தாய்ப்பால் மூலம் கோவிட் 19 பரவுமா?! (மருத்துவம்)

Read Time:8 Minute, 42 Second

இரண்டு ஆண்டுகள் மற்றும் அதையும் தாண்டி பச்சிளம் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவது குழந்தையின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் உகந்தது ஆகும். தாய்ப்பாலில் பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளும், உயிர்ச்சத்துக் கூறுகளும், குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தந்து வைரஸ், பாக்டீரியா, பங்கஸ் ஆகியவை தொற்றாமல் தடுப் பதில் முக்கியப் பங்களிக்கும்.

தாய்ப்பாலில் அதிக அளவிலுள்ள ஓலிகோசாக்ரைட்ஸ் (Oligosaccharides – HMOs) ஆரோக்கியத்தை மேம்படுத்தித் தொற்றைத் தடுக்கிறது. மேற்கூறிய காரணிகளால் பச்சிளம் குழந்தைகளின் முதல் தடுப்பூசியாகத் தாய்ப்பால் விளங்குகிறது.

கொரோனா ஏற்பட்ட தாய் குழந்தைக்கு பால் தரலாமா?

கோவிட் உறுதியான எந்த பெண்ணின் தாய்ப்பாலிலும் இதுவரை கோவிட்-19 வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, கோவிட் உறுதியான தாய்மார்களின் தாய்ப்பாலிலோ, தாய்ப்பால் மூலமாகவோ கோவிட்-19 வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை. தாய்ப்பாலிலோ அல்லது தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாகவோ கோவிட்-19 தொற்று பரவியதாக இதுவரை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. எனவே தாய்ப்பால் தருவதைத் தவிர்க்கவோ, நிறுத்தவோ எந்த அறிவியல்ரீதியான காரணமும் இல்லை. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

குழந்தை பிறந்த பின்னர் உடலோடு உடலாக மார்போடு அணைத்துக் கொண்டு தாய்ப்பால் தரலாமா?

கண்டிப்பாகக் கொடுக்கலாம். குழந்தைப் பிறந்த உடனேயே கங்காரு தனது குட்டியைப் பாதுகாப்பதுபோல், உடலோடு உடலாக மார்போடு அணைத்துக் கொள்வது பிறந்த குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் தட்பவெப்பநிலையைச் சீராக்குவதுடன், அவற்றின் இறப்பையும் கணிசமாகக் குறைக்கும். பிறந்த பச்சிளம் குழந்தையை தாய்க்கு அருகே படுக்க வைப்பதன் மூலம் தாய்ப்பால் தரும் முனைவை இயலச் செய்வதுடன் இறப்பையும் தடுக்கும்.

உடலோடு உடலாக மார்புடன் அரவணைப்பதும், தாய்ப்பால் தருவதும், கோவிட்-19 தொற்றையும், அது தொடர்பான நோய்கள் பரவுவதையும் தடுக்கும்.
அதேநேரம் தாய்ப்பால் கொடுக்கும் போது மருத்துவ முகக்கவசம் அணிவது, கோவிட்-19 தொற்று நீர்த்துளிகள் குழந்தை மீது விழாமல் பாதுகாப்பது உள்ளிட்ட சுத்தம் மற்றும் சுகாதார நடவடிகைகளைத் தாய் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

தாய்ப்பால் தரும் தாய் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தாய்ப்பாலூட்டும் அனைத்துப் பெண்களும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளப்
பரிந்துரைத்துள்ளது.

கோவிட் தொற்று உறுதியான தாய்ப்பால் தரும் தாய் எத்தனை நாட்கள் கழித்து கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்?

கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த தாய்ப்பால் தரும் தாய், குணமடைந்த தேதியிலிருந்து 3 மாதம் கழித்துத் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கோவிட்-19 உறுதியான தாய்க்குப் பரிந்துரைக்கப்படும் சுத்தம் மற்றும் தூய்மை தொடர்பான பரிந்துரைகள் என்னென்ன?

