பாராளுமன்ற சிறப்புரிமைகள் எனும் பெயரில்: பொய்களையும் அவமானங்களையும் சமூக மயமாக்குதல் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 45 Second

நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகியவை ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்கள். இலங்கையின் சட்டவாக்க அமைப்பான பாராளுமன்றம் ஓர் உன்னத அமைப்பாகக் கருதப்பட்டாலும், மேற்கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க எந்த அளவுக்குச் செல்கிறார்கள் என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும்.

முழு நாட்டையும் ஆட்சி செய்வதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு பாராளுமன்றமே பொறுப்பு என்ற போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விதிகள், ஒழுங்குமுறைகள், நெறிமுறைகள் குறித்து பொதுமக்கள் கேள்விகளை வினவ ஆரம்பித்துள்ளனர்.

சட்டங்களை உருவாக்கும் அமைப்பு சட்டத்தை மதிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதே எந்தவொரு நாட்டினதும் குடிமகனின் முக்கிய எதிர்பார்ப்பாகும். சட்டங்களை இயற்றும் பொறுப்புடைய அமைப்பே, சட்டத்தை மதிக்கவில்லை எனப் பொதுமக்கள் கருதினால், அவர்கள் அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போக நேரலாம்.

சட்டரீதியாக ஒரு நாட்டை ஆட்சி செய்யும் போது, பாராளுமன்றம் போன்ற உயரிய அமைப்பின் சட்டத்தை மதிக்கும் தன்மையும் மக்கள் பிரதிநிதிகளின் சட்டத்தை மதிக்கும் தன்மையுமே அந்தச் சட்டங்களை முக்கியத்துவப்படுத்துகின்றன. எனவே, பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து சட்டத்தை மதிக்கும் தன்மை மற்றும் ஒழுக்க நெறிகளைப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அப்போதுதான் ‘உச்ச பாராளுமன்றம்’ என்ற வார்த்தை, தனது உண்மையான மதிப்பைப் பிரதிபலிக்கும். மேலும், மக்கள் பிரதிநிதிகளின் ஒழுக்கமே, ஒரு நாட்டின் ஒழுக்கத்துக்கு அடித்தளமாக அமையும்.

அதேவேளை, பாராளுமன்றத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துகளுக்கு எதிராக, நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு முறையான நடைமுறைகள் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையான விடயங்களை மாத்திரமே விவாதிப்பார்கள் என்பதோடு, அதனை ஒழுக்கமாகவும் நெறிமுறையுடனும் சட்டரீதியாகச் செயற்படுத்துவர் என்ற முன்முடிவின் கீழ் இந்த வரப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

எனவே, அந்த நம்பிக்கையை உறுதி செய்வது மக்கள் பிரதிநிதிகளின் தலையாய பொறுப்பாகும். பொதுவாக, இலங்கை பாராளுமன்றத்துக்குள் ஒழுக்கமானது கௌரவ சபாநாயகரால் அல்லது பிரதி சபாநாயகரால் அல்லது சூழ்நிலை அடிப்படையில் சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் ஒருவரால் உறுதிப்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில், சண்டையிடும் நிகழ்வுகள் ஏற்படுகின்றமை மிகவும் அரிதானவை அல்ல. மேலும், பெயர் கூறி அழைத்தல், புத்தகங்கள், தண்ணீர் போத்தல்கள், மிளகாய்த் தூள் என்பவற்றை வீசுதல் போன்றவற்றால் உடல் உபாதைகளை ஏற்படுத்துவது என்பன பாராளுமன்றத்துக்குள் வாடிக்கையாகிவிட்டன.

இத்தகைய சூழ்நிலைகள் தோன்றுவது, குடிமக்களுக்கான சட்டமியற்றும் பணிகளுக்குப் பொறுப்பான பாராளுமன்றம் குறித்த, பொது மக்களின் அதிருப்தியையும் அந்த அமைப்பின் மேலாதிக்கத்தின் மீது எழும் சந்தேகங்களையும் தவிர்க்க விடமாட்டாது. இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கத்துடனும் நெறிமுறை தவறாமலும் பேசுவதுடன், தமது சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்து, பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது, மக்கள் பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை உறுதி செய்வதன் மூலம், பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டி, நாட்டின் ஜனநாயகத்தையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பாராளுமன்ற சிறப்புரிமை கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அப்படியிருந்தும், சங்கத்தின் தலைவர், அதிகாரிகள் மற்றும் சங்கம் தொடர்பில் பல பொய்யான விடயங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதை நாம் அவதானித்துள்ளோம்.

