தலைமைகளும் தாழ்வுச்சிக்கலும் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 50 Second

உத்தியோகபூர்வமான நிலைமையைப் பொறுத்தவரையில் நாடானது முழு முடக்கத்தில் இருக்கிறது. இதற்கு அத்தியாவசிய சேவைகள் மட்டும் விதிவிலக்கு. ஆனால் வீதிகளில் வாகனங்கள் அதிகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. சில முக்கிய வீதிச் சந்திகளில் வாகன நெரிசலையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இவையெல்லாம் அத்தியாவசிய சேவைக்கானவையா என்ற கேள்வி வீட்டுக்குள் ஒரு மாதகாலத்தைக் கடந்தும் முடங்கியிருக்கும் சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு எழும் கேள்விகள்.

மறுபுறத்தில், இராஜங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தே, சிறைக்கு சென்று கைதிகளை மிரட்டியதாக செய்திகள் தெரிவித்தன, அதன்பின்னர் அவர் பதவியும் விலகினார்.

இன்னொரு புறத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, அறுகம்பே கடலில் விளையாடும் புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிந்துள்ளார். ஜனாதிபதி ஜ.நா. பொதுச்சபைக் கூட்டத்தைச் சாட்டி அமெரிக்கா சென்றுவிட்டார், பிரதமர் ராஜபக்‌ஷ யாருமறியா ஒரு கூட்டத்தில் கலந்து பேசுவதைச் சாட்டி தனது பாரியார், இரண்டாவது மகன், மருமகள், வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் இத்தாலி சென்று வந்துவிட்டார்.

இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ரஷ்யாவில் அங்கு நடக்கும் தேர்தல்களைக் கண்காணிக்கும் சாட்டில் ரஷ்யா சென்று வந்துவிட்டார். இதையெல்லாம் பார்க்கும் சாதாரண இலங்கைக் குடிமகன், தான் மட்டும் முடக்கப்பட்டிருப்பதை எண்ணிக் கவலை கொள்கிறான்.

அந்நியச் செலாவணி தட்டுப்பாடு என்கிறார்கள். உண்மை. அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க, இறக்குமதியைக் கட்டுப்படுத்துகிறார்கள். ஓரளவு நியாயமுண்டு. இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, மக்கள் ஒருவேளை உணவைத் தியாகம் செய்ய வேண்டுமென்று ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர் கருத்து வெளியிடுகிறார்.

அது சரி. ஆனால் என்னத்தை வெட்டி விழுத்துவதற்கான அந்நியச் செலாவணியைச் செலவு செய்து பிரதமர் இத்தாலி சென்றார்? ஜனாதிபதி அமெரிக்கா சென்றார்? என்று ஒருவேளை உணவைத் தியாகம் செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்ட பொதுமகன் ஏக்கத்தோடு கேள்வி கேட்கிறான்.

பிரதமர் இத்தாலி போனதால், இலங்கைக்கு ஏதேனும் நன்மை விளைந்ததா? எதுவுமில்லை. ஆகவே பொதுமகனைப் பொறுத்தவரையில் இது பொதுப்பணத்தில் சென்ற உல்லாசப் பயணமே!

மறுபுறத்தில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய, ஜ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். கொவிட்-19 ஒருபுறம், பொருளாதார நெருக்கடி மறுபுறம், நாடோ முடக்கத்தில், அத்தியாவசியப் பொருட்கள் பல சந்தையில் கிடைப்பதில் சிக்கல் நிலை என்று நாடு அல்லோலகல்லோலப்படுகையில் இந்த அமெரிக்கப் பயணம் தேவைதானா? இங்கிருந்து சாதிக்க முடியாதது எதை அங்கே போய் சாதித்தார்?

இவையும் பால்மா கிடைக்காமல், நல்ல அரிசி கிடைக்காமல், மற்றைய பொருட்களும் விலைகூடியுள்ள நிலையில், செய்வதறியாது நாட்டின் முடக்கத்தினுள் முடக்கப்பட்டுள்ள சாதாரண பொதுமகனுக்கு எழும் கேள்விகள்.

இந்த நிலைமையில், அமெரிக்கா போன ஜனாதிபதி, அங்கே போய் என்ன பேசினார்? இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகள், பெருந்தொற்றிலிருந்து விடுபட உதவும் வகையிலான சர்வதேசப் பொறிமுறைகள் அவசியம் என்று கேட்டுக்கொண்டார்.

பொருளாதார உதவிக்கு ‘சர்வதேசப் பொறிமுறை’ தேவையாம். மனித உரிமைகள், நிலைமாறுகால நீதி ஆகியவற்றிற்கு கசப்பான ‘சர்வதேசப் பொறிமுறை’, பொருளாதார உதவிக்கு மட்டும் தேவையாம். சுருக்கமாகச் சொன்னால், எங்களுக்கு காசு தாறதுக்கு சர்வதேசப் பொறிமுறை தேவை; ஆனால், எங்களைக் கேள்வி கேட்பதற்கு, எங்களைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சர்வதேசப் பொறிமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆங்கிலத்தில் இதனை hypocrisy என்று சொல்வார்கள். தமிழில் இதற்கு நிகரான நல்ல சொல் உருவாக்கப்பட வேண்டும்.

பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையை சந்திக்கும் நாடுகளுக்கு உதவவே, ஏலவே சர்வதேச நாணய நிதியம் என்ற அமைப்பு உண்டு. இலங்கையும் அவர்களின் உதவியை நாடலாம். ஆனால், அவர்கள் சும்மா காசைத் தூக்கித் தர மாட்டார்கள்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு திட்டத்தை முன்வைப்பார்கள், அதனை நடைமுறைப்படுத்த சில நிபந்தனைகளை முன்வைப்பார்கள். காசு வேண்டும்; நிபந்தனைகள் வேண்டாம் என்ற அணுகுமுறையின் விளைவாகத்தான், இந்த அரசாங்கம் விடாப்பிடியாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர்த்துக்கொண்டு, மத்திய வங்கியை பண நோட்டு அச்சிடும் அச்சகமாக மாற்றிக்கொண்டு வருகிறது.

