By 4 August 2021 0 Comments

பெண் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கணும்!! (மகளிர் பக்கம்)

சன் டி.வியின் ஆஸ்தான நடிகை. 15 ஆண்டு கால சின்னத்திரை பயணம். 30-க்கும் மேற்பட்ட மெகா தொடர்கள். ‘நட்சத்திர கபடி’ நிகழ்ச்சியின் ரன்னர்
அணியின் கேப்டன். சின்னத்திரையில் நம்பியார் என தமிழக மக்களின் இல்லங்களில் தினமும் தொலைக்காட்சி மூலம் சந்திக்கும் நடிகை கிருத்திகா, தன் நடிப்பு பயண அனுபவங்களை தோழியரோடு பகிர்கிறார்.

“நான் கிருத்திகா அண்ணாமலை. நடிப்பு துறையில் நான் அறிமுகமானது திரைப்படத்தில் தான். அம்மாக்கு நடிக்கணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை. ஆனால், அவங்க குடும்பத்துக்குள்ள பண்ண முடியவில்லை. அம்மாவின் நண்பர்கள் நிறைய பேர் திரைத்துறையில் இருக்காங்க. அப்படி ஒரு நண்பரை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்க போயிருந்தோம். போன இடத்தில், ‘சத்யராஜ் சார் படத்தில் தங்கச்சி கதாபாத்திரத்துக்கு இவங்க சரியா இருப்பாங்க’னு அந்த கேமராமேன் அங்கிள் அங்க இருந்தவங்ககிட்ட சொன்னாங்க. அப்பவே நான் நல்ல ஹைட்டா இருப்பேன்.

அம்மாவுக்கும் ரொம்ப ஆர்வமாகி பண்ணலாம்னு உடனே நடிக்க வச்சுட்டாங்க. மணிவண்ணன் சார் இயக்கிய அந்த படம் நடிச்சுட்டு இருக்கும் போது பத்தாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். அதுக்குப்பறமும் ஒரு படம் நடிச்சேன். அதன் பின், ஹால் டிக்கெட் பிரச்னை, அதிகமா லீவ் போடக் கூடாதுனு பள்ளியில் ஸ்ட்ரிட்டா சொல்லிட்டதுனால நடிப்புக்கு முழுக்கு போட்டு, படிப்பில் கவனம் செலுத்தினேன்” என்கிற கிருத்திகா, சின்னத்திரையில் அறிமுகமானது பற்றி பேசினார்.

‘‘கல்லூரியில் கல்ச்சுரல் செக்கரட்ரியாக இருந்தேன். அந்த நேரத்தில் இயக்குநர் திருமுருகன் சாரை சீப் கெஸ்ட்டா ஒரு நிகழ்வுக்கு அழைத்திருந்தோம். மெட்டி ஒலி சீரியல் ஒளிபரப்பான சமயம். சீரியலும் நல்ல ஹிட். கல்லூரிக்கு வந்திருந்த திருமுருகன், அங்க நான் துறுதுறுனு இருந்ததை பார்த்திருக்கிறார். என்னைப் பற்றி விசாரிச்சும் இருக்கார். என் ஃப்ரெண்ட்ஸ், நான் சினிமாவுல நடிச்சு இருக்கேன்னு சொல்லி இருக்காங்க. உடனே என்னை அழைத்தவர்,
‘சீரியல்ல நீ நடிக்கிறியா’னு கேட்டார். நானும் சரி இவங்க சும்மா வழக்கமா கேட்குற மாதிரி கேட்பாங்கனு அப்படியே விட்டேன்.

ஆனால் ஒரு நாள் திடீரென்று மெட்டி ஒலி சிரியலில் இருந்து கூப்பிட்டாங்க. அதில் அருந்ததியா அறிமுகமானேன். அன்று ஆரம்பிச்ச என்னுடைய பயணம் இன்றைக்கு வரைக்கும் மக்களை தினமும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் மூலமா தொலைக்காட்சியில் சந்திச்சுட்டு இருக்கேன்’’ என்றவர், சன் டிவி -யிலேயே ‘முந்தாணி முடிச்சு’, ‘ஆனந்தம்’, ‘ஆடுகிறான் கண்ணன்’, ‘கணவருக்காக’, ‘செல்லமே’, ‘மரகத வீணை’, ‘கேளடி கண்மணி’, ‘வம்சம்’… என பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

