By 17 July 2021 0 Comments

‘ஹோம் மினிஸ்டர்’ யோகாசனங்கள்! !! (மகளிர் பக்கம்)

பொதுவாக, குடும்பத்திலுள்ள அனைவரின் உடல் ஆரோக்கியமும், பெண்களின் கரங்களில்தான் உள்ளது. ஏனென்றால் இவர்கள்தான் வீட்டிலுள்ள மழலைகள் தொடங்கி முதியவர் வரை என அனைவரின் உடல்நலத்தையும் கண்ணும், கருத்துமாய் பேணிக் காப்பவர்கள். இதன் காரணமாகத்தான் பெண்களை ‘ஹோம் மினிஸ்டர்’ எனக் குறிப்பிடுகின்றனர். இன்னும் ஒருபடி மேலே போய் பெண்ணினத்தை ‘கல்ப விருட்சம்’ என்றும் சொல்லலாம்.

ஆனால், நாட்டையே பாதுகாக்கும் வல்லமை கொண்ட பெண்ணினத்தின் ஆரோக்கியம் இன்றைய சூழலில் கேள்விக்குறியாகவே உள்ளது. தன் நலத்தை கவனத்தில் கொள்ளாததுதான் இதற்கு முக்கிய காரணம். எனவே, பெண்களின் ஆரோக்கியத்தைப் பேண உதவும் யோகாசனங்கள் அவற்றை செய்யும் முறை மற்றும் பயன்களை விவரிக்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான டாக்டர் தீபா.

சமீபகாலமாக, இளம் பெண்களின் உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அவற்றில் மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் தாய்மை அடைதல் முதன்மையானவையாகத் திகழ்கின்றன. இயல்பாக நடக்க வேண்டிய ‘தாய்மை’ என்ற உன்னதம் செயற்கை முறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு பெண்களுடைய ஹார்மோன்கள் சரி விகிதத்தில் இல்லாமல் இருப்பதுதான் முக்கிய காரணம். இந்த ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி சீராக செயல்பட ஒரே தீர்வு மற்றும் சிறந்த வழி யோகாசனம்தான்.

சக்தி பிருந்தாவனம் என்ற குழு ஆசனங்கள் நம்முடைய ஆற்றலை அதிகரிக்கும். இந்த ஆசனங்களை ‘பவல முத்தாசனம் பாத்ரி’ என்றும் குறிப்பிடுவார்கள். சூரிய நமஸ்காரத்தில் பன்னிரெண்டு நிலைகள் உள்ளதைப்போன்று, இந்த வகை ஆசனத்தில் எட்டு நிலைகள் உள்ளன. இந்த ஆசனங்களைச் செய்யும்போது, பெண்களுடைய ஆற்றல் அதிகரிக்கும். தண்டுவடத்திலுள்ள அடைப்பைச் சரி செய்து, உடல்வலி, சோர்வு நீக்கும். குறிப்பாக, இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புக்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். ஹார்மோன் சீராக இல்லாத காரணத்தால் ஏற்படும் மாதவிடாய் பிரச்னையை சீர்படுத்தும்.

இந்த ஆசனங்கள் பெண்களின் ஆற்றல் மற்றும் எதிர்ப்பு சக்தி குறையும்போது அவற்றை அதிகரிக்கச் செய்து, தண்டுவடத்தைச் சீர் செய்ய உதவுகின்றது. குறிப்பாக பெண்களின் இடுப்புப் பகுதியில் உள்ள எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை வலுப்படுத்தும். இதனால் மாதவிடாய் பிரச்னைகள், வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் பூஞ்சை தொற்று வராமல் தடுக்கவும் ஹார்மோன்களைத் தூண்டவும் பயன்படுகின்றது. இனி ஒவ்வொரு ஆசனத்தை செய்யும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி டாக்டர் தீபா விவரிக்கிறார்.

ராஜுகர்ஸ்னா ஆசனம் ஒரு மிருதுவான போர்வையைத் தரையில் விரித்து அதன்மேல் கால்களை நீட்டி, ஒரு கயிற்றை இழுப்பதுபோல வசதியாக உட்கார வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது இரண்டு கால் முட்டிகளை ஒன்று சேர்த்து மடக்காமல் நீட்ட வேண்டும். வலதுகையை மேலே உயர்த்தும்போது இடதுகை முட்டி மேல் இருக்க வேண்டும். வலதுகையை மேலே உயர்த்தும்போது, மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். கையை கீழே இறக்கும்போது, மூச்சை வெளியே விட வேண்டும். இதே மாதிரி 5 முதல் 10 தடவை செய்ய வேண்டும். இந்த ஆசனத்தால் தோள்பட்டை, முதுகு பகுதி வலிமை அடையும். மார்பக புற்றுநோய் வராது. பெண்களுக்குத் தேவையான ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும்.

கட்டியத் மக்மேரு வக்ராசனம்

இந்த ஆசனத்தை டைனமிக்ஸ் ஸ்பைனல் ட்விஸ்ட் (Dynamic spinal Twist) என்றும் குறிப்பிடுவர். வழக்கம்போல், மிருதுவான போர்வை மீது 2 கால்களையும் நன்றாக விரித்து அமர வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது 2 கைகளையும் மேலே உயர்த்திய நிலையில் வைக்க வேண்டும். வலதுகையால் இடதுகால் கட்டை விரலையும், இடதுகையால் வலதுகால் கட்டை விரலையும் மாறி மாறி தொட வேண்டும். வலதுகையால், இடதுகால் கட்டை விரலைத் தொடும்போது, இடது கையை நன்றாக நீட்டிய நிலையில் வைக்க வேண்டும்.

அப்போது முகத்தை நன்றாக திருப்பி, விரல்களைப் பார்க்க வேண்டும். இந்த ஆசனத்தைச் செய்யும்போது, இயன்றவரை கைகளை நீட்டினால் போதும். சிரமப்படக்கூடாது. உடலைத் திருப்பும்போது மூச்சை வெளியேவிட வேண்டும். இயல்பு நிலைக்கு வரும்போது, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இந்த ஆசனத்தைச் செய்வதால், முதுகுத் தண்டுவடம் (Spinal guard) நன்றாக வளையும். இதயம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டலம் நன்றாக இயங்க இந்த ஆசனம் பயன்படும். மேலும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam