ஃபேஷன் A – Z !! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 40 Second

மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

ஊசி நூலை வைத்து பல வண்ணங்கள் இணைத்து சித்திரப்படுத்துவது தான் `எம்பிராய்டரி’. நம்முடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடங்கி முதன்மையாய் விளங்கும் நம் நாட்டின் பிரதானக் கலைகளில் முக்கியமான ஒன்று எம்பிராய்டரி என்னும் கலை. ஒவ்வொரு மாநிலத்தின் பாரம் பரியத்திற்கு ஏற்ப தனித்துவத்தைப் பதித்து, வித்தியாசமான எம்பிராய்டரி டிசைன்களை வழங்கிக்கொண்டிருக்கிறது ஆடை உலகம்.

முத்துமணிகள், சீக்வன்ஸ், க்வில்ஸ் கொண்டு, நம்முடைய கலாச்சாரம் மாறாமல் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. துணிகளில் மட்டுமல்லாமல், ஹேண்ட்பேக், கோட், தொப்பி, போர்வை என நாம் விரும்பும் அனைத்து துணிகளிலும் எம்பிராய்டரி கொண்டு அலங்கரிக்கலாம். இன்று பெண்களால் அதிகம் விரும்பப்படும் எம்பிராய்டரி டிசைன்கள் நம் நாட்டில் முகலாயர்களின் வருகைக்குப் பிறகே பின்பற்றப்பட்டன.

அப்படிப்பட்ட இந்த டிசைன்களில் பல வகை உள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்திற்கு ஏற்ப இவை வடிவமைக்கப்பட்டு வருகிறது. நாம் முன்பே குறிப்பிட்டது போல், எம்பிராய்டரி டிசைன்கள், மணிகள், உலோக கீற்றுகள், முத்துக்கள், கண்ணாடிகள் மற்றும் சீக்வின்ஸ் கொண்டு துணிகளில் வடிவமைக்கப்படுகிறது. அவ்வாறு டிசைன் செய்யும் போது அந்த உடையின் தன்மைக்கு ஏற்ப டிசைன்கள் துணியில் மேல்பரப்பிலோ அல்லது பார்டர்களிலோ தைக்கப்படுகிறது.

சாதாரண ஊசி நூல்களை மட்டுமே கொண்டு இந்தியாவில் மட்டுமே பாரம்பரியமான பல்வேறு வடிவங்கள் உள்ளன. உதாரணமாக, சிறிய சங்கிலி தையல் வேலைப்பாட்டுக்கு ஒரு சிறிய ஊசி (எம்பிராய்டரிக்கு பயன்படுத்தப்படும் ஊசி) கொண்டு ஆரி வேலைப்பாடு செய்யப்படுகிறது. ஆரி வேலைப்பாடு பொதுவாக துணிக்கு கீழே செலுத்தி நூலின் முனையில் சின்னதாக ஒரு வளையம் கொண்டு அமைக்கப்படுவது தான் ஆரி தையல்.

காஷ்மீரின் பிரபலமான எம்பிராய்டரி காஷிடா. இந்த டிசைன் பெரும்பாலும் காஷ்மீரின் நகரத்தின் முக்கிய அடையாள சின்னங்களான சினார் இலை, ஆப்பிள் பிலாசம் பூ, லில்லி மலர், குங்குமப்பூ மலர், திராட்சை, செர்ரி, பிளம் மற்றும் அந்த மாநிலத்தை சார்ந்த பல்வேறு பறவைகள் கொண்டு இருக்கும். மறுபுறம், காந்தா என்ற வேலைப்பாடு பருத்தி துணியில் மட்டுமே வடிவமைக்கப்படுகிறது.

இதில் பல்வேறு தையல்கள் நுணுக்கமாக இணைக்கப்பட்டு ஆங்காங்கே முடிச்சு போல் அமைக்கப்பட்டு இருக்கும். துணியில் தைக்கப்பட்ட பிறகு பார்க்கும் போது, மெல்லிய துணியில் அழகான இந்த டிசைன்கள் உயர்த்தப்பட்டு இருப்பது போல் காட்சியளிக்கும். காந்தாவின் மற்றொரு உருவாக்கம் தான் ‘ஜாலி’ என்ற டிசைன். இது பழங்குடியினரின் எம்பிராய்டரி. வண்ண வண்ண நிறங்கள் கொண்ட நூல்கள் கொண்டு மிகவும் எளிமையான டிசைன்கள் மற்றும் பிரகாசமான வடிவங்கள் கொண்டு இருக்கும். நீலகிரி பழங்குடியினரின் ‘தோடா’ மற்றும் பஞ்சாரா மற்றும் லம்பாடி ஆகியவை பழங்குடி எம்பிராய்டரியின் வடிவங்களில் மிகவும் பிரபலமானவை. கண்ணாடி வேலைப்பாடு கொண்ட அபால பாரத் எம்பிராய்டரி வடமேற்கு இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

