ஃபேஷன் A – Z !! (மகளிர் பக்கம்)

Read Time:19 Minute, 34 Second

நிறங்கள் நம் மனதின் வெளிப்பாடுகள். நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நாம் அணியும் உடையின் வண்ணங்கள் தெளிவாக எடுத்துக்காட்டும். மேலும் நாம் யார் என்பதை வெளிப்படுத்தும் சக்தி நிறங்களுக்கு உண்டு. அதே போல் ஃபேஷன் உலகிலும் நிறங்களின் பங்கு மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப எவ்வாறு உடையின் அமைப்புகள் மாறுகிறதோ அதே போல் நிறங்களும் ஃபேஷன் மற்றும் அன்றைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாறு படும். காலை எழுந்து அலுவலகம் செல்லும் போது அணியும் உடை மூலம் உடன் இருப்பவர்களுக்கு நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறோம்.

பல ஆண்டு காலமாக சாயல்களின் பின்னணி என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள கோட்பாட்டாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். வரலாறு, விதிகள் மற்றும் சட்டங்கள் இவை அனைத்தும் குறிப்பிட்ட மக்கள் ஒரு சில வண்ணங்கள் கொண்ட உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கோட்பாடுகளை விதித்துள்ளன. உதாரணத்திற்கு மருத்துவ துறையில் உள்ள டாக்டர் மற்றும் செவிலியர்கள் குறிப்பிட்ட உடைகளை மட்டுமே அணிவார்கள்.

அவர்கள் அணியும் உடை மற்றும் அதன் நிறங்கள் கொண்டு அவர்கள் எந்த வேலை செய்கிறார்கள் என்பதை மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கை முறை குறித்த நிலையையும் எடுத்துக்காட்டும். ஒருவரின் உடை அமைப்பைக் கொண்டு அவர்களின் ஸ்டேட்டஸ் என்ன என்பதை கண்டறிய முடியும். குறிப்பாக உயர்நிலையில் உள்ளவர்கள் தங்களின் உடையினை மிகவும் ஆடம்பரமாக வடிவமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வண்ணங்கள் நம்முடைய உடைகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது எல்லாரும் அறிந்த விஷயம். ஆனால் இதில் என்ன கேள்வி என்றால், ஒருவரின் உடலமைப்பிற்கு ஏற்ப என்ன நிறங்கள் கொண்ட உடைகளை எவ்வாறு அணிய வேண்டும் என்பது தான்.

உலகளவில் ஒருவரின் வாழ்க்கையில் ஃபேஷன் மிகப் பெரிய பங்கு வகித்து வருகிறது. அதில் நாம் ஒவ்வொருவரும் எப்படி உடை மற்றும் நிறத்தினை தேர்வு செய்வது என்பது முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.கலோரிமீட்டரி என்பது நிறங்களின் அளவுகோல். இதன் மூலம் உங்களின் உடையின் நிறங்களுக்கு ஏற்ப மேக்கப், சிகை அலங்காரம் மற்றும் என்னென்ன நகைகள் அணியலாம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

நிற உளவியல் சுவாரஸ்யமானது மட்டுமல்ல சர்ச்சைக்குரியதும் கூட. தனி நபரின் வண்ணம் சார்ந்த உணர்வுகள் என்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவம். இதைக் கொண்டு நிறங்களை நாம் பயன்படுத்தினால் அதை கடைப்பிடிப்பது மிகவும் கடினம். மேலும் நிறங்கள் ஒவ்வொரு காலம் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சில குறிப்பிட்ட நிறங்களை குறிப்பிட்ட விசேஷங்களுக்கு பயன்படுத்துவது வழக்கம். அதாவது இந்தியாவில், சிகப்பு நிறம் மணப்பெண்ணுக்கான நிறம். சிகப்பு தூய்மை, செழுமை மற்றும் சக்தியினை குறிக்கும். அதேபோல் கருப்பு துக்க நாட்களுக்கு அணிவது வழக்கம். ஒரு சில ஆசிய கலாச்சாரத்தில் வெள்ளை நிறத்தினை துக்கத்தினை அனுஷ்டிக்கும் போது அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த இரண்டு நிறங்களையும் மக்கள் பெரும்பாலும் விழாக்கள் மற்றும் கொண்டாட்டத்திற்கு பயன்படுத்துவதில்லை.

