சிறு தொழில் – ஆன்லைனில் ஆடைகள் விற்கலாம் !! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 14 Second

அண்டை வீட்டாருடன் கூட பேசி பழக முடியாமல், குடும்பத்தினருடனும் கூட தனி மனித இடைவெளியை பின்பற்றி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமக்கு ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி என்று விளக்குகிறார் ஆன்லைனில் புடவை உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்யும் கங்கா.

‘‘சிறு துளி பெருவெள்ளம் என்ற கூற்றின் அருமை சிறு தொழில் செய்வோருக்கு நன்கு தெரியும். கை தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பதற்கிணங்க நான் கற்று வைத்திருந்த தையல் கலையை முதலீடாகக் கொண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் ஹரிணீஸ் லேடீஸ் சாய்ஸ் என்ற பெயரில் தையல் கடை ஒன்றை முதலில் ஆரம்பிக்கையில் நானும் நினைக்கவில்லை அந்த கைத்தொழில் இத்தனை தூரம் என் வாழ்வின் துயர் துடைக்கும் என்று.

ஆரம்பங்கள் அழகாக தெரிவதே இல்லை. என் ஆரம்பமும் அப்படியேதான். செய்யும் தொழிலில் சுத்தம், வாடிக்கையாளர் மன நிறைவு இவ்விரண்டும் தொழிலின் முதலீடாக இருந்தால் தொழில்கள் என்றுமே சரிவதில்லை என்பதையும் இந்த சிறு தொழில்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தன. விரல் விட்டு என்னும் அளவில் மட்டுமே வாடிக்கையாளர்கள் என் கடையை தேடி வர, அந்த சில வாடிக்கையாளர்களை மன நிறைவாக அனுப்பினால் போதும் என நினைத்து என்னைத் தேடி வந்த வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்றவாறு செய்து கொடுத்தேன். இதற்கிடையில் பெண்களுக்கான அழகு நிலையத்தையும் நடத்திக் கொண்டு வந்ததால் சில நேரங்களில் உறக்கம் என்பதும் கூட கனவாகவே இருந்தது’’ என்றவரையும் இந்த கொரோனா காலம் கட்டிப்போட்டுள்ளது.

‘‘உழைப்பாளியின் கால்கள் தடத்திற்கு பயந்து வறுமை என்பது எட்டடி தள்ளி நின்று தானே ஆக வேண்டும். அப்படித்தான் நானும் இரவு பகல் பார்க்காமல் உழைத்தேன். அதற்கான பலனும் அடைந்தேன். ஆனால் தனிமனித இடைவெளி என்ற புயல் வீசியதால், எனக்கான திறந்த கதவுகள் அனைத்தும் மீண்டும் அடைக்கப்பட்டுவிட செய்வதறியாது திணறினேன். ஆனால் இந்த அலையைக் கண்டு கொஞ்சம் மிரண்டாலும், அதையும் எதிர்கொள்ள முடியும் என்று என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.

திட்டங்களும், முயற்சியும் எந்த ஒரு சிறு தொழிலையும் கூட தாங்கி நிறுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியதே. சூழ்நிலைகள் எத்தனை மோசமாக இருப்பினும் அதை எதிர்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் தொழிலலை மாற்றி அமைத்துக் கொண்டால், மீண்டும் ஒருமுறை எழுந்து நிமிர்ந்து நின்றுவிடலாம் என்று தோன்றியது.

அதனால் தாமதிக்காமல், என்ன வழி என்று சல்லடையிட்டு தேடுகையில் ஆன்லைனில் புடவை விற்பனை செய்யலாம் என்ற ஐடியா கிடைத்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல வாட்சப்புக்கு வாட்சப் ஆன்லைன் விற்பனை குழுக்கள் இருந்தது. இத்தனை போட்டியாளர்களுடன் நானும் நின்று போட்டியிடுவதா? என்ற அச்சம் சிறிது இருந்தாலும் போட்டியிடாமல் இருப்பதைவிட போட்டியிட்டு தான் பார்த்துவிடலாமே என்று தோன்றியதால் ஆன்லைன் விற்பனையாளர்கள் என்ற வரிசையில் நானும் ஒருவராக நிற்க ஆரம்பித்தேன்.

புடவைகளை எப்படி விற்பனை செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு முன் அனுபவமும் இல்லை. ஆனாலும் தரமான பொருட்களை மட்டுமே என் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவேன் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கினேன், லட்சத்தில் நானும் ஒருத்தியாக. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். வாட்சப்பை என்னுடைய ஆயுதமாக மாற்றிக் கொண்டேன்.

என்னுடைய வெகு சிலர் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் விற்பனையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். தொழில்நுட்பம் மூலம் அவர்களின் வாசலைத் தட்டிப் பார்த்தேன். பல கதவுகளுக்கு நான் தட்டும் சத்தம் எட்டவில்லை என்றாலும் சில கதவுகள் மட்டும் திறந்தன. வாடிக்கையாளரின் தேவைகளுக்கேற்ப நல்ல தரமான புடவை மற்றும் உடைகளை நியாயமான விலையில் விற்பனை செய்ய துவங்கினேன். ஆன்லைனில் விற்பனை செய்து எல்லாம் பெருசா எதையும் சம்பாதித்துவிட முடியாது என்று வழக்கமான எதிர்மறை கருத்துக்களையே அறிவுரையாக பலர் வழங்கினர்.

தொட்டால் சிணுங்கி செடி போல் அந்த நேரம் மட்டும் என் கனவுகள் சிறிது சுருங்கினாலும் அடுத்த கணமே மீண்டும் இதை செய்து பார்த்துவிடலாம் என்ற என் சிந்தனையை விரித்து, முயற்சித்துக் கொண்டே இருந்தேன்.முதல் மாதம் ஒரு புடவை விற்பனை செய்வது என்பதே சவாலான விஷயமாக இருந்தது. என்றாலும் விடாமுயற்சியால் சில மாதங்களில் ஆதரவு அளிக்கும் வாடிக்கையாளர்கள் தாமாகவே முன் வந்து புடவைகளை வாங்கிச் சென்றார்கள்.

முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்பதை பெண்கள் மட்டும் இன்றி அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். வீட்டில் இருந்து கொண்டே மாதம் ஒரு கணிசமான தொகையை சம்பாதிக்க முடியுமா என்பதற்கு நானே சாட்சி. அதே சமயம், உழைப்பும், வாடிக்கையாளர் மன நிறைவும், பொருட்களின் தரமும் என்றுமே தொழிலின் முதலீடாக இருக்க வேண்டும் என்பது என் தாரக மந்திரமாக மாற்றினேன். என் அனுபவத்திலிருந்து ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள முடியும் என்றால், அது இதுதான்.

கைத்தொழிலை கற்றுக் கொள்ளுங்கள், சிறிய தொழிலாக இருந்தாலும் அதை பயமின்றி துவங்குங்கள். தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்கையில் கண்டிப்பாக உங்கள் தொழிலிலும் ஒரு மாற்றத்தை பார்க்க முடியும்” என்றார் கங்கா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய வருமானம் பார்க்கலாம்!! (மகளிர் பக்கம்)
Next post ஜனவரி 28 போலியோ சொட்டு மருந்து தினம் ! (மருத்துவம்)