கடவுளின் கனி!! (மருத்துவம்)
இயற்கையின் படைப்பில் உருவான ஒவ்வொன்றுக்கும் ஏதேனும் நோக்கங்களோ, பயன்களோ உள்ளது. குறிப்பாக தாவரங்களின் இலை, பூ, காய், கனி என அனைத்திலும் நம் மனித வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இயற்கையால் நமக்குக் கிடைத்த வரம், இதுவரை நாம் அறிந்திடாததாக இருந்தாலும் இனி மேல் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான் மாங்க் ஃப்ரூட்(Monk fruit).
பெரும்பாலும் தெற்கு சீனாவிலும் வடக்கு தாய்லாந்தின் சில பகுதிகளிலும் விளையக் கூடிய நம்மூர் கிர்ணி பழம் போல் ஒரு வகை பழம்தான் மாங்க் ஃப்ரூட். இதை முதன் முதலில் விளைவித்தவர்கள் சீனாவைச் சேர்ந்த துறவிகள் என்பது தான் இந்த பெயருக்கான மூல காரணம். இது புத்தர் பழம் எனவும், கடவுளின் கனி என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் சிறிய அளவிலான கிர்ணி பழம் போன்று இருக்கும். இந்த பழத்தை ஃப்ரெஷ்ஷாக அப்படியே சாப்பிடலாம். பெரும்பாலும் உலர்ந்த பழமாகவே கடைகளில் கிடைக்கும். உலர்ந்தவுடன் ப்ரவுன் நிறத்தில் இருக்கும். இனிக்கும் மாம்பழம் போல, காஸ்ட்லியான ஆப்பிள் போல மாங்க் ஃப்ரூட் மக்களுக்கு அவ்வளவு பிடித்தமான பழவகை இல்லையென்றாலும் தற்போது ஆரோக்யத்தை விரும்பும் அனைவரும் விரும்பும் பழமாக இருக்கிறது. பெரும்பாலும் இது மூலிகை டீ அல்லது சூப் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இதில் கலோரியும் கார்போஹைட்ரேட்டு மற்றும் கொழுப்பும் சதவிகித அளவில் பூஜ்யம் என்பதால் எடை குறைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ். அதனால் தினசரி நீங்கள் பயன்படுத்தும் சர்க்கரைக்குப் பதிலாக மாங்க் ஃப்ரூட் ஸ்வீட்னரை பயன்படுத்தினால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மாங்க் ஃப்ரூட் இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை. ஆதலால் ஃப்ரஷ்ஷான பழம் நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஆசிய மார்க்கெட்டில் சில இடங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மாங்க் ஃப்ரூட் மட்டும் கிடைக்கும்!
Average Rating