மூலிகை அழகு சாதனப் பொருள் தயாரிப்பு..முத்தான வருமானம் ஈட்டும் வாய்ப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 53 Second

கண்ணுக்கு மையழகு… கவிதைக்கு பொய்யழகு எனும் வைரமுத்துவின் பாடலுக்கு மயங்காத இள உள்ளங்கள் யாரும் இருக்க முடியாது. மையழகு என்ற கவிஞரின் வார்த்தை வரிகள் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை, தொழில்முனைவோராக தடம் புரட்டி பிறரை எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்கும் மனோதிடத்தை உருவாக்கி உள்ளது. நேச்சர்ஸ் ப்யூர் பிளிஸ் (Natures Pure Blizz) எனும் பெயரில் நிறுவனம் தொடங்கி இருக்கும் ஜென்ஸ்லின் ரெமிலா தான் அந்த இளம் தொழில்முனைவர். வேலை பார்த்தே ஆக வேண்டும் எனும் கட்டாயம் இல்லை என்றாலும், ஒரு சிறிய ஆனால் சீரிய முயற்சி.

ரெமிலாவை இன்றைக்கு இளம் தொழில்முனைவோர் என சமுதாயத்தில் அடையாளம் காட்டியுள்ளது. ஐடி பணியை உதறி எப்படி தொழிலில் சாதித்தார் என கேட்டறிவதற்காக அவரை தொடர்பு கொண்டோம்.‘‘நாகர்கோவில் பொண்ணு சார் நான்’’ என பாந்தமாக பதிலளித்து நம்மை வரவேற்ற ரெமிலா அடுத்து சரமாரியாக பேசத் தொடங்கினார். ‘‘சாஃப்ட்வேர் இன்ஜினியர் படிச்சு முடிச்சு சென்னையிலே வேலைக்கு சேர்ந்தேன். தலைநகரம் எனக்கு முற்றிலும் புதிது.

நாலு முக்கு சுத்தினா நாகர்கோவில் முடிஞ்சிடும். தலைநகரின் விரிவாக்கமும், பரபரப்பும் என்னை திக்குமுக்காடச் செய்தது. ஆனாலும் இந்த லைஃப் ரொம்பவே பிடிச்சிருந்துச்சி. இரண்டு வருடங்களில் எனக்கு திருமணம் ஆனது. அவரும் எங்க ஊர்தான். ஐ.டி தொழிலில் 12 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து பணி புரிகிறார். திருமணமாகி ஒரு வருடத்தில் பையன் பொறந்தான். கன்சீவ் ஆன சில மாதங்களிலேயே, வேலைக்கு போக வேண்டாமே என கணவர் பாசம் காட்டியதால், பணியை ராஜினாமா செய்தேன்.

குழந்தை, குடும்பம்ன்னு பிசியாயிட்டேன். எங்க பாப்பாவுக்கு வரண்ட சருமம். அதனால கடையில விக்கற சோப்பு ஒத்துக்கல. குளிப்பாட்டினதும், சருமம் ஒரு மாதிரி துவண்டு போயிடும். பெரியவர்கள்ன்னா அதற்கு என்ன செய்யலாம்ன்னு பார்ப்பாங்க. கைக்குழந்தைக்கு சொல்லவும் தெரியல. ஆனால் அவனுடைய வேதனையை நான் புரிஞ்சுக்கிட்டேன். அதே சமயம் என்ன செய்யறதுன்னே தெரியாம கலக்கமாகவும் இருந்தது. அந்த வயதில் சருமத்தில் ரசாயனம் கலந்த லோஷனை பயன்படுத்தவும் விரும்பல. இதற்கு என்னதான் தீர்வு என்று இன்டர்நெட்டில் தேட ஆரம்பிச்சேன்.

இது மாதிரி பிரச்னைக்கு மூலிகைகள் கொண்ட சோப் கை கொடுக்கும்னு இணையத்தில் படிச்சி தெரிஞ்சிகிட்டேன். அதனால் கடைகளில் சென்று கேட்ட போது, அங்கு பலவித சோப்கள் இருந்தன. இப்படி ஒவ்வொரு முறையும் சோப்பினை தேடுவதற்கு, சொந்தமா நாமே ஏன் தயாரிக்கக் கூடாதுன்னு அதற்கான முயற்சியினை தீவிரப்படுத்தினேன்.

அதன்படி கொஞ்சமான அளவுல சில மூலிகைகளை வாங்கி சோப்பு செஞ்சி பார்த்தேன். பெரிசா ஒண்ணும் வாசனைல்லாம் இல்ல. முதல் முயற்சி எப்படி இருக்குமோ என்ற பயம் இருந்தாலும் துணிஞ்சி ட்ரை பண்ணினேன். மூலிகைகளுடன் வெண்ணெய், பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய் எல்லாம் சேர்த்து நான் செஞ்ச சோப், பையனுக்கு செமய்யா ஒர்க் அவுட் ஆச்சு. எந்த ஒரு சினுகலும் இல்லாமல் ஹேப்பியா தூங்கினான். எனக்கோ வானத்துல மிதக்கிற மாதிரி சந்தோஷம்.

