ஃபேஷன் A – Z !! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 4 Second

ஆள் பாதி ஆடை பாதி என்று சொன்னாலும் இதில் ஒரு பாதியாக இருப்பது நாம் அணியும் காலணிகள். மார்டனாக உடை உடுத்தினால் மட்டும் போதாது, அதற்கு ஏற்ப காலணிகளும் அணிய வேண்டும். அப்போது தான் நாம் அணியும் உடைக்கு ஒரு முழுமையான தோற்றம் கிடைக்கும். காலணிகள் பொதுவாக கால்களுக்கு அணியக்கூடிய ஆடை என்று சொல்லலாம். இவை கால் பாதங்களை கல், முள் போன்ற கரடு முரடான பாதைகள் மற்றும் வெப்பநிலையில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் குறிப்பாக ஷூக்கள் போன்ற அமைப்பில் இருக்கும் காலணிகள் எளிதாக நடக்கவும் மற்றும் கால்களில் காயம் படாமல் பாதுகாக்க உதவும்.

காலணிகளை ஃபேஷன் மற்றும் அலங்காரத்துக்காகவும் பயன்படுத்தலாம். காலணிகளைக் கொண்டு தனிப்பட்ட ஒருவரின் அந்தஸ்தை நிர்ணயிக்க முடியும். கால்களில் அணியப்படும் சாக்ஸ், காலணிகள் அணியும் போது வசதியாக இருக்க உதவுகிறது. பல வித ஃபேஷன்களில் பெண்கள் அணியக்கூடிய காலணிகளின் வரலாறு மற்றும் அது ஃபேஷன் உலகில் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் குளிரான காலத்தில் அவர்களின் பாதங்களை பாதுகாக்க காலணிகள் அணிந்ததாக கண்டறியப்பட்டது. மேலும் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் கால் பாதங்களின் வடிவம் மற்றும் வலிமை மூலம் அவர்களின் உள்ளங்கால்கள் மிகவும் உறுதியாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் 9000 வருடங்களுக்கு முன் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உண்மையான வடிவம் கொண்ட ஒரு ஜோடி காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எகிப்து மற்றும் கிரேக்க நாட்டில் வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த நாட்டில் நிலவி வந்த சீதோஷ்ண நிலை காரணமாக காலணிகள் அணியாமல் ஷூக்களை மட்டுமே அணிந்து வந்தனர். ஷூக்களை அணிகலனாகவும் அதிகாரத்தின் சின்னமாக அந்தக் காலத்தில் பார்த்து வந்தனர். ரோமானியர்களில் காலணிகளை சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே அணிந்து வந்தனர். அவர்களுக்கு கீழ் அடிமைகளாக இருந்த மக்கள் அனைவரும் வெற்று காலுடன் இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.

இடைக்காலத்தில் பெரிய ஹீல்கள் கொண்ட ஷூக்களை அதிகாரத்திற்கு இணையாக கருதினர். மேலும் அந்த காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்திலும் காலில் செருப்பு இல்லாமல் இருப்பது ஏழ்மையினை குறிப்பதை போல் உணர்த்தி வந்தனர். வக்கீல் துறையில் இருப்பவர்கள், அடிமைகளின் உரிமையாளர்கள் அல்லது சாலையில் பயணிப்பவர்கள் அனைவரும் காலில் ஷூக்களை அணிந்து இருப்பது போல் பழங்கால ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் உயர் குதிக்கால் கொண்டு ஹீல்களை இடைக்காலத்தில் அணிந்து வந்தனர். அவர்களை பின்தொடர்ந்து வந்தவர்கள் குறிப்பாக ஏழை எளிய மக்கள் வெற்று காலுடன் தான் வாழ்ந்து வந்தனர். துருக்கி நாட்டில், 15ம் நூற்றாண்டில் சோபின்ஸ் என்ற எட்டு இஞ்ச் உயரம் கொண்ட காலணிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காலணிகள் ஐரோப்பிய மாகாணம் முழுதும் உயர்தர மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

1580களில் அதிகாரம் மற்றும் வசதி கொண்ட ஆண்களும் இந்த காலணிகளை அணிய ஆரம்பித்தனர். தற்போது உள்ள மார்டர்ன் உலகில் உயர் குதிக்கால் கொண்ட காலணிகளை பெண்கள் அணிவதை ஃபேஷனாக கருதியது மட்டுமில்லாமல் உலகம் முழுதும் மிகவும் பிரபலமடைய ஆரம்பித்தது.

