உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்! (மகளிர் பக்கம்)

Read Time:25 Minute, 55 Second

அகன்ற கண்கள், கூர்மையான நாசி, நெடுநெடுவென்று உயரம், நல்ல அழகியும் கூட. பொதுவாகவே உயரமான நடிகைகள் தமிழ்த் திரையில் மிகவும் குறைவு. பாரதி என்றால் கலைமகள் என்ற பொருளும் உண்டு. நடிகை பாரதியை பொறுத்தவரை சகலகலாவல்லியாகவே திகழ்ந்திருக்கிறார். 1940களில் திரைத்துறைக்குள் நுழைந்து அகில இந்தியாவையும் தன் நடிப்பாலும் அசாத்தியமான நாட்டியத் திறனாலும் கட்டிப் போட்டவர் நடிகை வைஜெயந்தி மாலா. அவரைப் போல் ஒரு சிலர் மட்டுமே தமிழ் சினிமாவில் தோற்றத்தில் ’உயர்ந்தவர்’களாக இருந்தார்கள். அப்படி 60களில் கர்நாடகத்திலிருந்து நடிக்க வந்த நடிகை பாரதியும் உயரமான பெண்ணாகவே இருந்தார்.

உயரத்தில் மட்டுமல்லாமல், தோற்றத்திலும் சாயலிலும் கூட பாரதி, நடிகை வைஜெயந்தி மாலாவை ஒத்திருந்தார். மற்றொரு புறத்திலோ கே.ஆர்.விஜயாவின் சாயலும் கூட அவரிடம் தென்பட்டது. தான் திறமையான ஒரு நடிகை என்பதையும் தன் நடிப்புத் திறனால் நிரூபித்தவர். 60, 70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல தென்னிந்திய மொழிப் படங்களிலும், இந்தியிலுமாக 150க்கும் மேற்பட்ட படங்களில் பாரதி நடித்துள்ளார்.

படிப்பும் விளையாட்டுமே இரு கண்கள்

பாரதியின் பெற்றோருக்குப் பூர்வீகம் மராட்டிய மாநிலம் புனே. அவருடைய முன்னோர்கள் புனேவிலிருந்து பிழைப்புக்காக பெங்களூரு வந்தவர்கள். 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் அன்று பத்ராவதியில் பிறந்தவர் பாரதி தேவி. அவரை அடுத்துப் பிறந்தவர்கள் மேலும் இரு சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள். பெற்றோர் வி.எம்.ராமச்சந்திர ராவ் – பத்ராவதி பாய். தந்தையாருக்கு ஜவுளித்துறை சார்ந்த பணி. அவர் ஒரு நல்ல தையற் கலைஞரும் கூட.

எட்டுப் பேரைக் கொண்ட மிகப்பெரிய குடும்பம் என்றபோதும் மகளைப் படிக்க வைக்கத் தயங்கவில்லை அவர்கள். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நடனம் மற்றும் சாஸ்திரீய சங்கீதத்தையும் பெற்றோரின் விருப்பத்துக்கேற்பக் கற்றுத் தேர்ந்தவர் பாரதி. பள்ளியில் தங்கள் மகள் நாடகங்களில் நடிப்பதைப் பார்த்த பெற்றோருக்கு மகளைப் பற்றிய பெருமித உணர்வே மேலோங்கி இருந்தது. நடிப்பு, நடனம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் பாரதிக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பள்ளியிலும் கல்லூரியிலும் எறிபந்து (Throw Ball) வீராங்கனையாகவும் சிறந்த தடகள வீராங்கனையாகவும் அவர் திகழ்ந்தார். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பது வரை விளையாட்டில் தீவிர ஆர்வம் பாரதிக்கு இருந்தது. ஆனால், பாரதியே சற்றும் எதிர்பாராத ஒரு தருணம் அவருடைய வாழ்வில் எட்டிப் பார்த்தது. எதிர்காலம் அவரைத் திரைத்துறையை நோக்கி நகர்த்தியது ஆச்சரியத்திலும் பெரும் ஆச்சரியம்.

