ஓவியம் தீட்டலாம்! வருமானம் ஈட்டலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 48 Second

சிறு தொழில்

‘‘பிறந்தது, படிச்சது விருத்தாசலம். அப்பா, சிவில் இன்ஜினியர். அம்மா, அரசுப் பள்ளி ஆசிரியை. ஒரு தங்கை. பத்தாவது வரை விருத்தாசலத்தில் படிச்சேன். அதன் பிறகு திருச்சியில் +2 முடிச்சிட்டு கல்லூரிப் படிப்பை சென்னையில் முடிச்சேன். ஃபேஷன் மேனேஜ்மென்ட் துறையில் முதுநிலை கல்வியினை பெங்களூருவில் படிச்ச போது தான் எனக்குள் இருக்கும் ஓவியத் திறமையைப் பற்றி நானே புரிந்து கொண்டேன்’’ என்று பேசத் துவங்கினார் ஹேமலதா. 20 வயதே நிரம்பிய ஹேமலதா, தன் கலைத் திறமையால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்த்து வருகிறார். தமிழகம் மட்டுமில்லாமல், கேரளா, வட இந்தியா, அரபு நாடுகள், அமெரிக்கா என இவரின் ஓவியங்களுக்கு நல்ல மதிப்புள்ளது.

‘‘எனக்கு கலை மேல் ஆர்வம் இருந்தாலும், முதுநிலை படிப்பினை பெங்களூரில் படிக்கும் ேபாது தான் ஓவியங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சது. எந்தெந்த பாணி எங்கெங்கு பயன்படுத்தப்படணும்ன்னு அடிப்படை விஷயத்தை கற்றுக் கொண்டேன். அந்த பாடம் தான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால், நான் படித்த படிப்புக்கும் இப்போது நான் செய்யும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தான் சொல்லணும்.

ஃபேஷன் துறை சார்ந்த படிப்பு படிச்சாலும் எனக்கு ஓவியங்கள் மேல் தீவிர பிடிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சித்திர எழுத்து ஓவியக்கலையான கேலிக்ராஃபி. ஃபாக்ஸ், பிரஷ் பென், ரிப்பன், பாய்ன்ட்டட் நிப், கட் நிப், 3டி என்று சாதாரண எழுத்துக்களை சித்திரமாக விதவிதமான ரூபங்களில் வெளிப்படுத்துவது தொடக்கத்தில் பிரமிப்பை உண்டாக்கியது. எனவே கேலிக்ராஃபி குறித்து ஆன்லைனில் அக்குவேறு, ஆணி வேறாக அலசி ஆராய ஆரம்பித்தேன். அந்த கலை மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையும், பற்றும் ஏற்பட்டது. அதே வேகத்தில் கேலிக்ராஃபி பயிற்சியை கற்பிக்கும் மையங்களை கண்டுபிடித்து, குறுகிய கால பயிற்சியும் பெற்றேன்’’ என்றவரின் திறமைக்காக பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது.

‘‘பயிற்சிக்கு பின்னர் பொழுதுபோக்காக நான் வரைந்த ஓவியங்களை பார்த்த சிஸ்டர் ஒருவர், ‘நல்லா வரையறீங்க.. எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில் பிள்ளைகளுக்கு டிராயிங் கற்றுத் தரமுடியுமா’ன்னு கேட்டாங்க? எனக்கும் அது ஒரு நல்ல விஷயமா தெரிஞ்சது. நானும் சரின்னு சொல்ல… அதற்கான வெகுமதியாக ₹10,000 கொடுத்தாங்க. அப்படியே வானத்தில் சிறகடித்து பறந்தேன். என் உழைப்புக்கு கிடைத்த முதல் வருமானம்ன்னு நினைக்கும் போது மனசுக்கு ரொம்பவே நிறைவா இருந்தது. அதன் பிறகு அதே பள்ளியில் மற்றொருவரின் உதவியுடன் சென்னையில் வர்க்‌ஷாப்பில் என்னுடைய ஓவியத்தை கண்காட்சியாக வைத்தேன். அதன் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதனை தொடர்ந்து கேரளாவில் பயிற்சி பட்டறை நடத்தும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த பயிற்சி பட்டறை தான் எனக்குள் இருக்கும் திறமையை புத்தகமாக வெளியிட உதவியது. 2018ம் ஆண்டு ‘ஏ நியூ பிகினிங் ஆப் டூடுல் ஜர்னி’ என்ற தலைப்பில் வெளியிட்டேன். இதற்கிடையில் கேலிகிராஃபி மட்டுமல்லாமல், ஆயில் பேஸ்டல், கிளாஸ் பெயின்டிங், கிரிகாமி, பென் மன்டலா, தாய் ஆர்ட், ரிலீப் பெயின்டிங், காஃபி பெயின்டிங், டர்மரிக் பெயின்டிங் வித் டிட்டர்ஜென்ட், கேரளா முரல் ஓவியக்கலை, நைஃப் பெயின்டிங், தஞ்சாவூர் ஓவியம் என பலவகை ஓவியங்களை கற்றுத் தேர்ந்தேன். வீட்டிலேயே ஓவியப் பயிற்சியும் எடுக்க ஆரம்பிச்சேன்’’ என்றவர் பெற்றோர் ஒத்துழைப்பு இல்லாமல் இவ்வளவு தூரம் தன்னால் முன்னேறி இருக்க முடியாது என்றார்.

