தமிழ் என் உயிரானதினால் தமிழாலே உயர்ந்தேன்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 28 Second

மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி நம் தமிழ்மொழி. தமிழர்களுக்கெல்லாம் தலைசூடா மகுடமாய், பாரம்பரிய அழகுமாய் விளங்கும் நமது தாய் மொழியே தமிழர்களின் அழியா அடையாளமாகும். இப்படிப்பட்ட மொழியில் புரண்டு மகிழ்ந்து கொண்டாட வேண்டிய நாம் என்ன செய்கிறோம். கலாச்சார மோகத்தின் பிடியில் சிக்குண்டு நம் தாய் நாட்டிலே அந்நியர்களைப் போன்றே வாழ்கிறோம். தமிழ்… தமிழ் என்று மேடையில் ஏறி மூச்சிறைக்கப் பேசிவிட்டு, கீழே இறங்கியதும், அந்நிய நாடுகளின் மோகத்தில் சிக்குண்டு தமிழை சீரழித்து வருகிறோம். தமிழ் ஆட்சிமொழியாக வரவேண்டும். தனித் தமிழிலேயே படிக்க வேண்டும் என்கிறார்கள். அவை வெறும் வீண் பேச்சாகவே இருந்து வருகின்றது.

‘‘காலமாற்றத்திற்கேற்ப நம்மை நாம் புதிது புதிதாய் மாற்றிக்கொள்ளும் பொழுது நமக்கான அடையாளம் இங்கே அழிந்து போகிறது. பெருமைக்காகவும் அந்நிய மோகத்திற்காகவும் நாம் தாய்மொழியைப் புறந்தள்ளுகிறோம். அந்நிய மொழியில் பேசுவதையும் எழுதுவதையும் பெருமை எனக் கருதி நமது மொழியை நாமே அழித்து வருகின்றோம். எனது மகள் அல்லது மகன் டாக்டருக்கு, இன்ஜினியருக்குப் படிக்கிறான் என்று பெருமையுடன் கூறுகிறார்களே தவிர, எனது பிள்ளை தமிழ்ப் படிக்க ஆசைப்படுகிறான் என்று எந்தப் பெற்றோராவது சொல்லக் கேட்டிருக்கின்றோமா? இல்லை. அப்படியே யாரோ ஒருவர் படிக்க வைத்தால் முகம் சுளிக்காமலும் அந்த மனிதரை ஏளனம் செய்யாமலுமா இருக்கின்றது இந்த சமூகம். தமிழை நேசிப்போம். வரும் தலைமுறையினருக்குத் தமிழ் அறிவை ஊட்டி வளர்ப்போம்’’ என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பிரபா.

‘‘பிளஸ் டூ முடித்துவிட்டு கேட்ட குரூப் கிடைக்கவில்லை என்பதற்காக ஏதாவதொரு டிகிரியை வாங்கி பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நான் தமிழ் படிக்கவில்லை. சிறுவயதிலிருந்தே தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் தமிழைப் படித்தேன். என் தாத்தா, பாட்டி இருவருமே தமிழாசிரியர்களாக பணிபுரிந்தவர்கள். பாட்டி ஆசிரியராகப் பணியாற்றுவதை பெருமிதமாகக் கொண்டவர்.

இதனால் சக ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் மிகுந்த அன்பையும், மரியாதையும் பெற்றவர். மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு இருப்பவர். இவர் பள்ளிக்குள் வரும் போது, மாணவர்கள் பாட்டியை பின் தொடர்ந்து வருவார்கள். ஒருநாள் பாட்டியுடன் நான் பள்ளிக்குச் சென்றபொழுது எனக்கும் அங்கே கூடுதல் மரியாதையும், வரவேற்பும் கிடைத்தது. அந்த சிறுவயதிலேயே தமிழ்ப் படித்து, ஆசிரியரானால், இப்படி மரியாதை கிடைக்கும் என்று என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. அப்போதே முடிவு செய்தேன், நானும் பாட்டியைப் போல் ஆசிரியராக வேண்டும் என்று. என் குடும்பத்தில் எல்லாரும் பட்டம் பெற்றவர்கள்.

நான் தமிழ் படிக்க போகிறேன் என்று சொன்ன போது, அதற்கு எதிர்காலம் எல்லாம் கிடையாதுன்னு சொன்னாங்க. ஆனால் நான் விடாமல் தமிழில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அன்றிலிருந்து எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் புதுவித அனுபவங்களை சந்தித்து வருகிறேன். என் குடும்பம், எழுத்துலகையும் தாண்டி மூன்றாவதாக நான் மகிழ்ந்திருக்கும் இடம் நான் பணிபுரியும் கல்லூரி’’ என்றவர் ஒவ்ெவாரு மாணவர்களையும் தன்னுடைய குழந்தைப் போல் பாவித்து வருகிறார்.