பாரதி, மகாராணி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், நடிகர் கல்யாண்குமார் தன் படத்தில் நடிப்பதற்கான புதுமுகத்தை அதே கல்லூரியில் தேடிக் கொண்டிருந்தார். அவருடைய படக்குழுவினர் கல்லூரிக்குள் வந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தார்கள். பாரதியும் அவருடைய நெருங்கிய தோழி ராதாவும் இணைந்து கல்லூரி விழா ஒன்றில் நடனமாடிய படங்கள் கல்லூரியின் நோட்டீஸ் போர்டில் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் படங்களில் சிலவற்றை கல்லூரியின் ஒப்புதல் பெற்று கல்யாண்குமாரின் குழுவில் இருந்த நடன இயக்குநர் சம்பத் மாஸ்டரிடம் கொடுத்துள்ளனர். அவரும் அந்தப் படங்களை கல்யாண்குமாரிடம் காண்பித்துள்ளார்.

நடனமாடும் அந்த அழகான, உயரமான, லட்சணமான இளம் பெண்ணின் படங்களைப் பார்த்த நொடியிலேயே கல்யாண்குமாருக்குப் பிடித்துப் போய் விடவே, யாரந்தப் பெண் என விசாரித்துத் தன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பாரதியின் தந்தையிடம் இது பற்றி பேசினார்கள். கல்லூரி வகுப்பில் பாரதி உட்கார்ந்திருந்தபோது நடிப்பதற்கான அழைப்பு அவரைத் தேடி வந்தது. பாரதிக்கோ அதில் துளியும் விருப்பமில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு விருப்பம் இருந்தது. அவர்களின் வற்புறுத்தல் மற்றும் விருப்பத்துக்கிணங்க பாரதி நடிப்பைத் தொழிலாகத் தேர்வு செய்து கொண்டார். தன்னுடைய படிப்பு மற்றும் விளையாட்டு குறித்த பாரதியின் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் காணாமல் போயின.

விளையாட்டு வீராங்கனை நடிகையானார்

1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்யாண்குமார் கதாநாயகனாகவும் பாரதி நாயகியாகவும் நடிக்க ‘லவ் இன் பெங்களூர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை சத்யா ஸ்டுடியோவில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் முதல் காட்சி குளோசப் காட்சி. முதல் காட்சியில் முதல் டேக் ஓகே ஆனதுடன் படக் குழுவினர் அனைவரின் பாராட்டையும் பாரதி பெற்றார். ஆனாலும் நிதிச்சுமையால் படம் தாமதமானது.

இதற்கிடையில் நடன இயக்குநர் சம்பத் மாஸ்டர், பாரதியை இயக்குநர் பி.ஆர்.பந்துலுவிடம் அழைத்துச் சென்று படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார். இயக்குநரும் தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலுவின் தயாரிப்பு, இயக்கத்தில் ‘துட்டே தொட்டப்பா’ (Dudde Doddappa) படத்தில் நடித்தார் பாரதி. பி.ஆர்.பந்துலு, எம்.வி.ராஜம்மா உடன் நடிக்க இப்படத்தின் படப்பிடிப்பு மளமளவெனத் தொடங்கி விரைவாக முடிந்தது.

கல்யாண்குமாருடன் முதலில் நடித்த படம் ‘லவ் இன் பெங்களூர்’ என்றாலும் முதலில் வெளியாகி, பாரதியை ஒரு திறமையான நடிகையாக உலகுக்கு அறிமுகப்படுத்தியது ‘துட்டே தொட்டப்பா’. இது வெற்றிகரமாகவும் ஓடியது. படிப்பிலும் விளையாட்டிலும் எந்த அளவுக்கு விருப்பம் அவருக்கு இருந்ததோ அதே ஆர்வத்தை நடிப்புத் தொழிலிலும் செலுத்தினார். ஏற்றுக்கொண்ட தொழிலில் ஈடுபாட்டுடன் இருந்ததாலேயே எடுத்துக் கொண்ட எந்தப் பணியிலும், நடிக்கும் எந்த மொழியிலும் சிறந்த நடிகையாகவும் அவரால் ஜொலிக்க முடிந்தது.

