By 10 August 2021 0 Comments

உலக அரங்கில் சீனாவின் அணுகுமுறை !! (கட்டுரை)

சீனாவின் இன்றைய எழுச்சி தற்செயலானதல்ல; அது, நீண்டகாலத் திட்டமிடலின் விளைவு.

கெடுபிடிப்போரின் முடிவில், தோற்றம் பெற்ற அமெரிக்க மைய உலக ஒழுங்கில், சீனா பலத்த சவால்களைச் சந்தித்தது. ஆசியாவின் மீதான அமெரிக்காவின் பிடி, முழுமையாக இறுகியிருந்த நிலையில், சீனாவின் எல்லையோர நாடுகளில் அமெரிக்க ஆதிக்கம், சீனாவையும் அசைத்துப் பார்க்க முயன்றது.

சீனாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த, அமெரிக்கா விரும்பியது; ஆனால், அது சாத்தியமாகவில்லை. சீனாவின் உழைப்பாளர்களின் எண்ணிக்கையும் அவர்தம் உழைக்கும் வலுவும், மெதுமெதுவாக உலகப் பொருளாதார சந்தையில், சீனாவுக்கு ஓர் இடத்தைக் கொடுத்தன.

மோதல்போக்கற்ற அயலுறவுக் கொள்கையின் தொடர்ச்சி, உலகப் பொருளாதார சந்தையில், சீனாவை மேலும் விரிவாக்கியது. அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலும் அதைத் தொடர்ந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரும்’ உலகை ஆக்கிரமித்திருக்கையில், மெதுமெதுவாக சீனா வளர்ந்தது.

மூன்றாம் உலக நாடொன்றான சீனாவின் வளர்ச்சியை, ஏனைய மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சியோடு, மேற்குலக அறிஞர்கள் ஒப்பிட்டார்கள். ‘பிரிக்ஸ்’ நாடுகள் என அவற்றை அழைத்தார்கள். பிரேஸில், இந்தியா, தென்னாபிரிக்கா ஆகியவற்றின் வரிசையில் வைத்தே சீனாவையும் நோக்கினார்கள். அமெரிக்காவுக்குப் போட்டியான ஒரு கூட்டமைப்பாக இது கருதப்பட்டது.

‘பிரிக்ஸ்’ நாடுகளில், தமக்குச் சார்பான ஆட்சிகளை உருவாக்க அமெரிக்கா முண்டியடித்தது. பிரேஸிலில் லூலா டி சில்வா அகற்றப்பட்டார்; தென்னாபிரிக்காவில் ஜேக்கப் சூமா ஆட்சிக்கு வந்தார். இந்தியாவுடன் ஆயுத உடன்படிக்கைகளை செய்து கொண்டது. ரஷ்யாவில் புட்டினை அகற்ற, இன்னும் அமெரிக்கா முயன்றவண்ணம் உள்ளது.

இதன்வழி, சீனாவைத் தனிமைப்படுத்தி விட முயற்சிகள் நிகழ்ந்தன. கொஞ்சக் காலத்துக்கு முன்னரிலிருந்து, ஈரான் எத்தகைய மிரட்டலாகக் காட்டப்படுகிறதோ, 10 ஆண்டுகளுக்கு முன்னர் லிபியாவும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கும் எத்தகைய மிரட்டல் என்று காட்டப்பட்டதோ, அப்படியே சீனாவும் அன்று காட்டப்பட்டது.

சீனாவைத் தனிமைப்படுத்த, பல்வேறு தளங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வணிகத் தடைகள் விதிக்கப்பட்டன; அவற்றைத் தாண்டியே சீனா முன்னேறியது. சீனா, பல மூன்றாம் உலக நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளை அதிகரித்தது. பல நாடுகளில் முதலிட்டது; கட்டமைப்பு விருத்திக்கு கடன்களை வழங்கியது. இந்நிலையிலேயே, 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி, சீனாவின் இடத்தை உறுதி செய்தது.

இன்று, உலக ஆதிக்கத்துக்கான போட்டியில், சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக மோதுகின்றன. அதன் களங்கள் வேறானவை; முறைமைகள் வேறானவை. கெடுபிடிப்போர் காலச் சட்டகத்தில் இருந்து, மிகவும் வேறுபட்ட ஒரு போரில் இரண்டு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இருந்தபோதும், இரு நாடுகளையும் ஒரேமாதிரி அணுகிவிட முடியாது.

