மெஹந்தி வரையலாம்…கலர்ஃ புல் லான வருமானம் பார்க்கலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 2 Second

பண்டிகை, விசேஷ நாட்கள் மற்றும் திருமணம் போன்ற சுபதினத்தில் பெண்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொள்வது ஒரு மரபாகும். இப்போது திருமணத்திற்கு முந்தைய ஒரு நாள் மெஹந்தி என்று கொண்டாடுகிறார்கள். அன்று மணப்பெண் மட்டுமில்லாமல் அனைவரும் கைகளில் மெஹந்தி இட்டுக் கொள்வது வழக்கமாகிவிட்டது. தமிழகத்தில் மருதாணி பழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தாலும் பள்ளி, கல்லூரி, விடுமுறை நாட்கள் மற்றும் திருமணங்களில் மட்டும் இட்டுக் கொள்வார்கள்.

இதற்காக வீட்டில் அம்மாக்கள் மருதாணியை அம்மியில் அரைத்து கையில் கப்பி போல் வைத்துவிடுவார்கள். நவீன காலத்தில் அதையே கோனில் அடைத்து கொடுப்பதால், விரும்பும் டிசைன்களை விரல் நுனியில் துவங்கி முழங்கை வரை வரைந்து கொள்கிறார்கள். இதற்கு படைப்பாற்றல் ஒரு பக்கம் அவசியம் என்றாலும், கைகளில் மெல்லிய இழையாக டிசைன் வரைவது அதைவிட முக்கியம். இரண்டையுமே அழகாகவும் நேர்த்தியாகவும் செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த கற்பகம்.

‘‘எனக்கு பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வது மேல் தனி ஆர்வமுண்டு. ஓவியம் வரைதல், எம்பிராய்டரி, வண்ணம் தீட்டுதல், ஆடையில் கண்ணாடி வேலைப்பாடுகள், வீட்டை அலங்கரிக்கும் கைவினைப் பொருட்கள் என பலவற்றை மிகவும் ஈடுபாட்டுடன் செய்து வந்தேன். பள்ளியில் கை வேலை செய்வதற்காகவே ஒரு வகுப்பு இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்ச வகுப்பு. ஆசிரியர் சொல்லித் தருவதை மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டு, அதை வீட்டிலும் வந்து செய்து பார்ப்பேன். அதே சமயம் பள்ளியில் கைவினைப் பொருள்கள் செய்வதற்காக போட்டிகளும் நடக்கும். நான் தவறாமல் கலந்து கொள்வது மட்டுமில்லாமல், கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் பரிசு வென்றிருக்கேன். ஒவ்வொரு முறை மேடையில் பரிசு வாங்கும் போது, மேலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்படும். அப்படித்தான் மருதாணியும் போட கற்றுக் கொண்டேன்’’ என்றவரின் வாழ்க்கையில் அந்த கலை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘‘பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது என்னுடன் படித்த சக மாணவிக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. நான் மருதாணி போடுவது அவளுக்கு தெரியும். தன்னுடைய திருமணத்திற்கு மருதாணி போடச் சொல்லிக் கேட்டாள். நானும் மறுப்பேதும் சொல்லாமல் போட்டுவிட்டேன். அதுவே என் முதல் ஆரம்பம் மற்றும் என்னுடைய முதல் சம்பாத்தியம்னு சொல்லணும். ஆனால் அப்போது எனக்குத் தெரியாது என்னுடைய எதிர்காலத்தில் இந்தக் கலை எனக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்னு. இப்பதான் மருதாணி கோன் இன்ஸ்ட்ன்ட் மருதாணி கிடைக்கிறது. அப்பெல்லாம் மருதாணி இலையை பறிச்சு அரைச்சு வைப்பதுதான் வழக்கமாக இருந்தது. அப்படி அரைக்கும் இலையைக்கூட நான் சிறு குச்சியைக் கொண்டு கோலமாகவும், பூக்களைப் போலவும் என் கையில் போட்டுக் கொள்வேன். மருதாணி கோன் வந்த பிறகு எனக்கு கைகளில் டிசைன்கள் வரைவது ரொம்பவே சுலபமானது’’ என்றவர் படிப்பு முடிச்ச கையோடு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார்.