தமிழில் எம்.ஜி.ஆர். பட நாயகியாக அறிமுகம்….

பி.ஆர். பந்துலுவின் கன்னடப் படத்தை முடித்துக் கொடுத்த கையுடன் அவருடைய ‘நாடோடி’ தமிழ்ப் படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழில் முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் பந்துலுவின் மூலம் கிடைத்தது. மூன்று படங்களுமே 1966ல் வெளியாகி வெற்றிப் படங்களாயின. பாரதியையும் ராசியான நடிகை ஆக்கின. எம்.ஜி.ஆரின் காதலியாக அவருடன் இணைந்து ’அன்றொரு நாள் இதே நிலவில்’ என ஆடிப் பாடுவது, பின்னர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போவது என பாரதியின் கதாபாத்திரம் படத்தின் பாதியிலேயே முடிந்து போனது. ஆனால், கதைப்படி படம் நெடுக வரக்கூடியவராக பாரதியின் தங்கையாக நடித்த சரோஜா தேவியின் பாத்திரமே அமைந்தது. ஆனால், பாரதிக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு நல்ல அடி வைப்பாக இப்படம் அமைந்தது. இப்படத்தில் நடிக்கும்போது ‘பாரதி’ என்ற பெயரை மாற்றும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டும் பெற்றோர் வைத்த பெயரை மாற்றுவதற்கு பாரதி இணங்கவில்லை.

அதே ஆண்டிலேயே எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இணைந்து நடித்த ‘சந்திரோதயம்’ படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் பாரதிக்கு அமைந்தது. கதாநாயகிகள் கவர்ச்சிக் கன்னிகளாக மட்டும் அவதாரம் எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாரதி இரண்டாவது நாயகியாக வேடம் ஏற்றாலும் பெரும்பாலும் அவர் சவாலான வேடங்களையே தமிழ்ப் படங்களில் செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். இப்படமும் வெற்றிப் படமாகவே அமைந்ததுடன், நன்கு ஓடி மக்களின் வரவேற்பையும் பெற்றது.

எம்.ஜி.ஆரின் ‘அன்னமிட்ட கை’ படத்திலும் இரண்டாவது நாயகி வேடம்தான் பாரதிக்கு வாய்த்தது. மலைக்கிராமப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வைத்தியம் செய்யும் ஒரு மருத்துவராக, எம்.ஜி.ஆரை ஒருதலையாய்க் காதலிப்பவராக வேடம் அமைந்தது. இந்த மூன்று படங்களுக்குப் பின் எம்.ஜி.ஆர். படங்களிலும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்போது எம்.ஜி.ஆர். படங்களில் ஜெயலலிதா மட்டுமே நாயகியாகக் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசனின் ஜோடியாக…

அடுத்தடுத்து சிவாஜி கணேசனின் இரு படங்கள். முதலில் நடித்த ‘உயர்ந்த மனிதன்’ சிவாஜியின் 125 வது படம். ஏ.வி.எம். தயாரிப்பில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் வெளியானது. சௌகார் ஜானகி, வாணி என இரண்டு நாயகிகளுடன் மூன்றாவதாக பாரதியும் நாயகியாக இருந்தார். முதல் இருவரும் சிவாஜியின் ஜோடிகள். பாரதியோ சிவகுமாரின் ஜோடி. அப்பாவியான சத்தியமூர்த்திக்கு (சிவகுமார்) எழுதப் படிக்கக் கற்றுத் தரும் கௌரியாக படித்த, துணிச்சல் மிக்க பெண்ணாக அவரது பாத்திரம் வார்க்கப்பட்டிருந்தது.

