குட்டிப்பாப்பாவுக்கு ஆன்லைனில் பர்ச்சேஸ் பண்ணலாமா ? (மருத்துவம்)
ஷாப்பிங் எல்லாம் இப்போ ரொம்ப ஈஸி…ரங்கநாதன் தெரு கும்பலில் கசங்கி, பாண்டி பஜார் சாலையில் அலைந்து, புரசைவாக்கம் புழுதி யில் சுற்ற வேண்டும் என்பதெல்லாம் இப்போது அவசியம் இல்லை.கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்துகொண்டோ அல்லது செல்போனை நோண்டியபடியோ சகலத்தையும் நம் இடத்துக்கே இப்போது வரவழைக்க முடியும். விண்டோ ஷாப்பிங் என்ற இந்த ஆன்லைன் கலாசாரம் அதிகரிப்பதெல்லாம் சரிதான். குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர், சோப், ஷாம்பூ, ஆயில், மருந்து போன்றவற்றை வாங்குவதும் சரியா?
குழந்தைகள் நல மருத்துவர் பிரானேஷ் பதிலளிக்கிறார்.‘‘வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், பெரியவர்கள் இல்லாத வீட்டில் தாங்களே பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வரப்பிரசாதம்தான். ஃபீடிங் பாட்டில்கள், பொம்மைகள், ஸ்வெட்டர், பால் பவுடர் இப்படி எதை வேண்டுமானாலும் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்ய முடிகிறது. அடுத்த நாளே வீட்டின் கதவைத் தட்டி கொடுத்து விடுகிறார்கள். இதனால் நேரமும், அலைச்சலும் மிச்சமாகிறது. சொற்பமான அளவு பணமும் ஆன்லைன் ஷாப்பிங்கின் மூலம் குறைகிறது என்கிறார்கள்.
அதனால், ஆன்லைன் ஷாப்பிங்கைக் குழந்தைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கான ஆடைகளை ஆர்டர் செய்யும்போது சரியான அளவுகள், பிடித்த கலர்களை டிக் செய்வதுபோல என்ன மெட்டீரியல் என்பதையும் கவனிக்க வேண்டும். நம் தேர்வு தவறாக இருந்துவிட்டால் வாங்கிய பொருட்களைத் திருப்பி கொடுக்கும் ‘ஈஸி ரிட்டர்ன்ஸ்’ வசதியும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அதேபோல் நம்பகமான இணையதளமா, பால் பவுடர், பேபி ஆயில், மருந்துப் பொருட்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் காலாவதி தேதி போன்றவற்றையும் உன்னிப்பாக கவனித்து வாங்குவது அவசியம்.ஆஃபர் என்ற பெயரில் போலி பொருட்களும் நிறைய விற்கப்படுவதால் கவனம் அவசியம். முடிந்தவரை, ஆன்லைனில் பொருட்கள் வாங்கினாலும் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனை பெற்றுப் பயன்படுத்துவது இன்னும் பாதுகாப்பானது.’’
Average Rating