சிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 3 Second

மாத்தி யோசி

சிறுநீரக கல் பிரச்னை தற்போது ஆண், பெண் இருபாலினரையும் பாதிக்கக் கூடிய பிரச்னையாக மாறியிருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வேலை நேரங்கள் என பல்வேறு காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன. முக்கியமாக சரியான முறையில் தண்ணீர் குடிக்காததாலும், சரியான நேரத்துக்கு சிறுநீர் கழிக்காமல் இருப்பதாலும் சிறுநீரகக்கல் தோன்றுகிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அதுபோல் சிறுநீரகக்கல் வந்துவிட்டால் அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே மாற்று மருத்துவத்தில் கரைத்து வெளியேற்றிவிட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அப்படி சிறுநீரகக் கல் பிரச்னைக்கு என்ன வகையில் தீர்வு இருக்கிறது என்று சித்த மருத்துவர் அப்துல் காதரிடம் கேட்டோம்…சிறுநீரகக் கல் எதனால் உருவாகிறது?

‘‘சிறுநீரகக் கல் தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சில வகையான மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும், பாதுகாப்பில்லாத தண்ணீர் குடிப்பதால் கால்சியம், மெக்னீசியம், மினரல்ஸ் அதிகமாக சிறுநீர்ப்பை மற்றும் குழாய்களில் படிவதாலும் சிறுநீரகக் கற்கள் தோன்றுகிறது. மேலும் சிறு குழந்தைகளுக்கும் கூட இந்த பிரச்னை வருகிறது.

மேலும் உடலில் ஏற்படும் நீர் வறட்சி, அதிக உப்பு, மசாலா மிகுந்த உணவுகளை திரும்பத் திரும்ப எடுத்துக்கொள்வது, சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று உண்டாவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம் க்ளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீரை அடக்குவது, பேராதைராய்டு ஹார்மோன்(Parathyroid) மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல் பருமன் போன்ற காரணங்களாலும் சிறுநீரகக் கல்
உருவாகிறது.’’

அறிகுறிகள் என்னென்ன?

‘‘சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கும். சிறுநீரில் ரத்தம் கலந்து வரும், குமட்டல் இருக்கும், வாந்தி உணர்வு ஏற்படும். முதுகு மற்றும் விலா எலும்புகளுக்குள் வலி இருக்கும். உட்கார்ந்து எழும்போதும், நிமிரும்போதும், குனியும்போதும் வலி அதிகமாகக் காணப்படும். சில நேரங்களில் நடப்பதற்கே சிரமப்படுவார்கள்.’’

சிகிச்சைகளை எதன் அடிப்படையில் மேற்கொள்வீர்கள்?

‘‘சித்த மருத்துவத்தில் நோயாளி சொல்கிற அறிகுறிகளை வைத்து சிகிச்சை அளிக்கிறோம். தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்து அதன்படி சிகிச்சை அளிக்கிறோம்.

சித்த மருத்துவத்தில் சிறுநீரகக் கல் பிரச்னைக்கு தரப்படும் மருந்துகள் சிறுகண்பிளை செடி, குக்கில் பற்பம், சிலாத்து பற்பம், முட்டையோட்டு பற்பம், சிறுமுள்ளி செடி, வாழைத்தண்டு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

சிறுகண்பிளை செடி, குக்கில் பற்பம், சிலாத்து பற்பம், முட்டையோட்டு பற்பம் இந்த மூன்றையும் தலா 20 மில்லி தினமும் சிறுநீர் கல் நோயாளிக்கு பவுடராக தருகிறோம். இதில் சிறுகண் பிளை செடி பவுடரை கஷாயமாக கொதிக்க வைத்து குக்கில் பற்பம், சிலாத்து பற்பம் இரண்டையும் அதில் போட்டு தினமும் 20 மிலி காலை இரவு உணவுக்கு முன் அருந்த வைக்கிறோம். மேலும் இந்த மருந்தினை எடுக்கும்போது வாழைத்தண்டு சாறும் அருந்த வலியுறுத்துகிறோம்.’’

இந்த மருந்துகளின் சிறப்பு என்ன?

‘‘இந்த மருந்துகளின் தன்மை ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. Lithocripsy action மற்றும் Stone destroyer or stone breaker தன்மை உள்ளது. அதாவது சிறுநீரகத்தில் அமைந்திருக்கும் கல்லை உடைக்கும் தன்மை உடையது.