எஜமானரின் கார் டிரைவர் மகள் என்றாலும் தவறு செய்யும் எஜமானரை (சிவாஜி) எதிர்த்துக் கேள்வி எழுப்பும் துணிச்சல் மிகுந்த பெண் பாத்திரத்தைச் செவ்வனே செய்தார். தன்னிடம் எழுதப் படிக்கவும் பாடம் கற்கவும் வந்த சத்திய மூர்த்தியைக் காதலிக்கவும் செய்வார். இவர்கள் இருவருக்குமான மிகப் பிரபலமான டூயட் பாடல், ‘என் கேள்விக்கென்ன பதில்..?’. இப்படம் பெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது. சிவாஜி கணேசன் முதன்முதலாக நடித்த ஆக்‌ஷன் படம் டி.ஆர். ராமண்ணா இயக்கிய ‘தங்கச் சுரங்கம்’. இப்படத்தின் நாயகி பாரதி. சிவாஜிக்கு ஜோடியாக நடித்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆக்‌ஷன், மசாலா, கவர்ச்சி என எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தபோதும் படம் ஓடாததற்கு நாயகி பாரதி மட்டுமே காரணமில்லை. கிணற்றுக்குள் நாயகனும் நாயகியும் தாம்புக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடியே பாடும், ‘சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது’ பாடல் மிகப் பிரபலமானது. இந்தப் படத்துக்குப் பின் சிவாஜியின் படங்களில் நடிக்க பாரதிக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழின் முதன்மை நாயகர்கள் என அறியப்பட்ட இருவரின் படங்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் பிற நாயகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.

தமிழின் அப்போதைய பிரபல நாயகர்களான ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன் என அனைவரின் படங்களிலும் நாயகியாக இணைந்து நடித்தார். ஸ்ரீதரின் வார்ப்பான லலிதா என்னும் புரியாத புதிர் 1971 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் ஸ்ரீதரின் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ பாரதி நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கதோர் படம். ஒரே நேரத்தில் ‘துனியா க்யா ஜானே’ என்ற பெயரில் இது இந்தியிலும் படமாக்கப்பட்டது. இந்தியிலும் இதே கதாபாத்திரத்தை பாரதிதான் செய்தார். ஸ்ரீதரின் கற்பனையில் உதித்த லலிதா இப்போது வரை புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு பெண்ணாகவே இருக்கிறாள். படத்தில் அவர் அறிமுகமாகும்போதே துயரம் தோய்ந்த முகமும் அழுத கண்ணீருடன்தான் திரையில் தோன்றுவார். அம்மாவின் மரணத்துக்குப் பின் மாமா (சுந்தரராஜன்) வீட்டுக்கு வந்த பின் நிலைமை அடியோடு மாறும்.

பின், கண்ணன் – மீனா திருமணத்துக்குப் பின் ஒரே சோகச் சித்திரமாகி விடுவார். தனக்குள் ஒடுங்கிப் போய் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தனக்குத்தானே தண்டனை அளித்துக் கொள்ளத் தொடங்குவார். படத்தின் போஸ்டர், டைட்டில் அனைத்திலும் உருகும் மெழுகுவர்த்தி ஓர் குறியீடாக, லலிதா எப்படிப்பட்டவள் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்தப் படத்தைப் பார்க்கும்தோறும் மனதில் ஒரு அழுத்தமும் வலியும் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.

