தேசத்தின் இரு கண்களாக ஊழலும் இனவாதமும் !! (கட்டுரை)

Read Time:12 Minute, 19 Second

இலங்கையர்களுக்கு ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற சொற்றொடர் புதிதல்ல. குறிப்பாகத் தேர்தல் காலங்களில் -உச்சரிக்கப்படும் சொற்றொடர் இது. ஆனால், ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற அந்த எதிர்காலத்தின் சாயலைக்கூட, சமானிய இலங்கையர் அனுபவிக்கவில்லை என்பது வருத்தம் தோய்ந்த உண்மை.

கொவிட்19 பெருந்தொற்று தொடக்கிவைத்த நெருக்கடியை, அளவில்லாத ஊழலும் வளக் கொள்ளையும் அதிகாரத் துஷ்பிரயோகமும், இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தியுள்ளன.

ஊழலும் இனவாதமும் வெளிப்படையாகவே செயற்படுகின்ற ஒரு சூழலை, அன்றாட இலங்கையர்களால் காண முடிகிறது. ஜனாதிபதி விதந்துரைத்த ‘ஒழுக்கமான சமூகத்தின்’ இலட்சணத்தை, அன்றாடம் காணக் கிடைக்கிறது. பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு உட்படுகின்ற இரண்டு களங்களில், நேரடி அனுபவங்களின் ஊடு, இது குறித்து எழுத விரும்புகிறேன்.

இரண்டு மாதங்களுக்கு முன் கொழும்பில் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவுசெய்யும் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்.

தரப்பட்ட விண்ணப்பபடிவத்தை சிங்களத்தில் நிரப்பும் படி கோரினார்கள். “சிங்களத்தில் நிரப்ப முடியாது” என்றேன்.

“தமிழ் எங்களுக்குத் தெரியாது; தமிழில் நிரப்பினால், உங்களுக்கு மரணச் சான்றிதழைத் தர இயலாது” என்றார்கள்.

“ஆங்கிலத்தில் நிரப்பலாமா?” என்றேன்.

“பரவாயில்லை; ஆம்!” என்றார்கள்.

குறித்த அலுவலகத்தில், அனைத்து தகவல்களும் சிங்கள மொழியில் மட்டுமே இருந்தன. விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, உரிய ஆவணங்களுடன் கையளித்தேன். அதனைப் பெற்றுக்கொண்ட நபர், வெற்று கடித உறையொன்றை என்னிடம் தந்தார். என்னவென்று கேட்டேன். “சந்தோசத்திற்கு நீங்கள் கொடுக்க வேண்டியது” என்று பதிலளித்தார்.

“சந்தோசத்திற்கு என்றால்.” என்றேன்.

சற்றுத் தடுமாறிய அவர், “நிர்வாகப் பணிக்கு, நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை” என்று மாற்றினார்.

“எவ்வளவு?” என்று கேட்டேன்.

“நூறு ரூபாய்” என்று சொன்னார்.

நூறு ரூபாயை நீட்டினேன். காகித உறைக்குள் வைத்துத் தரச் சொன்னார். மனதுக்குள் சிரித்துக் கொண்டே உறைக்குள் நூறு ரூபாயை வைத்துக் கொடுத்தேன்.

“நாங்கள் உங்களுக்கு அறியத் தருவோம்” என்றார்.

“எவ்வளவு காலம் எடுக்கும்?” என்றேன்.

“குறைந்தது, இரண்டு மாதங்களாகும்” என்றார்.

எனக்கும் குறித்த நபருக்கும் இடையிலான உரையாடலை அவதானித்த அங்கு வந்திருந்த ஒருவர், “நீங்கள் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்திருந்தால், விரைவாகச் சான்றிதழ் கிடைக்கும்” என்றார்.

ஒருமாதம் கழித்து, மீண்டும் அந்த அலுவலகத்துக்குச் சென்றேன். “சான்றிதழ் எப்போது கிடைக்கும்?” என்று கேட்டேன். ஏனக்குத் தரப்பட்ட தொடரிலக்கத்தைச் கேட்டு விட்டு உள்ளே சென்றவர், திரும்பி வந்து “இன்னும் ஒருமாதத்துக்குப் பிறகு வாருங்கள்” என்றார்.