‘‘எங்க வீட்டில் கண்டிப்பாக இருந்தாலும், எனக்கும் என் தங்கைக்குமான முழு சுதந்திரம் கொடுத்து இருந்தாங்க. இதைத்தான் படிக்க வேண்டும், இதைத்தான் உடுத்த வேண்டும் என எங்கள் மேல் அவர்களின் விருப்பத்தினை திணித்ததில்லை. அவர்களின் கனிவான வளர்ப்பு தான் என் வாழ்வில் ெபரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இவர்கள் ஒரு பக்கம் என்றால் என் கணவர் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்ன்னு சொல்லணும். என்னுடைய அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு அவர் தான் முழுக் காரணம். அவரின் வேலைப் பளுவுக்கு மத்தியில் என்னுடைய ஆன்லைன் பயிற்சிகளுக்கு மார்க்கெட்டிங் வேலையும் பார்த்து வருகிறார்.

பயிற்சி வகுப்புகள் எப்போதும் போல் நடந்துகொண்டு இருந்த சமயத்தில் தான் கொரோனா காரணமாக அதற்கு தடை ஏற்பட்டது. அந்த தடையும் என்னுடைய ஆன்லைன் வகுப்பு மூலம் பூர்த்தி அடைந்தது. இதற்கு காரணம் என் தோழிகள். லாக்டவுனில் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், ஓவியம் கத்துக்கிட்டா பொழுதும் போகும் மனமாற்றமும் கிடைக்கும்ன்னு சொல்ல நானும் முழு மூச்சாக ஆன்லைனில் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். அது அப்படியே சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டிவிட்டர், ஃபேஸ்புக்ன்னு பரவிடுச்சு. அதன் மூலமும் பலர் என்னை அணுக… இப்போது முழு நேரம் ஆன்லைனில் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சிட்டேன். கொரோனா காலத்திலும் என்னுடைய கலை எனக்கு முழு கைக்கொடுத்ததுன்னு தான் சொல்லணும்’’ என்றவர் ஒவ்வொரு கலைப் பற்றியும் விவரித்தார்.

‘‘கேலிகிராஃபி என்றால் அழகாக எழுதுவதுன்னு சொல்வாங்க. அது மட்டுமல்ல எழுத்துகளில் சித்திரங்களை புகுத்தி, நம் கற்பனைக்கு ஏற்ப மாற்றி அமைப்பது தான் கேலிகிராஃபி. அதாவது கூகுள் சர்ச் இன்ஜின் முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கும், அந்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் சம்பவங்களை கற்பனை கலந்து கூகுள் ஆங்கில எழுத்துகளில் அந்த சித்திரங்கள் ஒளிந்திருக்கும்.

கல்யாண வரவேற்பு பேனர்கள், பரிசளிப்பு பேக்கிங் மேலட்டையில் வரைந்து தருவதற்கு கேலிகிராஃபி சிறப்பானது. அதுபோல, காஃபி பெயின்டிங்கும் பிரத்யேகமானது. ஒருவர் காஃபி பெயின்டிங்கில் ஷீரடி சாய்பாபா படம் வரைந்து தர முடியுமான்னு கேட்டார். காஃபித்தூள் டிகாக்‌ஷன் பயன்படுத்தி பாபா படம் தீட்டி, அக்ரிலிக் கோட்டிங் கொடுத்து பைபர் ஃப்ரேம் போட்டு கொடுத்தேன். இந்த ஓவியம் காலத்துக்கும் கெடாமல் அப்படியே நிலைத்திருக்கும். அது போன்றது தான் டர்மரிக் பெயின்டிங் வித் டிட்டர்ஜென்ட்டும்.

மஞ்சளை குழைத்து அதை சோப்பு கட்டியில் சேர்த்து வரையப்படும் இந்த ஓவியத்திற்கு தனி குணாம்சம் உண்டு. கிரிகாமி என்பது பேப்பர் கட்டிங் வொர்க் ஆகும். தஞ்சாவூர் ஓவியக்கலை எப்படி நமது பாரம்பரியமோ அதைப் போன்றது தான் தாய்லாந்து நாட்டின் தாய் ஆர்ட் எனும் ஓவியக் கலையும். நுணுக்கமும், நுட்பமும் அதிகம் உள்ள கலை. பொறுமையாக, ஒருநிலைப்பட்ட மனதுடனும் அதனை வரைய வேண்டும். கேரள முரல் என்பது புடவைகளில் ஓவியம் தீட்டும் கலை.

தற்போது 100க்கும் அதிகமானோர் ஆன்லைன் முறையில் என்னிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள். வீட்டில் இருந்தபடியே உலகமெங்கிலும் சொல்லித் தரலாம். மும்பை மற்றும் துபாய் போன்ற இடங்களில் இருந்தும் மாணவர்கள் பயிற்சிக்கு வராங்க. ஆன்லைன் வகுப்புமின்றி ஓவியங்கள் வரைந்தும் தருகிறேன். ஒரு சிலர் கஸ்டமைஸ்ட் ஓவியங்கள் வரைய சொல்லி கேட்பாங்க. அதுவும் செய்து வருகிறேன்’’ என்றார் ஹேமலதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுமார் ப்ரெய்னும் சூப்பர் ப்ரெய்ன் ஆகும்!! (மருத்துவம்)
Next post இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு… இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! ! (மகளிர் பக்கம்)