* சோப் மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான ஹாண்ட் ரப் ஆகியவற்றால் கைகளைக் கழுவிய பிறகே குழந்தையைத் தொட வேண்டும்.

* தாய்ப்பாலூட்டும் போது கட்டாயம் மருத்துவ முகக்கவசம் அணிய வேண்டும்.

* முகக்கவசத்தில் ஈரத்தன்மை அதிகமானால் உடனடியாக மாற்றவும் – உடனடியாக அப்புறப்படுத்தவும் – மீண்டும் பயன்படுத்தக் கூடாது – முகக்கவசத்தின் முன்பக்கத்தைத் தொடாமல் பின்பக்கமாக கழற்றவும் – டிஸ்யூ காகிதத்தில் தும்மினாலோ, இருமினாலோ அதை உடனடியாக எறிந்துவிட்டு ஆல்கஹால் அடிப்படையிலான் ஹாண்ட் ரப் அல்லது சோப் மூலம் தண்ணீரால் நன்றாகக் கைகளைச் சுத்தம் செய்து கொள்ளவும் – அறையை கிருமிநாசினியால் அடிக்கடி சுத்தப்படுத்தித் தூய்மையாக வைத்துக் கொள்ளவும்.

தாய்ப்பாலூட்டும் தாய் தனது மார்பகங்கள் மீது இருமினாலோ, தும்மினாலோ, உடனடியாக சோப் மற்றும் வெதுவெதுப்பான நீரில் தனது மார்பகங்களை 20 வினாடிகள் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே தாய்ப்பாலூட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் நேரடியாக தாய்ப்பாலூட்டுவதற்கு முன் அல்லது தாய்ப்பாலைப் பீச்சியெடுக்கும் முன் மார்பகங்களைக் கழுவ வேண்டிய அவசியமில்லை.

கோவிட்-19 தொற்று உறுதியான / சந்தேகிக்கப்படும் தாய் உடல் நலக்குறைவு அல்லது வேறு நோய் காரணமாகத் தாய்பால் கொடுக்க முடியாத சூழலில் மீண்டும் எப்போது தாய்ப்பால் தரலாம்?

உடல்நிலை குணமாகி தேறி வருகிறோம் என்று உணரும்போது தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். கோவிட்-19 உறுதியான / சந்தேகிக்கப்பட்ட நாள் தொடங்கி மீண்டும் தாய்ப்பால் தர குறிப்பிட்ட கால அவகாசமென ஏதுமில்லை. தாய்ப்பால் தருவதால் தாயின் கோவிட்-19 மருத்துவ சிகிச்சையில் ஏதேனும் மாற்றம்வரும் என்பதற்கும் ஆதாரமில்லை.

முழுமையாக குணமடையப் பொதுவான ஆரோக்கியமும், ஊட்டச் சத்தும் தாய்க்கு அவசியம். தாய்ப்பால் தரவும், தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் வற்றிப் போனால் மீண்டும் தாய்ப்பால் சுரக்கவும், தாய்ப்பாலூட்டுதல் தொடர்பான லேக்டேஷன் மேனேஜ்மெண்ட் குழுவின் வழிகாட்டுதலும், ஆலோசனையும் தாய்மார்களுக்கு அவசியம் ஆகும்.

கோவிட்-19 சிகிச்சைக்கான மருந்துகள் தாய்க்கு கொடுக்கப்படுவதால் பக்கவிளைவுகள் இருக்குமா?

பெரும்பான்மை மருந்துகள் தாய்ப்பால் புகட்டுவதற்கு இணக்கமாகவே இருக்கும். இருப்பினும் தொடர்ந்து தாய்ப்பால் புகட்ட உங்கள் குடும்ப மருத்துவருடன் ஆலோசனை செய்வது நலம். ஒருவேளை சில மருந்துகள் இணக்கமாக இல்லை எனில் இணக்கமான மாற்று மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவிட் கால கருத்தரிப்பு!! (மருத்துவம்)
Next post வயதானவர்களுக்கான சிறப்பு வீடுகள்! (மகளிர் பக்கம்)