தமிழர்கள் சீனாவை நம்பலாமா? (கட்டுரை)

Read Time:13 Minute, 1 Second

இந்தத் தொடரை எழுதத் தொடங்கிய நாள் முதல், ஒரு கேள்வி பின்தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. பலவகையான கோணங்களில், பார்வைகளில் விமர்சனங்களில் அக்கேள்வி எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

அக்கேள்வி, கடந்த ஒரு தசாப்தகால இலங்கை அரசியல் செல்நெறியின் விளைபொருள். அந்தக் கேள்வி: ‘தமிழர்கள் சீனாவை நம்பலாமா’ என்பதாகும். இந்தக் கேள்வி, ஒருவகையில் அபத்தமாகத் தெரியலாம்; அல்லது, கையறுநிலையின் விளைவாகத் தோன்றலாம்; அல்லது, இயங்கை அரசியலின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

ஆனால், இந்தக் கேள்வி ஈழத்தமிழர் அரசியலின் நீண்ட வரலாற்று உற்பவிப்பின் பகுதியின் பாற்பட்டது. பின்கொலனிய இலங்கையில், ஈழத்தமிழர் அரசியலின் நடத்தையின் தொடர்ச்சியாகவே இக்கேள்வி எழுகிறது. இன்று, உலக அரங்கில் சீனாவின் எழுச்சியை கண்கூடாகப் பார்க்கிறோம். ஆசியப் பிராந்தியத்தில், சீனா தன்னைத் தன்னிகரற்ற சக்தியாக நிலைநிறுத்தி உள்ளது.

இந்தியாவின் கொல்லைப்புறம் என அறியப்பட்ட நாடுகள் எதுவும், இப்போது இந்தியாவின் முழுமையான செல்வாக்குக்குள் இல்லை. அதேவேளை, ஒபாமா காலந்தொட்டு அமெரிக்கா முன்னெடுத்து வரும் ‘ஆசியாவை மீள்சமநிலைப்படுத்தல்’, இப்பிராந்தியத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் இல்லை.

இந்தியாவும் அமெரிக்காவும் இப்பிராந்திய நாடுகளுடன் பேணுகின்ற அயலுறவுவை விட, வேறுபட்ட வகையில் சீனா, தனது அயலுறவைப் பேணுகிறது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றியோ, மனித உரிமை மீறல்கள் பற்றியோ, போர்க்குற்றங்கள் பற்றியோ மேற்குலகு காட்டிய அக்கறைகள், தமிழ் மக்கள் சார்பானவை அல்ல என்ற உண்மை, இப்போதைக்காவது புரிந்திருக்க வேண்டும். புரிய மறுப்பவர்களும் அதன்வழி வயிற்றுப் பிழைப்பைப் பார்ப்பவர்களும், தொடர்ந்தும் ஜெனீவாக் கூத்துகளை அரங்கேற்றலாம்.

பிராந்திய மேலாதிக்கத்துக்கான இந்திய-அமெரிக்கப் போட்டி, அமைதிப் பேச்சுவார்த்தைகளின் குலைவுக்குப் பின்னர், தெட்டத் தெளிவாக வெளிப்பட்டது. இலங்கை மீதான மேற்குலக நெருக்குவாரம், இந்தியாவுடனான போட்டியின் வெளிப்பாடென்பதற்குப் போர்நிறுத்தம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் மாறிமாறி மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வந்ததிலும் ஆதாரங்களைக் காண இயலும். எனவே, போர் நிறுத்தமும் அதைத் தொடர்ந்த பேச்சுகளும் மக்கள் நல நோக்கில் இடம்பெற்றவையல்ல.

இலங்கை, அமெரிக்காவின் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்குத் தென்னாசியாவில் முதல்முதலாக வாய்ப்பை ஏற்படுத்திய நாடு. இலங்கையில் தனது இராணுவ, கடற்படைத் தளங்களை நிறுவும் நோக்கம் இன்னமும் அமெரிக்காவிடம் உள்ளது.

எனவே அமெரிக்காவினதும், மேற்குலகினதும் இலங்கை மீதான அவா தொடர்கிறது. எனினும் அதன் நோக்கமோ விளைவோ, தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக அமையாது என்பது உறுதி.

இந்தியா, இலங்கையில் விரும்புகின்ற தீர்வு, இந்திய மூலதனத்தின் தடையற்ற வளர்ச்சியையும் இந்திய மேலாதிக்கத்தையுமே மனதில் கொண்டுள்ளது. திறந்த பொருளாதாரக் கொள்கை, இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைக்கத் தொடங்கிய நாளிலிருந்து, இந்தியப் பொருளாதார ஊடுருவலும் வணிக ஆதிக்கமும் வளர்ந்தே வந்துள்ளது. போருக்குப் பின்பு அது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முதலீடாகவும், நிலையான இந்திய மூலதன மேலாதிக்க இருப்பாகவும் அமைந்துள்ளது.

கடந்த அரைநூற்றாண்டாகத் தமிழர்கள் நம்பிய, நம்ப வைக்கப்பட்ட இரண்டு தரப்புகள் அமெரிக்காவும் இந்தியாவும் ஆகும். இவ்விரண்டும் தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்று இன்னமும் சொல்லப்படுகிறது. மோடிக்குக் கடிதம் எழுதும் மோடுகள் இன்னமும் நம்மத்தியில் இருக்கிறார்கள் என்பதை, நகைச்சுவை உணர்வோடு கடந்து செல்வது நல்லது. தமிழர்கள் யாரை நம்பினார்களோ, அவர்களின் கடந்த கால நடத்தை, அவர்களின் நோக்கங்களைத் தௌ்ளத் தெளிவாகக் காட்டிநிற்கிறது.

