வருடங்கள் கழித்து அன்பும் பாதுகாப்பும் கிடைச்சிருக்கு!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 53 Second

சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணிக்கு எல்லாருடைய வீட்டிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செஃப் இந்தியா’ நிகழ்ச்சிதான் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகளவில் பிரபலமான மாஸ்டர் செஃப் இந்தியா சமையல் நிகழ்ச்சியின் மூன்று நடுவர்களில் ஒருவர்தான் செஃப் ஆர்த்தி. தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும், வளர்ந்தது மும்பையில். உணவுத்துறை தான் தனக் கான பாதை என்று மும்பை மற்றும் அமெரிக்காவில் பல முக்கிய உணவகங்களில் ஹெட் செஃப்பாக பணியாற்றியுள்ளார். சியாட்டில் ‘ஃபுட் டிரக்’ உணவகத்தையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்காக பெங்களூர் வந்திருந்தவரை சந்தித்தோம்.

‘‘என் ஆச்சி வீடு சென்னைதான் என்றாலும், நான் மும்பையில்தான் வளர்ந்தேன். பள்ளி விடுமுறையில் ஆச்சி வீட்டுக்கு வந்திடுவேன். என்னதான் மாடர்ன் சிட்டியில் வளர்ந்தாலும், என்னை தமிழ் கலாச்சாரத்தோடதான் வளர்த்தாங்க. பொதுவாகவே நம்ம தமிழ் குடும்பத்தில் +2 முடிச்சா டாக்டர், இன்ஜினியர்னு முடிவு செய்வாங்க. எங்க வீட்டிலேயும் அப்படித்தான். ஆனா, எனக்கு கலை சார்ந்த துறையில் ஆர்வம் இருந்தது. அப்ப எனக்கு நாலு வயசு இருக்கும். அம்மாவும் அப்பாவும் மும்பையில் உள்ள டிரைவின் தியேட்டருக்கு தேசாப் சினிமா பார்க்க கூட்டிக் கொண்டு போனாங்க. ஸ்கிரீனில் மாதுரியின் பாட்டு ஏக்.. தோ… தீன்னு ஒளிபரப்பாச்சு. அந்த பாட்டைக் கேட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டேன். நடனம் மேல ஆர்வம் ஏற்பட பரதம் கத்துக்கிட்டேன். மும்பை சினிமாவின் மிகப்பெரிய ஹப். அதனால் நானும் சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

வீட்டில் சொன்ன போது… என் தோற்றத்தை காண்பிச்சு நடிக்க வாய்ப்பு எல்லாம் கிடைக்காதுன்னு சொன்னாங்க. அது என்னை ரொம்பவே பாதிச்சது. அப்ப முடிவு செய்தேன். ஒருவரின் தோற்றத்திற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை. திறமை இருந்தா யாருக்கு வேண்டும் என்றாலும் சிவப்பு கம்பளம் விரிக்கப்படும்னு உணர்த்த நினைச்சேன்’’ என்றவர் சமையல் துறைக்கு வந்தது பற்றி விவரித்தார்.‘‘சென்னையில் ஆச்சி வீட்டில் இருக்கும் போது, சும்மா இருக்க வேண்டாம்ன்னு சமையல் பயிற்சிக்கு அனுப்பினாங்க. அங்க கத்துக்கிட்டதை வீட்டில் வந்து செய்து பார்ப்பேன். மும்பை போனாலும் கேக், பீட்சான்னு ஏதாவது செய்வேன்.

எனக்கு சமையல் மேல் கொஞ்சம் கொஞ்சமா ஆர்வம் ஏற்பட ஆரம்பிச்சது. அப்ப முடிவு செய்தேன், இது தான் என் துறைன்னு. வீட்டில் முதலில் ஒத்துக்கல. நான் பிடிவாதமா ஹோட்டல் மேனேஜ்மென்ட் சேர்ந்தேன். படிப்பு முடிஞ்சதும் மும்பை ஹோட்டல் ஓபராயில் வேலை. பல கனவுகளுடன் வேலைக்கு போனேன். ஆனால் என்னுடைய கனவு நான் நினைச்சது போல் அவ்வளவு பசுமையா இல்லை. அந்த ஹோட்டல் கிச்சனில் நான் மட்டும் தான் பெண்.