சிறுநீரகக் கல் எந்த அளவில் இருந்தாலும் இந்த மூலக்கூறு உள்ள மருந்துகள் அதை உடைத்து வெளியே கொண்டு வந்துவிடுகிறது. மேலும் நீர்முள்ளி கஷாயம் பவுடரும் நோயாளிக்கு அளிக்கப்படுகிறது. இது சிறுநீரகக்கல்லின் பாதிப்பைப் பொறுத்து இந்த மருந்து நோயாளிக்கு வழங்கப்படுகிறது. நீர் முள்ளி கஷாயத்துக்கும் சிறுநீர் கற்களை உடைக்கும் திறன் உண்டு.

சித்த மருத்துவ சிகிச்சையின்போது எடுக்கும் இந்த சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரகக் கற்கள் சிறுசிறு துண்டுகளாக அல்லது முழுவதும் பவுடராகவோ வெளியே வந்துவிடும். சித்த மருத்துவ சிகிச்சை சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சை சித்த மருத்துவத்தில் 5 மி.மீ முதல் 5-8 மி.மீ வரை இருப்பவை ஆரம்பநிலை சிகிச்சை அளித்தும், அதாவது 15 முதல் 20 நாட்களுக்குள் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1 செ.மீக்கு மேல் இருப்பவை பெரிய கற்கள். இது அதிகபட்சம் இரண்டு மாதங்கள் வரை சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தப்படுகிறது.’’

உணவுமுறைக் கட்டுப்பாடுகள்…

‘‘சிகிச்சையின்போது கற்களை உண்டு பண்ணக்கூடிய உணவு பொருட்களை சிகிச்சை முடியும் வரை எடுத்துக்கொள்ளாமல் இருக்க வலியுறுத்துகிறோம். உதாரணத்துக்கு பசலைக்கீரை, முட்டைக்கோஸ், அவரை, தக்காளி, கோதுமை, முந்திரிப்பருப்பு, மீன், இறைச்சி, சாக்லெட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், சித்த மருத்துவத்தில் சிகிச்சை மேற்கொள்ளும்போது அந்த நோயாளியை வெள்ளரி, மாதுளை பழம், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற நீர் சத்துமிக்க உணவு பொருட்களை எடுத்துகொள்ள சொல்கிறோம். சிறுநீரகக்கல் எத்தனை தீவிரமான நிலையில் இருந்தாலும் அதை உடைக்கக் கூடிய ஆற்றல் நீர்ச்சத்துள்ள உணவு பொருட்களுக்கு உண்டு.’’

சிறுநீரகக் கல் வந்தவர்களுக்கு நீங்கள் சொல்கிற அறிவுரைகள்?!

‘‘வாரத்துக்கு இரண்டு முறை வாழைத்தண்டு உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வாரத்துக்கு மூன்று முறை வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். இது கற்களை மீண்டும் உருவாகாமல் தடுக்கிறது. முக்கியமாக சிறுநீரை அடக்கக் கூடாது. இதனை எல்லோருக்குமே சிகிச்சையின்போது வலியுறுத்துகிறோம். மற்றவர்களுக்கும் இந்த அறிவுரை பொருந்தும்.

சித்த மருத்துவத்தில் சிகிச்சை மேற்கொள்ளும்போது கல்லை உடைக்கக் கூடிய மூலக்கூறு உள்ள மருந்து நோயாளிக்கு தரப்படுகிறது. 5 மி.மீ. கல் முதல் 1 செ.மீ கல் வரை உடைந்து வெளியே வருவதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தை மேற்கொள்ளும் நோயாளியை அறுவை சிசிக்சைக்கு செல்லாமலே முழுவதுமாக குணப்படுத்திட முடியும்.

சித்த மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு திரும்ப கல் வராமல் இருக்க அவர்களை ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிக்க சொல்லி ஆலோசனை வழங்குகிறோம். இதை நோயாளி முழுமையாகக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் சிறுநீரகக்கல் பிரச்னை மீண்டும் வராது. மேலும், தனக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடக் கூடாது என விரும்புபவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை வாழைத்தண்டு, மாதுளை பழம், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை!! (மருத்துவம்)
Next post சிறுநீரகம் காப்போம்! (மருத்துவம்)