அணிகலண்கள் நம்முடைய உடைகளுக்கு மிகவும் முக்கியமானது. அது ஒருவரை பார்க்க ஸ்டைலாகவும் அதே சமயம் அழகாகவும் காட்சியப்படுத்தும். மேலும் ஒருவரின் தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் விருப்பத்தினை எடுத்துக்காட்டும். மேலும் நாம் உடைக்கு ஏற்ப அணிகலன்கள் அணியும் போது அந்த குறிப்பிட்ட உடைக்கு ஒரு ஸ்டைலான லுக் கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களின் தனிப்பட்ட ஸ்டைலினை பிரதிபலிக்கும். அதில் காலணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெரும்பாலானவர்களுக்கு எந்த உடைக்கு எந்த காலணிகள் அணிய வேண்டும் என்று தெரிவதில்லை. குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் ஷூவுக்குள் தானே அணிகிறோம் என்று அதற்கு மேட்சிங் ஆகாத சாக்சினை அணிவார்கள். ஆனால் இவ்வாறு சரியான உடை மற்றும் அதற்கேற்ப அணிகலன்களை தேர்வு செய்யாமல் அணியும் போது, அது உடன் வேலை பார்ப்பவர்களை முகம் சுளிக்க ஆளாகக்கூடும்.

சொல்லப்போனால், பார்க்க மிகவும் நாகரீகமாக இருப்பவர்கள் கூட அலுவலகத்திற்கு அணியக்கூடிய உடைக்கு சாதாரண செருப்புகளை சரியாக மேட்ச் செய்ய முடியாமல் தவிப்பார்கள். இது அவர்களின் பெர்ஃபெக்டான தோற்றத்திற்கு ஒரு வெள்ைள காகிதத்தில் ஏற்பட்ட கருப்பு புள்ளிப் போன்ற அமைப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உங்கள் காலணிகள் உங்களின் மொத்த அடையாளத்தையும் மாற்றக்கூடிய திறன் கொண்டது என்று பலருக்கு தெரிவதில்லை.

இந்த நிலை மாற நீங்கள் உங்களின் ஆடை, அணிகலன்கள் மட்டுமில்லாமல் உங்களுக்கு ஏற்ற ஃபேஷன் குறித்து தனிப்பட்ட கவனம் செலுத்துவது அவசியம். சிலரிடம் அதிகமாக காலணிகள் இருக்கும். ஆனால் அதை எந்த உடைக்கு எப்படி அணிய வேண்டும் என்று ெதரியாது. ஒரு சிலர் இரண்டு காலணிகளை மட்டுமே கொண்டிருப்பார்கள். அதையே தான் அனைத்து உடைக்கும் அணிவார்கள். நீங்கள் இதை பெரிதாக கவனிக்கவில்லை என்றாலும் மற்றவர்கள் உங்களை கவனிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முதன் முதலில் ஃபேஷன் உலகில் கால் பதிக்க நினைப்பவருக்கு சில காலணிகள் குறிப்பிட்ட சில உடைகளுக்கு தான் அணிய வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சியின் போது அணியப்படும் ஷூக்கள் சாதாரணமாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, டிரெக்கிங் அல்லது நண்பர்களுடன் வெளியே செல்லும் போது அணியலாம். அதனை அலுவலகம் செல்லும் போது அணியும் ஃபார்மல் உடை மற்றும் சூட் கேட்களுக்கு அணியக்கூடாது.

