வாய்க்குள் வெடிக்கும் வெங்காய வெடிகள்!! (கட்டுரை)

Read Time:10 Minute, 43 Second

வடக்கில் அதிகளவான காடுகளையும் குளங்களையும் கொண்ட பிரதேசமாகவும் அதிகளவில் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை கொண்ட பிரதேசமாகவும் சனத்தொகை வீதம் குறைவான மாவட்டமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

இவ்வாறான இயற்கை வளங்களைக் கொண்ட மாவட்டத்தில்தான் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில், இவ்வாறு யானை-மனித மோதலால் இந்த ஆண்டு, இதுவரை நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் முல்லைத்தீவு சுற்றுவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேல், மீள்குடியேறிய மக்களாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் காணப்படுகின்றார்கள். இந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் அரசாங்கத்தால் பூர்த்திசெய்து கொடுக்கப்பட்டாலும் அரசாங்கத்தின் சொத்தாகக் கருதப்படும் காட்டு யானைகளைப் பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அடர்ந்த காடுகள் பற்றைக்காடுகள், பாரிய வனங்கள், தேக்க மரஞ்சோலைகள் என்று வன்னியில் காடுகள் இயற்கையாகக் காணப்படுகின்றன. இந்தக் காடுகளைப் பாதுகாக்க, வனவளத்திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருந்தும் மனிதர்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காடுகளை ஈடுசெய்வதற்காக, எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது.

கிரவல்அகழ்வு, மணல்அகழ்வு, காணிபிடிப்பு போன்ற சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இயற்கை வளங்களான காடுகள், அதிகளவு அழிக்கப்பட்டு, நிலப்பிடிப்பாளர்களால் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

இதை விட, காடுகளில் உள்ள பெறுமதியான பாலைமரங்கள், முதிரைமரங்கள் என்பன வெட்டப்பட்டு, மரக்கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு வருகின்றமையும் இயற்கை அழிப்பின் உச்சத்தை எடுத்துக் காட்டுகின்றது.

இயற்கை வளத்துடன் ஒன்றாக வாழ்ந்துவரும் உயிர் ஜீவன்களாகவே காட்டு யானைகள் காணப்படுகின்றன. எந்தக் காடுகளில் யானைகள் வாழ்கின்றனவோ, அந்தக் காடுகள் பெருகவும் வளம்மிக்க காடாகவும் இருக்கும் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புவியலாளர்களின் கருத்தாகும். இந்நிலையில், யானை – மனித மோதல் என்பது, முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட ஒதியமலை கிராமத்தில் மனித மோதலால் பாதிக்கப்பட்ட யானை ஒன்று, 17.07.21 அன்று உயிரிழந்துள்ளது. இந்த யானையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு யானைகள் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.

காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவதால், காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளை நோக்கி நகருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் யானைகள் அதிகளவில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். ஆண்டு தோறும் சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்செய்கையைச் சேதப்படுத்தும் காட்டுயானைகள், இலட்சக்கணக்கான பயன்தரு தென்னை, மா, பலா போன்ற வான் பயிர்களையும் அழித்து வருகின்றன.

இதனால், யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெறும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. ஒதியமலையில் உயிரிழந்தது வயது முதிர்ந்த பெண்யானையாகும். இந்தப் பெண்யானைக்கு வாய்க்குள் வெடி வெடித்ததால் உணவு உண்ணமுடியாத நிலையில், கடந்த ஒரு வாரமாக ஒதியமலை பெரியகுளம் வயல் வெளியில் அலைந்து திரிந்துள்ளது.

யானை பலமாக இருக்கும் போது, அதனை யாராலும் அடக்கிவிட முடியாது. ஆனால், அதன் உடல்பலவீனமான நிலையை உணரும் போது, அது மனிதர்களைத் தேடி வரும்; இவ்வாறுதான் இதுவும் நடந்தேறியுள்ளது.

விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களை யானைகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, வனஜீவராசிகள் திணைக்களத்தால் வெடிகள் வழங்கப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வனஜீவராசிகள் திணைக்களம் ஒட்டுசுட்டான் பகுதியிலேயே அமைந்துள்ளது.

30 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கொக்குத்தொடுவாயில் இருந்தும் மறுபக்கத்தில் துணுக்காயில் இருந்தும் விவசாயிகள் வெடியைப் பெற்றுக்கொள்ள வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு வெடி கொழுத்திப் போட்டும் யானைகளை கட்டுப்படுத்த முடியாத இடங்களில், சில விவசாயிகள் சட்டவிரோதமான வெடிபொருட்களைப் பயன்படுத்தி, யானைகளைக் கலைக்கின்றார்கள். அவற்றில் ஒன்றுதான் ‘வெங்காய வெடி’ எனப்படும் வெடியாகும்.

பூசணிக்காய், பெரிய காய்களுக்குள் வெடியை வைத்து, யானை வரும் விவசாய பகுதிகளில் வைத்துவிடுவார்கள். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பன்றிக்காகவும் வைப்பார்கள்.

இவ்வாறு, யானை இத்தகைய காய்கறிகளை உண்ணும் போது, வாய்க்குள் வெடிக்கின்றன. இதன்போது யானை அலறி அடித்துக் கொண்டு ஓடும். இதன் பின்னர், அந்தப் பக்கத்துக்கே யானை வராது… இவ்வாறுதான் நாள்தோறும், முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை-மனித மோதல்கள் தொடர்சியாக அதிகரித்து வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்கள், விவசாயக் கிராமங்களுக்கான யானை வேலி அரசாங்கத்தால் போட்டுக்கொடுக்கப்படவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள். சில இடங்களில், யானை வேலி அமைக்க பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டும் அரசியல் காரணங்களால் அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலைமையையும் காணக்கூடியதாக உள்ளது.

மறுபக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பான்மை இன மக்களைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படும் வெலிஒயா பிரதேசத்தில், விவசாய நிலங்கள் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் யானை வேலி அமைத்துக் கொடுக்கப்பட்டு பராமரிப்புகளும் நடைபெற்று வருகின்றன. இது தமிழ் மக்களை பொறுத்தமட்டில் கவலையளிக்கும் ஒருசெயல் என பார்க்கப்படுகின்றது.

யானைகளைக் காடுகளுடன் மட்டுப்படுத்தி வைத்திருக்க யானை வேலியே முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இந்த யானை வேலி இல்லாத நிலையில், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அழிவுகளை, விவசாயிகள் தொடர்ச்சியாக சந்தித்துவரும் வேளையில், யானைகளும் இவ்வாறு அழிந்துகொண்டுதான் செல்லும் என்பது, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள கவலையாகும். யானைகளின் அழிவில் இருந்து தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்கள் பாதுகாக்கப்படுமாக இருந்தால், சரியான அறுவடையைப் பெற்றுக்கொண்டு விவசாய உற்பத்தியில் உயர்ந்து செல்லும் விவசாயிகளாக மாற்றம் காணலாம் என்பது முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

அரச திணைக்களங்கள், அரச அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகளுக்குச் சரியான நடவடிக்கையை எப்போது எடுப்பார்கள்? யானைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கான பதில்களை வேண்டி, முல்லைத்தீவு மாவட்ட விவசாய மக்கள் காத்திருக்கின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்ரோ சிவனின் கதை!! (வீடியோ)
Next post உணவாலும் உறவு சிறக்கும்! (அவ்வப்போது கிளாமர்)