பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 39 Second

ஒரு பெண்ணிற்கு மகப்பேறு சமயத்தில் ஆரோக்கியமான பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே போல கருத்தடை வசதிகளும் அதற்கான பராமரிப்பும் மிக முக்கியம். பொதுவாகவே திருமணத்திற்குப் பின் கருத்தடை செய்யும் பொறுப்பு பெண்களின் தலையிலேயே விழுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் இரண்டாவது குழந்தையை பெறக் குறைந்தது இரண்டு முதல் மூன்று வருட கால அவகாசம் இருந்தால் நல்லது. அப்போது தான் தாய் முழுமையாக குணமாகி அடுத்த குழந்தையை சுமக்க தயாராக முடியும். அதே போல சிசேரியன் செய்துகொண்ட பெண்களுக்கும் முழுமையாக குணமாக போதுமான கால அவகாசம் தேவை. அப்போதுதான் தாய்-சேய் இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதனால், நிச்சயமாக தற்காலிக கருத்தடை முறைகளைப் பெண்கள் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

இன்றைய தலைமுறை பெண்களுக்கும் ஆண்களுக்கும் சுலபமான பல கருத்தடை வசதிகள் வந்துவிட்டன. இது குறித்து மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணராக 40 வருடங்கள் அனுபவத்துடன் பணியாற்றி வரும் மருத்துவர் நித்யா ராமமூர்த்தியிடம் பேசினோம்.“முதலில், ஒரு பெண்ணின் வயது மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து அவர்களுக்கான கருத்தடை வகையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இதை நிரந்தர கருத்தடை, தற்காலிக கருத்தடை என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பொதுவாக திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெறும் தாய்கள், நிரந்தர குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையை செய்து கொள்வார்கள். இந்த சிகிச்சை ஆண்களுக்கும் உண்டு.

ஆனால் இப்போது ஒரு குழந்தையை மட்டும் பெறும் பெற்றோர்கள், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையை விரும்புவதில்லை. அவர்கள் தற்காலிக கருத்தடை சாதனங்களைத்தான் விரும்புகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பொதுவாகப் பரிந்துரைப்பது கருத்தடை மாத்திரைகளும், காப்பர்-டி எனப்படும் இண்ட்ரா யுடரைன் கருவியும்தான். ஆனால் இப்போது பல கருத்தடை முறைகள் இந்தியாவில் பரவலாக பெண்கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர்.

1.இயற்கை முறைகள்

காலண்டர் முறை – முறையான மாதவிடாய் சுழற்சி உள்ள பெண்கள், பல ஆண்டுகளுக்கு முன் இந்த பழமையான காலண்டர் முறையை பயன்படுத்தி கருத்தரிப்பதைத் தள்ளிவைத்தனர். ஆங்கிலத்தில் ஓவுலேஷன் எனப்படும் மாதவிடாய் சுழற்சியின் காலத்தை தவிர்த்து, மீதி நாட்களில் (முதல் வாரமும், கடைசி வாரமும்) உடலுறவு வைத்துக்கொள்வார்கள். இன்றும் சில பெண்கள் செயலிகள் மூலம் தங்கள் ஓவுலேஷன் காலத்தை கணக்கிட்டு இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.

2.கருத்தடை உறைகள்

இவற்றை ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போதும் அணிய வேண்டும். ஆண்களுக்கான ஆணுறைகளை வெளிப்புறமாகப் பயன்படுத்திக் கருவுறுவதை 97 சதவீதம் வரை தடுக்க முடியும். பெண் உறைகளும் இப்போது அதிகமாக மருந்தகங்களில் கிடைக்கின்றன. சில சமயம் ஆண்கள் கருத்தடை உறைகள் அணிய மறுக்கும் போது, பெண்கள் கருவுறாமல் இருக்கவும், பால்வினை நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பெண் உறைகள் பயன்படுத்துகின்றனர். இதை பெண் உறுப்பில் பொருத்தி பயன்படுத்த வேண்டும். சரியாக பயன்படுத்தும் போது 95% பாதுகாப்பைத் தருகிறது. இவை இரண்டுமே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

3.செர்விகல் கேப் (cervical cap)

பெண்ணின் கர்ப்பப்பை-வாயில் இந்த செர்விகல் கேப்பை பொருத்தினால், அது விந்தணுக்களை கருப்பைக்குள் செல்லவிடாமல் தடுத்து அழிக்கும். செர்விகல் கேப்பை மறுபயன்பாடு செய்ய முடியும்.

4.டையஃப்ரம் (Diaphragm)

இதை, ஸ்பெர்மிசைட் எனப்படும் விந்தணுக்களை அழிக்கும் க்ரீம் அல்லது ஜெல்லை, டையஃப்ரம் மீது தடவி, கர்ப்பப்பை-வாயில் பொருத்த வேண்டும். இது சிலிகான் அல்லது லேடக்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட கருத்தடை சாதனம்.