எனக்கு அடுத்ததான தொடரிலக்கத்தையுடைய ஒருவர், மரணச் சான்றிதழைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தார். அவரை நெருங்கி, “எவ்வளவு காலத்தில் இது சாத்தியமானது” என்று கேட்டேன்.

“ஒரு வாரத்தில்” என்று பதிலளித்தார்.

“எவ்வாறு”? என்று கேட்டேன்.

“பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்” என்றார்.

அங்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெற வந்தவர்கள், ஆயிரங்களில் பணத்தைக் கொடுத்து, தங்கள் காரியங்களை நிறைவேற்றுவதை, எனது அடுத்தடுத்த பயணங்களில் கண்டு கொண்டேன்.

இலஞ்சம் கொடுப்பது தவறு; குறித்த அலுவலகம் இலவசமாக அதைச் செய்து தர வேண்டும் போன்ற எந்தவோர் உணர்வுமற்று, பணத்தை வாரியிறைத்து, தங்கள் தேவைகளை மக்கள் நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.

இரண்டு மாதங்கள் கழித்துத் சென்றபோது, “சான்றிதழ் தயார்; ஆனால், பதிவாளர் இன்னும் கையொப்பமிடவில்லை; நாளை வாருங்கள்” என்றார்கள்.

மறுநாள் சென்றேன். பதிவாளர் பெயர்களைக் கூப்பிட்டு, விசாரித்து சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிலரிடம் நேரடியாகவே, அவர் பணம் கேட்டதையும் கேட்கப்பட்ட பணம் கொடுக்கப்பட்டதையும் கண்டேன்.

எனது பெயர் அழைக்கப்பட்டது. எனது கோப்பை எடுத்தவுடன்,அருகில் இருந்த அலுவலரிடம் “எல்லாம் சரியா” என்று பதிவாளர் கேட்டார்.

“இல்லை” என்று பதில் வந்தது. எனது கோப்பை நகர்த்திவிட்டு, அடுத்த கோப்பைப் பார்க்கத் தொடங்கினார். இன்னும் மரணச் சான்றிதழ் கைகளுக்குக் கிடைத்தபாடில்லை.

அரசசேவையில், கடைக்கோடி ஊழியன் முதற்கொண்டு, உயர் அதிகாரிகள் வரை இலஞ்சமும் ஊழலும் சர்வ வியாபகமாகவுள்ளது. மக்கள் மனநிலை என்பதும், ‘கேட்பதைக் கொடுத்து விடுவோம்; வேலை நடந்தால் சரி’ என்பதாகவே உள்ளது.

மிகச்சாதாரண உழைப்பாளி ஒருவனால், இவர்கள் கேட்கும் இலஞ்சத்தைக் கொடுக்க முடியாது. எனவே, அவர்கள் அரசாங்கத்தில் இருந்து தங்களுக்குத் தேவையான சேவையைப் பெறுவதற்கு என்றென்றும் காத்துக் கிடக்க வேண்டும்.

இது ஓர் உதாரணம் மட்டுமே! இலங்கையில் இலஞ்சம் நிறுவனமயமாகிவிட்டது. இலஞ்சமும் ஊழலும் ஒன்றோடு ஒன்று, பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று தக்கவைக்கின்றன. ‘இலஞ்சம் கொடுப்பது தவறு’ என்ற உணர்வு மழுங்கடிக்கப்பட்டு, அது சேவையைப் பெறுவதற்கான சன்மானம் என்றாகி, இலஞ்சம் பொதுப்புத்தியில் ஏற்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.

இலஞ்சம் கொடுக்கிறோம் என்ற குற்றவுணர்வே இல்லாமல், அது வழமை போலவும் கொடுக்க மறுப்பது வழமையற்றது போலவும் மாறிவிட்டது. பதிவாளர் அலுவலகத்தில், எனது அனுபவங்களும் இதையே உணர்த்துகின்றன.

“காசைக் கொடுத்து வேலையைப் பார்த்துவிட்டு, போகவேண்டியதுதானே”, “கொஞ்சக் காசைக் கொடுக்க, உங்களால் இயலாதா?”, “சிரமப்படாமல் காசைக் கொடுத்து வேலையைச் செய்யலாமே?” என்றவாறாக எனக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளை, தவறை நியாயப்படுத்தும் அறமற்ற சமூகத்தின் குரல்களாகவே கேட்கின்றன.