நிறங்கள் வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்க்க செய்யும். மேலும் ஒருவித உணர்ச்சியினை தூண்ட செய்வது மட்டுமில்லாமல் அந்த உடையினை வாங்க வேண்டும் என்ற ஈர்ப்பினை ஏற்படுத்தும். எந்த ஒரு உடையாக இருந்தாலும், அந்த உடையின் நிறம் தான் முதலில் வாடிக்கையாளரை வாங்க வேண்டும் என்ற நினைப்பினை தூண்ட செய்யும். வித்தியாசமான நிறம் கொண்ட ஒரு உடையினை அணியும் போது, அது அவரின் உருவத்தினை முற்றிலும் மாற்றுவது மட்டுமல்லாமல் அதை ஒவ்வொரு முறை அணியும் போது வேறு ஒரு பரிணாமத்தினை ஏற்படுத்தும். நிறங்கள் தனித்துவமானது மற்றும் அடையாளம் காணக்கூடியது என்பதால், ஒருவர் அதனால் எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். நாம் பெரும்பாலும் ஒரு உடையினை அதாவது ‘நீல நிற உடை’ என்று அதன் நிறங்கள் கொண்டு தான் அடையாளம் காண்பிப்போம்.

நிறங்களைப் பற்றிய ஆய்வு மிகவும் கடினமானது. இது வெளிச்சம், பார்வை, வண்ண பொருட்கள் மட்டுமில்லாமல் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலை சார்ந்த அனைத்து விஷயங்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால், வண்ணம் சார்ந்த பொருட்கள்… வண்ண விளக்குகள் இரண்டுமே வேறு விதமான செயல்பாடு கொண்டிருக்கும். வண்ணங்களை வகைப்படுத்த பலவிதமான மாதிரிகள் இருந்தாலும், ஒவ்வொரு வண்ணத்திற்கு என ஒரு குறியீட்டினை முன்செல் வண்ண அமைப்பு வடிவமைத்துள்ளது. அந்த குறியீடுகள் தான் பெரும்பாலும் உடைகளின் நிறங்கள் மற்றும் வண்ண பொருட்களை வகைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

நிறங்கள் பற்றிய பகுப்பாய்வு ஒரு பக்கம் இருக்கட்டும். பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு என்ன நிறங்கள் சூட்டாகும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இதற்கு நாம் அடிப்படையான ‘வார்ம்’ ‘கூல்’, ‘மியூடெட்’ ‘வைப்பிரன்ட்’ போன்ற நிறச் சாயல்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு ஒவ்வொரு நிறங்களைக் கொண்டு ஆய்வு செய்யலாம். வண்ணங்கள் குறித்த உளவியல் மற்றும் தெரபிகள் எல்லாருக்கும் உண்மையாக இருக்காது. ஆனால் அவை ஒரு சிறந்த தொடக்கப் புள்ளி.

பொதுவாக பச்சை மற்றும் நீல நிறங்களின் சாயல்கள் கூல் நிறங்கள் என்று ஃபேஷன் உலகில் குறிப்பிடப்படும். இது அமைதியை ஏற்படுத்தும். சிகப்பு, ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் போன்ற வார்ம் நிறங்கள் ஒருவரின் மனநிலையை உற்சாகமாக்கும். அதே சமயம் இந்த நிறங்கள் மற்ற சாயல்களில் வரும் போது அதன் அர்த்தங்கள் மாறுபடும். எதுவாக இருந்தாலும் மிகவும் மெல்லிய சாயல் கொண்ட நிறங்கள் மன அமைதியையும் பளீரென்று மிளிறும் வண்ணங்கள் அதிக உற்சாகத்தினை உங்களுக்கும், உங்களை சுற்றியுள்ள சூழலிலும் ஏற்படுத்தும்.

உடைகள் அடுக்கப்பட்டு இருக்கும் உங்க அலமாரியை ஒரு முறை திறந்து பாருங்கள். உங்களின் ஒவ்வொரு உடையின் நிறத்தினை பார்க்கும் போது உங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள். அதேபோல் மெல்லிய நிறங்களுடன் அடர்த்தியான நிறங்களை இணைக்கும் போது உங்களின் உணர்வுகள் வேறு மாதிரியாக வெளிப்படும். இதேப்போல் பல நிறங்கள் கொண்டு உங்களின் உணர்வுகளை நீங்களே கண்டறியலாம். அதனைக் கொண்டு உங்களின் சரும நிறம், தலைமுடி மற்றும் கருவிழியின் நிறத்தின் அடிப்படையில் உங்களுக்கு எந்த நிற உடைகள் எடுப்பாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஒரு இடத்தில் நீங்கள் தனித்து தெரிய வேண்டும் என்றால், சிகப்பு நிற உடையினை தேர்வு செய்யுங்கள். இந்த நிறம் மற்றவர்களை ஈர்க்கக் கூடிய திறன் கொண்டது. ஒருவரை காதல் பார்வையால் கவர்வதற்கு இந்த நிறம் ஏற்றது என்று நிபுணர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். உங்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க இருந்தார் என்றால் நீல நிற உடைகளை அணியலாம். அமைதியை ஏற்படுத்தி பதட்டத்தை குறைக்கும். அதனால் தான் நீல நிற உடைகளை அணியும் பலர் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகவும் அமைதியாகவும் வெளிப்படுத்துவர்.

