By 15 September 2021 0 Comments

ஜப்பானுக்கு பிரித்தானிய போர்க்கப்பல் வருகை சீனாவுக்கு ஏற்படுத்தியுள்ள சிக்கல் !! (கட்டுரை)

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிய விடயம் சீனாவுக்கு அதன் எதிர்ப்பு நாட்டை கிண்டல் செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனாலும் தற்பொழுது நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கையில் அமெரிக்கா, முழு ஆசியா மீதான கவனத்தையும் சீனாவின் பின்னணியில் குவிக்கப் போவதாகத் தெரிகிறது. இதற்காக அமெரிக்காவுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பானது தென் சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் என்பனவாகும்.

அண்மைக் காலங்களில் சீனா தம்முடைய பகுதிகள் என்று உரிமை கோரும் இக்கடல் பகுதிகளுக்கு மேற்கு நாடுகள் தம் போர்க் கப்பல்களை அனுப்பி சீன அதிகாரிகளுக்கு சவாலாக நடந்துகொண்டன.

இதுவரை காலமும் அமெரிக்க அணிகள் தாய்வானை சீனாவின் ஆக்கிரமிப்பு கையகப்படுத்தலில் இருந்து பாதுகாத்து வருகின்றன. சீனா தாய்வானை தம் நாட்டின் ஒரு பகுதி என்று கூறி வருகிறது. தற்பொழுது சீனா, கிழக்கு சீன கடலில் உள்ள செங்காக்கு தீவுகள் விடயத்தில் ஜப்பானுக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளது. சீனா அதற்கு செங்காக்கு தீவானது டயோயு தீவுகளின் உள்ளார்ந்த பகுதியென்று கூறுகிறது.

தற்பொழுது இந்த பிராந்திய பிரச்சினைகள் உலக ரீதியில் மாற்றமடைகின்றன. உலகின் பிரதான சக்திகள் ஜப்பானை சார்ந்து செல்வதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையால் சீனாவால் தமது மேன்மையை காட்டமுடியாதுள்ளது. ஏற்கனவே அண்டைய நாடுகளால் பெரும் சவால்களை எதிர்நோக்கிய சீனா தற்பொழுது பெரும் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.

இவ்வேளையில் பிரித்தானிய விமானந்தாங்கிக்கப்பல் எச்எம்எஸ் குயீன் எலிசபெத் (HMS Queen Elizabeth) முதல் முறையாக ஜப்பானை வந்தடைந்துள்ளது. தென் சீனக்கடலில் நிரந்தர இராணுவ இருப்புக்கான செய்தியுடன் அது வந்துள்ளது.

ஜப்பானிய பிரதேசத்தில் சீன ஊடுருவல் இருக்கும் நிலையில், இந்த பிரித்தானிய போர்க்கப்பல் வருகையை ஜப்பானும் வரவேற்றுள்ளது. இந்தோ பசிபிக் கடலில் பலத்தையும் சுதந்திர மற்றும் திறந்த நிலைமையையும் பராமரிக்க இந்தக் கப்பலின் வருகை முக்கியமானது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நொபுவோ கிஸி கூறினார்.

முக்கிய நாடுகளான இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா அத்துடன் சிறிய நாடுகளான இந்தோனேஷியா, மற்றும் பிலிப்பைன்ஸ் போன்றவற்றுடன் பிராந்திய சர்ச்சைகள் மற்றும் மேலாதிக்கத் தன்மையால் சீனா முரண்பாடான நிலையிலேயே இருந்துள்ளது.

அமெரிக்காவின் தெளிவான எச்சரிக்கை இருந்தபோதிலும் சீனா தனது போர்க்கப்பல்களை தொடர்ந்து செங்காக்கு தீவுகளுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தது. ஜப்பான் எதுவும் கூறாமல் இருந்த நிலையிலும் சீனா தம் ஆதிக்கத்தை விரிவு படுத்துவதில் உறுதியாகவே இருந்தது. இந்த நிலைமையானது இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு பாரிய இராணுவ மோதலை ஏற்படுத்துவதாக அமைந்தது.

அமெரிக்கா ஜப்பானின் பின்னணியில் இருந்து ஜப்பானுக்கு இராணுவ ரீதியில் உதவ முன்வந்தது. இத்தகைய நிலையில் சீனா ஆயுத மோதல்களை ஆரம்பிப்பதற்கு ஒரு சிறிய காரணத்தைக் கூறலாம். ஆனால் பிரித்தானிய கப்பலின் இருப்பு இதற்கு தடையாக செயல்படமுடியும்.

இவ்வருட முற்பகுதியில் பிரான்ஸ் தமது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை தென்சீனக்கடலுக்கு அனுப்பியிருந்தது. கடல் ஒரு தனிப்பட்ட சொத்து அல்ல, அதில் பயணிக்கும் சுதந்திரம் உண்டு என்னும் செய்தியையும் அது பீஜிங்குக்கு அனுப்பியிருந்தது. இது பீஜிங்குக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்கா நான்கு நாட்டு பாதுகாப்பு உரையாடல், (Quadrilateral Security Dialogue) அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு இந்தோ பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவுக்கு கக்திமிக்க தடுப்பாக இருக்கும்.

தற்பொழுது ஆப்கானிஸ்தானிலிருந்து விலகிய நிலையில் அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கையை அழுத்தமாகப் பதிப்பதற்கு இது ஓர் வாய்ப்பாக அமைகிறது. சீனா, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்தையும், மேலாதிக்கத்தையும் திணிக்கும் முயற்சியை தடுப்பதை விட பெரிய விடயம் எதுவும் இருக்க முடியாது என்பதே தற்போதைய நிலைமையாகும்.Post a Comment

Protected by WP Anti Spam