உயிர் காக்கும் உன்னதம்!! (மருத்துவம்)
உலக தாய்ப்பால் வாரத்தை சிறப்பிக்கும் விதமாக, ‘தாய்ப்பால் தாய்க்கும் நல்லதே’ என சென்ற இதழில் விவரித்திருந்தோம். தாய்ப்பால் தருவதில் மேம்பட்ட ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துறைத்தலைவரும் ஆராய்ச்சி மருத்துவருமான இரா. நிமிதா குமரன்.
“குழந்தைகள் பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும், 2 வயது அல்லது அதற்குப் பிறகும் தாய்ப்பாலை தொடரலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இந்த அறிவுரையை பின்பற்றாததன் விளைவாக, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 50 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு சம்பந்தமான நோய்களால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இதை கருத்தில் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்ட நான், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுள்ளேன்” என்கிற நிமிதா, இது குறித்து விளக்குகிறார். “வெப்பமண்டல நாடுகளில் ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளின் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது வயிற்றுப்போக்கு.
காஸ்ட்ரோஎன்டிரைட்ஸ் (Gastroenteritis) நோயின் அறிகுறியே வயிற்றுப்போக்குதான். இளம் குழந்தைகளின் குடலில் உள்ள பாக்டீரியாக்களே வயிறு, சுவாசம் மற்றும் ஒவ்வாமை நோய்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன
இந்த ஆராய்ச்சியின் நோக்கம் தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளிடமிருந்து வயிற்றுப்போக்கு நோய்க்கிருமிகளை பிரித்தெடுத்து இனம் காணுவது.
அதோடு, அந்த பாக்டீரியாக்களுக்கு எந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கலாம் என்ற நோக்கிலும், தாய்ப்பாலின் மேன்மை குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டேன். என்னுடைய ஆய்வின் முடிவில் 200 பாக்டீரியா வகைகள் கண்டறியப்பட்டன. இவற்றில் 128 பாக்டீரியாக்கள் பொதுவாக புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளிடமும், 64.8 சதவிகிதம் புட்டிப்பால் குடிக்கும் நகரத்துக் குழந்தைகளிடமும் தாக்குவதாக தெரியவந்துள்ளது.
இதில், இ.கோலி பாக்டீரியாவே மிக அதிக அளவு காணப்பட்டது. சிப்ரோஃபிளாக்சின் (Ciprofloxacin) மருந்துக்கு அதிக அளவில் இந்த கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளதையும் கண்டறிந்தேன். குழந்தைகள் பிறந்து 6 மாதம் வரை கட்டாயமாக தாய்ப்பாலே மிகச் சிறந்த உணவு. அதிகமான நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு காரணமாக 1 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் மரணிக்கும் அல்லது பாதிப்படையும் நிலைமையை
நிச்சயமாகக் கட்டுப்படுத்தலாம்’’என உறுதியாகக் கூறுகிறார் நிமிதா.
Average Rating