அதே சமயம் இந்த ஷூக்கள் அலுவலக நண்பர்களுடன் பார்ட்டி மற்றும் கெட் டு கெதருக்கு செல்லும் போது அணியலாமே தவிர எக்காரணம் கொண்டும் அலுவலகங்களுக்கு குறிப்பாக ஃபார்மல் உடைகளுக்கு இந்த ஷூக்கள் அணியக்கூடாது. மேலும் ஃபார்மல் உடைக்கு அணியும் நன்கு பாலிஷ் செய்யப்பட்ட ஷூக்களை சாதாரண உடைகளுக்கு அணிந்தால் பார்க்கவே விகாரமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகழ்பெற்ற நடிகை மர்லின் மன்றோ ‘ஹீல்ஸ் காலணிகள் பெண்களின் உற்ற தோழி’ என்று குறிப்பிட்டுள்ளார். உடைக்கு ஏற்ப சரியான காலணிகள் அணியும் போது, ஒவ்வொரு பெண்ணின் தன்னம்பிக்கையும் வளர செய்வது மட்டுமில்லாமல், அவரின் அமைப்பையும் முற்றிலும் மாற்றி அமைக்கும். நேர்த்தியான உடை அணிந்து வலம் வரும் போது, பலரின் தலைகள் தானாகவே நாம் செல்லும் திசையை நோக்கி திரும்பும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே சமயம் எல்லாருடைய மனதிலும் எழும் ஒரே கேள்வி… எந்த காலணிகள் நமக்கு பொருந்தும் என்பது தான்.

பெண்கள் ஹீல்ஸ் அமைப்பு கொண்ட காலணிகளை அணியும் போது, அதில் உள்ள பல்வேறு வகையான ஸ்டிலெட்டோஸ், எலகேன்ட் பம்ப்ஸ் அல்லது பூட்ஸ் குறித்து ெதரிந்து கொள்ள வேண்டும். காரணம் இவை தான் ஃபேஷன் உலகில் பெண்கள் மிகவும் விரும்பும் காலணிகள். இவை தவிர மற்ற காலணிகளை தேர்வு செய்யும் போது… காலணிகளில் உள்ள மற்ற வகை செருப்புகளை குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம்.

பெரும்பாலானவர்கள் இரண்டு அல்லது மூன்று வகை ஹீல்ஸ் செருப்புகளைப் பற்றி தான் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் இதில் பிளாக், கியூபன்,கோமா, கோன், டெகரேடிவ், பிளேர், பிரஞ்ச், ஹை, கிட்டன், மீடியம், ஸ்லிம், ஸ்பூல், ஸ்க்வேர், திக் க்யூபன்ஸ் என பல்வேறு டிசைன்கள் உள்ளன.

பொதுவாக உங்களின் ஹீலின் அளவு குறைவாக இருந்தால், அது கால் பாதங்களுக்கு மிகவும் வசதியாகவும் எந்த வித வலி ஏற்படாமலும் இருக்கும். மேலும் அதிக ஹீல் இல்லாத செருப்புகளை அணியும் போது, கால் பாதங்கள் முழுதும் சமமான அழுத்தம் ஏற்படும் அதனால் கால் மூட்டு முதல் தசைகள் அனைத்தும் சமமான நிலையில் இருக்கும். ஒருவர் அணியும் காலணிகளின் சரியான உயரம் ஒன்று முதல் இரண்டு இஞ்ச் வரை தான் இருக்க வேண்டும் என்பது போடியார்டிஸ்டின் (கால் பாதங்களில் ஏற்படும் பிரச்னைகளை சீர் செய்யும் நிபுணர்) கூற்று. ஒவ்வொரு முறை காலணிகளை வாங்கும் போது அதை அணிவது மட்டுமில்லாமல் நம்முடைய பாதங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.

