By 14 October 2021 0 Comments

சமத்துவம் வரும் போது இருவருக்குமான சண்டைகள் குறையும்! (மகளிர் பக்கம்)

‘‘மாற்றங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். பெண்களும் படிக்கிறார்கள், வெளியே போகிறார்கள். போராடும் போது எல்லாம் மாறுகிறது. மாற்றங்கள் நிகழாமல் வாழ்க்கை இயக்கம் இருக்காது. ஆனால், அந்த மாற்றங்களின் அளவு, சதவீதம் குறைவாக இருக்கிறது என்பதுதான் வாதம்” என்கிறார், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர் என்று பன்முகம் கொண்ட நிர்மலா.

‘‘சொந்த ஊர் திருப்பூர். நடுத்தர குடும்பம். அப்பா போலீஸ், அம்மா எழுத்தில் ஆர்வம் கொண்டவர். கதைகள் எல்லாம் எழுதி இருக்காங்க. ‘பெண்ணியம்’ என்ற பெயரில் சிற்றிதழ் ஒன்றை நடத்தி வந்தாங்க. ‘மற்ற சொத்துக்களை விட படிப்புதான் உனக்கான சொத்து’ன்னு சொல்லி வளர்த்தாங்க. ரொம்ப தமிழ் பற்றுள்ள குடும்பம். அப்பா காவல் துறையில் இருந்தாலும் ஜனநாயகமான நபர். கைதிகளுக்கு வீட்டிலிருந்து உடைகள் எல்லாம் கொண்டு போய் உதவி செய்வார். அம்மாவின் அப்பா பெரியாரிஸ்ட்.

எங்க குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிச்சேன். அங்கு பேச்சுப் போட்டி, பட்டிமன்ற நிகழ்ச்சி என எங்கள் கல்லூரி பேராசிரியர்களை நடுவர்களாக வைத்து சில நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தோம். அந்த சமயத்தில் வெளிநாட்டிலிருந்து இயக்கிய ‘தீபம்’ சேனலில் அது குறித்து செய்தி செய்ய வந்திருந்தாங்க. அதன் தயாரிப்பாளர் என்னிடம், ‘எங்க சேனலுக்கான நிகழ்ச்சிகளை எல்லாம் ஹோஸ்ட் பண்ண முடியுமா’னு கேட்டார். அப்படித்தான் நான் ஊடகத்திற்குள் நுழைந்தேன். அங்கு வேலை பார்க்க ஆரம்பித்தவுடன் ஊடகம் சார்ந்த தொடர்புகள் விரிவடைய ஆரம்பித்தது. பிரபல தினசரி நாளிதழின் ஞாயிறு வரும் இணைப்பிதழில் எழுதுவதற்கான சூழல் அமைந்தது. அதே நேரத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராகவும் இருந்தேன். இதற்கிடையில் கல்லூரி படிப்பும் முடிந்தது.

அந்த சமயத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கண்டண்ட் எக்ஸிக்யூட்டிவாக வேலை வாய்ப்பு வந்தது. ஏற்கனவே ஊடகத்துறை சார்ந்த அனுபவம் இருந்ததால், அங்கு சேர்ந்தேன். அதே சமயம் வழக்கறிஞராகவும் பிராக்டீஸ் செய்யலாம்னு நினைச்சேன். மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராக சேர்வதற்காக கேட்ட போது அவர், ‘மீடியா, லாயராக பிராக்டீஸ் இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்க’னு சொல்லிட்டார். ஆனால் எனக்கு இரண்டு துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால் நீதிபதி ஹரி பரந்தாமன் அவரிடம் ஜூனியராக சேரலாம் என்று கேட்ட போது, அவரும் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள் என்று சொல்லிடுவாரோன்னு முதலில் பயந்தேன். ஆனால் அவர், ‘இரண்டிலுமே கவனம் செலுத்துங்க’ன்னு சொல்லி தட்டிக் கொடுத்தார்.