சீனா, கடந்த மூன்று தசாப்தங்களில் மிகவும் மாற்றமடைந்துள்ளது. மாவோ காலத்தில் சோசலிச நாடாக இருந்தவரை விடுதலைப்போராட்டங்களை சீனா ஆதரித்தது.

இன்று முதலாளித்துவ நாடாக மாறிய பிறகு, ஆக்கிரமிப்பு அரசுகளுக்கு ஆயுதங்களை விற்பதாக ஆகிவிட்டது. இறுதிப்போரின் போது இலங்கைக்கு, ஆயுதங்களை சீனா வழங்கியிருந்தது. ஆனால், அதைவிடப் பன்மடங்கு ஆயுத, ஆளணி, புலனாய்வு உதவிகளை இந்தியா வழங்கியது.

சீனா, ஒருபுறம் தனது பொருளாதார தர்க்கத்தின் அடிப்படையில் செயற்படுகிறது. மறுபுறம், நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில், ஆட்சியில் யார் இருப்பது என்பது சீனாவுக்குப் பொருட்டல்ல. இலங்கை போலவே, சீனா செல்வாக்குச் செலுத்துகின்ற ஏனைய நாடுகளிலும் நிலைப்பாடு அவ்வாறுதான். சீனாவின் வலுவான பொருளாதாரப் பிடி, அரசுகளைக் கட்டுப்படுத்தப் போதுமானது.

அமெரிக்காவின் மனித உரிமைகள் பூச்சாண்டியோ, இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு அல்லது குழுக்களை ஆயுதபாணியாக்குதல் போன்ற நடைமுறைகளை, இலங்கையில் சீனா பின்பற்றாது. தமிழர்களுக்கான ஆதரவு என்ற போர்வையில், இலங்கையைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்காவும் இந்தியாவும் முயற்சித்தன; இன்றும் முயற்சிக்கின்றன. சீனாவுக்கு அது தேவைப்படாது.

தென்னாசியப் பிராந்தியத்தில் ஆதிக்கப் போட்டி தொடரப்போவது உறுதி. இதில் ஏதாவதொரு சக்தியுடன் இணைந்து, விடுதலையைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கும் மனப்பாங்கின் வெளிப்பாடே, அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்புவதும் இப்போது சீனாவை நம்பலாமா என்ற கேள்வியும் ஆகும்.

எந்த வல்லரசையும் நம்பி, விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம். வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில், விடுதலைப் போராட்டங்கள் சில்லறைக் காசுகள் மாதிரி.

வல்லரசு அரசியலிலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப் போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலமுமே, தேசிய இன விடுதலையை வெல்ல இயலும்.

கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள், எதையுமே கற்கவில்லை என்று நம்பவில்லை. இந்தியாவையும் அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன், ஐ.நா சபையினதும் அதன் அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர், முற்றிலும் அறியாமையால் சொல்லவில்லை. சரியானதைச் செய்யும்படி, மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத் தடுக்கிறது எது என்று சிந்திக்க வேண்டும்?

அரசியல் தலைமைகள், மேலாதிக்கவாதிகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவு நிலைமைகள் அதை உறுதிப்படுத்துகின்றன.

எனவேதான், ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை, தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி, அவர்களது உடன்பாட்டைப் பெறாமல், அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும் இழைக்கின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்கு உட்படுத்துவது, நம் ஒவ்வொருவரினதும் உரிமையும் கடமையுமாகும்.

தமிழ் மக்கள், எப்போதோ கற்றிருக்க வேண்டிய பாடங்களைக் கசப்பான அனுபவங்களின் மூலமே கற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வரை, தமிழ் மக்களின் உண்மையான நண்பர்களையும் நட்பு வேடம் பூண்டவர்களையும் வேறுபடுத்த இயலாத விதமாகப் பல்வேறு புனைவுகள் நம்முன் காட்சிக்கு வைக்கப்பட்டு வந்துள்ளன. அந்தப் புனைவுகளைக் களையாத வரை, விடுதலை வெகுதொலைவில்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அதி முக்கியமான சக்தி, தமிழ் மக்கள்தான். இதை மறக்கும் போதுதான் அந்நிய உதவிக் கரங்களுக்காகத் தவங்கிடக்கின்ற அவலமும் அவசியமற்ற ஏமாற்றங்களும் நமக்குக் கிடைக்கின்றன.

அமெரிக்காவை நம்பிய ஆப்கானியர்களுக்கு இன்று நடந்ததும் குர்திஸ்களுக்கு நேற்று நடந்ததும், இந்தியாவை நம்பிய அனைவருக்குமான கடந்த நான்கு தசாப்தகால அனுபவங்கள் சொல்கிற செய்தி ஒன்றுதான்.

விடுதலை என்பதும் போராட்டம் என்பதும் மக்கள் சார்ந்தது. அந்நிய சக்திகள் சார்ந்ததல்ல. உரிமைக்கான போராட்டத்தை, மக்கள் தங்கள் தோள்களில் ஏந்திச் சுமக்காதவரை விடுதலை வெல்லக்கூடியதல்ல.

ஓநாய்கள், ஆட்டுக்குட்டிகளைக் கவரக் காத்திருக்கின்றன. ஆட்டுக்குட்டிகள் ஓநாய்களை எதிர்க்காமல் சிங்கங்களையும் சிறுத்தைகளையும் துணைக்கழைப்பது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் விடுதலைக்காக அந்நியர் தயவுக்காகக் காத்துக்கிடப்பது ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுகமான சுமை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஒலிம்பிக்கில் ஒளிர்ந்த பதக்க பதுமைகள்! (மகளிர் பக்கம்)