படித்த, அழகான, வசதி வாய்ப்புகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண், தான் மட்டுமே ஒருதலையாகக் காதலிக்கும் மாமன் மகனுக்காக (ஜெமினி கணேசன்) தன் வாழ்வையே சிதைத்துக் கொள்வதும், அதே நேரத்தில் தான் மிகவும் நேசித்த தன் தோழி மீனாவுக்காக (காஞ்சனா) பழி ஏற்பது என்பதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்புகிறது. பாரதி ஏற்று நடித்த லலிதா என்றென்றும் மறக்கவே முடியாதவள்; இப்பாத்திரம் தியாகத்தின் மறு வடிவம், நட்பின் இலக்கணம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இதை எல்லாம் கடந்து இது முற்றிலும் வித்தியாசமான பாத்திரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கத்தி மேல் நடப்பது போன்றதுதான் இது. கோபால் (முத்துராமன்) ஒரு அயோக்கியன் எனத் தெரிந்தே அவனுடன் நெருங்கிப் பழகுவது, எந்த இடத்திலும் விரசம் ஏற்படாமல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த விதமும் குறிப்பிடத்தக்கது. பாரதி ஏற்ற இந்த சவாலான பாத்திரம் எப்போதுமே பேசப்படும் ஒன்றாக இருக்கும். ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் வரை பாரதியும் நினைக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார். ஜெமினி கணேசன், சரோஜா தேவியுடன் இணைந்து நடித்த ‘சிநேகிதி’ திரைப்படத்தில் ‘தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா?’ என்ற பாடலை டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து சொந்தக் குரலில் பாடியிருக்கிறார் பாரதி.

1970களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெயரால் சென்னை மண்ணடியில் இயங்கி வந்த நற்பணி மன்ற அமைப்பு ஒன்றில் நடிகை பாரதி மன்றக் காப்பாளராக இருந்ததாக, அந்த மன்ற அமைப்பாளர்கள் வெளியிட்ட சிறப்பு மலரில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

கன்னடத் திரையுலகின் முடிசூடா ராணி

கன்னடப் படவுலகில் ஏற்று நடிக்காத வேடமே இல்லை எனும் அளவுக்குக் கல்லூரி மாணவி, கவர்ச்சிகரமான நாயகி, கிராமியப் பெண், வரலாற்றுப் பாத்திரங்கள், மாயாஜால மந்திர தந்திரப் படங்களின் நாயகி என அவர் எல்லா வேடங்களையும் ஏற்று நடித்தவர். அனைத்துக்கும் பொருத்தமான நடிகையாகவும் அவர் இருந்தார். கன்னடத் திரையுலகின் அப்போதைய நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தவர்.

முன்னணி நாயகராக இருந்த ராஜ்குமாருடன் மட்டுமே இணைந்து 24 படங்களில் நடித்துள்ளார். இந்த இருவர் ஜோடி வெள்ளித்திரையின் மிகவும் பிரபலமான, புகழ் மிக்க ஜோடியாகவும் விளங்கியது. 1966ல் முதல் திரைப்படம் வெளியானதிலிருந்து ஆண்டுக்குப் பத்து அல்லது பதினொரு படங்கள் என அசுர உழைப்பைச் செலுத்தி இருக்கிறார் பாரதி என்னும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகள் வரை இதே நிலை நீடித்திருக்கிறது என்றால் அவரின் உழைப்பின் மேன்மையையும் அருமையையும் பற்றி என்ன சொல்ல…!!.

1974-ல் ‘மனே பெலகித சொசே’ படத்தில் நடிகர் விஷ்ணு வர்த்தனுடன் இணைந்து நடித்தார். திரையுலக அனுபவம், நடிப்பு என்பதை எல்லாம் ஒப்பிட்டோம் என்றால் விஷ்ணுவர்த்தன், பாரதியை விட மிகவும் ஜூனியர். திரையுலகைச் சார்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் பாரதி மிகவும் உறுதியாகவே இருந்தார். ஆனால், அதுவும் அவர் நினைத்தது போல் நடக்கவில்லை. இந்தப் படத்தில் நடிக்கும்போதே இருவருக்கும் இடையே காதல் அரும்பியது.

