உங்க கழுத்து பத்திரம் வழி – சொல்லும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)

Read Time:13 Minute, 24 Second

நம்மில் யாரும் ஒருமுறையேனும் கழுத்து வலியை கடந்து வராமல் இருந்திருக்க மாட்டோம். அதிலும் குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் இவை பலமடங்கு அதிகரித்துள்ளது எனலாம். காரணம், அந்தளவுக்கு இன்று தொலைபேசிப் பயன்பாடு நம்மை தன் வலையில் சிக்கவைத்திருப்பதை சொல்லலாம்.அப்படி நமக்கு வரக்கூடிய சாதாரண கழுத்து வலி முதல் எலும்புத் தேய்மானம், சவ்வுத் தட்டு பிதுங்குதல் போன்றவற்றால் ஏற்படும் கழுத்து வலி வரை உள்ள அனைத்து வகையான கழுத்து வலிகளைப் பற்றியும் இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.

கழுத்துப் பகுதி…

*கழுத்து எலும்புகள் மண்டை ஓட்டின் தொடர்ச்சியாக வருபவை. ஏழு எலும்புகள் ஒன்றன் கீழ் ஒன்றாய் கீழே தொடர்ந்து வந்து ‘மேல் முதுகு’ எலும்புகளுடன் இணையும்.

*இந்த கழுத்து எலும்புகளின் இடையிடையே குஷன் போன்ற சவ்வுத் தட்டுகள் (disc) அமைந்திருக்கும். இது நாம் எடை தூக்கும்போது, நாம் கழுத்தை அசைக்கும்போது என அனைத்து நேரங்களிலும் எலும்புகளின் மேல் விழும் அதிர்ச்சியை (shock) தாங்கும் திறன் கொண்டவை. இதனால் எலும்புகளின் மேல் அதிக விசை (force) விழாமல் பாதுகாக்கும்.

*இதனை தவிர்த்து கழுத்தில் உள்ள இணைப்பு திசுக்கள் (ligaments), தசைகள் என அனைத்தும் தலையின் எடையை தாங்கி, கழுத்து மூட்டுகளுக்கு உறுதுணையாக அமைந்து கழுத்தின் அசைவுகள் நடக்க வழி வகுக்கும்.

கழுத்து வலி…

*நான் மேலே சொன்னவாறு கழுத்துப் பகுதியை காக்கும் எந்தவோர் உறுப்பில் கோளாறு வந்தாலும் அது கழுத்து வலியை உண்டாக்கும்.

*பெரும்பாலும் இன்று இயன்முறை மருத்துவர்களாகிய நாங்கள் சந்திப்பது கழுத்து தசைகள் சார்ந்த பிரச்சனைகளே.

*பின் வயதாவதால் ஏற்படும் கழுத்து எலும்பு தேய்மானம், சவ்வுத் தட்டு பிதுங்குதல் என மற்ற காரணங்களால் வரும் கழுத்து வலிகள்.

யாருக்கெல்லாம் வரலாம்..?

*அதிக நேரம் மடிக்கணினி, கணினி உபயோகிப்பவர்கள்.

*நீண்டநேரம் கைப்பேசி, தொலைக்காட்சித் திரை பார்ப்போர்.

*கீழே குனிந்து படிக்கும் பழக்கம் உடையவர்கள்.

*பள்ளி ஆசிரியர்கள்.

*தலையில் அதிக எடை சுமந்து வேலை செய்பவர்களுக்கு. உதாரணமாக கீரை விற்பவர்கள்.

*தோள்பட்டையில் அதிக எடை சுமப்பவர்கள் (அதாவது பள்ளி, கல்லூரி மாணவர்கள்).

*வயதானவர்கள் (குறிப்பாக ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு).

*எலும்பு அடர்த்தி தன்மை குறைவாக உள்ளவர்கள்.

*அதிகமாக வீட்டு வேலை செய்யும் பெண்கள். உதாரணமாக, ஓய்வின்றி சமைப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகள் செய்பவர்கள்.

*தச்சர்கள்.

*சமையல் கலை நிபுணர்கள்.

* நீண்ட நாள் முதுகு வலி உடையவர்கள்.

*அடிக்கடி கூன் போட்டு அமரும் பழக்கம் உடையவர்கள்.

சில ஆய்வு முடிவுகள்…

*கடந்த பத்து வருடங்களாக இளம் வயதினரில் அதிகமானோர் கழுத்து வலியால் அவதியுறுகிறார்கள். இதற்கு அதிக நேரம் கேஜ்ஜட்ஸ் பயன்படுத்துவதுதான் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

* உலகளவில் முதுகு வலிக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகமாக சொல்லும் வலியாக கழுத்து வலி இப்போது
மாறியிருக்கிறது.

* வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என அனைத்திலும் பிரதானமாக மருத்துவ நிபுணர்களிடம் கழுத்து வலிக்காக வருபவர்களின் விகிதம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

என்னென்ன காரணங்கள்..?

*சரியில்லாத தோற்றப்பாங்கு (posture). அதாவது கழுத்தை எப்போதும் கீழ் நோக்கி அல்லது முன்னால் நோக்கியே வைத்திருக்கும் இயல்பு.

*அதிகமாக கழுத்து தசைகள் உபயோகப்படுத்தப்படுவதால். அதாவது நீண்டநேரம் கணினி, மடிகணினி முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது ஏற்படும் வலி.

*நீண்ட வருடங்களுக்கு ‘மேசை வேலை’ (desk work) செய்பவர்களுக்கு எளிதில் கழுத்து வலி வரக்கூடும். உதாரணமாக ஐ.டி. துறை, வங்கித் துறை பணிப்
பிரிவுகள்.

*சரியான நிலையில் (posture) இல்லாமல் தூங்கினால் கூட ஏற்படும். உதாரணமாக ஒருபக்கம் மட்டுமே சிலர் பல வருடக்காலம் படுத்து பழகியிருப்பார்கள்.

*முடக்கு வாதம் என்று சொல்லப்படும் rheumatoid பிரச்சினை இருப்பவர்களுக்கு விரல்களில் காணப்படும் சிறு மூட்டுகள்தான் அதிகம் பாதிக்கும். எனினும், நாள்பட்ட முடக்குவாதம் பெரிய மூட்டுகளான கழுத்து, முதுகுப் பகுதி என வலியினை உண்டாக்கும்.

*எலும்பு புரை பிரச்சினை. அதாவது வயதாவதால் எலும்புகளில் உள்ள அடர்த்தியான தன்மை குறைந்து எலும்பு மற்றும் மூட்டுகள் வலிக்கத் தொடங்கும்.

*வயதாக ஆக சவ்வுத் தட்டு தேய்மானம் நிகழும். அதாவது குஷன் போன்ற தட்டுகளில் வறட்சி ஏற்படும். இதனால் மேலும் கீழும் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கழுத்து வலியை உண்டாக்கும்.

*சவ்வுத் தட்டுகள் சில நேரங்களில் பிதுங்குவதால் கழுத்து வலி உண்டாகும்.

*இவை தவிர கழுத்து எலும்புகள் தேய்வதால் என இன்னும் பல வகையான காரணங்கள் உண்டு.

அறிகுறிகள் அறிவோம்…

* முதல் அறிகுறியாக கழுத்து தசைகள் வலி அவ்வப்போது வந்து போகும். இது எப்போதாவதுதானே வருகிறது என்று விட்டுவிட்டால் மேலே சொன்ன எலும்பு மற்றும் சவ்வு பிரச்சினைகள் காலப்போக்கில் வரத் தொடங்கி அதற்கான அறிகுறிகளும் தெரியத் தொடங்கும்.

* கழுத்து தசைகள் ஒருபக்கம் இறுக்கமாகவும் (tight), இன்னொரு பக்கம் தளர்ச்சியாகவும் (weak) மாறக்கூடும். இந்த சமச்சீரின்மையால் கழுத்து வலியோடு சேர்ந்து ஒற்றை தலைவலியும் சிலருக்கு வரலாம்.

* சவ்வுத் தட்டு பிதுங்கி பக்கவாட்டில் உள்ள நரம்புகளை சிலநேரங்களில் அழுத்தும். இந்த நரம்புகள் தோள்பட்டை முதல் கைவிரல்கள் வரை வருவதால் கை மறுத்து போவது, கைகளில் குத்தல், குடைதல், எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் ஏற்படக்கூடும்.

எப்படி கண்டறிவது..?

* வலி அவ்வப்போது வரும்போதே இயன்முறை மருத்துவரை அணுகுவது நல்லது.

* முதலில் கழுத்துப் பகுதியை சில அசைவுகள், நுட்பங்கள் மூலம் பரிசோதனை செய்து பார்ப்பார்கள். தசைகளில்தான் பிரச்னை என்றால் வேறு பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

* அதன் பின்பும் தேவைப்பட்டால் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன்கள் பரிந்துரை செய்வார்கள்.