இலஞ்சம் கொடுக்கத்தெரிந்த, வாங்கத்தெரிந்த அனைவரும் ‘கெட்டிக்காரர்’களாகவும் ‘பிழைக்கத் தெரிந்தவர்’களாகவும், மற்றையவர்கள் ‘சமூகத்துடன் சேர்ந்தொழுகாதவர்’கள் போலவும் கட்டமைக்கும் சமூகம், ஊழலையும் இலஞ்சத்தையும் நிறுவனமயப்படுத்துவதில் பிரதான பங்காற்றுகிறது.

இதே பதிவாளர் அலுவலகத்தில், இனவாதம் பல வகைகளில் அரங்கேறுகிறது. அறிவுறுத்தல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மட்டுமே இருக்கின்றன. கொழும்பு மாநகர சபையின் மத்தியில் அமைந்துள்ள இவ்வலுவலகத்தில், சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருபவர்களில் அரைவாசிப்பேர், தமிழ் மொழியைப் பேசுபவர்கள். அந்த, பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவுசெய்யும் அலுவலகத் பணிபுரியும் யாருக்கும், தமிழ் மொழியோ ஆங்கிலமோ தெரியாது.

தனது பிள்ளையின் பிறப்பைப் பதிவுசெய்ய வந்த தந்தையொருவர், தமிழில் கதைக்க முயன்றபோது, ‘சிங்களம் தெரியாதா? தமிழில் முடியாது” எனச் சிங்களத்திலேயே பதிலளிக்கப்பட்டது.

அதேபோல, இன்னொரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தாய், தனது பிள்ளையின் பதிவைச் செய்து, மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது, இன்னும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று சொன்னபோது, அவருக்குப் பின்வருமாறு பதில் வழங்கப்பட்டது. “இன்னும் காலமெடுக்கும். உங்களை மாதிரி முஸ்லிம்கள், நிறையப் பிள்ளைகளைப் பெறுவதால், எமக்கு வேலை அதிகம்; அதுதான் தாமதம்”. இந்தப் பதில்களில் தெரிந்த இனவாதம், எனக்கு ஆச்சரியத்தை உருவாக்கவில்லை.

இனவாதச் சகதியில், இலங்கை முழுமையாகத் தன்னைப் புதைத்துள்ளது. சாதாரண மக்களிடம் இனவாதச் சிந்தனைகளை, ஊடகங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பரப்புகின்றன.

சில நாள்களுக்கு முன்னர், பஸ்ஸில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், பஸ் டிக்கெட்டைப் பெறுவதற்கு இருபது ரூபாய் நோட்டை நீட்டினார். பணத்தை வாங்கிக்கொண்டு நடத்துநர் அப்பால் நகர, “மிகுதிப் பணம்” என்று அந்த முதியவர் கேட்கிறார். அவரிடம் திரும்பி, ஐந்து ரூபாய் குற்றியைக் கொடுக்கிறான். “டிக்கெட் எவ்வளவு காசு” என்று கேட்கிறார் அம்முதியவர்.

“உங்களுக்குத்தான் சவுதியில் இருந்து காசு வருகிறதல்லவா; பிறகென்ன” என்று உரத்த தொனியில் அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, மறுபுறம் திரும்பி “இவர்களை நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும்” என்று முனுமுனுத்தார்.

இவை வெறுமனே தனித்த சம்பவங்கள் அல்ல! இலங்கையின் திசைவழியைக் கோடுகாட்டும் நிகழ்வுகள். இங்கு ஊழலை எல்லோரும் நோயாகத்தான் பார்க்கிறார்கள். அது ஒரு நோயின் அறிகுறிதான்.

அதேபோல, திட்டமிடப்பட்ட சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பகுதியாக இனவாதம் அரங்கேறுகிறது. இந்த அறிகுறிகள், பாழ்நரகத்துக்கான குழியை இலங்கை தோண்டுகிறது என்பதையே காட்டி நிற்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலீமும் நானும் அண்ணன் தம்பி/யானை-பாகன் பாசக்கதை! (வீடியோ)
Next post எல்லை தாண்டும் பயங்கரவாதம்!! (அவ்வப்போது கிளாமர்)