பாரதியின் பெற்றோருக்கும் விஷ்ணு வர்த்தனைப் பிடித்துப் போக, இரு வீட்டார் சம்மதத்துடன் ஏற்பாட்டுத் திருமணமாகவே இவர்கள் திருமணம் நடந்தேறியது. தன்னுடைய திருமணத்துக்கு முன்னதாகவே தங்கைகள் இருவரின் திருமணத்தையும் பொறுப்புணர்வுடன் நடத்தி முடித்திருக்கிறார். பாரதி – விஷ்ணுவர்த்தன் தம்பதியருக்கு கீர்த்தி, சந்தனா என இரு மகள்கள் உள்ளனர்… மூத்த மகளுக்குத் திருமணமாகி விட்டது. மருமகன் அனிருத் கூட ஒரு நடிகரே. விஷ்ணுவர்த்தன் கடந்த 2009 ஆம் ஆண்டு காலமானார்.

பிற திறன்கள் மற்றும் பெற்ற விருதுகள்

நடிகையாக மட்டுமல்லாமல், இணைய இயக்குநர், பாடகி என கன்னடத் திரையுலகுக்கு பாரதி ஆற்றிய சேவைக்காக கர்நாடக திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர். நாட்டின் உயரிய விருதான பத்ம விருதினை 2017 ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார்.எந்த மொழியில் நடித்தபோதும் அந்த மொழியினை விருப்பத்துடன் சுயமாகக் கற்றுக்கொண்டு சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கிறார். கலைஞர்களுக்கு மொழி கிடையாது என்பதற்கு பாரதி மிகச் சிறந்த உதாரணம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளைப் பேசவும் படிக்கவும் கற்றிருக்கிறார் என்பதும் மிகவும் வியப்பாக இருக்கிறது. அனைத்தின் மீதும் கொண்ட தீராத ஆர்வமே இதற்கெல்லாம் காரணம்.

பிறந்தது முதல் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் வசித்து வந்ததாலும் தந்தையாரின் நண்பர்களில் பலர் தமிழர்களாக இருந்ததாலும் தமிழ் கற்றுத் தேர்வதில் எந்தச் சிக்கலும் அவருக்கு இல்லை. குறிப்பாக அப்பாவின் நண்பர் தாமோதரன் என்பவர் மூலமாகவே தமிழை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே தமிழ் நன்கு தெரியும். அதேபோல் அவரது தாய்மொழியான மராத்தி மொழித் திரைப்படங்களிலும், வங்க மொழியிலும் நடிக்க வேண்டும் என்பதும் அவரது நிறைவேறாத கனவாகவும் ஆசையாகவும் இருந்து வந்துள்ளது. அந்த வாய்ப்பு மட்டும் இதுவரை அவருக்குக் கிட்டவே இல்லை.

திரைப்படங்களில் நடிப்பது குறைந்த போதும் கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களிலும் பங்கேற்று நடித்திருக்கிறார். பாரதி நடித்த தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை மொத்தமே 24 மட்டும்தான். ஆனாலும் பாரதி ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காமல் நிறைந்திருக்கிறார்.

பாரதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

நாடோடி, சந்திரோதயம், எங்க பாப்பா, நம்ம வீட்டு லட்சுமி, தங்கத்தம்பி, தெய்வச்செயல், வாலிப விருந்து, நான் யார் தெரியுமா?, உயர்ந்த மனிதன், நிமிர்ந்து நில், பூவும் பொட்டும், நான்கு கில்லாடிகள், தங்கச் சுரங்கம், நில் கவனி காதலி, சிநேகிதி, அவளுக்கென்று ஓர் மனம், மீண்டும் வாழ்வேன், அன்னமிட்ட கை, உனக்கும் எனக்கும், பொன்வண்டு, உறுதிமொழி, கட்டப் பஞ்சாயத்து, சுந்தர பாண்டியன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
Next post வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!! (மருத்துவம்)