‘‘அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். என்னுடைய நிறுவனத்தில் ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே, ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழா கொண்டாடுவது வழக்கம். அதில் போட்டிகள் இடம்பெறும். நான் குறிப்பா கலை மற்றும் கைவினை சார்ந்த போட்டியில் கலந்துகொள்வேன். அதிலும் மருதாணிப் போட்டியில் எப்போதுமே நான் தான் முதல் பரிசை பெறுவேன். அதைப் பார்த்த பிறகு என்னுடன் பணிபுரியும் தோழிகளுக்கும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் மருதாணி போட சொல்லிக் கேட்டார்கள். நானும் போட ஆரம்பித்தேன். அவர்களின் வீட்டு விசேஷங்கள் மற்றும் விழாக்களுக்கு என்னைதான் மெஹந்தி போட அழைப்பார்கள். அவர்கள் மூலமாக அவர்களின் தோழிகள் மற்றும் உறவினர்கள் என என்னுடைய வட்டம் கொஞ்சம் விரிவடைந்தது’’ என்றவர் கிடைக்கும் நேரத்தில் டைலரிங், அழகுக் கலை போன்றவற்றுக்கான பயிற்சியும் பெற்றுள்ளார்.

‘‘வேலை, அப்பாயின்ட்மென்ட் பேரில் மருதாணி என காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்து கொண்டு இருந்தேன். இதற்கிடையில் வீட்டில் திருமணம் பார்த்து முடித்தார்கள். அதனால் பார்த்த வேலையும் என்னால் தொடர முடியாமல் போனது. வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் எங்க வீட்டில் அருகே இருந்த அழகு நிலையத்திது வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள் பிறந்ததால், என்னால் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. பியூட்டி பார்லர் செல்ல முடியாமல் போயிற்று. இன்றைய கால கட்டத்தில் கணவர் ஒருவரின் சம்பளம், எந்த குடும்பத்தையும் திருப்தி செய்ய முடியாது என்பது உறுதி. ஏனென்றால், தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கணவர் ஒருவரின் சம்பளத்தில் குழந்தைகளின் படிப்பு செலவுகளை சமாளிப்பது என பெரும் பிரச்னையாக நீடித்தது.

செய்வது அறியாமல் திகைத்து நின்ற வேளையில், எனது சகோதரர்தான் எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி உற்சாகப்படுத்தினார். கையில் தொழில் இருக்கு அதை சரியாக பயன்படுத்திக் கொள் என்று எனக்கு அறிவுரை கூறினார். ஆனால், எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் முதலீடு என்பது தேவை. நானே அ்ழகு நிலையம் ஆரம்பிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு லட்சம் செலவாகும். அந்த அளவுக்கு என்னால் செலவு செய்ய முடியாது. அதனால் என் சகோதரர், ‘நீ நன்றாக மெகந்தி வரைகிறாய். அதையே உனது கைத் தொழிலாக உருவாக்கிக் கொள். அதில் வரும் வருமானம் உன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு ஏணிப்படியாக இருக்கும்’ என்றார்.

எனக்கும் அது சரின்னு படவே ‘எஸ் பியூட்டி கார்னர்’ என்ற பெயரில் ஆன்லைன் தொழிலாக துவக்கினேன்’’ என்றவர் திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் மெகந்தி வரைந்து வருகிறார். ‘‘சிறிய அளவு முதலீடு தான் என்றாலும், இதன் மூலம் மாதம் ரூ.15,000 முதல் 30,000க்கு மேல் வருமானம் ஈட்ட முடிகிறது. பிள்ளைகளின் படிப்பு நிம்மதியாகச் செல்கிறது. சுபமுகூர்த்த நாட்கள் அதிகமுள்ள வேளைகளில் வருமானம் கூடும். திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களுடன் நான் இணைந்து செய்வதால், வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மெகந்தி ஸ்டால் வைக்க வாய்ப்பு தருவார்கள். எனக்கு ஏற்கனவே கைவினைப் பொருட்கள் செய்ய தெரியும் என்பதால், இதனுடன் நெயில் ஆர்ட், ஆரத்தி தட்டுகள் போன்றவற்றையும் செய்து தருகிறேன். மேலும் என்னைப்போல் உள்ள பெண்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன்’’ என்றார் கற்பகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியக்க வைக்கும் வேப்பம்பூ!! (மருத்துவம்)
Next post ‘டிசைனிங்’… படைப்பாளர்களின் எதிர்காலம்! (மகளிர் பக்கம்)