மறுபறத்தில், அமெரிக்க விஜயத்தின்போது, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் இனப்பிரச்சினையை உள்ளப்பொறிமுறை மூலம் தீர்ப்பது தொடர்பில் ‘தமிழ் டயஸ்போறா’வுடன் (புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன்) பேசத்தயார் என்று ஜனாதிபதி கூறியிருப்பதாக சில செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. நல்ல மாற்றம்!

ஆனால், முதலில் இந்நாட்டு தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகளாத் தேர்ந்தெடுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திக்க வேண்டும். ஏற்கெனவே நடக்கவிருந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்த சந்திப்பை, ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது. அது இன்னும் நடந்தபாடில்லை. முதலில் ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கட்டும். பிறகு, புலம்பெயர்ந்தவர்களைச் சந்திக்கலாம்.

மேலும், ஐ.நா செயலாளர் நாயகத்திடம், “விடுதலைப் புலிகளோடு தொடர்பு பட்டவர்கள் என்று, சிறையில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போருக்கு பொதுமன்னிப்பு வழங்க நான் தயங்கமாட்டேன்” என்று ஜனாதிபதி கூறியிருப்பதாக சில செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், பொதுமன்னிப்பு என்பதெல்லாம் தேவையற்ற கருத்து. நீதிமன்றம் குற்றவாளிகளாகத் தீர்மானித்து தண்டனை வழங்கப்பட்டவர்களுக்குத் தான் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

என்ன குற்றம் செய்தார்கள் என்று குற்றப்பத்திரமே சமர்ப்பிக்கப்படாத, நீதி விசாரணை நடக்காத, நீதிமன்றம் குற்றவாளிகளாகக் காணாதவர்களுக்கு அவர்கள் என்ன குற்றமிழைத்தார்கள் என்பதற்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்?

அரசினால், பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் என்ற கொடுஞ்சட்டத்தைப் பயன்படுத்தி அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். ஒன்றில் அவர்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிப் பொறிமுறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட வேண்டும், அல்லது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இங்கு பொதுமன்னிப்பு என்று விடயம் எங்கே வருகிறது?

இத்தனையையும் சொல்லிக்கொண்டு, நாடு முடக்கத்தில் இருக்கையில், யாழ்ப்பாணம் நல்லூரில் நினைவேந்தலைச் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை பொலிஸாரைக் கொண்டு கைது செய்து, வலுக்கட்டாயமாக இழுத்து வாகத்தில் ஏற்றி, பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்திருக்கிறது இந்த அரசாங்கம். கேட்டால், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறினார் என்கிறார்கள்.

அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், புடைசூழ எங்கும் பயணிக்கலாம்; விரும்பினால் கடலில் இறங்கி, நீர் விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்; வௌிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால், அந்த நடவடிக்கைகளின் போதெல்லாம் மீறப்படாத தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள், ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் நினைவேந்தல் செய்தால் மட்டும் மீறப்படுகிறது என்ற அபத்தம், இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.

முதலாவது, இந்த அரசாங்கமும் அதன் தலைமைகளும் மிகுந்த தாழ்வுச்சிக்கல் மனநிலையைக் கொண்டுள்ளார்கள்.

இரண்டாவது, அந்தச் தாழ்வுச்சிக்கலால், மிகுந்த பாதுகாப்பின்மை உணர்வைக் கொண்டுள்ளார்கள். இதன் விளைவாக, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கும் செயல்களை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

உண்மையில், இவர்கள் செய்யும் காரியங்கள், இவர்கள் விரும்பும் விளைவுகளுக்கு முற்றிலும் மாறான விளைவுகளையே எற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவுகூட இவர்களுக்குக் கிடையாது.

இவர்கள் எதுவும் செய்யாமல் விட்டிருந்தால், கஜேந்திரன் நினைவேந்தல் செய்தது யாருக்குமே தெரியாது போயிருக்கும். அந்த நிலையில், அப்படி ஒரு நினைவேந்தலை தொடர்ந்து செய்வதற்கான அரசியல் தேவை கூட கஜேந்திரனுக்கு ஏற்பட்டிராது.

ஆனால், இவர்களது இந்த நடவடிக்கை, தமிழ் மக்களிடம் இந்த நினைவேந்தலின் முக்கியத்துவத்தை பசுமரத்தாணிபோல அறுதியாகப் பதியவைக்கிறது. இது இவர்களுக்குப் புரியாது. ஏனென்றால், மூளையை ஆண்டவன் எல்லாருக்கும் கொடுத்திருக்கிறான், ஆனால் அதனுள் உள்ள அறிவை அப்படிக் கொடுப்பதில்லை.

ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள், இதுபோன்ற நினைவஞ்சலிகளைத் தடுக்காததன் காரணம் இதுதான். அதைத் தடுக்காதுவிட்டால், அதன் அரசியல் முக்கியத்துவம் குறைந்துவிடும். காலவோட்டத்தில் அது குறைந்த, மறக்கப்பட்டுவிடும்.

தாழ்வுச் சிக்கல் என்பது, தலைமைத்துவத்துக்கு முற்றிலும் முரணான குணம். தாழ்வவுச்சிக்கலில் உழலும் தலைமைகளைக் கொண்ட மக்கள் கூட்டம், என்றுமே உய்வடையப் போவதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலவியில் முத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வீடு தேடி வரும் யோகா..!! (மகளிர் பக்கம்)