அந்த நேரத்தில் தூர்தர்ஷன் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் அறிவிப்பாளருக்கு தேர்வு நடப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றேன். பல கட்ட நேர்காணலுக்கு பிறகு தேர்வானேன். இதனையடுத்து அங்கேயே செய்தி வாசிப்பாளராகும் வாய்ப்பும் அமைந்தது. ஓராண்டு வேலைப் பார்த்தேன். வீட்டில் திருமணம் நிச்சயம் செய்தார்கள். திருமணமாகி வெளிநாடு போய்விட்டேன். அங்கு குடும்பம், பையனை பார்த்துக் கொள்வது என நாட்கள் கழிந்தது. எட்டு ஆண்டு இடைவேளை. மகனும் கொஞ்சம் பெரியவனாகிவிட்டதால் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு விட்ட இடத்திலேயே மீண்டும் தொடங்கலாம்னு முடிவு செய்தேன்’’ என்றவர் தற்போது தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல் யுடியூப் சானல் ஒன்றை
நிர்வகித்து வருகிறார்.

“தொழில்நுட்பம் வளர வளர புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா அழிந்து வருகிறது. இந்த காலகட்டம் புத்தகங்கள் படிப்பதற்கான சூழல் கிடையாது. அதே சமயம் எழுத்தில்லாமல் ஒருவர் தங்களின் கருத்தினை வெளிப்படையாக செல்வதற்கு ஒரு தளம் வேண்டும் என்று விரும்பினேன். ‘தமிழ் பார்வை’ என்ற யு டியூப் சேனலை ஆரம்பித்தேன். எனக்கு அடிப்படையில் பெரியாரின், மார்க்சிய சிந்தனை அதிகம். அது சார்ந்த சரியான விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்” என்றவர், பெண்ணியம் குறித்தான தன்
பார்வையை முன் வைத்தார்.

“ஆணுக்கு இருக்கக் கூடிய அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் இருக்கிறது. அதில் கூடுதலும் கிடையாது, குறைச்சலும் கிடையாது. அது இங்கு கிடைப்பதில்லை. இன்று சிலர் பெண்ணியம் பேசும் போது பெரியாரை தவறாக முன் நிறுத்துகிறார்கள். தலைமுறைகள் புதிது புதிதாக வரும் போது செய்திகள் சரியாக கடத்தப்படுவதில்லை. அவர் சொல்லியிருக்கும் பல விஷயங்களில் இருந்து ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள். அதற்கு முன்னாடி என்ன சொன்னார், எந்த சூழலில் சொன்னார் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். அவர் சமூக விஞ்ஞானி. அவர் பேசாத விஷயங்களே இல்லை. எல்லாவற்றிற்குமான தீர்வை கொடுத்திருக்கிறார்.

‘நான் சொல்வதை 100% எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிற அவசியம் கிடையாது. அதை ஆராய்ந்து சரி என்றால் மட்டும் எடுத்துக்கோங்க’ என்று சொன்னவர்” என்கிற நிர்மலா, கொரோனா கால கட்டங்களில் நடந்த குடும்ப வன்முறைகள் பற்றி பேசினார். “குடும்ப வன்முறை சட்டம் 2005-ல் வந்துவிட்டது. மன ரீதியாக, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான வன்முறைகள் இதில் அடங்கும். கணவரால் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள எந்த உறுப்பினரால் நிகழ்த்தப்பட்டாலும் அது வன்முறை தான். இது வழக்கத்தில் இருந்தாலும், கொரோனா கால கட்டத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

பொதுவாக பெண்களுக்கு வீட்டு வேலைகளில் ஓய்வு என்பது இருக்காது. வீட்டில் எல்லோரும் இருந்தாலும் அவர்களுக்கான வேலை நடந்து கொண்டு தான் இருக்கும். மற்ற நாட்களில் கணவர் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்று விட்டால் குறைந்தது ஒரு இரண்டு மணி நேரமாவது ஓய்வு கிடைக்க வாய்ப்பு இருக்கும். ஆனால், இந்த காலகட்டத்தில் வீட்டில் இருந்த போது பெரும்பாலான இடங் களில் அதற்கான சூழல் இல்லாமல் போனது. அப்படி வேலை செய்துவிட்டு தனக்கு பிடித்த டி.வி பார்ப்பதோ அல்லது நண்பர்களுடன் பேசுவதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டது. ரிலாக்ஸேஷனும் இல்லாமல் போனது. அதுவே பெரிய மன உளைச்சலை அவர்களுக்கு கொடுத்துள்ளது.