பருத்தி, பட்டு மற்றும் சாடின் துணிகளை காலம் காலமாக இந்திய மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆரம்ப நூற்றாண்டுகளில் மிகவும் எளிமையான வடிவங்கள் துணிகளில் வடிவமைக்கப்பட்டு வந்தன. அதனைத் தொடர்ந்து எம்பிராய்டரி டிசைன்கள் ஒரு நுணுக்கமான செயல்முறை வடிவங்களாக டார்னிங், மேற்பரப்பு டார்னிங், கவுச்சிங், சாட்டின், ஓபன் செயின், ஹெரிங்போன், இன்டர்லேசிங், ரன்னிங்ல லேஸ்ட் ரன்னிங், லூப்ட் ஸ்டெம், ரேடியேட்டிங் மற்றும் பட்டன் ஹோல் தையல் என பல கிளைகள் கொண்டு படர்ந்து விரிய ஆரம்பித்தது. நூல்கள் பெரும்பாலும் ஃப்ளோஸ் அல்லது ட்விஸ்ட் பட்டு, பருத்தி மற்றும் சமீபத்தில் அக்ரிலிக்ஸ் ஆகியவற்றிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிராந்தியத்தைப் பொறுத்து, தையல் நுட்பங்கள் வேறுபடுகின்றன. தவிர, இது இப்போது ஆடைகளில் மட்டும் செய்யப்படுவதில்லை, ஆனால் கைப்பைகள், சுவர் அலங்காரங்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களிலும் எம்பிராய்டரி பயன்படுத்தப்படுகிறது.சமீபத்திய காலங்களில், இந்தியாவின் பாரம்பரியமான எம்பிராய்டரி டிசைன்கள் அனைத்தும் உலகளாவிய ஃபேஷன் துறைகளில் மிகவும் புகழ் பெற்றுள்ளன.

இதன் விளைவாக, இந்திய எம்பிராய்டரி டிசைன்கள் இப்போது புடவைகள், சல்வார் உடைகள், துப்பட்டாக்கள், லெஹங்கா சோலியில் மட்டுமில்லாமல் இந்தோ மேற்கத்திய கவுன்கள், டூனிக்ஸ் மற்றும் குர்தாக்களிலும் டிசைன் செயப்படுகின்றன. சீக்வென்ஸ் வடிவங்கள், கண்ணாடி அல்லது மணி வேலைப்பாடுகள் என எந்த விதமான எம்பிராய்டரி டிசைன்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட உடைகளாக இருந்தாலும் அதனை மற்ற துணிகளுடன் சேர்த்து துவைக்க கூடாது. இதனால் நூல் இழைகள் தளர்ந்து போகாமலும், கண்ணாடி மற்றும் மணிகள் பாதிப்படையாமலும் பாதுகாக்க முடியும்.

புடவைகள் மிகவும் பழமையான மற்றும் பிரபலமான ஆடைகளாகும். குறிப்பாக பெண்கள் மத்தியில் அவை பெரும் புகழைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பெண்ணும் மிகவும் விரும்பி அணியும் உடை புடவை என்று சொல்லலாம். இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் புடவை பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் அதனை உடுத்தும் விதம் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப மாறுபட்டாலும், ஃபேஷன் உலகில் அதனை அணிவிக்கும் பாணி மிகவும் வேறுபட்டுள்ளது. மேலும் பட்டுப்புடவைக்கு ஒரு பக்கம் பெண்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்தாலும், இப்போது எம்பிராய்டரி புடவைகளை பெரும்பாலான பெண்கள் அணிய விரும்புகிறார்கள்.

பொதுவாக எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட புடவையினை திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த வடிவமைப்பாளர்களால் மட்டுமே வடிவமைக்க முடியும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல திறமையான வடிவமைப்பாளர்கள் இருப்பதால், நகரத்தில் உள்ள ஒவ்வொரு புடவை கடைகளிலும் அழகாக வடிவமைக்கப்பட்ட எம்பிராய்டரி புடவைகளுக்கு என தனி கவுன்டர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. கலாச்சாரம் மற்றும் தனித்துவமான, புடவை அனைத்து இந்திய ஆடைகளிலும் மிகவும் பாரம்பரியமான ஒன்றாகும். அந்த புடவைகள் இப்போது ஃபேஷன் உலகில் மிகவும் நாகரீகமாக மாறியுள்ளது.

வழக்கமான சாதாரண பருத்தி புடவைகள் முதல் கண்களைப் பறிக்கும் காஞ்சிவரம் பட்டுப் புடவை வரை, புடவையின் ரகங்களை ஒரு நீண்ட பட்டியலிடலாம். புடவை நெய்யப்படும் துணி, அதில் செய்யப்படும் எம்பிராய்டரி டிசைன்கள், மற்ற வேலைப்பாடுகள் ஆகியவற்றைப் பொருத்து புடவையின் ரகங்கள் பல வகையில் மாறுபடும். அழகாக நேர்த்தியாக நெய்யப்பட்ட புடவைகளை தான் பலர் விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக டிசைனர்களால் வடிவமைக்கப்படும் எம்பிராய்டரி புடவைகள் அனைத்து இளம் தலைமுறையினரின் சாய்சாக உள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டின் பாரம்பரியமான பட்டுப்புடவைகளில் உள்ள ஜரிகளால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் மட்டுமல்லாமல் அதன் துணி ரகமும் பார்க்கும் போதும் அதனை உடுத்தும் போதும் பிரமாண்டமான தோற்றத்தினை அளிக்கும்.

