கண்ணே அலர்ஜியா? (மருத்துவம்)

Read Time:12 Minute, 10 Second

அலர்ஜி என்பது சருமத்தில்தான் வரும் என்றில்லை. கண்களிலும் வரலாம். கண்களில் ஏற்படுகிற பல பிரச்னைகளும் ஒவ்வாமையின் அறிகுறிகள் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண்களில் ஏற்படும் பருவ கால ஒவ்வாமைகள் மிகவும் சகஜமானவை. ஏற்கனவே அலர்ஜி இருப்பவர்கள், உதாரணத்துக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற சுவாச மண்டலம் தொடர்பான அலர்ஜி இருப்பவர்கள், சரும அலர்ஜி உள்ளவர்கள், கொசு கடித்தால் உடம்பெல்லாம் சிவப்பு நிறத் தடிப்பைப் பெறுபவர்கள் போன்றவர்களுக்கு கண்களிலும் அலர்ஜி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக கண்களில் வரக்கூடிய அலர்ஜிக்கு Allergic Conjunctivitis என்று பெயர். Conjunctiva என்றால் கண்களின் வெள்ளைப் பகுதிக்கு மேல் உள்ள கண்ணாடி போன்ற டிரான்ஸ்ஃபரன்ட் பகுதி. அந்த வெள்ளைப் பகுதிக்குப் பெயர் Sclera. அதற்கு மேல் டிரான்ஸ்ஃபரன்ட் பகுதியான Conjunctiva வில் ஏற்படுகிற அலர்ஜிதான் Conjunctivitis. குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த நிலைக்கு Spring catarrh என்று பெயர். அதாவது, ஸ்பிரிங் சீசன் என சொல்லக்கூடிய வசந்த காலத்தில் ஏற்படுகிற அலர்ஜி இது. இதற்கு Giant Papillary Conjunctivitis என இன்னொரு பெயரும் உண்டு.

கண்களின் மேல் இமைப் பகுதியைத் தூக்கிப் பார்த்தால் பெரிய பெரிய கற்கள் போல அந்த conjunctiva பகுதி வீங்கிப் போயிருக்கும். அதனால் குழந்தைக்கு வெள்ளை நிறத்தில் கயிறு மாதிரி அழுக்கு வந்து கொண்டே இருக்கும். தவிர கண்களைப் போட்டுத் தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். கண்கள் சிவந்து போகும். கண்களின் வெள்ளைப் பகுதியானது மெதுவாக வித்தியாசமான நிறத்துக்கு அதாவது, வெளிர் மஞ்சளாக மாறிவிடும். குழந்தையின் கண்களே பார்ப்பதற்கு வித்தியாசமாகக் காட்சியளிக்கும். பெரும்பாலான பெற்றோரும் இதை சாதாரண அலர்ஜி என மருந்து போட்டு அலட்சியமாக விட்டுவிடுவார்கள். மருத்துவரிடம் அழைத்துச் செல்ல மாட்டார்கள்.

கார்னியா எனப்படுகிற கருவிழியில் ரத்தக் குழாய்கள் கிடையாது. அதை Avascular என்கிறோம். ஆனால், இந்த அலர்ஜி அலட்சியப்படுத்தப்படுகிற பட்சத்தில் கருவிழிகளில் ரத்தக் குழாய்கள் வளர்ந்து கருவிழிகள் வெள்ளையாக மாறி, பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம். கூடவே கிளாக்கோமா எனப்
படுகிற கண் அழுத்த நோய் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம். அதாவது, நீண்ட கால ஸ்டீராய்டு மருந்தின் உபயோகத்தாலும் கண் அழுத்த நோய் வரலாம். எனவே, இதை சாதாரண அலர்ஜியாக அலட்சியப்படுத்தக் கூடாது.

குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். அசுத்தமான மண்ணில் விளையாட விடக்கூடாது. கை நகங்களை வெட்டி விட வேண்டும். குழந்தைகள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால்களையும் கழுவப் பழக்குவதோடு, கண்களிலும் குளிர்ந்த தண்ணீரை அடித்து சுத்தம் செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும். தூசி, பூவின் மகரந்தம் மற்றும் பூச்சிகள் இந்த மூன்றும்தான் பிரதானமாக அலர்ஜியை ஏற்படுத்துகிற விஷயங்கள். இது தவிர தலையில் பொடுகு இருந்தால் கண்களில் உள்ள இமை முடிகளிலும் பொடுகு வரலாம். அதற்குப் பெயர் Blepharitis. அதாவது, கண் இமையில் ஏற்படுகிற அலர்ஜி.

இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பொடுகின் காரணமாக ஏற்படுவது. இன்னொன்று இமை முடியில் ஏற்படுகிற தொற்றின் காரணமாக வருவது. மிக அரிதாக கண்களில் பேன் கூட வருவதுண்டு. இமை முடிகளில் வருகிற பேன்களைக் கண்டுபிடிப்பதே மிகவும் சிரமம். Slit lamps என்கிற கருவியின் உதவியுடன் பெரிதுபடுத்திப் பார்த்தால்தான் பேன்களின் முட்டைகள் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதற்கான சிகிச்சை ரொம்பவே சவாலானது என்றாலும் சாத்தியமானதுதான். குழந்தைகள் கண்களை அடிக்கடி தேய்த்துக் கொண்டே இருப்பார்கள்.

இமை முடிகளில் வெள்ளை வெள்ளையாகத் தெரியும். படிப்பில் கவனம் இருக்காது. மருத்துவரிடம் காட்டினால் மேலே சொன்ன விஷயங்கள்தான் காரணம் என்பது தெரிய வரும். இவை எல்லாவற்றுக்கும் அந்தரங்க சுத்தமும் சுகாதாரமும் மிக முக்கியம். தலையில் பொடுகு இருந்தால் அதை சரியாக்க பிரத்யேக ஷாம்பு உபயோகித்து சரி செய்ய வேண்டும். கண் இமை முடியையும் பேபி ஷாம்பு உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டும். கண் மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அலர்ஜியை உண்டாக்கக்கூடிய உணவுகளையும் பிற விஷயங்களையும் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளை டூ வீலரில் கூட்டிச் செல்லும் போது முன் பக்கத்தில் உட்கார வைக்கக்கூடாது. நடுவில் உட்கார வைக்க வேண்டும். ரொம்பவும் குட்டிக் குழந்தை என்றால் தன்னை நோக்கி உட்கார வைத்துக் கொள்ளலாம். குழந்தைக்கு கூலிங் கிளாஸ் போட்டு அழைத்துச் செல்லலாம். பிரச்னை சரியானாலும், மருத்துவர் ஆலோசனைக்கு வரச் சொன்ன தேதியில் போக வேண்டும். சரியாகி விட்டதே என அலட்சியமாக விடக்கூடாது. சில நேரங்களில் இதிலும் நீண்ட காலப் பிரச்னைகள் வரலாம்.அலர்ஜியினால் கருவிழிகூட பாதிக்கப்படலாம். அதை Keratitis என்கிறோம். அடுத்து மிக அரிதாக, அலர்ஜியா, மெட்ராஸ் ஐ பிரச்னையா என்கிற குழப்பம்கூட வரலாம்.

