நமது பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பதா? (கட்டுரை)

Read Time:12 Minute, 34 Second

நாங்கள் வழக்கமாக அந்தர் பசளை 1,500 ரூபாய்க்குத்தான் கொள்வனவு செய்தோம். ஆனால், இப்போது ஓர் அந்தர் பசளையை 4,000 ரூபாய்க்கு வாங்குகின்றோம். தற்போதைக்கு இந்த விலை கொடுத்து வாங்குவதற்கும் பசளை இல்லாமலுள்ளது. 900 ரூபாவுடைய கிருமிநாசினி ஒரு போத்தலின் விலை, தற்போது 2,000 ரூபாயாகவுள்ளது. எவ்வாறு நாங்கள் தொழில் செய்வது, தற்போது எமது மிளகாய்ச் செய்கையெல்லாம் பூச்சித்தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அதற்கு மேலாக ஒருவித வாடல் நோயும் தாக்குகின்றது. இவற்றுக்கு உரிய நாசினிகளைக் கொள்வனவு செய்வதற்குச் சென்றால் அவர்கள் தரும் நாசினிகளைத் தெழித்தால் அதுவும் சரிவரவில்லை. எவ்வளவோ காசைக் கொட்டி இறைத்துத்தான், இந்தக் கடற்கரை மணலில் போராடி தினமும் மிளகாய் பயிர் செய்கையை மேற்கொண்டு வருகின்றோம்” எனத் தெரிவிக்கின்றார் களுதாவளையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக மிளகாய் செய்கையில் ஈடுபட்டுவரும் க. யோகநாதன்.

விவசாயி யோகநாதனின் உட்கிடைக்கை இவ்வாறு இருக்க, “எமது மிளகாய் செய்கை காய்த்துப் பூத்திருக்கும் பருவத்திலே ஒருவித வாடல் நோய்த்தாக்கம் ஏற்பட்டு அனைத்தும் பழுதடைந்து போகின்றன. எமது செய்கையைத் துறைசார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு இவ்வாறான நோய்களுக்குரிய மருந்துகளைச் சிபார்சு செய்து தரவேண்டும்.

இது ஒரு புறமிருக்க, நாம் பலத்த சிரமத்தின் மத்தியில் எமது பரம்பரை விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற இந்நேரத்தில், எமது விளைபொருட்களுக்கு இதுவரையில் நியாய நிலை கிடைக்காமையால் நாம் மிகுந்த நட்டத்தையே எதிர்கொண்டு வருகின்றோம். எமது விளை பொருட்கள் கல்முனை, அக்கரைப்பற்று. சம்மாந்துறை, ஆரையம்பதி, மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, உள்ளிட்ட பல பொதுச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஆனால் எமது மிளகாய் ஒரு கிலோ கிராமுக்கு வழங்கப்படும் பணத்தைப் பார்த்தால் வாய், வயிறு எல்லாம் பற்றி எரிகின்றது. ஒரு கிலோ கிராம் மிளகாயின் மொத்தவிலை வியாளக்கிழமை (08) 20 ரூபாய்; புதன்கிழமை 30 ரூபாய், 6ஆம் திகதி 40 ரூபாய்; 3ஆம் திகதி 40 ரூபாய் என விற்பனையாகியது.

இந்நிலையில் இந்த விலைக்கு மேலதிகமாக ஒரு கிலோ கிராம் மிளகாய்க்கு 60 ரூபாய் காசை நாங்கள் விவசாயிகளுக்காக வைத்துத் தருகின்றோம் என மொத்த வியாபாரிகள் பெற்றுக் கொண்டு செல்கின்றார்கள்.

