By 8 August 2021 0 Comments

என்றுமே குறைவில்லாத துவம்சம் !! (கட்டுரை)

“இரவிலும் வருகின்றன; பகலிலும் வருகின்றன. நாம் கஸ்டப்பட்டு மிகவும் சிரத்தையுடன் மேற்கொள்ளும் வேளாண்மையை, கண்ணை இமை காப்பதுபோல், அல்லும் பகலும் விடிய விடிய விழித்திருந்து காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.

எமது குடியிருப்புக்கு அருகிலுள்ள தளவாய் காட்டுக்குள்தான் சுமார் 20 இற்கு மேற்பட்ட காட்டு யானைகள் பகலில் தங்கி நிற்கின்றன. மாலை 5 மணியானதும் அவை கிராமங்களுக்குள் நுழைந்து வீடுகளையும் பயன்தரும் தென்னை, வாழை மரங்களையும், ஏனைய பயிர்களையும் அழித்தொழிக்கின்றன.

யானைகளை துரத்துவதற்குச் சென்றால், அதன் பலத்தை எம்மிடம் காட்டுவதற்கு எதிர்கொண்டு வருகின்றன. எம்மால் யானையின் பலத்தை எதிர்கொள்ள முடியுமா? இவ்வாறு எமது வாழ்வு நகர்ந்தால் எமது நிலைமை என்னாவது” எனப் படுவாங்கரைப் பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

வயலும் வயல் சார்ந்த சூழலுமான மருதநிலமும் காடும் காடு சார்ந்த சூழலுமான முல்லை நிலமும், மலையும் மலைசார்ந்த சூழலுமான குறிஞ்சிநிலமும் என மூவகை நிலங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பிரதேசம் மட்டக்களப்பின் மேற்குப் பக்கமாக அமைந்துள்ள படுவான்கரைப் பிரதேசமாகும்.

கனியவளங்கள் இனிமையுடன் இயற்கையாகவே அமையப் பெற்ற ஓர் இயற்கைச்சாரல் மிக்க வனப்பு மிகு பிரதேசமே, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசமாகும்.

வளங்கள் ஜொலிக்கும் படுவாங்கரைப் பிரதேசமக்கள் ஏனையவர்களைப் போல் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. தாமும் தமது குடும்பமும் என உடனுக்கு உடன் உழைத்தே வாழ்நாளைக் கழித்து வருகின்றனர்.

வேளாண்மைச் செய்கைக்கு மாத்திரமின்றி நிலக்கடலை. உழுந்து, சோளன், பயறு, மரவள்ளி, குரக்கன், கௌப்பி எனப் பல மேட்டுநிலப் பயிர் செய்கைகளுக்கும் பெயர்போன இந்தப்பிரதேசம், வரலாறு காணாத பேரழிவுகளையும் கடந்த காலங்களில் சந்தித்திருந்தது.

இவற்றை எல்லாம் கடந்து தற்போதைய சுமூகமான சூழ்நிலையில் அப்பிரதேச மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில், காட்டு யானைகளின் அட்டகாசங்களும் அவற்றால் ஏற்படும் அழிவுகளும் அம்மக்களை விட்டபாடில்லை. எனவே அம்மக்கள் மத்தியில் தொடரும் காட்டு யானைகளின் இன்னல்கள் குறித்து, அந்தப் பிரதேசவாசிகளின் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான் போன்ற பல பிரிவுகளில் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். விவசாயத்தையும் கால்நடை வளப்பையும், பிரதான தொழிலாகக் கொண்டுள்ள மக்கள் வீட்டுத்தோட்டம், கைத்தொழில், கோழிவளப்பு, செங்கல் வெட்டுதல், கூலிவேலை செய்தல் போன்ற இதரதொழில்களையும் மேற்கொன்டு வருகின்றனர்.

வருடாந்தம் ஐப்பசி தொடக்கம் மாசி மாதம் வரையான காலப்பகுதிகளில் பெரும்போக வேளாண்மைச் செய்கைகளையும் தோட்டங்களையும் பரந்த அளவிலும், சித்திரை தொடக்கம் அடி மாதம் காலப்பகுதிகளில் சிறுபோக வேளாண்மைச் செய்கையையும் குறைந்த அளவிலான காலபோக வேளாண்மைச் செய்கையையும் அந்தப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மேற்கொள்ளும் தமது ஜீவனோபாயத்துக்கு மிகநீண்டகாலமாக, காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்தே வருகின்றன. என அந்தப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

“நாங்கள், எமது கிராமத்திலிருந்து சுமார் 10 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்து பற்பல இடங்களில் வாழ்ந்து வந்தோம். இறுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந்துள்ளோம். கடந்த யுத்தத்தால் எமது மக்கள் சகல உடைமைகளையும் இழந்துள்ளார்கள். தற்போது காட்டு யானைகள் எம் உறவுகளின் வீடுகளை இரவும் பகலுமாக மாறிமாறி உடைத்து வருகின்றன” என்கின்றனர்.

