இதயம் காக்கும் உணவுகள்! (மருத்துவம்)
நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நமக்காக எப்போதும் துடித்துக்கொண்டிருப்பது நம் இதயம் மட்டும்தான். அந்த இதயத்தை இதமாக வைத்திருக்கும் உணவுப் பழக்கங்கள் என்னென்ன என்று பார்ப்போம். ரிபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் செயற்கை சர்க்கரைப் பொருட்களைத் தவிர்த்திடுங்கள். இன்சுலினையும் ட்ரைகிளிசரேட்டையும் சட்டென அதிகரித்து சர்க்கரை நோயை உருவாக்கி, இதயத்தை தாக்கும் மோசமான உணவுகள் அவை. எண்ணெயில் பொரித்த உணவுகளை இயன்றவரை தவிர்த்திடுங்கள். ஆசைக்கு சிறிது சாப்பிடலாம் தவறு இல்லை. அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவது தவறு.
ஆடை நீக்கப்பட்ட பாலில் டீ, காபி, தயிர், மோர், பனீர் தயாரித்து உண்ணுங்கள். ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ், மயோனைஸ் போன்றவற்றை அறவே தவிர்த்திடுங்கள். முழுதானியங்கள், பருப்புகள், கோதுமை, மல்டி க்ரைன் ரொட்டி ஆகியவற்றைச் சாப்பிடுங்கள். தினசரி உணவில் வெந்தயம், ஃபிளக்ஸ் விதைகள் போன்றவை இருக்கட்டும். மீன், கோழி போன்ற வெள்ளை இறைச்சிகளை உண்ணலாம். ஆடு, பன்றி போன்றவற்றை அளவாகச் சாப்பிடலாம்.
விலங்குகளின் ஈரல், கிட்னி, மூளை போன்ற உறுப்புகளை அளவாகச் சாப்பிடுங்கள். அதுதான் நமது இதயத்துக்கு நல்லது. காய்கறிகள், பழங்கள், தானியங்களை நிறைய சாப்பிடுங்கள்.
எண்ணெயில் எது பெஸ்ட்?
நல்லெண்ணெய்தான் நல்லது என்கிறார் ஒரு டாக்டர். தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது என்கிறார் ஒருவர். ஆலிவ் ஆயில்தாங்க பெஸ்ட் என்கிறார் இன்னொருவர் ரைஸ் பிரான் ஆயில் ஹெல்த்தி அதுக்கு மாறுங்க என்கிறார் வேறு ஒருவர். இதில் எது உண்மை? எல்லாமே பாதி உண்மைதான். எண்ணெயில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது.
கொழுப்பில் ஹெச்.டி.எல் என்ற வகையை நல்ல கொழுப்பு என்கிறார்கள். ஓர் ஆரோக்கியமான உடலில் நல்ல கொழுப்பு அதிகமாகவும் கெட்ட கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். எல்லாவகையான எண்ணெயிலும் இந்தக் கொழுப்புகள் உள்ளன. எனவே, அனைத்தையுமே அளவாகப் பயன்படுத்துவதுதான் நல்லது. ஆனால், தற்போது நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் நிஜமாகவே எண்ணெயா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. மரச் செக்கில் எண்ணெய் ஆட்டி எடுத்த காலம் எல்லாம் மலை ஏறிப்போனது.
விதவிதமான பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் சமையல் எண்ணெய்கள்தான் இப்போதும் எங்கும் உள்ளன. இந்த எண்ணெய்களை உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலிய பொருளான குருடாயில் முதல் பல்வேறு வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள் நிபுணர்கள். முடிந்தால் எல்லோரும் மரச்செக்குக்கு மாறுங்க. எந்த எண்ணெய் பெஸ்ட் என்பதை பிறகு முடிவு செய்யலாம்.
Average Rating