ஒரு கிலோ கிராம் மிளகாய் பறிப்பதற்கு 20 ரூபாய் கொடுக்க வேண்டும். மிளகாய் பறிப்பவர்களுக்குரிய காலை, பகல் உணவு, எண்ணை, பசளை, மின்சாரக் கட்டணம் எனக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு கிலோ கிராமுக்கான உற்பத்தி செலவு குறைந்து 65 ரூபாவுக்கு மேல் செலவாகின்றது. இவ்வாறு செலவு செய்து 20 இற்கும் 30 ரூபாவுக்கும் விற்றால், எமது நிலைமை என்னாவது? விவசாயிகளாகிய எங்களது நிலைமை இவ்வாறுதான் செல்ல வேண்டுமா, எமது பயிர்களைப்போல் அழிய வேண்டுமா”? எனத் தனது உட்கிடக்கைகளை எடுத்தியம்புகின்றார் மற்றுமொரு விவசாயியான க. திருநாவுக்கரசு.

“இதுவரைகாலமும் இரசாயன உரவகைகளையும், இரசாயன கிருமி நாசினிகளையும் பயன்படுத்தியே நாம் மிளகாய் செய்கையில் ஈடுபட்டு வந்தோம். தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. சில பசளைக் எண்ணை கடைகளில் கூட்டுப்பசளை உள்ளது. அதனையும் வாங்கிக் கொண்டு மிளகாய்களுக்கு இட்டால் செழிப்பாக வருவதை அவதானிக்க முடியவில்லை.

எமது இந்த மணற்பாங்கான நிலத்துக்கு இரசாயனப் பசளை வகைகள் இல்லாவிட்டால் பயிர் செய்ய முடியாது. இது தற்போது விளங்குவித்லை; எதிர்வரும் வருடங்களில்தான் ஏனையோருக்கும் புரியும். நாட்டுக்கு சரியான வறுமை வரப்போகின்றது. நாம் பயிர் செய்வது கடற்கரை பகுதியில்; எவ்வாறு நாம் தொடர்ந்த பயிர் செய்யப்போகின்றோம் என்பது எமக்குப் புரியாமலுள்ளது” என்கிறார் இன்னுமொரு விவசாயியான ச. பாக்கியராசா.

“இதுவரைகாலமும் சிறுபோகம், பெரும்போகம் என மாறி மாறி வேளாண்மைச் செய்து வரும் எமது ஏனைய சக விவசாயிகளுக்கு காலத்துக்குக் காலம் அரசாங்கம் இலவசமாக பசளைகளை விநியோகித்து வருகின்றது. மாறாக நாங்கள் மேட்டு நிலத்தில் மிளகாய், கத்தரி, வெண்டி, வெங்காயம், பயற்றை, உள்ளிட்ட பல பயிர்களைச் செய்து வருகின்றோம்.

ஆனால் எமக்கு அரசாங்கம் இதுவரையில் இலவச உரத்தை தரவில்லை. நான் இந்த தடவை மிளகாய் பறித்துவிட்டு கூட்டுப்பசளையைத்தான் எறிந்துள்ளேன். எமது இந்த மண்ணுக்கு கூட்டுப்பசளை சரிவருமா இல்லையா என்பது எமக்கு விளங்காமலுள்ளது. எமக்கு இது தொடர்பில் விவசாயப் போதனாசிரியர்கள் விளக்கங்களைத் தரவேண்டும்” எனத் தெரிவிக்கின்றார் த. சிவலிங்கம்.

இவை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட களுதாவளைப் பகுதியில் மேட்டுநில மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் எண்ணக் குமுறல்களாகும்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் களுவாஞ்சிகுடி, எருவில், மகிழூர், களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளைம், குருக்கள்மடம் உள்ளிட்ட பல கரையோரப்பகுதிகளில் மிளகாய், கத்தரி, வெண்டி, பீர்க்கு, புடோல், பாகல், பயற்றை, வெங்காயம், உள்ளிட்ட இன்னோரன்ன மரக்கறி வகைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். ஆனாலும் தாம் உற்பத்தி செய்யும் மரக்கறி வகைகளுக்கு நிர்ணய விலை இன்மையால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகத் கவலை தெரிவிக்கின்றனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சுமார் 2000 இற்கு மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் செய்கையை மாத்திரம் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு விவசாயம் செய்து தமது குடும்பத்தை பாதுகாத்து, பிள்ளைகளையும் கற்பித்து வரும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய நிர்ணய விலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கடைமையாகும்.