5.கருத்தடை ஸ்பான்ச் (Contraceptive Sponge)

வட்டமான மென்மையான இந்த கருத்தடை ஸ்பான்ஞ்சை பெண்ணுறுப்புக்குள் பொருத்தி, கர்ப்பப்பை வாயின் மீது வைக்க வேண்டும். இந்த ஸ்பான்ச் விந்தணுக்களை அழித்துவிடும். இதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

6.ஸ்பெர்மிசைட் டேப்ளட் (Spermicide Tablet)

உடலுறவுக்கு 2 மணி நேரத்திற்கு முன் இந்த டேப்ளட்டை பெண்ணுறுப்பில் பொருத்தவேண்டும். இது விந்தணுக்களை அழித்து கருத்தடை செய்கிறது. இது பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பைத் தராது. முழு கருத்தடை பாதுகாப்பையும் தராது.

குறிப்பிட்ட கால அவகாசத்தில் கடைப்பிடிக்கப்படும் முறைகள்

7. கருத்தடை ஊசி

கருத்தடை ஊசி, MedroxyProgesterone Acetate (MPA) எனப்படும் புரோஜெஸ்டின் (progestin) ஹார்மோன் ஊசியை 90 நாட்களுக்கு ஒரு முறை செலுத்திக்கொள்ள வேண்டும். இது ஓவுலேஷன் (Ovulation) காலத்தை, அதாவது சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாகி ஃபலோபியன் குழாயில் விடுவிக்கப்படுவதைத் தடுத்துவிடும். கருமுட்டை வெளியாகவில்லை எனில், கர்ப்பம் தரிக்க வாய்ப்பே இல்லை.

8. காம்பினேஷன் பில்(combination pill)

இஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டின் ஹார்மோன்களை கொண்ட இந்த மாத்திரை, சினைப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளியேறுவதைத் தடுத்து, கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை 99% குறைக்கிறது. இதை மருத்துவர்களின் அறிவுரைப்படி தொடர்ந்து 21 நாட்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாள் தவறவிட்டாலும் முழுமையான கருத்தடை கிடைக்காமல் கருத்தரிக்கும் வாய்ப்பு உருவாகும். அடுத்த ஏழு நாட்கள் மாதவிடாய் போன்ற ரத்தப்போக்கு ஏற்படும். பின் மீண்டும் 21 நாட்கள் எடுக்கலாம்.

9. மினி பில் (Mini Pill)

குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கு இந்த மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். புரோஜெஸ்டின் ஹார்மோனை மட்டுமே கொண்டுள்ள இந்த மாத்திரை, காம்பினேஷன் மாத்திரையால் சில பக்கவிளைவுகளை சந்திக்கும் பெண்களின் சிறந்த தேர்வாகும். இது ஓவுலேஷனை கட்டுப்படுத்தும். இந்த மாத்திரையை மருத்துவர்களின் பரிந்துரைப்படி மாதவிடாய்க்கு ஐந்து நாட்களுக்கு பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும்.

10. சிகுவென்ஷியல் பில்(Sequential Pill)

மூன்று வாரங்கள் சாப்பிடும் இந்த மாத்திரையில், முதல் இரண்டு வாரங்கள் வெறும் இஸ்ட்ரோஜெனும், கடைசி ஒரு வாரம் இஸ்ட்ரோஜெனுடன் புரோஜெஸ்டின் ஹார்மோனும் இருக்கும்.

11. பேட்ச் (Patch)

இந்த பேட்சை கைகளில் ஒட்டிக் கொண்டால் அதிலிருந்து இஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் ஹார்மோன்கள் உடலுக்குள் செலுத்தப்படும். இந்த ஹார்மோன்கள் ஓவுலேஷனை தடுக்கும். ஒவ்வொரு வாரமாக, மூன்று வாரங்களுக்கு இந்த பேச்சை ஒட்டிக்கொள்ள வேண்டும். நான்காவது வாரம் பேட்ச் ஒட்டத் தேவையில்லை. ஆனால், இது இந்தியத் தட்பவெப்ப நிலைக்கு பொருந்தாமல், வியர்வையினால் அடிக்கடி கீழே விழுந்துவிடுவதால் பெரிய வரவேற்பு இல்லை.

இண்ட்ரா யுடிரைன் சாதனங்கள்

12. காப்பர்-டி

ஆங்கில எழுத்தான T போன்ற வடிவில் இருப்பதால் இதை காப்பர்-டி என்கிறார்கள். இன்ட்ரா யுடிரைன் சாதனமான இந்த காப்பர் டி-யை, மருத்துவர் கருப்பையில் பொருத்துவார். காப்பரால் செய்யப்பட்டிருக்கும் இந்த கருத்தடை சாதனத்தை விந்தணுக்கள் சந்திக்கும்போது, அவை அழிக்கப்படுகின்றன. இதை மூன்று ஆண்டுகள், ஐந்தாண்டுகள் மற்றும் பத்தாண்டுகள் வரை கூட உபயோகிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் வெளியே எடுக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

