சதொச எட்டாக்கனியா? தாழ்திறவாய் !! (கட்டுரை)

Read Time:11 Minute, 41 Second

அரசாங்கத்தால் நாட்டின் நாலாபாகமும் திறக்கப்பட்டிருக்கும் சதொச விற்பனை நிலையங்கள் மூலம், மக்களுக்கு அரச உத்தரவாதம், நியாய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும் இவ்வாறான வரப்பிரசாதங்களும் சலுகைகளும், கிராமப்புற மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே அமைந்துள்ளன.

அந்தவகையில், பட்டிருப்புத் தொகுதிக்கு சதொச விற்பனை நிலையம் தொடர்பில் அறிமுகமில்லாது இருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்க காலத்தில், பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள களுவாஞ்சிகுடியிலும் கொக்கட்டிச்சோலையிலும், தலா ஒவ்வொரு சதொச விற்பனை நிலையம், 2016.02.28 அன்று அப்போதைய வணிக அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், களுவாஞ்சிகுடிலும் கொக்கட்டிச்சோலையிலும், இயங்கி வந்த சதொச விற்பனை நிலையங்கள், 04.04.2020 அன்று திடீரென, மூடுவதாக அறிவிக்கப்பட்டது. தமது மேலதிகாரிகளின் உத்தரவுக்கமைய, பொருட்களை ஏற்றியனுப்புவதாக, சதோச விற்பனை நிலையங்களின் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

அப்போது, குறித்த சதொச நிலையங்கள் மூடப்படுவதை அறிந்த அப்பகுதி மக்களும் மக்கள் பிரதிநிதிகளும், அவ்விடங்களுக்குச் சென்று, “இது எமக்குச் செய்யும் துரோகமாகும்” என, எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மண்முனை தென் எருவில் பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ஆகியோரும் களுவாஞ்சிகுடி சதொச விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.

“பட்டிருப்புத் தொகுதி மக்களின் வரப்பிரசாதமாக இருந்து வந்த சதொச நிலையம், கொரோனா இக்கட்டான காலகட்டத்தில், திடீரென மூடப்படுகின்றமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது; இதனை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும். அரச சலுகைகளை எமது பகுதி மக்களும் அனுபவிக்க வேண்டும்” என அவர்கள் அதன்போது தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இவ்விடயம் குறித்து அப்போதிருந்த மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டது.

அப்போது அமல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம், கொரோனா வைரஸ் தொற்றுப் பிரச்சனைகளுக்கு முன்னர், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே, களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, ஏறாவூர், காத்தான்குடி, உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சதொச நிலையங்கள் மூடப்படுவதாக, அப்போதிருந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்திருந்தார்.

திறந்து நான்குபு வருடங்கள் மட்டும் சிறப்பாக இயங்கிய பின்னர் மூடுவிழாச் செய்த, சதொச விற்பனை நிலையத்தை மீள இயங்க வைப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் பலமுறை முயற்சித்தும், இன்றுவரை கைகூடாத நிலைமையே இருந்து வருகின்றது.

இது இவ்வாறு இருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி உள்ளிட்ட பல இடங்களில் மீண்டும் சதொச விற்பனை நிலையத்தை நிறுவுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட செயலாளர் க.கருணாகரன் தெரிவிக்கின்றார்.

“மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சதோச விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் முன்மொழிவுகளை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் முன்வைத்துள்ளேன்” என்று மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

கொரோனா தாக்கத்தின் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில், அனைத்து சதொச விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களை நியாயவிலையில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள், அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்போர் தொடர்பில் சட்டநடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பதுக்கி வைத்திருக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில், பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள், சதோச விற்பனை நிலையங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது.

தற்போது அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை தடுப்பதற்காகவே சில வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொருட்களை பதுக்குவோர் தொடர்பில் அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக முறைபாடுகள் கிடைக்கப்படுவதுடன் அவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகள் முன்னெடுத்து அவர்களின் அனைத்து பொருட்களும் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றை அனைத்து சதோச விற்பனை நிலையங்களின் ஊடாகவும் மக்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படு வருகின்றன.

இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிக்கும்போது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டுக்கும் மேற்பட்ட சதோச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. அவை இன்று, திறந்திருந்தால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நியாயவிலையில் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும். எனினும், தற்போது எனது வேண்டுகோளின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சதோச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் உற்பத்தியாளர்களின் பொருட்களை சதோச விற்பனை நிலையங்களுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பிலும் பல முன்மொழிவுகளை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் முன்வைத்துள்ளேன்” என்றார்.

இது இவ்வாறு அமைந்துள்ள போதிலும், மட்டக்களப்பு மாவட்ட மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் ஒன்று மட்டு நகரில் 09.09.2021 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த சதோச விற்பனை நிலையம் ஊடாக சில்லறை, மொத்த வியாபாரிகளுக்கான பொருட்களும் வழங்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் மாவட்டத்தில் எதிர்காலத்தில் எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் மக்களுக்கு பொருட்களை விநியோகிக்ககூடிய நிலையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்புத் தொகுதியில் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப் பற்று, மண்முனை மேற்மேற்கு, ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன. மண்முனை தென் எருவில் பற்றில் 45 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில், 17,177இற்கு மேற்பட்ட குடும்பங்களில் 63,011மேற்பட்ட மக்களும் 44,057இற்கு மேற்பட்ட வாக்காளர்களும் உள்ளனர்.

போரதீவுப் பற்று பிரதேசத்தில் 43 கிராம சேவையாளர் பிரிவுகளில் 12,884இற்கு மேற்பட்ட குடும்கங்களில் 46,862இற்கு மேற்பட்ட மக்களும் 29,161இற்கு மேற்பட்ட வாக்காளர்களும் வசிக்கின்றனர்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 24 கிராம சேவையாளர் பிரிவுகளில், 6,850இற்கு மேற்பட்ட குடும்பங்களில் 24,913இற்கு மேற்பட்ட மக்களும் 18,020இற்கு மேற்பட்ட வாக்காளர்களும் வாழ்கின்றார்கள்.

இவ்வாறு மூன்று பெரும் பிரதேசங்களை உள்ளடக்கிய இப்பட்டிருப்புத் தொகுதியில், சதொச விற்பனை நிலையம் ஒன்றுகூட இதுவரையில் இல்லாமையானது, அப்பகுதி மக்கள் அரச சலுகைகளைப் பெறும் விடயத்தில், தட்டிக்கழிக்கப் படுகின்றார்கள் என்றே கருதுவதற்கு இடமிருக்கின்றது.

14 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நகரில் மாத்திரம் ஒரு சதொச விற்பனை நிலையம் போதாது. அரச உத்தரவாத விலைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குரிய உரிமையை கிராமப்புற மக்களும் அனுபவிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் வழிசமைத்துக் கொடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலவியில் முத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பின் இவள் யாரென்று தெரிந்தவுடன் கண் கலங்கி நின்றார்கள்! (வீடியோ)