புலி எப்பவும் தனிக்காட்டு ராஜா !! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 38 Second

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் பொதுமக்களையும் கால்நடைகளையும் தாக்கி வந்த T-23 ஆட்கொல்லி புலி பிடிபட்டது என்பது ஊடகங்கள் சொன்ன செய்தி. புலி மனிதர்களைத் தாக்குமா? வேட்டையாடுமா? என்ற கேள்விகளோடு பிரபல வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ராதிகா ராமசாமி அவர்களைச் சந்தித்தபோது..

‘கண்ணா சிங்கம் எப்பவும் சிங்கிளாத்தான் வரும்’ என திரைப்படத்தில் வரும் டயலாக்கைப்போல சிங்கம் சிங்கிளாக வராது. கூட்டமாகத்தான் வரும். புலிதான் தனியாக வரும். புலிதான் எப்பவுமே தனிக்காட்டு ராஜா என்றவர், குட்டிகளோடு தாய் புலி இருக்கும்போது மட்டுமே இரண்டு மூன்று புலிகளாக நமக்குப் பார்க்கக் கிடைக்கும் என்கிறார் புன்னகைத்து.

காட்டு ராஜாவான புலியை நேரில் பார்ப்பதே கொள்ளை அழகு. ஒரு புலி நடந்து வரும் கம்பீரத்தை, முப்பது சதவிகிதம் மட்டுமே நம்மால் கேப்சர் செய்ய முடியும். நம்மால் அதன் கம்பீரத்தை முழுவதுமாக படம் பிடித்துவிடவும் முடியாது. புலி நின்று நேருக்கு நேராக நம்மை பார்த்து கொடுக்கும் ‘ஐ லுக்’ அத்தனை அழகு. அது புலிக்கே உரிய அசத்தல் மேனரிசம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு மேக்னிபிசன்ட் நிகழ்வு என்று மெய் சிலிர்த்தவர், அதிகாலை பனிமூட்டத்தில் காட்டைப் பார்ப்பதுமே கொள்ளை அழகு என்கிறார் சிலாகித்து.

காடு அமைதியாக இருந்தால் புலி உள்ளே இருக்கின்றது எனப் புரிந்து கொள்ளலாம். சிங்கவால் குரங்கு புலி இருப்பதை உணர்ந்து மரத்தின் மேல் ஏறி அலார சத்தம் கொடுக்க ஆரம்பிக்கும். சில வகை சாம்பல் மான்கள் அப்போது கத்தத் தொடங்கும். அப்படி என்றால் புலி வருகிறது என புரிந்து கொள்ளலாம். புலி மற்ற விலங்குகளைத் தாக்கினாலும் அதுக்குப் பிடித்த ஃபேவரைட் உணவு மான்கள்தான். மான்களை துரத்திப் பிடித்து வேட்டையாடி உண்பதையே புலி பெரும்பாலும் விரும்பும்.

பெண் புலியும் ஆண் புலியும் இணை சேரும் நேரத்தில் மட்டுமே ஒன்றாக இருக்கும். மற்றபடி ஆண் புலி தன் ஜோலியை முடித்ததும், உடனே இடத்தை காலி செய்துவிடும். பிறகு பெண் புலியையும், குட்டிகளையும் ஆண் புலி திரும்பிக்கூடப் பார்க்காது. பூனை குடும்பம் போலவே, மற்ற விலங்குகளின் கண்களில் தனது குட்டிகள் படாமல் புதருக்குள் இடத்தை மாற்றி மாற்றி வைத்து குட்டிகளை பெண் புலி பாதுகாக்கும்.

அதேநேரம் முள்ளம் பன்றி, முயல் போன்ற குட்டி உயிர்களை உணவுக்காகப் பிடித்து உண்ணச் சொல்லிக் கற்றுக் கொடுக்கும். குட்டி புலிகள் வளர்ந்ததும் தாய் புலி அவற்றைத் தனியாகப் பிரித்து காட்டுக்குள் துரத்திவிடும். அவை கொஞ்சநாள் அக்கா அல்லது அண்ணா, தம்பி புலிகளோடு இணைந்து இரை தேடும். பிறகு அவையும் தனித்தனியாகத் தன் ஏரியாவைப் பிரித்துக் கொள்ளும்.

ஒரு ஏரியாவுக்குள் ஒரு புலி மட்டுமே எப்போதும் இருக்கும். புலி தன் கால்களை மரத்தின் மேலே உயரத்தில் வைத்து ஆழமாகப் பிராண்டி மார்க்கிங் செய்து தனக்கான ஏரியாவை பிரித்து வைத்துக் கொள்ளும். புதிதாக வரும் புலி மரத்தில் இருக்கும் மார்க்கிங்கின் ஆழத்தை வைத்து, நம்மை விட பலசாலியான புலி இங்கு இருக்கிறது எனத் தெரிந்து அந்த இடத்தை உடனடியாக காலி செய்துவிடும். அதேபோல் புலி மரம் ஏறாது.