அவ்வாறு வாங்கும் போது, அதை நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் அணிந்திருப்பீர்கள், எவ்வளவு தூரம் நடப்பீர்கள், எந்த பரப்பளவில் நடப்பீர்கள் அல்லது நின்று கொண்டு இருக்கும் போது அணிவீர்களா என பல விஷயங்களை கருத்தில் கொள்வது அவசியம். அதிக ஹீல்ஸ் கொண்ட காலணிகள் இரவு நேர டின்னருக்கு செல்லும் போது அணிந்தால் மிகவும் வசதியாக இருக்கும். அதே சமயம் இதனை நீங்கள் சாதாரணமாக வேலையில் ஈடுபடும் போதோ அல்லது மற்ற நேரங்களில் அணிந்தால், அது அசௌகரியத்தை தான் ஏற்படுத்தும். நீங்கள் உயர் ஹீல்ஸ் அணிய விரும்பவில்லை என்றால் குறைந்த அளவு ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணியலாம்.

நீங்கள் எந்த வித ஹீல்ஸ் காலணிகளை அணிந்தாலும், அவை நீங்கள் செல்லும் இடம் மற்றும் உங்களின் உடைக்கு ஏற்ப பொருத்தமாக இருக்க வேண்டும். மனதுக்கு பிடித்தவருடன் இரவு நேர உணவு விருந்துக்கு செல்லும் போது ஸ்டிலெட்டோஸ் காலணிகள் சிறப்பானது. உலகம் முழுக்க பயணிக்க விரும்புபவர்களுக்கு க்யூபன் பூட்ஸ், கல்யாணம் போன்ற நிகழ்ச்சிக்கு ஒரு இஞ்ச் அளவு கொண்ட சாதாரண காலணிகள், அலுவலக சூழலுக்கு ஸ்க்வெயர் ஹீல்ஸ் அணியலாம்.

உயர் ஹீல்ஸ் வகை காலணிகள் மிகவும் வசதியானது, ஆனால் அதை அணிந்து பழக்கப்பட்டு இருக்கவேண்டும். நீங்கள் ஹீல்ஸ் இல்லாமல் சாதாரண காலணிகள் அணிந்து பழக்கப்பட்டவராக இருந்து ஹீல்சுக்கு மாறும் போது அதனால் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள தைரியம் வேண்டும். ஹீல்ஸ் அணியும் போது உங்களின் நடை தானாக மாடல் அழகிகள் நடப்பது போல் மாறும். அது மட்டுமில்லாமல் நீங்கள் நிற்கும் தோரணை மற்றும் உங்களின் கால் பாதங்களின் அமைப்பிலும் மாற்றம் ஏற்படும். இவற்றை தவிர்க்க நீங்கள் பாயின்டெட் ஹீல்ஸ் அணிவதற்கு பதில் பேடெட் ஹீல்ஸ் அணியலாம். இதனால் உங்களின் கால் பாதங்கள் எந்த வித மாற்றம் ஏற்படாமல் சமமாக இருக்க உதவும்.

எதுவாக இருந்தாலும் காலணிகள் தான் ஒருவரின் முழு தோற்றத்தை எடுத்துக்காட்டும். நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு காலணியும் நீங்கள் யார் என்று சுட்டிக்காட்டும். அதற்காக ஒவ்வொரு உடை மற்றும் உங்களின் மனநிலைக்கு ஏற்ப நீங்க வீடு முழுக்க டிசைன் டிசைனாக செருப்புக்களை வாங்கி அடுக்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு வசதியான மற்றும் உங்களின் கால்களுக்கு எடுப்பான காலணிகளை தேர்வு செய்தாலே அந்த இடத்தின் நாயகியாக திகழ்வீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவிட் பாதிப்பை கட்டுப்படுத்தும் பீட்டா க்ளுக்கான்!! (மருத்துவம்)
Next post நண்பரின் திடீர் காதல்… நல்லதா? (மகளிர் பக்கம்)