13. ஹார்மோனல் இண்ட்ரா யுடிரைன் சாதனங்கள்

காப்பர் – டி வடிவிலேயே இருக்கும் இந்த சாதனத்தில், காப்பருக்கு பதிலாக levonorgestrel (LNg) எனப்படும் புரோஜெஸ்டின் ஹார்மோன் இருக்கும். மருத்துவர்கள் இந்த ஹார்மோனல் இண்ட்ரா யுடிரைன் சாதனத்தை கருப்பைக்குள் பொருத்துவார்கள். இந்த சாதனத்தை 5 ஆண்டுகள் பயன்படுத்த முடியும். இது கருத்தடையை தவிர, அதிகமான ரத்தப்போக்கை ஏற்படுத்தும் டியுபி எனப்படும் dysfunctional uterine bleeding, எண்டோமெட்ரியோசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும்.

14. இம்ப்ளான்ட்

உடலில் சருமத்துக்கு அடியில் மருத்துவர் ஒரு சிறிய குச்சி போன்ற இம்ப்ளான்டை பொருத்துவார். இந்த இம்ப்ளான்ட் புரோஜெஸ்டின் ஹார்மோனை வெளியிட்டு கருத்தடை செய்யும். இந்த சாதனத்தை மூன்றாண்டுகள் வரை உடலுக்குள் வைக்கலாம். இதை பொதுவாக கைகளில் பொருத்துவதால் பெண்கள் கூச்சமின்றி இதைத் தேர்வு செய்கிறார்கள்.

15. நிரந்தர முறைகள்

பொதுவாக திருமணமாகி குழந்தைப் பெற்ற தம்பதிகள், இனி குழந்தை வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது, நிரந்தர அறுவை சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆண்களுக்கு வாஸக்டமி செய்யப்படும். அதாவது விந்தணுக்கள் வெளியேறாமல் இருக்க நாளத்தைத் துண்டித்து அடைப்பு ஏற்படுத்தப்படும். இது மிகவும் சுலபமான சிகிச்சைதான். விரைவில் குணமடையலாம். இது நிரந்தர சிகிச்சை என்றாலும், சில சமயம் இதை ’ரிவர்ஸ்’ செய்து மீண்டும் குழந்தைப் பெறலாம்.

பெண்களுக்கு சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியேறி பயணிக்கும் குழாயை துண்டித்து அல்லது கட்டப்படுவதன் மூலம் நிரந்தர கருத்தடை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையையும் இப்போது ரிவர்ஸ் செய்து குழந்தை பெறலாம். பொதுவாக பெண்களே குழந்தை பிறந்த கையோடு, கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்துகொள்வார்கள். இப்படி பல கருத்தடை சாதனங்கள் பல வருடங்களாக இருந்தாலும், நிரந்தர அறுவை சிகிச்சை, காப்பர்-டி மற்றும் ஆணுறைகளே பயன்படுத்துவதற்கு எளிதாகவும், கருத்தடைக்கான வெற்றி விகிதத்தில் அதிகமாகவும் இருக்கின்றன. மாத்திரைகளைத் தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டால் தான் கருத்தடைக்கு சாத்தியமாகும்.

பல பெண்களால் இதை பின்பற்ற முடிவதில்லை. மற்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட கருத்தடை முறைகள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. பெண் உறை, செர்விகல் கேப் போன்ற கருப்பையில் பொருத்த வேண்டிய சாதனங்களை முறையாகப் பொருத்தி பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இதுவும் பயன்தராது. ஸ்பெர்மிசைட் டேப்ளட் பாலின நோய்களிடமிருந்து பாதுகாப்பைத் தராது, எனவே அதை வேறொரு கருத்தடை சாதனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

இப்படி பல காரணிகளைக் கருத்தில் கொண்டே பெண்கள் தங்களுக்கான கருத்தடை முறையை மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து தேர்வு செய்ய வேண்டும். கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும், குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்காது போன்ற மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம். கருக்கலைப்பை விடக் கருத்தடை சிறந்த தேர்வாக இருக்கும். இது பாலின நோய்களிடமிருந்தும் பாதுகாப்பை அளிக்கும்” என விரிவாக விளக்குகிறார் மருத்துவர் நித்யா ராமமூர்த்தி.

மகப்பேறு பராமரிப்பு குறித்த விவரங்கள் இங்கே பரவலாக காணப்பட்டாலும், கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதுவும் அனைவருக்குமான அடிப்படை சுகாதார உரிமையாகும். குறிப்பாகப் பெண்கள் மீதுதான் கருத்தடை பொறுப்புகள் இங்கே வைக்கப்படுகின்றன. எனவே முழுமையான தகவல்களை சேகரித்து, தங்கள் ஆரோக்கியத்திற்கு தகுந்த சிறந்த முடிவை பெண்கள் எடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழி சாய்ஸ்: காதல் ஸ்பெஷல்!! (மகளிர் பக்கம்)
Next post மழைக் கால தொல்லைகளுக்கு வீட்டு வைத்தியம்!! (மருத்துவம்)