பெரும்பாலான இந்திய திருமணங்களில் ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைக்கும் புடவையை தான் பெண்கள் அணிய விரும்புகிறார்கள். அதில் எம்பிராய்டரி புடவைகளில் நம்முடைய நிறத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவமைப்புகளை நீங்கள் காணலாம். பெரிய திருமண நிகழ்வுகள் முதல் சிறிய விழாக்கள் வரை, ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏற்ப எம்பிராய்டரி புடவைகள் உள்ளன. அதிக எடை முதல் குறைந்த எடை கொண்ட புடவைகள் அனைத்துமே அற்புதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. வடக்கில் அதிகமாக பெண்கள் விரும்பும் உடை லெஹெங்கா போல் டிசைன் செய்யப்பட்ட புடவைகள். புடவையை லெஹங்கா போல் அணியும் போது ஒரு பெண்ணின் அழகான அம்சங்களை மேலும் எடுத்துக் காட்டும்.

எம்பிராய்டரி டிசைன்களுக்கு ஏற்ப உடையின் அமைப்பு மற்றும் பிரமாண்டம் மாறுபடும். கனமான எம்பிராய்டரி செய்யும் போது அதற்கு பல்வேறு பொருட்களை பயன்படுத்தலாம். இதனை ஜார்ஜெட், க்ரீப், பட்டு மற்றும் நெட்டெட் துணிகளில் கூட வடிவமைக்கலாம். தூய சிஃப்பான் துணி கனமான எம்பிராய்டரி டிசைன்களை ஓரளவிற்கு தாங்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, க்ரீப் மற்றும் பட்டு துணிகளில் இது போன்ற எம்பிராய்டரி செய்யும் போது அவை மிகவும் உறுதியாக இருக்கும். புடவைகளில் கனமான எம்பிராய்டரி வேலைப்பாட்டிற்கு இலகுவான துணி
களையே பயன்படுத்துவது வழக்கம். காரணம், துணியும் கனமாக இருந்து அதில் செய்யப்படும் எம்பிராய்டரியும் கனமாக இருந்தால், புடவையின் எடை கூடுவதோடு, அதனை உடுத்தும் போது அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

எம்பிராய்டரி புடவையை ஆசைக்காக வாங்கி உடுத்திக் கொள்வதை விட அதை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். முதலில எம்பிராய்டரி புடவையினை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணி அல்லது அதில் செய்யப்பட்டுள்ள எம்பிராய்டரி டிசைன் மங்கலாக இருந்தால், உங்கள் துணியை ஒளிரச் செய்ய நீங்கள் ஆக்ஸிக்ளீனைப் பயன்படுத்தலாம். அதே சமயம் குளோரின் ப்ளீச்சினை பயன்படுத்தக்கூடாது. ஆக்ஸிக்ளீனை பயன்படுத்தும் போது குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் அதனை குளிர்ந்த நீரில் வைக்க வேண்டும். புடவையை கசக்கி பிழியவோ அல்லது முறுக்குவதோ கூடாது.

புடவையை அலசிவிட்டு சேலையை அப்படியே கொடியில் போட்டால், தண்ணீர் மெதுவாக வடிந்துவிடும். பிறகு நன்றாக விரித்து காயவைக்கலாம். காஞ்சிவரம், பனாரஸ், டஸ்சர், தென்னிந்திய பட்டில் துவங்கி எம்பிராய்டரி புடவைகளில் பல ரகங்கள் உள்ளன. அப்படிப்பட்ட பாரம்பரியமான உடையினை நாம் மிகவும் பாதுகாப்பாகவும் அதே சமயம் புதிது போலவும் வைத்துக் கொள்வது அவசியம்.

எந்த புடவையாக இருந்தாலும் சோப்புத் தண்ணீரில் கழுவுவதற்கு முன் அவற்றை உப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். இந்த துணிகளை இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதே சமயம் குளிர்ந்த தண்ணீரில் தான் கழுவ வேண்டும். துணி மீது சாயங்கள் மற்றும் பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தக்கூடாது. இப்படி நாம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதற்கு பதில் இந்த வகை ஆடைகளை டிரைக்கிளீனிங் கொடுத்துவிடுவது நல்லது. அதன் மூலம் புடவைகள் என்றும் உங்கள் அலமாரியில் பளிச்சென்றும் புதிதாகவும் மின்னும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்பை ருலினா பிரபலமாகும் சப்ளிமெண்ட்!! (மருத்துவம்)
Next post தொடரும் மர்மம் !! (கட்டுரை)