கசக்கும் இனிப்பு !! (கட்டுரை)

Read Time:6 Minute, 54 Second

இலங்கையில் காணப்படும் பல்வேறு தொழிற்சாலைகளில், சீனித் தொழிற்சாலையை எடுத்துக்கொண்டால் செவனகல, ஹிங்குரான, கந்தளாய் ஆகிய சீனித்தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.

இதில், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தேர்தல் தொகுதியில் கந்தளாய் பிரதேசத்தில் அமையப்பெற்றது தான் கந்தளாய் சீனித்தொழில்சாலை. இத்தொழிற்சாலை 1960ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி அப்போதைய பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அப்போது மூடிய பொருளாதார திட்டத்தின் மூலம், வளங்களை நாட்டிலே உற்பத்தி செய்வது போன்ற செயற்றிட்ட நோக்கத்தின் மூலமே கந்தளாய் சீனித்தொழில்சாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுமார் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு செய்கைபண்ணப்பட்டு சீனி உற்பத்திகள் இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டன. சுமார், 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு, கந்தளாய் சீனித்தொழில்சாலை இயங்கியது.

கந்தளாய் சீனித்தொழிற்சாலை, 33 வருடங்கள் இயங்கிய நிலையில் 1993 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், இத் தொழிற்சாலையை மூடியது. அன்றிலிருந்து இன்று வரை தொழில்சாலையின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. தற்போது சுமார் 28 வருடகாலமாக, எந்தவிதமான செயற்பாடுகளும் இன்றி கோடிக்கணக்கான பெறுமதியான இயந்திரங்கள் துருப்பிடித்த நிலையில், பாவிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளன.

1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசாங்கமும் தமது தேர்தல் பிரசார யுக்தியாக “நாம் ஆட்சிபீடம் ஏறியவுடன் கந்தளாய் சீனித்தொழில்சாலையை ஆரம்பித்து, கந்தளாய் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம்” என எந்தக் கட்சியும் கூறாமலில்லை.

எம்.ஜி.சீனி நிறுவனம் ஒன்று கடந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம், 500 ஏக்கர் காணியைப் பெற்று வேறு பயிர்ச்செய்கைகளை செய்து வருகின்றனர்.

தற்போதும், கந்தளாய் சீனித்தொழில்சாலையில் 33 ஊழியர்கள் பாதுகாப்பு ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றார்கள். அவர்களுக்கான சம்பளம், கிரமமான முறையில் கிடைப்பதில்லையெனவும் ஒரு மாதம் விட்டுத் தான் கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் சீனித்தொழில்சாலை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட லொறிகள், பெக்கோ இயந்திரங்கள் தள்ளும் இயந்திரங்கள், டோசர் இயந்திரங்கள் என பல மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் துருப்பிடித்த நிலையில் வெய்யிலிலும், மழையிலும் 28 வருடங்களாக உள்ளன.

சீனித்தொழில்சாலைக்குரிய இரும்புகளை இனந்தெரியாதோர் திருடிச் செல்வது, வாகனங்களில் சென்று இரும்புகளை கடத்திச் செல்வது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளும் நடந்துகொண்டே இருக்கின்றன.

“கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால், கந்தளாய் சீனித்தொழிற்சாலையை ஆரம்பிப்பதாகத் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அதன் பிற்பாடு, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும் என தற்போதைய ஜனாதிபதியின் அரசாங்கம் தெரிவித்தும் இதுவரைக்கும் ஒன்றும் நடைபெறவில்லை.

வீணாக கிடந்து துருப்பிடிக்கின்ற இரும்புப் பொருட்களை, அரசாங்கம் ஏலத்தில் விட்டு, அதனை கொண்டு சாத்வீக ரீதியிலான வேலைத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும். 28 வருடங்களாகப் பாவிக்காத இயந்திரங்களை, மீண்டும் பாவனைக்கு சரி செய்வதும் இயலாத காரியமாகும்.

எனவே, அரசாங்கம் கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய காணிகளை பொது மக்களுக்கு, வேறு பயிர்ச் செய்கைகள் மேற்கொள்வதற்கு வழங்கி வளப்படுத்த முயற்சிக்க வேண்டும்.அவ்வாறு இல்லையென்றால், புதிய திட்டங்களினூடாக இந்நிலங்களைப் பயன்படுத்த வேண்டும்.

கந்தளாய் சீனித்தொழில்சாலைக்குரிய விவசாய குளங்கள் காணப்படுகின்றன. ஒவ்வோர் எல்லைகளை மையப்படுத்தி 12,15,16,18 குளங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு குளத்தையும் மையப்படுத்தி, 2,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்புச் செய்கைகள் மேற்கொள்ள முடியும். தற்போது இக்குளங்களும் நீர் வன்றி பிரயோசனமற்ற நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு கந்தளாய் சீனித்தொழிற்சாலைகுரிய நிலங்களில் பௌதீக ரீதியிலான வளங்கள் காணப்படுகின்றன. அதனை மழுங்கடிக்காமல் பயன்படுத்த வேண்டும்.

நாட்டினை ஆட்சி செய்கின்ற எந்த அரசாங்கமாக இருந்தாலும், இனிமேலும் மக்களுக்கு வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசாமல், செயல் வடிவில் வெளிக்காட்ட முயற்சிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருநிமிடம் உங்களை உறையவைக்கும் உண்மை நிகழ்வு ! (வீடியோ)
Next post உலகை மிரளவைத்த அதிசயம் ! ஒரு கிளாஸ் தண்ணியால் தப்பிய விமானம்! (வீடியோ)