கண்டால் வரச்சொல்லுங்க !! (கட்டுரை)

Read Time:16 Minute, 48 Second

எதிர்ப்புப் போராட்டம் என்பது, சமூக , அரசியல், பொருளாதார உரிமை மறுப்புகள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் அநீதிகளுக்கு எதிராக தனிமனிதராக அல்லது குழுக்களாக எதிர்க்கும் ஒரு வழிமுறை ஆகும்.

இன்று உலகை கொரோனா தனது கைப்பிடிக்குள் சுருக்கிப் பிடித்துக் கொண்டாலும் கொரானாவாவது, கொக்காவது என்ற புறக் கணிப்புக்கு மத்தியில் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று தான் வருகின்றன.

எனவே, இந்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு எமது இலங்கையும் விதிவிலக்கல்ல. நாட்டின் இன்றைய நிலைமையில், நான்கு திசைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கரிக்கத் தொடங்கியுள்ளன.

பத்திரிகைகைளைப் புரட்ட முடியவில்லை. தொலைக்காட்சி செய்திகளையோ, வானொலி செய்திகளையோ சமூக வலைத்தலங்களோ எதை, எப்போது பார்த்தாலும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தான்.

இவ்வாறான நிலையில், நாளுக்கு நாள் வலுப்பெறும் இந்த ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் எமது அரசாங்கத்துக்கு ஆப்பாக மாறி விடும் என்ற அச்சத்தாலோ என்னவோ கொரோனா தொற்றை காரணம் காட்டி, தனிமைப்படுத்தல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, இந்த மாதம் 6ஆம் திகதி யிலிருந்து அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதித்திருந்தாலும் இவற்றைப் துளியளவேனும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் வகைதொகையின்றி முன்னெடுக்கப்படுகின்றன.

ஒரு புறம் விவசாயத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ள இரசாயன உர இறக்குமதிக்கு எதிராக விவசாயிகளும் இலவச கல்வியை தனியார் மயப்படுத்த அரசாங்கம், பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ள சட்ட மூலத்துக்கு எதிராக மற்றொரு சாராரும், கொரோனாவால் முடக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்கள் தமக்கு உண்ண உணவின்றி பட்டியானால் வாடுவதாக தெரிவித்தும், பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இணையவழி ஊடாக முன்னெடுக்கப்படும் கற்றல் செயற்பாடுகள் தமது பிள்ளைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளதாக தெரிவித்து பெற்றோரும் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில்,

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களே தமது வாழ்க்கையாகிப் போன மலையகத் தோட்டத் தொழிலாளர்களோ தமக்கு எதிராக தோட்ட நிர்வாகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகள் அழுத்தங்களுக்கு எதிராக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கேட்பார், பார்ப்பாரின்றி அனாதைகளாக முன்னெடுத்து வருகின்றனர்.

உழைப்பையும் உயிரையும் மண்ணுக்கு அர்ப்பணித்து தமது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல், உணவுக்கு வருவாய் கிடைக்காமல், காடு, மழை ஏறி மாடாய் ,சொற்ப வருமானத்துக்காக உழைத்து, நிம்மதியாய் படுத்துறங்க தமக்கென சொந்தமான நான்கு சுவரில்லாமல் போராட்டமே வாழ்வின் அங்கமாய் மாறிப் போன மலையக மக்களின், போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இன்று நேற்றல்ல, இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பமானதே எனலாம்.

200 வருட வரலாற்றைக் கொண்ட மலையக சமூகம் 100 வருடங்களாக நீண்ட போராட்டங்களை பல்வேறு காலகட்டங்களிலும் முன்னெடுத்து வந்துள்ளனர். இவர்களின் முதலாவது போராட்டம் சுதந்திரத்துக்கு முன்பே அதாவது, 1919ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது . சேர். பொன்னம்பலம் அருணாசலம், பெரிய சுந்தரமும் இணைந்து தோட்டத் தொழிலாளாலர் சம்மேளனம் ஒன்றை உருவாக்கி மலையக மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்காக குரல் எழுப்ப ஆரம்பித்த போராட்டம் இன்றும் வடிவங்கள் மாறியும் தொடரத்தான் செய்கின்றன.

1939ஆம் ஆண்டு ஹேவாஎட்ட முல்லோயாப் போராட்டத்தில் அமரத்துவம் அடைந்த தியாகி முல்லோயா கோவிந்தனுடன் ஆரம்பமான மலையகப் போராட்ட தியாகிகளின் மரணப் பட்டியல் என்பது, எனது தேடலுக்கமைய 1979ஆம் ஆண்டு பல்லேகல தோட்டம் பழனிவேல் என்ற தியாகி வரை, கிட்டத்தட்ட 36 தோட்டத் தொழிலாளர்கள், தமது உரிமைகள், அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களால் கொல்லப்பட்டு அமரத்துவம் அடைந்துள்ளனர்.