‘‘மாணவர்கள் தான் என்னுடைய அடையாளம். நம்மை விட அவர்கள் தான் பலதரப்பட்ட மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நான் தமிழ் கற்பிக்கும் ஒரு வகுப்பறையில் ஒரு மாணவன் மட்டும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வான். அடாவடியான பேச்சும் ஆணவப்பார்வையும் அவன் குணாதிசயமாகவே இருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் அவனிடம் பேசமாட்டார்கள். ஒரு நாள் அவன் அருகே சென்று, அன்பாக சில வார்த்தைகளை பேசினேன்.

அவனுக்குள் இருந்த ஆதங்கத்தை முழுவதுமாக கேட்டறிந்தேன். உளவியல் ரீதியாக அவனுக்குள் இருந்த சிக்கல்களுக்கு என்னுடைய அன்பான வார்த்தைகள் மருந்தாக மாறியது. அவனுடைய நடத்தையில் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் ஏற்பட்டது. இன்று நல்ல ஒழுக்கமுடைய மாணவனாக கல்லூரியில் வலம் வருகிறான். இதுவே என் வாழ்விற்கான அடையாளமாக கருதுகிறேன். சுயநலமான வாழ்க்கையை வாழ்வதைவிட பிறரது நலனுக்காக வாழ்ந்து பாருங்களேன் அதிலொரு சுகமிருக்கும்.

ஆசிரியர் பணி ஒரு வரம். பாடத்தை மட்டுமே போதிக்காமல், அவர்களின் நலன்களிலும் அக்கறை செலுத்தினால், நம் கட்டுப்பாட்டிற்குள் அவர்களை கொண்டுவர முடியும். அன்பான ஆசிரியர் என்ற அணுகுமுறையில் வாழ்ந்து பாருங்கள். மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர் வரிசையில் நாம் ஒவ்வொருவரும் ‘வாழ்நாள் நல்லாசிரியர்’ விருதினை அவர்கள் மனதில் பெற்றிருப்போம்’’ என்ற கூறும் பிரபா மாணவர்களுக்கு நல்ல வாழ்வியல் சார்ந்த பழக்கங்களையும் கற்றுத்தர வேண்டுமென்கிறார்.

‘‘ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் மாணவர்களுக்கு ஒரு உண்டியல் தருவேன். அதில் மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பாக்கெட் மணியின் ஒரு சிறு பகுதியை சேர்த்து வைக்கச் சொல்வேன். ஆண்டு முழுவதும் சேகரிக்கப்படும் பணத்தை அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொள்ள அந்தப் பணத்தை தருவது வழக்கம். மாணவர்கள் பயன்படுத்திய வேண்டாத ஆடைகளை சேகரித்து, வறுமைக் கோட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கிறோம். இதன் மூலம் மாணவர்களின் மனதில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குணாதிசயத்தை ஊட்டி வளர்த்து வருகிறேன்.

பெண்கள் இந்த உலகத்தில் படைக்கப்பட்ட படைப்புகளிலேயே உயர்ந்தவர்கள். ஆயிரம் சோகங்களை, கவலைகளை, ஏமாற்றங்களை, விரக்தியை எல்லாம் சுருட்டி கைக்குட்டைக்குள் மடித்து தூக்கி எறியுங்கள். குடும்பத்தினரால், கணவனால் ஊராரால் ஒடுக்கப்படும்பொழுது முடங்கி விடாமல் அதிலிருந்து விடுபட்டு சாதிக்க வேண்டியவர்கள் பெண்கள். தன்னம்பிக்கை மட்டுமே பெண்களின் துணை. தைரியம் மட்டுமே சாதிக்கும் மந்திரம் என்று கூறும் முனைவர் பிரபா ‘இளம் தமிழ் ஆய்வாளர்’, ‘தமிழ்நதி’, ‘தமிழாய்வுச் செம்மல்’, ‘இலக்கியச் சுடர் மாமணி’, ‘மனிதநேய இலக்கியச் செம்மல்’, ‘தில்லையாடி வள்ளியம்மை’, ‘சக்தி விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயதானவர்களுக்கான சிறப்பு வீடுகள்! (மகளிர் பக்கம்)
Next post திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்! (அவ்வப்போது கிளாமர்)