20 வயசு சின்ன பெண் என்றுகூட பார்க்காமல் முதல் நாளே நிறைய வேலை வாங்கினாங்க. எனக்கு அழுகையே வந்திடுச்சு. வீட்டில் சொன்னா, வேலையை விட்டுட்டு வரச் சொல்லிடுவாங்க. அதனால வீட்டில் இது பற்றி சொல்லாம வேலைக்கு போக ஆரம்பிச்சேன். காலை பத்து மணிக்கு வேலைக்கு போனா வீடு திரும்ப இரவு 12 ஆயிடும். அதுமட்டுமில்ல வேலை செய்யும் இடத்தில் ஆணாதிக்கம் அதிகமா இருந்தது. பெண் என்றதும் ரொம்பவே தாழ்த்தி பேசுனாங்க. புதுசா எதும் உணவு செய்ய விடமாட்டாங்க. காய்கறி மட்டுமே நறுக்க சொல்வாங்க. அதன் பிறகு தாஜ் ஹோட்டலில் சேர வாய்ப்பு வந்தது.

அங்க மேனேஜ்மென்ட் குறித்த பயிற்சி எடுத்தேன். அதில் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளரை எவ்வாறு நடத்தணும், அவங்களிடம் எப்படி பேசணும் என எல்லாம் கத்துக்கிட்டேன். ஐந்து வருடம் அங்கு வேலை பார்த்தேன். அதன் பிறகு வெளிநாட்டிற்கு சென்று என் சமையல் திறமையை வளர்த்துக் கொள்ள நினைச்சேன். வீட்டில் சொன்ன போது சிறகை விரின்னு சம்மதம் சொன்னாங்க. அமெரிக்கா சென்று கேக் மற்றும் பேஸ்ட்ரீஸ் செய்ய கத்துக்கிட்டேன். அதன் பிறகு நியுயார்க்கில் செஃப்பாக வேலைக்கு சேர்ந்தேன். இதற் கிடையில் சியாட்டில் ஃபுட் டிரக் ஒன்றை அமைச்சேன். அதைப் பார்த்து ஆசிய உணவகத்தில் ஹெட் செஃப்பாக வேலைக்கு சேர்ந்தேன். நிறைய குக்கரி போட்டியில் பங்கு பெற்று ஜெயிச்சிருக்கேன். சில போட்டிகளுக்கு நடுவராகவும் போயிருக்ேகன்’’ என்றவர் அமெரிக்காவிலும் பல தடைகளை சந்தித்துள்ளார்.

‘‘இந்தியாவில் ஆணாதிக்க பிரச்னைன்னா அங்க இனம் மற்றும் நிறப் பிரச்சனை இருந்தது. இந்தியாவில் ஒவ்வொரு செஃப்பும் சீக்ரெட் ரெசிபி வச்சிருப்பாங்க. சொல்லித் தரேன் வரீயான்னு கூப்பிடுவாங்க. கோவப்படாம நாசுக்கா தப்பிக்கணும். இவங்கள எதிர்த்து புகார் கொடுத்தா நமக்குதான் பிரச்னை. அமெரிக்கா போன போது, என்னுடைய ஆங்கில உச்சரிப்பை பார்த்து வேறு மாதிரி நடத்தினாங்க. இந்திய உணவை கிண்டல் செய்வாங்க. இங்க கோல்ட் பிரீசர்ன்னு உணவுகளை பதப்படுத்தும் ஃபிரிட்ஜ் இருக்கும். ஒரு அறை போல இருக்கும். அதற்குள் நாம போனா வெளியே கதவை பூட்டிடுவாங்க.

அவங்க நம்மை கிண்டல் செய்து பேசினா… உடனே தைரியமா அப்படி பேசாதே அதற்கு உனக்கு உரிமை இல்லைன்னு அவங்க முகத்திற்கு நேரா சொல்லணும். அப்படி எதிர்த்து பேசினா அமைதியாயிடுவாங்க. அதை புரிஞ்சிக்கவே எனக்கு மூணு வருஷமாச்சு. சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படுவாங்க. பிரச்னை வந்தா புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுப்பாங்க. எதையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளணும். இதனால் இந்தியாவில் இருந்து அங்கு வேலைக்கு வரும் நிறைய செஃப்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறேன். உணவுத்துறை ஒரு கடல். என்னைப் பொறுத்தவரை என் திறமையை எவ்வாறு மேம்படுத்த முடியும்ன்னு பார்ப்பேன். மாஸ்டர் செஃப் வரவரைக்கும் ஒரு சைனீஸ் உணவகத்தில், ஹெட் செஃப்பா தான் இருந்தேன். நிகழ்ச்சிக்காக வேலையை விட்டுட்டேன்’’ என்றவர் மாஸ்டர் செஃப் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘மாஸ்டர் செஃப் உலகளவில் மிகவும் பிரபலமான குக்கரி நிகழ்ச்சி. மூணு வருஷம் முன்னாடி எனக்கு அதில் சிறப்பு செஃப்பாக கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் என்னால் பங்கேற்க முடியல. ஒரு நாள் அந்த குழுவின் கிரியேடிவ் துறையில் இருந்து அழைப்பு வந்தது. தமிழில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில் சிறப்பு செஃப்பாக பங்கு பெறச் சொல்லிக் கேட்டாங்க. ஏற்கனவே ஒரு முறை கிடைச்ச வாய்ப்பை மிஸ் செய்திட்டேன். அதனால் இதை மிஸ் செய்ய வேண்டாம்ன்னு சரின்னு ஒத்துக்கிட்டேன். ஆனா, என்ன நினைச்சாங்கன்னு தெரியல. என்னை ஒரு நடுவரா தேர்வு செய்தாங்க. நான் எதிர்பார்க்கவே இல்லை.