விவசாயிகள் மேற்கொள்ளும் மேட்டுநிலப் பயிர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் நோய் தாக்கங்கள் தொடர்பிலும், அவற்றுக்கு சிபார்சு செய்யப்பட்ட நாசினிகள் தொடர்பிலும் துறைசார்ந்த அதிகாரிகள் அவ்வப்போது உரிய விளக்கங்களை வழங்க வேண்டும்.

தாம் உற்பத்தி செய்யும் மிளகாய் உள்ளிட்ட மரக்கறி வகைகளுக்கு இதுவரை காலத்துக்கும் வேறு யாரோதான் மொத்த விலையைத் தீர்மானிக்கின்றனர். அதனை நிறுத்தி தாம் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு தாங்களே மொத்த விலையைத் தீர்மானிக்க வேண்டும். எமது உற்பத்திகளுக்கு வேறு யாரோ விலையத் தீர்மானித்துவிட்டு அவர்கள் விரும்பும் காசை எமக்கும் தருவது நாம் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரே பெயர் வைப்பது போன்றுள்ளது.

மேட்டுநில விவசாயிகளுக்கும், இலவச உர வகைகளை அரசாங்கம் வழங்க முன்வரவேண்டும். விவசாயப் பகுதிகளிலுள்ள வீதீகளைச் செப்பனிட வேண்டும்.

தடையின்றி தமது நிலத்திற்கு ஏற்ற இரசாயன உரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வகை செய்ய வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அப்பகுதி விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

அத்தோடு உயிர் வேலி அமைத்தல், ஊடு பயிரிடுதல், முறைமையையும் நாம் நடைமுறைப் படுத்தியிருக்கின்றோம். கடந்த வருடம் நவீன விவசாய மயமாக்கல் திட்டத்துடன் இணைந்து விவசாயத் திணைக்களம், 100 விவசாயிகளுக்கு தூவல் நீர்ப்பாசனத்தை அறிமுகப் படுத்தியிருக்கின்றது.

இந்த தூவல் நீர்ப்பாசனத்தால் தாவரங்களுக்கிடையில் ஈரலிப்பான தன்மை ஒன்று உருவாகுவதனால், இவ்வாறான நோய்த்தாக்கங்கள் கடந்த வருடங்களை ஒப்பீடும்போது இவ்வருடம் குறைவாகத்தான் காணப்படுகின்றது. குறிப்பாக களுதாவளையில் மாத்திரம் 450 இற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் 900 மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகளுக்கு பிரதேச செயலாளருடன் இணைந்து சேதனைப் பசளை உற்பத்தி செய்யும் முறைமையையும் அண்மையில் ஆரம்பித்திருக்கின்றோம். காலப்போக்கில் அனைத்து விவசாயிகளுக்கும் இதனை அமுல்படுத்தவுள்ளோம் என களுதாவளைப் பகுதி விவசாயப் போதனாசிரியர் பொன்னத்துரை சிறிபவன் தெரிவிக்கின்றார்.

களுதாவளைப் பகுதி விவசாயப் போதனாசிரியரின் கருத்துக்கள் அப்பகுதி விவசாயிகளுக்கு ஓரளவுக்கேனும் ஆறுதல் அளிப்பதாக அமைந்திருந்தாலும் அப்பகுதி விவசாயிகள் மேற்படி எதிர்பார்க்கும் விடையங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுவே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அடேங்கப்பா ஒவ்வொரு வருஷமும் இவ்வளோ FOOD ஆ நம்ம WASTE பண்றோம் ?? (வீடியோ)