இவ்வாறான போலியானதும் தீங்கிழைக்கும் கருத்துகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சிலருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், எமது சங்கம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மாத்திரமின்றி, பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்ற சிறப்புரிமைகள் இல்லாத பெரும்பான்மையான மக்களுக்கு எதிராகப் பாராளுமன்ற சிறப்புரிமைகள் பயன்படுத்தப்படுவதை ஒழுங்குபடுத்தவும் பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். இருப்பினும் இன்று வரை மேற்கூறிய முறைப்பாடுகள் குறித்த முன்னேற்றத்தைக் காண முடியவில்லை.ஜனநாயகத்தை மதிக்கும் மக்களுக்கு இது ஒரு துரதிர்ஷ்டமான நிலையாகும்.

சில நாள்களுக்கு முன்னர், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத், சுகாதார தொழிற்றுறையினரது மருத்துவ நிர்வாக நியமனங்கள் நிறுத்தப்பட்டமைக்கு காரணம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் சிலரே எனவும், மேலும் சில போலி குற்றச்சாட்டுகளையும் பாராளுமன்றத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக முன்வைத்தார்.

அதேசமயம், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எழுந்த சக பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் உபுல் கலப்பத்தியை அவர் பெயரிட்டு அழைத்ததை அவதானிக்க முடிந்தது. மேற்கூறப்பட்ட மருத்துவ நிர்வாக அதிகாரிகளின் நியமனத்தை நிலைப்படுத்த முடியாமைக்கான காரணம், சுகாதார சேவைகள் குறிப்பில், மருத்துவ நிர்வாக பணியாளர் பதவிக்கான தகுதி உள்ளிட்ட விடயங்களை உரிய பங்குதாரர்களின் இணக்கம் இன்றி முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தன்னிச்சையாகத் திருத்தம் செய்தமையே ஆகும்.

அந்த மாற்றங்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் முன்னர் கிடைத்த வாய்ப்பை இழக்கச் செய்ததாலும், கலந்துரையாடல்கள் அல்லது சமரசம் இன்றி திருத்தங்கள் செய்யப்பட்டதாலும் மருத்துவ தொழிற்றுறை சார்ந்தவர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியது.

எனவே, தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் மருத்துவ சேவைக் குறிப்பில் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான மாற்றங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாடுகளுடன் அந்தச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தக் குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய சுகாதார அமைச்சர் அறியமுடியாத காரணங்களால் காட்டும் தயக்கமே, மருத்துவ நிர்வாகப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் தற்போது ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு அடிப்படைக் காரணமாகும். இந்தச் சூழலில், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் சுகாதார அமைச்சரின் தன்னிச்சையான செயற்பாடுகளையும் தற்போதைய சுகாதார அமைச்சரின் குறைபாடுகளையும் மறைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது, அவரது அரசியல் கட்சியுடன் சேர்ந்த மருத்துவ சங்கங்களை திருப்திப்படுத்தும் முயற்சியாகவே சுகாதாரத்துறை சார்ந்த பலரால் பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தும் பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, தனது அரசியல் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகப் பொய்யான விடயங்களை சமூக மயமாக்கும் முயற்சிகளாகவே பார்க்க வேண்டும். மேலும், ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மேற்கூறிய செயலை எதிர்த்த மருத்துவர் மற்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெயர் குறிப்பிட்டமையானது அவர்களால் பேசப்படும் ‘ஒழுக்கம்’ என்பது இனிப் பொருந்தாது என்பதை நிரூபித்துள்ளது. அந்தச் சீரழிந்த அரசியலுக்குள் தாமும் இன்னொருவர் என்பதை நாட்டுக்கு அவர் காட்டியுள்ளார். இது நாட்டின் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களின் எதிர்பார்ப்பை அழித்துள்ளது.

இது தொடர்பான கடிதத்தை, ஜே.வி.பியின் அரசியல் பணியகம் மற்றும் மத்தியக் குழுவுக்குச் சமர்ப்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்பார்க்கிறது. அத்துடன், பாராளுமன்றத்துக்குள் நடந்துகொள்ளும் விதம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் இல்லாத மக்களை அவதூறு செய்தல், மேற்சொல்லப்பட்ட சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்களைச் சமூக மயமாக்கும் முயற்சிகள் குறித்து சபாநாயகர் அவதானம் செலுத்த வேண்டும் எனக் கோரவும் எதிர்பார்த்துள்ளோம்.

பாராளுமன்றத்தின் மேலாதிக்கம் மீதும், பாராளுமன்ற உறுப்பினர்களின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை இழந்த ஒரு நாட்டின் குடிமக்கள், ஜனநாயகத்தின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைப்பார்கள் என்பது சந்தேகமே. எனவே, பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தை உறுதிசெய்து, மக்கள் பிரதிநிதிகளைச் சரியான பாதையில் செலுத்துவதன் மூலம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவது அனைத்து மக்களினதும் உரிமை மற்றும் பொறுப்பாகும். எத்தகைய இடையூறுகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும், இந்த விடயத்துக்காகப் போராடுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோப் ஆயில், பேஸ்ட் தயாரிக்கலாம்…மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)
Next post அது ஒரு ஹைக்கூ காலம்!! (மகளிர் பக்கம்)