்லை. வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற கீரை இது. பருப்புக் கீரை மசியலுடன், நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர, வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும். அதே போல கிராமங்களில் வெயில் காலத்தில் ஏற்படுகிற அம்மை மற்றும் அக்கி பிரச்னைகளுக்கும் பருப்புக் கீரையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

பருப்புக்கீரையை நன்கு ஆய்ந்து, சுத்தமாக அலசி, அரைத்து, அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புளங்கள் மறைந்து, உடல் குளுமையடையும் என்பது அவர்களது நம்பிக்கை. வயதுக்கேற்ற வளர்ச்சியில்லாமல் மெலிந்து காணப்படுகிற குழந்தைகளுக்கு, பருப்புக்கீரையுடன் குடைமிளகாயும் வெங்காயமும் சேர்த்து சமைத்துக் கொடுக்க, உடல் தேறும். பருப்புக்கீரையுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் மெலியும்.

கலோரி குறைவாகக் கொண்டது என்பதால் பருப்புக்கீரையை மட்டுமே கூட முழு உணவு அளவுக்கு எடுத்துப் பசியாறலாம். பருப்புக்கீரையின் விதைகளை அரைத்து இளநீரில் சேர்த்துக் குடித்தால் பேதியும், வயிற்று உபாதைகளும் சரியாகும். பருப்புக்கீரை சாற்றுடன், சம அளவு கரிசலாங்கண்ணிக் கீரை சாறும் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும். பருப்புக் கீரையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது மூளையின் செயல் திறனுக்கு மிகவும் ஏற்றது. ADHD பிரச்னை வராமலும் தவிர்க்கக்கூடியது.

பருப்புக்கீரையில் அபரிமிதமான அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடியவை. வாய்ப் புற்றுநோயைத் தவிர்க்கக்கூடியவை.

எப்படி சமைப்பது?

பருப்புக் கீரையின் பூக்கள், தண்டு போன்றவையும் உண்ணக்கூடியவையே. பருப்புக் கீரையை குறைந்த தணலில் குறைந்த நேரமே சமைக்க வேண்டும். ஆவியில் வேக வைத்து சமைப்பது அதில் உள்ள சத்துகளை முழுமையாக நமக்குத் தரும்.

பருப்புக் கீரையை சாலட்டில் சேர்க்கலாம். பொரியல், கூட்டு உள்ளிட்ட எந்த உணவுடனும் பருப்புக் கீரையையும் சிறிது சேர்த்து சமைக்கலாம்.

சூப்பாக செய்து சாப்பிடலாம். கீரையை உபயோகித்துச் செய்கிற அடை, தோசை போன்றவற்றில் சேர்க்கலாம்.

கூடிய வரையில் பருப்புக் கீரையை பறித்த உடனே அல்லது வாங்கிய அன்றே சமைத்து விடுவது சிறந்தது.

யாருக்குக் கூடாது?

பருப்புக் கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம், சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாகலாம். எனவே, சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பருப்புக் கீரையைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. மற்றவர்களும் பருப்புக் கீரை உண்ணும் போது வழக்கத்தைவிட சற்று அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல் 27 கிலோ கலோரிகள்
ஈரப்பதம் 90 கிராம்
புரதம் 2 கிராம்
கொழுப்பு 1 கிராம்
தாதுச்சத்து 2 கிராம்
நார்ச்சத்து 1 கிராம்
கார்போஹைட்ரேட் 3 கிராம்
கால்சியம் 111 மி.கி.
பாஸ்பரஸ் 45 மி.கி.
இரும்புச்சத்து 15 மி.கி.Post a Comment

Protected by WP Anti Spam