கருப்பு பலரின் இயல்பான ஆடை நிறம். எந்தவித உடைக்கும் கருப்பு மேட்சாகும். கருப்பு உடை அணியும் போது ஒருவரை ஒல்லியாகவும், நேர்த்தியாகவும் எடுத்துக்காட்டும். ஒரு ஆய்வில் கருப்பு நிற உடை அணியும் ஹாக்கி விளையாட்டு போட்டி வீரர்கள் அன்றைய போட்டியில் மிகவும் முரட்டுத்தனமாக விளையாடுவார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. காரணம் கருப்பு முரட்டுத்தனத்தை குறிக்கும் நிறம்.

நம்பிக்கை மற்றும் நேர்மறையான உணர்ச்சியினை வெளிப்படுத்த பச்சை நிற ஆடைகளை பயன்படுத்தலாம். பசுமை, இயற்கை, செழுமையை குறிக்கும் நிறம். ஒரு ஆய்வில் பச்சை நிறம் படைப்பாற்றலை தூண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் உங்களை சார்ந்து அறிக்கை அல்லது செய்தியினை வெளியிட விரும்பும் போது ஆரஞ்ச் நிற உடையினை அணியலாம். இந்த நிறம் அரவணைப்பு மற்றும் அதிர்வினை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை அடையாளம் காட்டும். நவநாகரீக ஆரஞ்ச் நிறம் அன்பு மற்றும் நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தினாலும், சில சமயம் இந்த நிறங்களை அணியும் நபர்களை நாம் அருகில் சேர்த்துக் கொள்ள விரும்பமாட்டோம். மேலும் இளம் பெண்கள் இந்த நிறத்தினை அதிகம் விரும்புவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பர்பில் நிறம் ஆளுமையை வெளிப்படுத்தும். சிகப்பு மற்றும் நீலம் நிறத்தின் கலவை தான் பர்பில். இரண்டுமே மிகவும் சக்திவாய்ந்த நிறம் என்பதால், அறிக்கை அறிவிக்கும் போது தைரியமாக இந்த நிற உடையினை அணியலாம். அதே சமயம் ஒருவரின் மனநிலையினை இந்த நிறம் மாற்றக் கூடும் என்பதால் ஒருவரை சமாதானம் செய்யும் போதோ அல்லது நேர்காணலின் போது இந்த நிறத்தினை தவிர்ப்பது நல்லது.

பிங்க் நிற உடைகள் மெல்லியதாக, பார்க்க அழகாக இருந்தாலும், ஒருவரின் மனநிலையில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும். 1970களில் பிங்க் நிறங்களின் சுவர்களை பார்க்க பார்க்க அவர்களின் கோபம் தனிந்து சாந்தம் மற்றும் மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறியதாக உளவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்த பிங்க் நிற உடைகளை
அணியலாம்.

கிரே நடுநிலையான நிறம். இது பெரிய அளவில் மனநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றாலும், ஆழ்மனதில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும். இந்த நிறம் மிகவும் மிருதுவானது. அதே சமயம் இந்த நிற உடையினை அணியும் போது, நம்முடைய மனதில் ஏற்படும் உணர்வுகளை கட்டுப்படுத்தும், விளைவு ஒருவர் இந்த நிற உடையினை தொடர்ந்து அணியும் போது, அவர்கள் எப்போதும் சோகமான மனநிலையில் இருப்பார்கள்.