அமெரிக்கா போல சீனாவும் ஏகாதிபத்தியம் என்று சிலர் அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால், சீனாவை விளங்கிக் கொள்வதன் அடிப்படைகளில் ஒன்று, அமெரிக்கா போல, சீனாவும் ஏகாதிபத்தியமா என்பதை விசாரிப்பதாகும். சீனா, ஏகாதிபத்தியத்தை நோக்கிய பாதையில் நகர்கின்றது என்பதில் ஐயமில்லை. ஆனால், இன்னமும் அது அந்நிலையை எட்டவில்லை. சிலர், சீனாவுடன் ரஷ்யாவையும் இணைத்து, ‘ஏகாதிபத்தியங்கள்’ என்று அழைக்கிறார்கள்.

சீனாவினதும் ரஷ்யாவினதும் முதலாளித்துவத்தின் பாதை, அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளினதும் பிராந்திய வல்லரசுகளாகத் துடிக்கும் இந்தியா, பிரேஸில், தென்னாபிரிக்கா உட்பட்ட நவகொலனிகளினதும் முதலாளித்துவப் பாதையில் இருந்து மிகவும் வேறுபட்டது.

ரஷ்யாவிலும் சீனாவிலும், இன்றைய முதலாளித்துவ முறைமைகள், சோஷலிசத்துக்குக் குழிபறித்தே உருவாகின. சீனாவில் 1978ஆம் ஆண்டு தொட்டு, சோஷலிசக் கட்டமைப்புகள் திட்டமிட்டுக் குலைக்கப்பட்டுள்ளன. இலவசக் கல்வியும் இலவச உடல்நலச் சேவையும் சரிந்துள்ளபோதும், அவை முற்றாகக் கைவிடப்படாமையால், சீனா இன்றும் பொருளாதார நெருக்கடிகளையும் இயற்கை அனர்த்தங்களையும் கையாளுகிறது. எனினும், கிராமிய வறுமை, வேலைவாய்ப்பின்மை, குறைந்த ஊதியம், தொழிலாளரின் உரிமை மறுப்பு ஆகிய முதலாளித்துவ பாணியிலான பிரச்சினைகள் அங்குள்ளன.

சீனாவின் சனத்தொகையில் எல்லாமாக ஏழு சதவீதமளவில் உள்ள 50க்கும் மேற்பட்ட சிறுபான்மைத் தேசிய இனங்களும் தேசிய சிறுபான்மையினரும், பலவேறான பிரதேச சுயாட்சிகளுக்கு உரித்தானோராக உள்ளனர். இது, எழுச்சியின் விளைவாக அல்லாது, சீனத்தின் தேசிய இனக்கொள்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட விடயமாகும். எந்த இனத்தினதும் மொழியுரிமையோ பிரதேச உரிமையோ மறுக்கப்படவில்லை; மாறாக வலியுறுத்தப்பட்டது.

இத்தகைய ஒரு சூழலில், சவூதி அரேபியாவின் உதவியுடன், 1990ஆம் ஆண்டுகளில், முஸ்லிம் தீவிரவாதம் சீனாவின் வடமேற்கில் தூண்டிவிடப்பட்டது. திபெத்திய பிரிவினை வாதமும், அதேகாலத்தில் ஊக்குவிக்கப்பட்டது. தலாய் லாமாவின் சமாதானம் போதிக்கும் துறவி, தீவிர திபெத்திய தேசியவாதி ஆகிய இரண்டு முகங்கள், இடத்துக்கு ஏற்றபடி காண்பிக்கப்பட்டன; கலகங்கள் தூண்டிவிடப்பட்டன. கலகக்காரர்களது வன்செயல்கள் காட்டப்படாது, அவர்களுக்கு எதிரான அரச நடவடிக்கை உலகுக்குக் காட்டப்பட்டது. நேபாளப் புரட்சியில் கூட, சீனாவின் கை இருந்ததாகக் கூறப்பட்டது. இவ்வாறு, ஒவ்வொரு பற்றைக்குப் பின்னாலும் ஒரு சீனப் பாம்பு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, இந்தியாவுக்கு எதிரான சீன மிரட்டல் பற்றிப் பேசப்படுகிறது.

சீனா, பகைமையற்ற ஓர் உலகில் இல்லை. சீனாவைக் ‘கம்யூனிச அல்லது சிவப்பு மிரட்டல்’ என்று அமெரிக்கா அழைத்துள்ளது. நிறவாதப் பண்புடன் ‘மஞ்சள் ஆபத்து’ என்றும் அழைத்துள்ளது. கொரோனா வைரஸை, முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ‘சீன வைரஸ்’ என்று தொடர்ந்து அழைத்ததும் தற்செயலானதல்ல.