பொருளாதார ரீதியாக கீழ்தட்டில் உள்ள குடும்பங்களில் குடி பெரும் பிரச்சினையாக உள்ளது. குடிச்சாலும் பிரச்சினை செய்கிறார்கள், குடிக்க முடியவில்லை என்றால் அதனால் ஏற்படும் வெறுப்பினை வீட்டில் இருக்கும் பெண்கள் மீதுதான் காட்டுகிறார்கள். இது போன்ற சூழல்களை எதிர்த்து குரல் கொடுப்பவர்களின் சத்தம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவர்கள் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று பேசுவார்கள். உண்மையிலேயே மாற்றம் வர வேண்டிய இடம் வீடு தான். வீட்டிலிருந்து துவங்கும் போது அந்த மாற்றம் பெண்களுக்கு ஒரு விடுதலையை கொடுக்கிறது.

வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு என்கிறார்கள். ஆனால், இன்றைய சூழல் வீடுமே பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பதில்லை. உண்மையாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம் நடக்கும் இடம் வீடு தானே! வன்முறை என்பது அடிப்பதோ, காயப்படுத்துவதோடு மட்டுமல்ல. ஒரு பெண் தனக்கு பிடித்த விஷயத்தை சுதந்திரமாக செயல்படுத்த முடியாமல் போவதாலும், தனக்கான தேவையினை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும் வன்முறை தான். இது அவர்களுக்கு மன ரீதியான போராட்டமாகவும் அமைகிறது. வெளியில் என்னதான் பெண்ணியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும், குடும்பத்தில் இருக்கும் பெண்கள் விழிப்பு அடைந்திருக்கிறார்களா? இந்த கேள்விக்கான பதில் பெண்களிடம் இல்லை என்று தான் சொல்லணும்.

ஆண்கள் வெளியே போய் என்ன வேலை செய்கிறார்களோ, அதை விட அதிகமான வேலைகளை பெண்கள் வீட்டில் செய்கிறார்கள். எனவே வேலைக்கு போகவில்லை என்றாலும் வீட்டில் மனைவி அவர்களுக்கு நிகரான வேலையினை செய்கிறாள் என்ற தெளிவு வேண்டும். சமத்துவம் வரும் போது இருவருக்குமான சண்டைகள் குறையும். இப்போது வருகிற தலைமுறையிடம் அந்த மாற்றத்தை காண முடிகிறது. குறைந்த அளவில் இருக்கும் அந்த மாற்றம் பெரிய அளவில் வர வேண்டும்.

இன்றும் பல இடங்களில் வரதட்சணை கொடுமைகள் இருக்க தான் செய்கிறது. உலக அளவில் வரதட்சணையால் நிகழும் மரணம் இந்தியாவில் தான் அதிகமாக இருக்கிறது. ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் இறக்கிறாள் என்கிறது 2018-ல் எடுத்த ஓர் ஆய்வு. அடிப்படையிலேயே கேள்வி கேட்பது உரிமைகளை பெறுவதற்கு தானே. பெண்களை பேசாதே என்று சொல்லி தடுத்து விடுகிறோம். படித்து முடித்த பின் வேலைக்கு போனால் பிரச்சினை என்று உடனடியாக திருமணம் செய்கிறார்கள். திருமணம் ஆனாலும் பிரச்சினை ஓய்கிறதா? சின்ன வயதில் இருந்தே பெண்களுக்கு சுயமரியாதை குறித்த தெளிவினை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். எந்த பிரச்னை வந்தாலும் பக்கபலமாக நாங்க இருப்போம் என்ற நம்பிக்கையும் பெற்றோர்கள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்” என்கிற நிர்மலா, பெண்கள் செய்யும் வேலைகளுக்கான ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்கிற
குற்றச்சாட்டினை முன் வைக்கிறார்.

“உலக அளவில் ஐ.நா எடுத்துள்ள கணக்கெடுப்பில் 70% பெண்கள் வீட்டு வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கான ஊதியம் மிகவும் குறைவாகத்தான் அளிக்கப்படுகிறது. எந்த கேள்வியும் கேட்காமல், அதிக நேரம் வேலை செய்யக்கூடியவர்கள் என்பதால் பெண்களுக்கு அதிக அளவில் முன்னுரிமை கொடுத்தாலும், உழைப்புக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. அதேபோல், விவசாயத்திலும் 50% மேல் பெண்களின் பங்களிப்பு அதிகம். ஆனால், ஆண்களையே முன்னிறுத்துகிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கான துவக்கப் புள்ளியாக குடும்பம் இருக்க வேண்டும்” என்று அழுத்தமாக சொல்கிறார் நிர்மலா.Post a Comment

Protected by WP Anti Spam