By 12 September 2021 0 Comments

100 ஆவது ஆண்டில் மரியாயின் சேனை (கட்டுரை)

Mary on heaven

மிகச்சிறந்த முறையில் கடவுளை அன்பு செய்வது எப்படியென்றும், இவ்வுலகில் அந்த அன்பைப் பரப்பி ஆன்மாக்களுக்குத் தொண்டுபுரியுமாறு உழைப்பது எப்படியென்றும் யோசித்தார்கள். அந்த ஆலோசனையின் பயனாக மரியாயின் சேனை உருவானது. (சேனை கைநூலிலிருந்து)

இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் 1921ஆம் ஆண்டு செப்டெம்பர் ஏழாம் திகதி அயர்லாந்து நாட்டின் டப்ளின் மாநகரில் மீரா இல்லத்தில் பதினைந்து பேருடன் மிக மிக எளிமையான முறையில் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 170 நாடுகளில் தன் கிளைகளைப் பரப்பி பல இலட்சக்கணக்கான உறுப்பினர்களுடன் கத்தோலிக்க திருச்சபையில் பொதுநிலையினருக்கான ஓர் அப்போஸ்தலிக்க இயக்கமாக இயங்கி வரும் மரியாயின் சேனை அன்று போல் இன்றும் கூட அடிப்படை ஒழுங்கு முறைகளில் துளியளவும் மாற்றமின்றி உதாரணமாக வாராந்தம் கூட்டம் வராந்தம் பணி எனும் அடிப்படையில் நூறு ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருவது மரியாயின் இடைவிடா பரிந்துரையால் ஆண்டவர் இயேசு நிகழ்த்திய மாபெரும் அற்புதமே என்றால் அது மிகையாகாது.

பொதுவாக ஓர் அமைப்பை உருவாக்குதற்கு முன் ஒரு சிலர் அமர்ந்து பல நாள்கள் ஆராய்ந்து சட்டதிட்டங்களை உருவாக்கி பின்னர் அந்த அமைப்புக்கு ஒரு பெயர் சூட்டி ஆரம்பிப்பார்கள். ஆனால் மரியாயின் சேனையின் தோற்றமோ, இந்த இயற்கை நியதிக்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது.

ஒரு மாலை வேளையில் அவர்கள் ஒன்று கூடினர். மேசை மீது ஓர் எளிய பீடம் அமைக்கப்பட்டது. தூய வெண்ணிறத் துணியின் மீது அமல உற்பவ அன்னையின் திருச்சுரூபம் வைக்கப்பட்டு சுரூபத்தின் இருமருங்கிலும் பூச்சாடிகளில் பூங்கொத்துகளுடன் இரு தீபக்கால்களில் மெழுகுதிரிகள் எரிந்துகொண்டிருந்தன. சேனைப் பீடத்தைப் பற்றி முன்கூட்டியே முடிவெடுக்கப்படவில்லை. நேரத்தோடு வந்த பெண்களில் ஒருவர் செய்திருந்த எளிய தயாரிப்பு அது. மரியாயின் சேனை ஒரு படை. போர்வீரர்கள் ஒன்றுகூடும் முன்னே சேனையின் அரசி அங்கே அவர்களுக்காக காத்திருக்கின்றார் என்ற உண்மையை துலக்கிக் காட்டும் வகையில் அப்பீடம் அமைந்திருந்தது.

அன்று 13 பெண்களும் சேனை உருவாக இறைவன் கருவியாக பயன்படுத்திய இறைபணியாளர் பிராங்க் டஃப் அவர்களும் மற்றும் அருட்பணியாளர் மைக்கல் டோஹர் அவர்களும் ஒன்று சேர்ந்து முழந்தாள் படியிட்டு, ‘தூய ஆவியே எழுந்தருளி வாரும்’ எனும் செபத்தை செபித்து, வரலாற்று முக்கியத்துவம் மிக்க சேனையின் முதல் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள். அவர்கள் வெறுமனே ஒரு பக்திச் சபையை உருவாக்கவில்லை. மாறாக தன் அயலானில் கிறிஸ்துவையே கண்டு அவருக்கே பணிபுரியும் அப்போஸ்தலிக்க இயக்கத்தை ஆரம்பித்து வைத்தனர்.

உலகளாவிய ரீதியில் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டு பலநாடுகளில் தனது கிளைகளை பரப்பியதை அடுத்து 1936ம் ஆண்டு இலங்கையில் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள பாண்டியன் தாழ்வு என்ற சிற்றூரில் புனித அன்னம்மாள் ஆலயத்தில் அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த அமரர் அருட்திரு. ஜே.ஏ. இராஜநாயகம் அடிகளாரின் வழிகாட்டலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முதலாவது மரியாயின் சேனை பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

உறுப்பினர்களை புனிதப்படுத்துவதன் வாயிலாக கடவுளை மகிமைப்படுத்துவதே சேனையின் நோக்கமாகும். ‘நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்’ (1தெசலோனிக்கர் 4:3) உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பது போல, நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவராயிருங்கள். (1 பேதுரு 1:15-16) என்று புனிதத்துவம் பற்றி இறைவார்த்தை ஆணித்தரமாக வலியுறுத்தி நிற்கின்றது.

இறைவார்ததையின் அடிப்படையில் இவ்வுலகில் மிக முக்கியமானது புனிதம்தான். நாம் அடைய வேண்டிய இலக்கும் அதுதான். இறையடியார் பிராங்க் டஃப் கூறுவது போல ‘நாம் புனிதர்களாக ஆசைப்படுகின்றோம். நம்மை விட பல்லாயிரம் மடங்கு ஆண்டவர் அதை விரும்புகிறார்’ என்கிறார்.

எனவே ஒவ்வொருவரையும் புனிதராக அழைப்புவிடுக்கும் மரியாயின் சேனை இந்த நோக்கத்தை அடைவதற்குரிய இரண்டு வழிகளை காட்டித் தருகின்றது. அவை செபமும், சேவையுமாகும்.

மரியாயின் சேனை நூறாவது ஆண்டை கொண்டாடும் இவ்வேளை இருகரம் விரித்து சேனையின் உறுப்பினராக சேர உங்களுக்கும்; அழைப்பு விடுகின்றது.
நீங்கள் சிறுவரானாலும் இளைஞரானாலும் வயது வந்தவரானாலும் முதிர்வயதினரானாலும் உங்களுக்கும் சேனையின் விசேட அழைப்பு உண்டு. வாராந்தம் கூட்டத்தில் பங்குபற்றி பணி செய்யக்கூடியவர்கள் ஊழிய உறுப்பினராகவும், சேர ஆசைதான்; ஆனால் கூட்டத்துக்கும் பணிக்கு என்னால் வரமுடியாத சூழ்நிலை இருக்கின்றது என்று கூறுபவர்களுக்கு வீட்டிலிருந்தே செபிக்கும் உதவி உறுப்பினராக சேரும் வாய்ப்பு உண்டு.

எனவே வாருங்கள் மரியாயின் சேனையில் சேருங்கள். மரியன்னையின் படையில் பணிபுரியும் போர்வீரர் ஆகுங்கள்.Post a Comment

Protected by WP Anti Spam