கவலையின்றி வாழ கைத்தொழில் கற்றுக்கொள்வோம்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 4 Second

இன்றைய காலக்கட்டத்தில் நாம் படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்மந்தமே இருப்பதில்லை. பொறியியல் படித்துவிட்டு மார்க்கெட்டிங் வேலையில் ஈடுபடுகிறார்கள். இதனால் நாம் படித்த படிப்பு வீணாகிவிடுமான்னு எண்ண வேண்டாம். நாம் படித்த பட்டப்படிப்பாக இருக்கட்டும், தொழில் சார்ந்த வேலையாக இருக்கட்டும்… என்றும் அவை நம்மைக் கைவிடுவதில்லை. அதற்கான முயற்சியில் நாம் கொஞ்சம் ஈடுபட வேண்டும். பயிற்சியும் முயற்சியும் இணைந்தால் கண்டிப்பாக தொழில்முனைவோராக பெண்கள் உயரமுடியும் என்கிறார் சென்னை போரூரை சேர்ந்த சுதா செல்வக்குமார்.

சமையல் கலை மட்டுமல்லாமல், பல கைவினை சார்ந்த தொழில்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதன் மூலம் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். ‘‘சொந்த ஊர் கும்பகோணம். படிச்சது எல்லாம் அங்கு தான். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பதுபோல் நான் படிச்ச படிப்புக்கும் இப்போது செய்து வரும் கைவினை சார்ந்த தொழிலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்று வேலை தேடிய போது, ஒரு நிறுவனத்தில் குறைவான சம்பளத்தில் தான் வேலை கிடைச்சது.

இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்தோம், என எனக்குள் ஒரு அலுப்புத் தட்டியது. குறைந்த வருமானத்திற்கு நம் உழைப்பை அடுத்தவர்களுக்குச் செலவிடுவதைவிட, சுயமாக ஒரு தொழிலைத் தொடங்கி அதில் நம் முழு பங்களிப்பையும் செலுத்தினால் வருமானம் இதைவிட அதிகமாக வருமே என என் உள்மனம் சொல்லியது. அந்த எண்ணம் தான் சுயதொழிலாகச் செய்வதற்குப் பிள்ளையார் சுழி போட்டது’’ என்றவர் முதலில் தையல் கலையில் பயிற்சி பெற
ஆரம்பித்துள்ளார்.

‘‘ஏதாவது ஒரு தொழில் சார்ந்த கலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆலோசித்த போது, பலரின் பதில் தையல் கற்றுக் கொள்… என்றாக இருந்தது. தையல் கலையைப் பொருத்தவரை நமக்கான உடைகள் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் உடைகள் தைத்துக் கொடுக்கலாம். அதன் மூலம் ஒரு வருமானமும் பார்க்கலாம். அதைத் தொடர்ந்து எனக்கு கலைத் துறை மேல் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. பெயின்டிங், முரல் ஆர்ட், சாம்பிராணி மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பு, சணல் வேலைப்பாடு, ஆரத்தி தட்டு, மெஹந்தி, சாக்லெட், கேக், பேப்பர் கிராப்ட், மினியேச்சர் ஃபுட்… என பல கைவினை தொழில்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

கைவினைப் பொருட்களை கற்றுக் கொள்வது மட்டுமில்லாமல் அதை மார்க்கெட்டிங் செய்வது குறித்தும் தெரிந்து இருக்க வேண்டும். நமக்கு பல பொருட்கள் செய்ய தெரிந்து இருக்கலாம். ஆனால் அதை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யணும்ன்னு புரிந்து வைத்திருக்க வேண்டும். முதலில் நமக்கு தெரிந்தவர்களுக்கு பரிசாக அளிக்கலாம். அவர்கள் மூலம் அவர்களின் நண்பர்களின் வட்டாரம் மற்றும் உறவினர்கள் என்று நம்முடைய திறமை வெளியே வரும். இப்போது தொழில்நுட்பமும் நமக்கு கை கொடுப்பதால், வாட்ஸ்சப், முகநூல், இன்ஸ்ட்டாகிராம்… என உங்களுக்கான ஒரு பக்கம் ஆரம்பித்து அதன் மூலமும் உங்கள் பொருட்களை அறிமுகம் செய்து விற்பனை செய்யலாம். நானும் இப்படித்தான் செய்தேன்.

ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. எஸ்.எஸ் ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் துவங்கி இப்போது அதன் மூலம் பலருக்கு பயிற்சி அளித்து வேலையும் கொடுத்து வருகிறேன். ஏதாவது ஒரு கைவினைப் பொருட்கள் சார்ந்த தொழிலைக் கற்றுக் கொண்டால், நம் குடும்பத்திற்கு நம்மால் முடிந்த ஒரு வருமான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்’’ என்றவர் பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

‘‘சிலருக்கு என்ன செய்யலாம் என்ற குழப்பம் இருக்கும். அந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன மற்றும் எதில் நீங்கள் கைத்தேர்ந்தவர்கள் என்று பட்டியலிடுங்கள். சிலருக்கு சமையல் செய்வது பிடிக்கும். வித்தியாசமாக சமையல் செய்து பார்ப்பார்கள். சிலருக்கு உடை அலங்காரம் மேல் விருப்பம் இருக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும். எதுவாக இருந்தாலும், அதன் மூலமாகவும் ஒரு வருமானம் பார்க்கலாம். சாப்பாட்டு பிரியர் என்றால், உங்களுக்கு பிடித்த ஓட்டலுக்கு சென்று அங்குள்ள உணவினை பற்றிய தொகுப்பினை யுடியூபில் வெளியிடலாம்.

அதே போல் சமையல் கலை மற்றும் உடை அலங்காரம் போன்றவற்றையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடலாம். நமக்கு தெரிந்த வேலையை தைரியமாக செய்தால் கண்டிப்பாக அதற்கான பலனை அனுபவிக்க முடியும். கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். அதுவே உங்களின் தொழிலாக மாறும்’’ என்றார் சுதா செல்வகுமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரம்பரிய அழகுப் பொருட்கள் தயாரிப்பு! கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு! (மகளிர் பக்கம்)
Next post ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது!! (அவ்வப்போது கிளாமர்)