முதல்ல கொஞ்சம் பயமா இருந்தது. கேமரா முன்னாடி நிற்கும் போது பதட்டமாவே இருக்கும். இந்த நிகழ்ச்சிக்காக இரண்டு மாசம் முன்பே அமெரிக்காவில் இருந்து ெபங்களூருக்கு வந்துட்டேன். செட் அப்படியே மாஸ்டர் செஃப் மாதிரி இருந்தாலும், நம்ம கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றி இருந்தாங்க. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் பூஜை ேபாட்டாங்க, அப்போது மாஸ்டர் செஃப் இந்தியாவில் நான் ஒரு செஃப்பா இருக்கேன்னு நினைச்சு எமோஷ்னலாயிட்டேன்.

எட்டு வருஷம் அமெரிக்காவில் இருந்ததால், என்னுடைய தமிழ் ரொம்பவே மோசமா இருந்தது. இரண்டு மாசம் முன்பு நீங்க என்னிடம் பேசி இருந்தீங்கன்னா என்னுடைய தமிழை பார்த்து கிண்டல் செய்திருப்பீங்க. இங்க வந்தவுடன் முதலில் தமிழுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டேன். சின்ன குழந்தைக்கு சொல்லித் தருவது போல் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொடுத்தாங்க. இப்பதான் கொஞ்சம் டீசன்டா தமிழ் பேசுறேன்’’ என்று சிரித்தவர் போட்டியாளர்களுக்கு வழங்க இருக்கும் உணவுகளை பற்றி விவரித்தார். ‘‘24 பேரில் இருந்து 12 பேரை மட்டுமே தேர்வு செய்து இருக்கோம். தென்னிந்திய உணவு மட்டும் இல்லாமல் மலேசியா, இலங்கைன்னு பல விதமான உணவுகளை சமைச்சு அசத்தினாங்க.

அதில் சுவை, கிரியேடிவ் மற்றும் நாங்க கொடுக்கும் பிரஷர் டெஸ்டை சமாளிக்கும் திறன், குறிப்பிட்ட நேரத்தில் சமைப்பது, எந்த விதமான ஸ்ட்ரெசையும் சமாளிப்பது என பலதரப்பட்ட அடிப்படையில் தேர்வு செய்தோம். போட்டியில் நம்ம தென்னிந்திய உணவுகளை நிறைய ஹைலைட் செய்ய இருக்கிறோம். ஜாங்கிரி சாலஞ்ச் பார்த்து இருப்பீங்க. சாதாரண ஸ்வீட்… எல்லா இனிப்பு கடைகளிலும் கண்டிப்பா இருக்கும். ஆனால் அந்த வடிவம் கொண்டு வருவது அவ்வளவு சுலபமில்லை. சின்னதா 12 அல்லது 15 சுழி இருக்கணும்.

அப்பதான் அழகா இருக்கும். மேலே மேலே போட்டா சரியா வேகாது. இப்படி சின்னச் சின்ன நுணுக்கங்கள் நம்ம உணவில் இருக்கு. வெளிநாட்டில் உணவுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அங்க எலுமிச்சையிலேயே நிறைய வகையுண்டு. நம்மூரில் நார்த்தங்காய் ஸ்பெஷல். அதன் தோலை துருவி கேக்கில் சேர்த்தால் அவ்வளவு நறுமணமா இருக்கும். அதே போல் இட்லின்னா நாம வீட்டில் செய்வது போல்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அதை எந்த வடிவத்திலும் கிரியேடிவ்வா கொண்டு வரலாம்ன்னு யோசிக்கணும். பொதுவா பெஸ்தோ பேசில் இலையில்தான் செய்வாங்க. செஃப் கவுஷிக் வெற்றிலையில் செய்திருந்தார். அப்படி இன்னோவேஷன் கொண்டு வரணும் அதுதான் மாஸ்டர் செஃப். 12 வருஷத்திற்கு மேல வேலை பார்த்திருக்கேன்.

