ஏ ஃபார் ஆப்பிள்!! (மருத்துவம்)
‘தினம் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்ற அறிவுரையை வயது வந்தவர்கள் பின்பற்ற முயற்சிக்கிறோம். குழந்தைகளுக்கோ தண்ணீரின் தேவையை உணர்கிற பக்குவம் இல்லை. அதனால், நீர்ச்சத்து தொடர்பான குறைபாடுகளால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் வெயிலில் விளையாடுவதில் ஆசை கொண்ட குழந்தைகளுக்கு எளிதில் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுவிடுகிறது. இதைத் தவிர்க்க ‘முடிந்தபோதெல்லாம் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள்’ என்று பரிந்துரைத்திருக்கிறது கனடாவில் இருக்கும் கல்கேரி பல்கலைக்கழகம்.
குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிற Gastroenteritis என்கிற இரைப்பை குடல் அழற்சி பிரச்னைக்கும், Dehydration என்ற உடல் வறட்சிக்கும் ஆப்பிள் ஜூஸ் அருமையான மருந்து என்று கூறியிருக்கிறார்கள். சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களை இழக்கும் நேரத்தில் அதை சமன் செய்யும் எலக்ட்ரோலைட்டாக ஆப்பிள் ஜூஸ் செயல்படுவதுதான் இதன் காரணமாம். இது பெரியவர்களுக்கும் சேர்த்துத்தான். தக்காளி விலையே தாறுமாறா இருக்கும்போது ஆப்பிளுக்கு எங்கே போறது என்கிறீர்களா? அதுவும் சரிதான்! நீண்ட நாட்கள் வாழ வேண்டுமா? ‘ஓய்வுக்கு ஓய்வு கொடுங்கள்’ என்கிறார்கள் அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
அதாவது, 65 வயதுக்குப் பிறகு வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறவர்களுக்கு, அதற்கு முன்னரே ஓய்வு பெறுகிறவர்களின் இறப்பு அபாயத்தைவிட 11 சதவிகிதம் குறைவு என்கிறார்கள். 1992 முதல் 2010ம் ஆண்டு வரை ஓய்வு பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது இந்த ‘Healthy Retirement Study.’ இந்த ஆராய்ச்சியில் 12 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.‘இது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. எனினும், தாமதமாக ஓய்வு பெறுகிறவர்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
இந்த மகிழ்ச்சி அவர்களின் ஆயுளை நீட்டிக்கிறது. இதில் வாழ்க்கைமுறை, மற்ற உடல் பிரச்னைகள், சுற்றுப்புறச் சூழல் என்று பல காரணங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன’ என்று விளக்கியிருக்கிறார்கள். இதைப் பற்றி யோசித்துக்கொண்டே கேன் வாட்டர் போடுகிற முதியவரிடம், ‘லோ பிரஷர்னு சொன்னாங்களே… எப்படி இருக்கீங்கண்ணே?’ என்று கேட்டேன். ‘உழைக்கிற உடம்பு தம்பி… ஒண்ணும் ஆகாது’என்கிறார்! இதுவும் சரிதான் !
Average Rating