‘‘சீரியல் பொறுத்தவரை பொதுவாக எனக்கு அமைவது எல்லாமே நெகட்டிவான கதாபாத்திரங்கள். ஹீரோயினா நடிச்சிடலாம். ஆனால் வில்லியா நடிக்கும் போது, என்னை நானே நிரூபிக்க ஒரு வாய்ப்பாக தான் பார்க்கிறேன். நிரூபிச்சும் இருக்கேன். ‘முந்தாணி முடிச்சு’ சீரியலில் நடிச்சிட்டு இருந்த சமயம். நான் தனிப்பட்ட முறையில் கோயிலுக்கு போயிருந்தேன். அங்க ஒரு பாட்டிம்மா என்னை பார்த்து, ‘பண்றதெல்லாம் பண்ணிட்டு நல்லவளாட்டம் கோயிலுக்கெல்லாம் வரா’னு சொல்லி திட்டிட்டு இருந்தாங்க.

நானும் யாரையோ திட்றாங்கனு கவனிக்காம விட்டேன். ஆனா அந்த பாட்டி நேரா என்னிடமே வந்து, என் முதுகை தட்டி, ‘ஏம்மா உன்னதான் சொல்லிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு போயிட்டு இருக்கேன்’ னு கேட்டாங்க. அப்பதான் புரிஞ்சது அவங்க என்னை இல்லை அந்த சீரியலில் வரும் ரேகா என்ற என் கதாபாத்திரத்தை திட்டுறாங்கன்னு. அந்த கதாபாத்திரம் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்குன்னு நினைக்கும் போது, அது எனக்கு கிடைச்ச மிகப் பெரிய விருதாதான் பார்க்கிறேன்” என்கிற கிருத்திகா, தான் நடிக்க வரவில்லை என்றால், ஒரு ஆடிட்டராகவோ அல்லது கணித துறை சார்ந்த வேலையில் இருந்திருப்பதாக தெரிவித்தார்.

‘‘சன் டி.வியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒவ்வொன்றும் வெப்சீரியஸ்க்கு நிகராகவே இருக்கிறது” என்கிற கிருத்திகா, இன்று தொழில் நுட்ப ரீதியாகவும், நடிகர்களின் உடை, காட்சி அமைப்பு எல்லாம் மாறி இருக்கிறது என்கிறார்.

“நான் அறிமுகமான மெட்டி ஒலி சீரியலில் அதிக மேக்கப் இல்லாமல் தான் நடித்திருப்பேன். திருமுருகன் சாரும் அதைதான் விரும்புவார். நாம் வீட்டில் எப்படி இயல்பாக இருப்போமோ, அதே போல் நடிகர்களையும் நடிப்பு மற்றும் உடை, ஒப்பனைகளில் இயல்பாகவே காட்சிப்படுத்துவார். அதுதான் அவரது பெரும் வெற்றிக்கு காரணம். நம்ம பக்கத்து வீட்டு பெண்களை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படணும்னு சொல்வார். அப்பதான் மக்கள் தொடராக இருந்தாலும், அவர்களின் மனதுக்கு ெநருக்கமாக பார்ப்பாங்க என்பது அவரின் கான்செப்ட்.

ஆனால் இன்றைய காலங்களில் இந்தியில் வரும் சீரியல்களின் தாக்கங்கள், ரீமேக் போன்ற காரணங்களால் அதற்கேற்றார் போல் மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அதில் வரும் உடை, செட், தொழில்நுட்பம், அணிகலன்கள் என எல்லாவற்றிலும் ஒரு அப்பீரியன்ஸ் பிடிக்க ஆரம்பிச்சுருச்சு. எனவே இங்கு எடுக்கப்படும் சீரியலிலும் உடை, மேக்கப், அணிகலன்களை தாண்டிதான் நடிப்பையும், நாடகத்தின் கருவையும் பார்க்க கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. அப்பீரியன்ஸ்க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என்கிற கிருத்திகா, அன்றைய நொடி அல்லது அன்றைய நாளுக்கானதாக மட்டும் தான் வாழ்க்கை என்கிறார்.