அப்பாடா பேபிக்கு சோப் ஒத்துக்கிச்சி. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அப்பத்தான் கண் மை (காஜல்) ஞாபகம் வந்தது. அந்த தயாரிப்பில் என் கவனத்தை செலுத்த ஆரம்பிச்சேன். என்னுடைய குழந்தையின் பிரச்னையை போக்கத்தான் நான் மூலிகை சோப் மற்றும் கண்மையில் இறங்கினேன். ஆனால் என்னை ஒரு சிறுதொழில் முனைவோராக மாற்றியது என் அக்கா தான்.

ஒரு முறை அக்கா வீட்டிற்கு வந்திருந்தாங்க. அவங்களிடம் குழந்தைக்கு நான் தயாரித்த சோப் நல்லா செட்டாயிடுச்சுன்னு சொன்னேன். அவங்களும் சாம்பிலுக்கு இரண்டு சோப்பினை தன் பசங்களுக்கு பயன்படுத்தினார். நல்ல பலன் தெரிந்ததை பார்த்தவர், ‘இதையே ஏன் நீ ஒரு தொழிலா செய்யக்கூடாது’ன்னு கேட்டார். அவரும் ஒரு தொழில்முனைவர் என்பதால், இந்த மாதிரி இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்று அவருடைய அனுபவத்தைக் கூற, செய்து பார்க்கலாம்னு முடிவு செய்தேன்.

இது நாள் வரை என் குழந்தைக்கு மட்டுமே பயன்படுத்தியதால், சிறிய அளவில் தான் தயாரித்து வந்தேன். அதுவும் சோப்பு தீரும் போது அடுத்த செட் சோப்பினை தயாரிப்பேன். இப்போது பெரிய அளவில் இறங்கும் போது, பணத்துக்கு என்ன செய்வதுன்னு புரியல. அப்பத்தான் வேலைக்கு சென்ற போது அவ்வப்போது கொஞ்சம் பணம் சேமிப்பது வழக்கம். அதில் இருந்து ஐயாயிரம் ரூபாய் மட்டும் எடுத்து சோப் மற்றும் காஜல் தொழிலை தொடங்கினேன்.

பொதுவாக கொட்டாங்குச்சி சிரட்டையை தணலில் வாட்டி பொடியாக்கி அதனுடன் வேதிப் பொருட்கள் சேர்த்து மை தயாரிப்பதாக கூறுவார்கள். மூலிகைகளில் அது போல வாய்ப்பு இருக்கிறதா என மீண்டும் அலசி ஆராய்ந்ததில், பாதாம் பருப்பு நல்ல மாற்று என தெரிய வந்தது. எனவே, பாதாம் பருப்பை வாங்கி சுட்டு பொசுக்கி அதனுடன் ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு மேலும் சில, பல சமாச்சாரங்கள் சேர்த்து கண் மை உற்பத்தியை ஒரு வழியா முடிச்சேன்.

இப்படியாக, சோப்பு, காஜல் ஆகிய இரண்டு பொருட்களும் எனது உற்பத்தி மையத்தில் இருந்து மெதுவாக வாடிக்கையாளர்களுக்குச் செல்லத் தொடங்கியது. வாய் வழி விளம்பரத்திலேயே சில டஜன் சோப்புகள் விற்கத் தொடங்கி இருந்த சமயத்தில், அதே தொடர்புகளால் வாட்ஸ்அப் வலைதளம் மூலமாக மேலும் பல கஸ்டமர்கள் எனக்கு அறிமுகமாகினர். இப்படியாக மிகக் குறுகிய காலத்தில் என்னால் 300 வாடிக்கையாளர்களுக்கு சோப்பு, காஜல் சப்ளை செய்ய முடிந்தது.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், தயாரிப்புக்காக தனியாக மையம் எதுவும் தொடங்காமல் எனது வீட்டிலேயே தயாரித்தது தான். அதோடு ₹5,000 முதலீட்டில் என்னால் கணிசமான லாபமும் ஈட்ட முடிந்தது. இதனிடையே கஸ்டமர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு, ‘‘மேடம், பொடுகு தொல்லை தாங்க முடியல. அதற்கும் மூலிகை மூலமாக தீர்வு தந்தீங்கன்னா நல்லா இருக்குமே’’, என அக்கறையோடு விசாரித்தனர். அப்படித்தான் பொடுகை அறவே களையும் ஹெர்பல் தைலம் மற்றும் ஷாம்பூ உருவானது. ஏதோ ஒரு சில முறை முயன்றதும், பிரச்னை தீரும் எனக் கருதாமல், பொருமையோடு சில மாதங்கள் தொடர்ந்து முயற்சித்தாலே, ஹெர்பல் புராடக்ட்ஸ் நல்ல பலனளிக்கும் எனும் கருத்தை இந்த இடத்தில் கூற கடமைப்பட்டு உள்ளேன்.