ஒவ்வொரு நிற உடைகளை நீங்கள் அணியும் போது, இது போன்ற மனநிலையினை நீங்கள் கண்டிப்பாக சந்தித்திருப்பீர்கள். காரணம் இப்போது பெரும்பாலும் பெண்கள் தங்களுக்கான உடைகளை ஆன்லைனில் தான் வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்கும் போது அந்த உடையினை மாடல் ஒருவர் அணிந்திருப்பதைப் பார்த்து, அவரைப்போலவே தான் இவர்கள் உடை அணிந்தாலும் இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் உடையினை அணிந்த பிறகு தான் அது அவர்களுக்கானது இல்லை என்பதை உணர்வார்கள். ஒருவர் உடை தேர்வு செய்யும் போது எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உங்களின் சருமம் வெளிறிய நிறம் என்றால், அடர்த்தியான நிற உடைகளை அணியலாம். மெரூன், அடர் நீலம், எமரால்ட் பச்சை, ராயல் பர்பில் போன்ற நிறங்கள் அணியும் போது, ஒருவரின் அம்சங்களை வெளிப்படுத்துவது மட்டுமில்லாமல் முகத்தையும் பிரகாசமாக எடுத்துக்காட்டும். வெளிர் மற்றும் நடுநிலையான நிறங்களை என்றுமே தேர்வு செய்யாதீர்கள். காரணம் இந்த நிற உடைகளை அணியும் போது, உங்களின் சருமத்தின் நிறம் வெளிப்படையாக எடுத்துக்காட்டாது. அதே சமயம் ஆங்காங்கே அடர்த்தியான நிறங்கள் இருந்தால் அது மேலும் உங்களின் நிறத்தை எடுத்துக்காட்டும்.

மாநிறம் சரும கொண்டவர்கள் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிற உடைகளை அணியலாம். இரண்டு நிறங்களையும் கலந்து ஒரு மிதமான நிறங்களை தேர்வு செய்யலாம். அடர் நீலம் அல்லது பர்பில் நிறங்களை தவிர்ப்பது நல்லது.கருமை நிறமுடையவர்களுக்கு கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் அனைத்து நிறங்களும் சூட்டாகும். மஸ்டர்ட் அல்லது நீல நிறம், மஞ்சள் என பலதரப்பட்ட நிறங்கள் உங்களின் அலமாரியை அலங்கரிக்கும் போது மாறுபட்ட தோற்றத்தை கொடுக்கும்.

சருமத்திற்கு ஏற்ப நிற உடைகளை தேர்வு செய்யும் போது, அது உங்களின் உடல் அமைப்பையும் மாறுபட்டு காண்பிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் எந்த மாதிரி உடல் அமைப்பினை கொண்டவர்கள் தங்களின் உடையில் எந்தப் பகுதியில் நிறங்களுக்கு முக்கியத்துவம் என்று தெரிந்து கொள்வது அவசியம்.பியர் வடிவ உடலமைப்பு : தோள்பட்டை. கை மற்றும் மார்பகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவர்கள் இந்த பகுதியில் கண்களை பறிக்கக்கூடிய நிறங்கள் கொண்ட பிளவுஸ், ஷர்ட், கவுன் மற்றும் மேக்சி போன்ற உடைகளை தேர்வு செய்யலாம். இதற்கு நடுநிலையான அல்லது அடர்த்தி நிறம் கொண்ட பேன்ட் அணியலாம்.

ஆப்பிள் வடிவ உடலமைப்பு : அகன்ற தோள் மற்றும் மார்பகம் இவர்களின் மைனஸ். அதை அடர்த்தியான நிறங்கள் கொண்டு சரி செய்யலாம். இந்த உடல் அமைப்பு கொண்டவர்களின் கால்கள் மெல்லியதாக இருக்கும் என்பதால், அதை மறைக்க அவர்கள் வெளிர் நிற பேன்ட்களை அணியலாம். மேலும் நெஞ்சு பகுதிக்கு கீழ் மெல்லியதாக இருப்பதால், அதை மறைக்க பர்கண்டி, எமரால்ட், கருப்பு அல்லது பர்ஷியன் நீல நிறங்களை பயன்படுத்தலாம். வெள்ளை நிறங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம் வெள்ளை இவர்களை மேலும் பருமனாக எடுத்துக் காட்டும்.

வாழைப்பழ வடிவ உடலமைப்பு: இவர்களின் தோள்பட்டை இடுப்பு மற்றும் மணிக்கட்டு அனைத்தும் ஒன்று போல் இருக்கும். சொல்லப்போனால் இந்த உடலமைப்பு கொண்டவர்களுக்கு உடலில் எந்தவித வளைவுகளும் இருக்காது. அதை எடுத்துக்காட்ட சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களை தேர்வு செய்யலாம். கருப்பு, நீலம் அல்லது அடர்ந்த நிறங்களை தவிர்ப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியுஸ் பைட்ஸ்: குழந்தை திருமணம் உலகளவில் 60 சிறுமிகள் உயிரிழப்பு!! (மகளிர் பக்கம்)
Next post நீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…!! (அவ்வப்போது கிளாமர்)