நிறைய உணவு தயாரிச்சிருக்கேன். ஆனால் எனக்கு அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு உணவு தயாரிக்க பிடிக்கும். மாம்பழத்தில் மட்டுமே பழச்சாறு, ஐஸ்கிரீம், ஜெல், கிரிஸ்ப்ன்னு நிறைய செய்யலாம். நம்ம இந்திய உணவாக இருந்தாலும் அதில் கொஞ்சம் மேலைநாட்டு டச் இருக்கிற மாதிரி டெக்னிக்ஸ் கொண்டு வர பிடிக்கும். என்னதான் நான் பல நாட்டு உணவுகள் சமைச்சாலும் எனக்கு என் அம்மா வைக்கும் மீன் குழம்பு, மீன் வறுவல், பருப்பு சாதம் அப்புறம் எல்லா வகையான பொரியல் பிடிக்கும். அப்புறம் ஆச்சியோட ரத்தப் பொரியல், குடல் குழம்புக்கு நான் மட்டுமில்ல எங்க வீட்டில் எல்லாரும் அடிமை. இப்ப அவங்க இல்லை’’ என்றவர் மற்ற இரண்டு நடுவர்கள் பற்றி குறிப்பிட்டார்.

‘‘என்னுடன் இருக்கும் இரண்டு நடுவர்களும் ரொம்பவே வொண்டர்ஃபுல்ன்னு சொல்லணும். கவுஷிக் அப்பா மாதிரி சாப்பிட்டியா தூங்கினியான்னு ரொம்ப கவனமா பார்த்துப்பார். ஹரீஷ் சகோதரர் மாதிரி. போட்டியில் உணவை சுவைக்கும் போதும், அவர் முதலில் என்னைதான் சாப்பிட்டு பார்க்க சொல்வார். எனக்காக உணவு கொஞ்சம் தனியா எடுத்து வைப்பார். அதே போல் ேஷாவில் அதிக நேரம் ஹீல்ஸ் போட்டு நிற்கும் போது கால் வலிக்கும். அப்ப என்னை உட்கார சொல்வாங்க இரண்டு பேரும். இந்த மாதிரி அன்பு மற்றும் பாதுகாப்பு ரொம்ப வருஷத்துக்குப் பிறகு கிடைச்சிருக்கு. அப்புறம் விஜய் சேதுபதி. அவர் நாங்க கொஞ்சம் சோர்ந்தாலும் எங்களை உற்சாகப்படுத்தி மீண்டும் எனர்ஜிடிக்கா கொண்டு வருவார்.

நான் தமிழில் பேச திணறும் போது இப்படி பேசுங்கன்னு எளிமையா எடுத்து சொல்வார்’’ என்றவர் உணவுத் துறைக்கு காலடி எடுத்து வைக்கும் இளைய தலைமுறையினருக்கு அட்வைஸும் கொடுத்தார்.‘‘உங்களின் துறை இதுதான்னு முடிவு செய்திட்டா அதில் இருந்து பின்வாங்காதீங்க. குறிப்பாக பெண்களுக்கு சின்ன வயசில் இருந்தே அப்பா, அண்ணன்னு ஒரு பாதுகாப்பு அரண் இருக்கும். அந்த பாதுகாப்பு உங்க காலம் முழுக்க துணைக்கு வராது. அந்த எண்ணத்தை மாத்திக்கோங்க. எதையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்க. நிறைய பயிற்சி எடுங்க… ஒரு நாளைக்கு ஒரு புது உணவு செய்து பாருங்க. சமையல் சார்ந்து நிறைய புத்தகம் படிங்க. உலகளவில் எண்ணற்ற உணவுகள் உள்ளன. அதை எப்படி மாற்றி அமைக்கலாம்னு ேயாசிங்க’’ என்றவருக்கு நம்முடைய பாரம்பரிய திராவிட உணவுகளை தன்னுடைய உணவகம் மூலம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷரியா சட்டம்… பெண்களை பாதுகாக்குமா? (மகளிர் பக்கம்)
Next post மக்கள் சிந்தனைப் பேரவை !! (வீடியோ)