எப்போதுமே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலமே தமக்கான ஒவ்வொரு விடயங்களையம் பெற்றுக்கொண்டு, இன்று தமது இருப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும், தமது உழைப்புக்கான ஊழியத்தைப் பெற்றுக்கொள்ளவும், தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தொழில் இடங்களில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தலும் போராட்டம் எனும் ஆயுத்தத்தை கையில் எடுத்தால் மாத்திரமே இவர்களின் கோரிக்கைகள் ஓரளவுக்காகவேனும் நிறைவேற்றப்படுகின்றன.

குறிப்பாக இன்று இலங்கையில் மிகவும் குறைந்த அடிப்படை சம்பளத்துக்கு தொழில் செய்யும் பாவப்பட்ட மக்களே மலையகத் தொழிலாளர்கள் . இதனால் தான் அண்மை சில வருடங்களாக தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்கக் கோரி இவர்கள் முன்னெத்தப் போராட்டங்களின் விளைவு, 1000ரூபாய் நாளொன்றின் அடிப்படைச் சம்பளம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து இவர்களது போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பலர் மார்தட்டினர் (தட்டுகின்றனர்.)

ஆனால் என்னதான் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக இம்மக்கள் காணப்பட்டாலும் இவர்களுக்கு தினமும் 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கு எந்த நிர்வாகமும் அவ்வளவு சீக்கிரத்தில் இணக்கம் தெரிவிக்கவில்லை.

பல நாள் இழுபறிகளுக்கு பின்னர் இணங்கினாலும் இலகுவில் எவ்வித நிபந்தனைகளும் இன்றி வழங்கிவிட நிர்வாகங்கள், கொடை வள்ளல்களோ, இலகிய மனம் படைத்தவர்களோ அல்ல என்பதை அண்மையச் சம்பவங்கள் பறைச்சாற்றும் நிலையில், நிர்வாகங்களின் அழுத்தங்கள் என்பது சில தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட கம்பனிகளுக்குமிடையிலான டீலாக இருக்குமோ என்ற அச்சத்தையும் இயல்பாகவே தோற்றுவிக்கின்றது.

1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்க நிர்வாகங்கள் எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை. அவ்வாறு விதிக்கவும் விட மாட்டோம்.விதித்தால் பார்த்துக்கொண்டிருப்போமா என வாய்ச்சவடால் விட்ட அதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதிகள் எங்கே ? இன்று இந்த அரசியல்வாதிகளை “கண்டா வரச் சொல்லுங்க“ என அனைவரும் வலைவிரித்து தேடிக்கொண்டிருக்கின்றனர்.

கொரோனா முடக்கத்தால் பொருளாதார ரீதியில் அனைவருமே ஆட்டம் கண்டுள்ள நிலையில், இந்த மலையக மக்களின் பொருளாதார நிலை எவ்வாறானதென்று எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.கொரோனாவால் சில தோட்டங்கள் முடக்கப்பட்டாலும் ஆயிரம் வேண்டுமா? அப்படியாயின் தினமும் 20 கிலோகிராம் கொழுந்தை பறிக்குமாறு அழுத்தம் விடுக்கப்படுகின்றன.

மறுபுறும் வேறு சில நிர்வாகங்கள் கிழமையில் 2 நாள்கள் வேலையையே வழங்குகின்றன. இவ்வாறான தோட்ட நிர்வாகங்களின் அழுத்தம் அடக்குமுறைக்கு எதிராக எந்தவொரு தொழிற்சங்கங்களின் உதவியும் இன்றி, தொழிலாளர்கள் போராட்டங்களையும் பணிபகிஷ்கரிப்புகளையும் தனித்து முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு சில தோட்டங்களில் மாதக் கணக்கில் இப்பணிபகிஷ்கரிப்புகள் முன்னெடுக்கப்பட்டாலும் எந்தவொரு தொழிற்சங்கங்களும் இவர்களை ஏறெடுத்துக் கூட பார்க்காமல் இருப்பது ஆத்திரமூட்டும் செயலாகவே உள்ளது.