* ஏதேனும் எலும்பு விரிசல், நரம்பு அழுத்தம், சவ்வுத் தட்டு பிதுங்குதல், மூட்டுத் தேய்மானம் இருந்தால் அதில் தெரியவரும். இதனைக் கொண்டு சிகிச்சை முறையினை மாற்றி அமைப்பார்கள்.

இயன்முறை மருத்துவ சிகிச்சை முறை…

*முதலில் இயன்முறை மருத்துவ உபகரணங்கள் கொண்டும், சில இயன்முறை மருத்துவ நுட்பங்கள் (techniques) கொண்டும் வலியினை குணப்படுத்துவோம்.

*பின் கழுத்து தசைகளுக்குத் தேவையானப் பயிற்சிகளை கற்றுக் கொடுப்போம். இதனை தொடர்ந்து பின்பற்றி வரும்போது கழுத்து வலி மீண்டும் வராமல் பாதுகாக்கலாம்.

*கணினி வைத்து வேலை செய்பவர்கள் எவ்வாறு அமர்ந்து வேலை செய்யவேண்டும், வலி வராமல் இருக்க வீட்டில் என்னென்ன எளிய மாற்றங்களை கையாள வேண்டும் போன்ற அறிவுரைகளையும் வழங்குவோம்.

*கூடவே வலி நிவாரண மாத்திரைகள், களிம்புகள், தசைகளை தளர்க்கும் (muscle relaxants) மாத்திரைகள் உபயோகிப்பதால் தற்சமயம் மட்டும்தான் வலி மறையும் என்றும், அதனால் கிட்னி போன்ற உள் உறுப்புகள் பாதிப்படையும் என்பதையும் எடுத்துச் சொல்லி புரியவைப்போம்.

* சிலர் கழுத்துப் பட்டை பெல்ட் என்று சொல்லப்படும் neck collar-ஐ அடிக்கடி அணிந்துகொண்டே இருப்பார்கள்.

அப்படி அணிவது தசைகளை மேலும் பலவீனமாக மாற்றி வலியினை காலப்போக்கில் அதிகரிக்கவே செய்யும். அவரவரின் இயன்முறை மருத்துவரை அணுகி காலர் அணிவது தன் பிரச்சனைக்கு சரியான தீர்வுதானா? அப்படியே அணியவேண்டிய தேவை வரும்போது ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் அணியலாம், எந்த நேரங்களில் அணியவேண்டும் போன்றவற்றைக் கேட்டு அதற்கேற்ப அணிவதே நன்று.

* கழுத்து எலும்புகளுக்கான அறுவை சிகிச்சை என்பது வெகு சிலருக்கே எலும்பு மூட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். அப்படி செய்து கொள்ளும் பட்சத்தில் அறுவை சிகிச்சை முடிந்த பின்பும் சில காலம் இயன்முறை மருத்துவத்தை பின்பற்றி வர வேண்டும்.

வராமல் தடுக்கலாமே…

* தினசரி உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். அப்படி செய்வதால் நீங்கள் கழுத்துக்கு அதிக வேலை கொடுத்தாலும் மீண்டும் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளை புதுப்பித்துக் கொள்ளும்.

*நல்ல சீரான உடல் தோற்றப்பாங்கை (posture) பராமரிக்க வேண்டும்.

அதாவது மடிக்கணினி வைத்து வேலை செய்யும்போது, பாத்திரம் கழுவும்போது, டிவி பார்க்கும்போது என எந்த வேலை செய்தாலும் அந்த நிலையில் (position) கழுத்துக்கு பாதிப்பு இல்லாமல் எப்படி தோற்றப்பாங்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இயன்முறை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து அதன்படி செயல்படுவது சிறந்தது.

*செல்போன் உபயோகிக்கும்போது கண்களுக்கு நேரே ஸ்கிரீன் தெரியும் படி வைத்து பயன்படுத்தவேண்டும். கீழே குனிந்து அல்லது ஒருபக்கமாக திரும்பி செல்போன் பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.மொத்தத்தில் கழுத்து வலி என்றில்லை… எந்தவோர் உடலியல் கோளாறாக இருந்தாலும் சரி, அதை நாம்தான் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் செய்யாமல் நிலைமையை இன்னும் இன்னும் மோசமாக்கிக் கொள்கிறோம். அவ்வாறு செய்யாமல் ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டாலே போதும் எப்போதும் ஆரோக்கியமாக வாழலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விலங்குகள் என்னோடு பேசும்!! (மகளிர் பக்கம்)
Next post இதய சிகிச்சையில் முப்பரிமாண முறை!! (மருத்துவம்)