சீனாவின் கடந்த இரண்டு தசாப்த பொருளாதார வளர்ச்சி, அதை எண்ணெய் உட்பட்ட மூல வளங்களின் மீது தங்கியிருக்கச் செய்துள்ளது. சீனாவின் அந்நிய முதலீடுகளும் ஏற்றுமதிகளும் பெருகி வருகின்றன. அமெரிக்காவும் மேற்குலகும் புறக்கணித்து வந்த, வறிய ஆபிரிக்க நாடுகளும் இலத்தீன் அமெரிக்க நாடுகளும், சீனாவின் புதிய சந்தைகளாகவும் முதலீட்டுக் களங்களாகவும் மூலப்பொருள் ஏற்றுமதியாளர்களாகவும் அமைந்தன.

இது, உலக அரசியல் அரங்கில் புதியதோர் அணுகுமுறை. நாடுகளைப் பிடித்தல், ஆட்சி மாற்றங்களைச் செய்தல் என்பனவே, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான அரசியல் அரங்கில், நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் செல்வாக்குச் செலுத்துவதற்குமான வழிகளாக இருந்தன.

சீனாவின் இந்தப் புதிய அணுகுமுறை, அதற்கு உலகெங்கும் நண்பர்களைத் தேடிக் கொடுத்துள்ளது. ஆட்சிகள் மாறினாலும் நிலையான ஒன்றாக, சீனாவின் செல்வாக்குத் தொடர்கிறது. இதற்குச் சிறந்த உதாரணம் இலங்கை. 2015இல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்த போது ஏற்பட்ட பெரிய எதிர்பார்ப்பு, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு குறையும் என்பதாகும். ஆட்சிமாற்றம், துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்தும் என்ற நம்பிக்கை, மேற்குலகிடம் வலுவாக இருந்தது. ஆனால் அது சாத்தியமாகவில்லை. எனவே, ஆட்சிமாற்றம் என்ற மேற்குலக ஆயுதம், சீனாவின் விடயத்தில் பலனளிக்கப் போவதில்லை.

கடந்த ஒரு தசாப்தகாலமாக, பொருளாதாரத் தடைகள் என்ற பெயரில், சீனாவுடன் ஒரு மறைமுகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. மேற்குலக நாடுகள் வணிகத்தடை, கப்பல் போக்குவரத்துத்தடை என்ற பெயர்களில் சீனக் கப்பல் மார்க்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது அதிகரித்து வந்துள்ளது. சீனாவைக் கட்டுக்குள் கொண்டுவரும் இயலாமையின் விளைவுகள் இவை.

இந்தச் சவால்களுக்கு முகங்கொடுப்பது, சீனாவுக்கு அவசியமானது. அமெரிக்கா, உலக மேலாதிக்க நோக்கங்களுக்காகச் கடற்படை, இராணுவத் தளங்களை நிறுவுவது போல சீனாவும் செய்யலாம். இந்தியா செய்வது போன்று, அண்டை நாடுகள் மீது, தனது அரசியல் இராணுவ, வணிக ஆதிக்கத்தைத் திணிக்கலாம். இலங்கையின் போரிலும் அமைதியின் பேரிலான தலையீட்டிலும், இரண்டு நாடுகளும் இலங்கையின் இறைமையை சீரழித்துள்ளன என்பதை மறுக்கவியலாது.

சீனா, இதுவரை எந்த நாட்டிலும் இவ்வாறு செய்ததில்லை; இனிச் செய்யாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், அவ்வாறு நடக்கும் வரை, நாம் வெறும் ஊகங்களினது அடிப்படையில், சீனா பற்றிய சரியான முடிவுகளுக்கு வர இயலாது.

சீனா முன்னெடுத்துவரும் ‘ஒருபட்டி; ஒருவழி’ திட்டமானது, உலகை புதிய வழிகளில் இணைக்கிறது; புதிய ஒழுங்கை நோக்கி நகர்த்துகிறது. இந்த நகர்வு இலகுவானதல்ல. பொருளாதார ரீதியில் நாடுகள் பிணைக்கப்பட்டுள்ள உலக நிலைவரத்தில், இந்த அணுகுமுறை சவாலானது. சீனாவுடன் பொருளாதார உறவுகளைப் பேணும், சீனாவின் பொருளாதார வலிமையில் தங்கியுள்ள நாடுகளின் எதிர்காலம், இந்தத் திட்டத்தின் வெற்றியில் தங்கியுள்ளது.

ஆதிக்கவாதிகள், காலனியாதிக்க காலத்தில் பிடுங்கித் தின்றார்கள்; இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அடித்துப் பறித்தார்கள்; இனி என்ன செய்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.Post a Comment

Protected by WP Anti Spam