சில தொழிற்சங்கங்கள் எம்மிடம் அதிகாரமில்லை என ஒதுங்கினாலும் அதிகாரமிருக்கும் பிரபல தொழிற்சங்கங்கள் கூட 1,000 ரூபாய் வாங்கிக்கொடுத்து விட்டோம். இனி இவர்கள் எக்கேடு கெட்டுப்போனால் எமக்கென்ன. இவர்களின் சந்தாப் பணம் மாத்திரம் கிடைத்தால் போதும் என்ற அலட்சியத்தில் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

கொட்டியாக்கலை, கொட்டகலை-ட்ரேட்டன், ஹப்புத்தளை -தம்பேதன்ன உள்ளிட்ட பல தோட்டங்களில் நாள்கள் பல கடந்தும் பணிபகஷ்கரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இதுவரை எந்தவொரு அதிகாரதரப்பு அரசியல்வாதியும் இம்மக்கள் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கவில்லை என தொழிலாளலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் மலையக தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அவர்களது கோரிக்கைகள் மக்களுக்கு சார்பாகவே முடிந்த வரலாறுகளும் உள்ளன. அத்துடன் நிர்வாகங்களும் இவ்வாறான அடக்குமுறைகைளையோ அழுத்தங்களையோ தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடாமல் அடங்கிப் போன காலங்களும் உண்டு. இதற்கு சில தொழிற்சங்க தலைமைத்துவங்களும் காரணமாக அமைந்தது.

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிப்போய்விட்டது. தொழிற்சங்கங்கள் தோட்ட நிர்வாகங்களை தட்டிக்கேட்க திரானியற்றவர்களாக, தோட்ட நிர்வாகங்களுக்கு பயந்தோ அல்லது அடங்கியோ போகும் போக்கையே மலையகத்தில் காணமுடிகின்றது.

சில விடயங்களுக்கு அனுபவம் என்பது அவசியம் என்பதை சில விடயங்கள் ஆணித்தரமாக உணர்த்துகின்றன. இதற்கு சிறந்த உதாரணம் தான் சில வாரங்களுக்கு முன்னர் பொகவந்தலாவை கொட்டியாகலைத் தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கினர். 20 கிலோ கொழுந்தை தொழிலாளர்கள் பறிக்க வேண்டும் என்ற விடயத்திலிருந்து அந்த நிர்வாகம் பின்வாங்காத நிலையில், அதிகாரமிக்க அரசியல்வாதி ஒருவர் கண்துடைப்புக்காக அங்கு சென்று தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாட முயன்ற போது, தோட்ட நிர்வாகம் குறித்த அரசியல்வாதியை புறக்கணித்து, தமது முடிவிலிருந்து கீழிறங்கவில்லை.

இந்த நிலையில், அந்த அரசியல்வாதியின்“நீங்கள் கொழுந்தை பறியுங்கள். நிர்வாகம் என்ன செய்துவிடும்“ என வீராப்பு கதையைக் கேட்டு, மறுநாள் கொழுந்துப்பறிக்க தொழிலாளர்கள் சென்ற போது, பணிக்காக எந்தவொரு வெளிக்கள உத்தியோகத்தரும் வருகைத் தரவில்லை. இதனால் தாம் பறித்த கொழுந்தை தேயிலைத் தொழிற்சாலை முன்பாக கொட்டிவிட்டு, தொழிலாளர்கள் வீடு திரும்பியதே மிச்சம். இதில் மக்களின் உழைப்புக்கே நட்டம்.

அதன்பின்னர் கொட்டியாகல தோட்டத் தொழிலாளர்கள் இரண்டு நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, கொரோனா தொற்றால் கைவிட வேண்டிய நிலைக்குச் சென்ற போது கூட வீராப்பு பேசிய வாய்ச்சொல் அரசியல்வாதிகள் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

அங்குமட்டுல்ல. கொட்டகலை, ஹப்புத்தளையிலும் இதே அவலம் தான். கொரோனா சட்டதிட்டங்களை காரணம் காட்டி, வீடுகளிலிருந்து பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட அதிகாரதரப்பு அரசியல்வாதியொருவர், தமது பிரதேச மக்கள் நாள்கள் பல கடந்து பணிபகிஷ்கரிப்புகளை முன்னெடுக்கிறார்களே, நாளை வாக்குகளுக்காக இந்த மக்கள் காலடிக்கே செல்ல வேண்டும் என்ற நினைப்பு சிறிது கூட இல்லாமல், மீனவர் சமூகத்துக்காக குரல் கொடுக்க கிளம்பி விட்டாரென, ஹப்புத்தளை- தம்பேதன்ன தொழிலாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

இதைவிட கொடுமை யாதெனில், தமது பிரச்சினைகள் தொடர்பில், தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவலம் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

எனவே, இந்த அவலங்கள் எல்லாம், தமது மக்கள் பிரிதிநிதிகளின் காதுகளை எட்டவில்லையா? அல்லது தேர்தல் ஒன்றுக்கு இன்னும் சில வருடங்கள் செல்லும் என்பதால், அந்த நேரத்தில் மாத்திரம் மக்களை நாடிச் சென்றால் போதும் என்ற கொள்கையைக் கடை பிடிக்கின்றார்களா என்பதை நாமறியோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்சு.. அடைப்பெடுக்க 50 ரூபாயா? (வீடியோ)
Next post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! (அவ்வப்போது கிளாமர்)