“வாழ்க்கை என்ன கற்றுக் கொடுக்கிறது என்று ஆழமாக பார்க்கிற ஆள் கிடையாது. இந்த நேரம் அல்லது இன்றைக்கு இப்படி நடந்து கொண்டிருக்கிறது. அதை மட்டும் தான் நான் பார்க்கிறேன். நாளை என்ன என்று நான் ரொம்ப யோசிக்க மாட்டேன். அந்த வகையில் இத்தனை ஆண்டு இந்த துறையில் பயணிப்பதால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அது ஒரு நிறைவை கொடுத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என் அம்மா. சின்ன வயதிலிருந்தே சுதந்திரமா என்னை வளர்த்தாங்க. நான் வேறு ஏதாவது தொழிலை தேர்ந்தெடுத்திருந்தால் இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பேனா என்று தெரியவில்லை. அது மட்டுமில்ல, ஒரு பெண்ணாக வீட்டில் யாருக்குமே பாரம் இல்லாமல் இந்த நிமிடம் வரை என் குடும்பத்தை பார்த்துக்கிறேன் என்பது ரொம்ப பெருமையா இருக்கு.

‘என்னோட அம்மாக்கோ, அப்பாக்கோ, குடும்பத்துக்கோ என்னால் சுதந்திரமா பண்ண முடியவில்லை. எந்த ஒரு விஷயம் முடிவு எடுக்கணும்னாலும், கணவரின் சம்மதத்துக்காக காத்திருக்க வேண்டியிருக்கு’ என்று சிலர் சொல்லுவாங்க… ஏன் என் கூட படிச்ச ஃபிரெண்ட்ஸே சொல்லும் போது, அந்த வகையில் நான் மாறுபட்டிருப்பது சந்தோஷமா இருக்கு. இந்த நிமிஷம் வரை என்னோட அம்மாக்கு கஷ்டம் கொடுத்தது கிடையாது. அம்மா இல்லைனா வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவேன்.

கல்யாணம் ஆகும்வரை ஷூட்டிங் வந்து பார்த்துகிட்டாங்க. கல்யாணத்துக்கு பிறகு என்னோட பையன பார்த்துக்கிறாங்க. நிம்மதியா… சிந்தனைகள் சிதறாமல்… நடிக்கிறதுல மட்டும் கவனம் செலுத்துவதற்கு முழு காரணம் அம்மாதான்” என்கிற கிருத்திகா, இன்றைய காலக்கட்டங்களில் இந்த துறையில் நடிகையாக மட்டுமின்றி, அதிக பெண்கள் டெக்னிக்கல் துறைகளிலும் வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்கிறார்.

‘‘ஆண்களுக்கு திறமை அதிகம், பெண்களுக்கு திறமை குறைவு என்றெல்லாம் கிடையவே கிடையாது. ஆனால், என்ன… ஆண் எந்த தொழிலை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். பெண் குறிப்பிட்ட தொழிலை மட்டும் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்று, அவர்கள் குடும்பத்துக்குள்ளேயே நம்புகிறார்கள். அதனால் பெண்கள் பல விஷயங்களுக்கு வருவதில்லை.

அது தான் உண்மை. இந்த துறைக்கெல்லாம் போனால் இந்த மாதிரி உடை உடுத்தணும்னு வீட்டில் தடை விதிக்கும் போது, அவர்களுக்குள் இருக்கும் திறமை, அழகு, ஆசை, கனவு எல்லாம் தகர்க்கப்படுகிறது. திரைத்துறையை பொறுத்தவரை சில பெண் இயக்குநர்கள் வந்திருந்தாலும், ஒரு சிலரை தவிர தொடர்ந்து அவர்களால் இயங்க முடிவதில்லை. அதுவும் களைய வேண்டும். நானும் ஒரு பெண் இயக்குநர் இயக்கத்தில் நடிக்க ஆர்வத்தோடு இருக்கிறேன். இன்னும் நிறைய பெண்கள் இந்த துறையில் வேலை பார்க்கணும்னு ஆசைப்படுகிறேன்” என்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.Post a Comment

Protected by WP Anti Spam