கீழே மட்டுமே டிராவல் செய்து இரை தேடும். சூழ்நிலையால் எப்போதாவது மட்டுமே மரம் ஏற முயற்சிக்கும்.புலிகளின் மேலிருக்கும் கோடுகள் ஒன்று போலவும் இருக்காது. அவற்றின் முக அமைப்பிலும் வித்தியாசங்கள் உண்டு. புலிகளின் அதிகபட்ச ஆயுள் காலம் 13 ஆண்டுகள். 10 ஆண்டுகள்வரை புலிகள் ரொம்பவே ஆக்டிவ்வாக இருக்கும். ஆண் புலியும் பெண் புலியும் இணை சேர்வதற்காக இரண்டு முதல் மூன்று நாட்கள்வரை மட்டுமே இணைந்திருக்கும். பெண் புலி மூன்று முதல் நான்கு முறை மட்டுமே 5 குட்டிகள்வரை ஈனும். ஒரு குட்டி வளர்ந்து பெரிதானதும் அதற்கான தனி இடம் காட்டில் தேவைப்படுகிறது. அப்போது புலிகள் காட்டைவிட்டு வெளியிலும் வரத் தொடங்குகின்றன.

எனவேதான் புலிகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பரப்பளவை பஃபர் ஏரியாவாக அரசு அறிவித்து, அந்தப் பகுதிகளுக்குள் மனிதர்கள் நுழையவோ, வீடுகள் கட்டவோ, கால்நடைகளை மேய்க்கவோ, நிலங்களை ஆக்கிரமிக்கவோ அரசு தடை விதித்துள்ளது.

அடிப்படையில் புலி மனிதர்களைச் சாப்பிடாது. அதேபோல் புலிகள் மனிதர்களைத் தேடி வந்தும் தாக்குவதில்லை. மனிதர்களின் மீது புலி பாய்கிறதெனில், நாம் அதைத் தாக்க வருகிறோம் என நினைத்து, தன்னைத் தற்காத்துக்கொள்ளவே அது நம்மைத் தாக்குகிறது. மற்றபடி மனிதர்களை புலி அடித்து சாப்பிட்டது என்பதில் உண்மையில்லை என்றவர், அவற்றின் ஏரியாக்களை நாம்தான் வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்து வைத்திருக்கிறோம் என அழுத்தமாகவே பதிவு செய்து விடைபெற்றார்.

புலிகள் டேட்டா…

* புலிகள் மற்றும் யானைகள் இருக்கும் காடு எப்போதும் வளமான காடாக அறியப்படுகிறது.

* 9 வகையான புலிகள் நம் நாட்டில் உள்ளது. இதில் இந்தியாவில் இருப்பது பெங்கால் வகை டைகர்.

* புலிகள் ஒரு காட்டில் இருந்து இன்னொரு காட்டை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டே இருப்பவை.

* இந்தியாவில் 70 சதவிகிதம் ஆறுகள் டைகர் ரிசர்வ் பாரஸ்ட் வழியாக வருவதாலே ஆறுகள் பாதுகாப்பாக இருப்பதுடன், காடுகள் மற்றும் இயற்கை வளங்கள் மனிதர்களால் சுரண்டப்படாமலும் பாதுகாக்கப்படுகிறது.

* ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தபோது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் இந்தியா முழுவதும் இருந்துள்ளது. அதன்பிறகான கணக்கெடுப்பில் புலிகள் வேட்டையாடப்பட்டு, 1800 புலிகள் மட்டுமே இருந்ததாகத் தெரிய வருகிறது.

* 1973ல் வன விலங்குகள் மற்றும் காடுகள் பாதுகாப்பு சட்டத்திற்குபின், புலிகளை பாதுகாக்க டைகர் ரிசர்வ் பாரஸ்ட் கொண்டு வரப்பட்டது.

* 50க்கும் மேற்பட்ட புலிகள் சரணாலயங்கள் இந்தியா முழுவதும் உள்ளது. தற்போது மேகமலை 52வது புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

* நன்றாக பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சென்ற ஆண்டு விருது பெற்றது.

* புலிகள் சரணாலயத்தில் பெரியது ஜிம்கார்பெட் டைகர் பாரஸ்ட். அதேபோல் ரத்தன்போர், கன்ஹா, காசிரங்கா, கபினி, முதுமலை, ஆனைமலை, ரந்தம்பூர், தடாகம் போன்றவையும் புலிகள் சரணாலயங்கள் ஆகும்.

* 2 முதல் 3 ஆண்டுக்கு ஒரு முறை கால் தடங்களை வைத்து புலிகளை கணக் கெடுப்பார்கள். லேட்டஸ்ட் டெக்னாலஜியாக சிசிடிவி கேமராக்கள் மூலமாக டைகர் டிராக்கிங் செய்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்!! (மருத்துவம்)
Next post கனவு காணுங்கள்! ! (மகளிர் பக்கம்)