மெட்ராஸ் ஐ என்பதும் ஒருவகையான அலர்ஜிதான். அது அடினோ வைரஸ் என்கிற தொற்றினால் வருவது. சில நேரங்களில் பாக்டீரியாவும் சேர்ந்து தொற்றை உருவாக்கலாம். கண்கள் பாதியோ, முழுவதுமாகவோ வீங்கலாம். கண்களில் இருந்து மஞ்சள் நிறக் கசிவு வரலாம். கண்கள் சிவந்து போகலாம். இப்போது வரும் மெட்ராஸ் கருவிழிகளையும் பாதிக்கிறது. சுய மருத்துவம் கூடாது. மருத்துவரைப் பார்த்து அவர் சொல்கிற நாட்கள் வரை மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தனி சோப், தனி டவல் என அதிகபட்ச சுகாதாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் வரும். குறிப்பாக திடீரென மழை பெய்து, நின்றால் நிறைய பேருக்கு இந்தப் பிரச்னையைப் பார்க்கலாம்.

கண்களின் முன் பக்கத்தில் புழுக்கள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்னையும் வருவதுண்டு. அவை ரத்தக்குழாய்கள் வழியே இடம்பெயர்ந்து கண்களுக்கு வரும். இதிலும் கண்கள் அடிக்கடி சிவந்து போகும். Slit lamp வைத்துப் பார்த்தால் உள்ளே புழுக்கள் நடனமாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அதை கண் மருத்துவர்களால் மட்டும்தான் கண்டுபிடித்து அகற்ற முடியும். மிக முக்கியமாக குழந்தைகளுக்கு கண்களில் மை இடுவதைத் தவிர்க்க வேண்டும். சிலர் விரலில் மையைத் தொட்டு, குழந்தையின் கண்களில் வைப்பார்கள்.

நகம் இருக்கும் போது, அலட்சியமாக மை வைப்பதால், கருவிழியில் கிழிசலே ஏற்பட்டுக் குழந்தையைக் கொண்டு வருகிறவர்களைப் பார்க்கிறேன். இரண்டு கண்களிலும் கருவிழி கிழிந்து தையல் போட்ட அனுபவம்கூட உண்டு. மை இட்டால் குழந்தையின் கண்கள் பெரிதாகும் என்கிற மூட நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. மை இட்டால் கண்கள் பெரிதாகத் தெரியுமே தவிர, அதன் அளவு மாறாது. எனவே ஒரு வயதுக்கு முன்பான குழந்தைக்கு மை இடுவதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. அதற்குப் பிறகும் மிக ஜாக்கிரதையாக போட வேண்டும். தரமான மையாக உபயோகிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு முகத்தில் பவுடர் போடக்கூடாது. இப்போதெல்லாம் உடம்புக்கே கூட பேபி பவுடர் போடக் கூடாது என்கிறார்கள்.

முகத்தில் போடும்போது அதுவே கண்களில் அலர்ஜியை ஏற்படுத்தலாம். ஆஸ்துமா மாதிரியான அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு அதற்கான மருத்துவரிடம் காட்டி சிகிச்சைகள் எடுத்தால்தான் சரியாகும். சிலருக்கு எந்த காரணத்தினால் அலர்ஜி என்றே தெரியாத போது, அதற்கான பிரத்யேக டெஸ்ட் மூலம் கண்டுபிடித்தும் சிகிச்சை அளிக்கலாம். குழந்தைகளின் கண்களில் எண்ணெய் விடுவது, தாய்ப்பால் விடுவது போன்றவை எல்லாம் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
குழந்தைக்கு தலைமுடி நன்கு வளர வேண்டும் என சீத்தாப்பழ விதையை அரைத்துத் தேய்த்துக் குளிப்பாட்டும் பழக்கமும் இருக்கிறது. சீத்தாப்பழ விதையெல்லாம் கண்களுக்கு மிகக் கெடுதலானது. கருவிழியை முழுக்க வெள்ளையாக மாற்றி விடும். குழந்தை எதுவும் தெரியாமல் கண்களைத் தேய்க்கும். அதன் விளைவாக கருவிழி முழுக்க கீறல்கள் இருக்கும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரிசியில் ஆரோக்கிய ஐஸ்கிரீம்!! (மகளிர் பக்கம்)
Next post விளையாட்டல்ல… விபரீதம்!! (மருத்துவம்)