“இதுவரை எமது பகுதியில் 5 பேருக்கு மேல் காட்டு யானைகள் அடித்துக் கொன்று இருக்கின்றன. சுமார் 100 இற்கு மேற்பட்ட வீடுகள், யானைகளால் முற்றாகத் துவம்சம் செய்யப்பட்டுள்ளன. யுத்தத்தால் துன்பப்பட்ட நாங்கள், தற்போது காட்டு யானைகளால் அல்லல் பட்டுக்கொண்டே இருக்கின்றோம்.

யானைகள் கிராமத்திற்குள் உட்புகும் மையப் பகுதிகளைச் சுற்றி மின்வேலிகள் அமைத்துத் தரவேண்டும் என்பதுவே எமது கோரிக்கை ஆகும். ஆனால், எமக்கு நான்கு, ஐந்து யானை வெடிகள் மாத்திரம் தரப்படுகின்றன. யானைகள் வரும் போது, அதனை நாங்கள் வெடிக்கவைத்தால் அந்த வெடிகளை யானைகள் ஏனோ, தானோ என்று விட்டுப்போகின்றன.

அந்த வெடிகளுக்கு இங்குள்ள யானைகள் பழக்கப்பட்டு விட்டன. நாம் எத்தனை தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வேலி அமைக்க வேண்டும் என்று கூறியும் இதுவரை அது எமக்குக் கைகூடவில்லை” எனக் கூறினார். பிரதேசவாசியாகிய த.ஜீவானந்தன்.

இது இவ்வாறிருக்க, இப்பிரதேசம் வேளாண்மைச் செய்கைக்குப் பெயர்போனது. இங்குள்ளவர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். இந்த விவசாயிகளின் கத்தரி, வெண்டி, மரவள்ளி, தென்னை, வாழைத் தோட்டங்கள் என்பவற்றை யானைகள் அழித்து வருவதோடு, வேளாண்மை வயல்களையும் அழித்து நெல் மூட்டைகளையும் உண்டும் சேதப்படுத்தியும் வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

“நாங்க மாலை ஆறு மணியானால் நித்திரை கொள்வதில்லை. விடிய, விடிய கண் விழித்துக் கொண்டுதான் இருப்போம். இவ்வாறுதான், ஒருநாள் நள்ளிரவு மணியளவில் உறக்கதிலிருக்கும் போது, எமது குடிசை வீட்டின் பின் சுவரை இடித்துக் கொண்டு யானையின் தும்பிக்கை எங்கட விட்டினுள் இருப்பதைக் கண்டோம். பின்னர் அரோகரா என்று கத்தினோம். கிராமத்திலுள்ள பலரும் ஓடிவந்து சத்தமிட, யானை ஒருவாறு சற்று நகர்ந்து விட்டது” என்கிறார் இன்னொரு பிரதேசவாசி.

காட்டுயானைகளின் தக்குதலுக்கும் அட்டகாசங்களுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள படுவான்கரைப் பிரதேச மக்கள், 1957 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளம், 1978 ஆண்டு வந்த சூறாவளி, பின் தொடர்ச்சியாகப் பீடித்த கோரயுத்தம், பின்னர் தொடர்ந்த வரட்சி, வெள்ள அனர்த்தம், போன்ற இவைகளனைத்திற்கும் முகம்கொடுத்து, தற்போது மெல்லமெல்ல மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் ‘மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதுபோல’ தற்போது காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களுக்குள்ளும் மக்களின் பயிர் பச்சைகளுக்குள்ளும், புகுந்து அப்பாவி மக்களின் உயிர்களையும் உடமைகளையும் குடியிருக்கும் வீடுகளையும் அழித்து வருவது மட்டுமல்லாமல், அவர்களது வாழ்வாதாரத்துக்குத் துணை நிற்கின்ற தொழில்களையும் அழித்து வருவது என்பது மிகவும் வேதனையான விடயமே!Post a Comment

Protected by WP Anti Spam