கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 4 Second

* முருங்கைக்காய் குழம்பிற்கு, முருங்கைக்காயை துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு, காரம் இறங்கும்.

* பூண்டை சீக்கிரம் உரிக்க, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் உரிக்க வேண்டிய பூண்டை போட்டால் படபடவென தோல் வந்து விடும்.

* தேங்காய் கெடாமல் இருக்க தேங்காய் மூடியை தண்ணீரில் வைக்கலாம் அல்லது மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

– கோவிந்தராஜன், சென்னை.

* கேரட், பீட்ரூட் வாடிப்போனால் அதை உப்பு கலந்த நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்தால் புதியதுபோல் ஆகிவிடும்.

* அடைக்கு ஊறப்போடும்போது துவரம்பருப்புக்குப் பதில் கொள்ளை ஊறப்போட்டால் அடை சுவையாக இருப்பதோடு வாய்வுத்தொல்லையும் இருக்காது.

* வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது கடைசியில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் போட்டு விட, நெய் மணமாகயிருப்பதோடு கசக்கவும் செய்யாது.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* வெண்ணெய் மீது ஒரு டீஸ்பூன் சர்க்கரையைத் தூவி வைத்தால் வெண்ணெய் உலராமல் பசுமையாக இருக்கும்.

* பிரெட் பஜ்ஜி செய்யும்போது இருபுறங்களிலும் தயிர் தடவி விட்டு பிறகு மாவில் தோய்த்துப் போட்டால் சுவை கூடும். எண்ணெய் செலவும் குறையும்.

* அப்பளத்தில் லேசாக எண்ணெய் தடவி சூடான தோசைக்கல்லில் போட்டு வேக வைத்தால் சுவை கூடும். எண்ணெய் செலவு குறையும்.

– எஸ்.ராஜம், திருச்சி.

* இரண்டு கப் கடலை மாவுடன், இரண்டு டீஸ்பூன் சோள மாவு தேவையான அளவு மிளகாய்த்தூள், உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து கலக்கவும். நறுக்கிய வாழைப்பூ துண்டுகளை, இட்லித்தட்டில், வைத்து ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும். மாவுக்கலவையுடன், வாழைப்பூத் துண்டுகளைச் சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டிக் காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

* விதை நீக்கிய பேரீச்சம்பழத்தை உலர வைத்து, அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி பேரீச்சம்பழத்தை சேர்த்து, தேவையான சர்க்கரை, பால் சேர்த்து அல்வா பதத்துக்குக்கிளறி, ஏலத்தூள் சேர்த்துக்கிளறி இறக்கவும். பேரீச்சை அல்வா தயார்.

* ஊற வைத்த பச்சரிசியுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். கூடவே பொடித்த வெல்லம், ஏலக்காய், வாழைப்பழம் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குத் தயாரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவைக் கரண்டியால் எடுத்து ஊற்றவும். அப்பம் பொங்கி வரும். திருப்பிப்போட்டு வேக விட்டு எடுக்கவும்.

– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* புளி, எலுமிச்சை சாறுக்குப் பதில் அம்சூர் பவுடர் சேர்க்க புது சுவையில் சட்னி நன்றாக இருக்கும்.

* பேரீச்சை ஸ்வீட் சட்னி செய்யும்போது, வதக்கி அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைக்க சுவையாக இருக்கும்.

* தக்காளி, வெஜிடபிள் சட்னி வகைகள் செய்யும்போது காய்களை வதக்கி, பின் எள்ளை 1/2 டீஸ்பூன் பொரித்துக்கொண்டு மிக்ஸியில் அரைக்கும்போது எள்ளை கடைசியாக சேர்த்து அரைத்து எடுக்க சுவை நன்றாக இருக்கும்.

– மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

* பொரிச்ச கூட்டு செய்யும்போது தேங்காயுடன் எண்ணெயில் வறுத்த உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன் சேர்த்து அரைத்துவிட்டால் கூட்டு வாசனை ஊரையே கூட்டும்.

* ரசம் கொதிக்கும்போது சிறு துண்டு இஞ்சியைப் போட்டுப் பாருங்கள். ரசம் வாசனையும், ருசியும் அள்ளும். உடம்புக்கும் நல்லது.

* மாங்காயுடன் தோல் சீவிய இஞ்சியையும் சேர்த்து நறுக்கி உப்பு சேர்த்து குலுக்கி, கடுகு, மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து தாளித்தால் எளிமையான, சுலபமான இஞ்சி மாங்காய் ஊறுகாய் ரெடி.

– கே.சாந்தி, சென்னை.

* தக்காளி சூப் செய்யும்போது இரண்டு துண்டு பீட்ரூட்டையும் போட்டு வேக வைத்தால், சூப்பும் திக்காக வருவதுடன், கலரும் கூடும். சுவையும் அதிகமாகும்.

* வெந்தயக்குழம்பு செய்யும்போது, இறக்கும் தருவாயில் 1 டீஸ்பூன் வறுத்த எள்ளுப்பொடியும், 1 டீஸ்பூன் நல்லெண்ணெயும் சேர்த்தால், குழம்பு வாசனை மூக்கைத் துளைக்கும்.

* வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது பொங்கலுக்கு தண்ணீர் வைக்கும்போது ஒரு கரண்டி பாலையும் சேர்த்து செய்தால் ருசி அருமையாக இருக்கும்.

– ஆர்.மகாலட்சுமி, சென்னை.

* பால் லேசாக திரிந்துபோக ஆரம்பித்தால் அதில் சிறிது சமையல் சோடாவைச் சேர்த்து கலந்து உறை ஊற்றவும். சூப்பரான கெட்டித்தயிர் கிடைக்கும்.

* குருமாவில் காரம் அதிகமாகி விட்டால் ஒரு கப் தயிர் சேர்த்து லேசாகக் கொதிக்க விட்டால் காரம் சரியாகி விடும்!

* குழம்பில் உப்பு அதிகமாக இருந்தால் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கலாம்.

– ச.லெட்சுமி, செங்கோட்டை.

* பிடி கருணைக்கிழங்கை வேக வைக்கும்போது அதோடு சிறிது எலுமிச்சைத்துண்டு சேர்த்து வேக விட்டால் கிழங்கு அரிக்காது.

* வெல்லப் பானகம் செய்து ஏலம் மட்டும் போடாமல் சிறிது சுக்குப்பொடியும் சேர்க்க வேண்டும்.

* தயிர் பச்சடிக்கு ஏற்ற காய் கிடைக்காதபோது அப்பளத்தைப் பிய்த்து வெந்நீரில் ஊற வைத்து அதைப் பிசைந்து தயிரில் கலக்கி ‘டாங்கர் பச்சடி’ செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பகால நீரிழிவு நோயும் தீர்வுகளும்!! (மகளிர் பக்கம்)
Next post சரும பளபளப்புக்கு பரங்கி!! (மருத்துவம்)