இப்படியாக ஒவ்வொரு பொருளாக ஹெர்பல் கொண்டு தயாரிப்பது அடுத்தடுத்து தொடர்ந்தது. அந்த வகையில் இப்போது என்னிடம் 80க்கும் அதிகமான ஹெர்பல் காஸ்மெட்டிக்ஸ் உள்ளது. இதில் அதிகமாக பலருக்கும் தேவைப்படுவது குங்குமாதி தைலம், சோப், காஜல், ஃபேஷ் வாஷ், கிட்ஸ் சோப், லிப்ஸ்டிக், சோற்று கத்தாழை ஜெல், லிப் பாம், குதிகால் வெடிப்பு கிரீம் மற்றும் பொடுகு தைலம் மற்றும் ஷாம்பூ. இது மட்டுமன்றி வாடிக்கையாளர் எப்படி கேட்கிறாரோ அதற்கு ஏற்ற வகையிலும் தயாரித்து கொடுக்கிறேன். அதாவது மஞ்சள் பொடி எனக்கு ஒத்துக்காது என கூறும் கஸ்டமருக்கு, அதனை கலக்காமல் அதற்கு ஈடான மாற்றுப் பொருளுடன் சப்ளை செய்கிறேன். இணையதளம் மட்டுமில்லாமல் நேரடியாகவும் பொருட்களை வாங்கலாம்.

இன்டர்நெட்டையும், யூ டியூப்பையும் பார்த்து கத்துக்கிட்டா தொழில்முனைவரா மாறிட முடியும்ன்னு நினைக்காதீங்க. இதில் பல விஷயங்கள் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். சில வீடியோவில் இப்படி செய்யுங்கனு விளக்கம் இருக்கும். ஆனால் என்ன விகிதத்தில் எதை எந்த பக்குவத்தில் சேர்க்கணும்னு விளக்கம் இருக்காது. அதைப்பார்த்து செய்தால், நாம் நினைக்கும் பொருள் வராது. அதுவே நமக்கு எதிரியாக மாறி ஒரு வித சோர்விற்கு தள்ளிடும்.

அதனால், எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் அதைப்பற்றிய படிப்பு படிப்பது மிகவும் அவசியம். இந்த 3 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் காஸ்மெட்டாலஜி சான்று படிப்பு மற்றும் அட்வான்ஸ்டு காஸ்மெட்டாலஜி டிப்ளமோ ஆகியவை படித்தும் கற்றுத் தேர்ந்திருப்பதால், எனது உற்பத்தியில் எந்த பிரச்னையும் இல்லாதபடி பார்த்துக் கொள்ள முடிகிறது.

எதிர்பார்த்ததைக் காட்டிலும் இப்போது வருமானம் கூடுகிறது. அதே சமயம் வேலைப்பளு குறைய வேண்டும் என்பதற்காக பெண்கள் இருவரை பணிக்கு அமர்த்தி உள்ளேன். குடும்ப கஷ்டத்தில் தத்தளிக்கும் பெண்களுக்கு இந்த தொழிலில் பயிற்சி அளித்து அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படுத்திக் கொடுக்க யோசித்து வருகிறேன். கூடிய விரைவில் அது நிறைவேறும் என நம்பிக்கையாக உள்ளேன்.

நாட்டின் பல மாநிலங்களிலும் உள்ள தமிழர்களிடம் எனது ஹெர்பல் காஸ்மெட்டிக் பொருட்கள் அறிமுகம் ஆகியுள்ள வேளையில், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள நமது மக்களுக்கு எனது புராடக்ட் இப்போது செல்லத் தொடங்கி இருப்பது அடுத்த கட்ட தொழில் முன்னேற்றமாகக் கருதுகிறேன்.ஒரு சந்தர்ப்பத்தில் என்னை தொடர்பு கொண்ட கஸ்டமர் ஒருவர், ‘‘எனது குழந்தைக்கு டயாஃபர் வைத்ததில், அலர்ஜியாகி தடித்து சிவந்து போயுள்ளது. நீங்கள் தான் உதவ வேண்டும்’’, என்றார். அதையடுத்து ஹெர்பல் க்ரீம் கலந்த டயாபர் கிரீமை தயாரித்து அவருக்கு பரிந்துரைத்தேன். அடுத்த சில வாரங்களில் அவரிடம் இருந்து எனக்கு பெரிய பாராட்டு கிடைத்தது. இதைப் போல பலரும் எனது பொருட்கள் மீது ஆர்வம் செலுத்துவதை தொழிலில் எனக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.

பெண்கள் அனைவரும் தங்கள் மீது திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்க வேண்டும் எனக் கருதும் பலரும், அதற்கான முயற்சிகளில் பல தவறுகளை செய்துவிட்டு பிறகு திண்டாடுகிறார்கள். ஆனால், நமக்குத் தெரிந்த இந்த வித்தையை ஒரு சில கலவைகளுடன் உருவாக்கி கஸ்டமரை அட்ராக்ட் செய்யும் எந்த ஒரு முயற்சியும் தோற்காது. அங்கு புதிதாக ஒரு தொழில்முனைவோர் உருவாகுவார் என்பது நிச்சயம்’’ என்றார் ரெமிலா ஆணித்தரமாக.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வெளிநாட்டுக்குப் பறக்கும் கோலப்படிகள்! (மகளிர் பக்கம்)