பெண்ணைப் பெற்றவர்களுக்கு… !! (மருத்துவம்)

Read Time:11 Minute, 36 Second

பிரச்னைகளின் பெட்டகமான பிசிஓஎஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றியும் அவை குழந்தையின்மையைக் குறி வைத்துத் தாக்குகிற அவலத்தையும் கடந்த இதழில் பார்த்தோம். பிரச்னை என ஒன்றிருந்தால் அதற்கு தீர்வும் இருந்துதானே ஆக வேண்டும்? பிசிஓஎஸ் குறித்த பயமுறுத்தல்களில் பீதியடைந்திருக்கும் பெண்களுக்கு பயம் போக்கும் வகையில் ஆறுதலான, அவசியமான சில தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன் வைக்கிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி.

இந்த விஷயத்தில் என்னுடைய முதல் அறிவுரை பெண்ணைப் பெற்றவர்களுக்கு. மகள்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்… நல்ல வேலையில் அமரச் செய்ய வேண்டும்… நல்ல இடமாகப் பார்த்துத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து குறையின்றிச் செய்கிறார்கள். ஆனால், திருமணத்தின் போது அவள் தாயாகத் தகுதி உள்ளவள்தானா என்பதைப் பார்க்கத் தவறி விடுகிறார்கள். அவளது ஜனன உறுப்புகள் குறைகள் இன்றி இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.

மாதவிலக்கு சுழற்சி முறையின்மை போன்று வெளிப்படையாகத் தெரிகிற பிரச்னைகள் கூட தானாகச் சரியாகும் என அலட்சியப்படுத்துவது, ஆசை மகளின் சந்ததியே அழிந்து போகக்கூடக் காரணமாகலாம்.

பிசிஓஎஸ்ஸுக்கான பரிசோதனைகள்…

சாதாரண ஸ்கேன் மூலமே இந்தப் பிரச்னையை எளிமையாகக் கண்டறியலாம். திருமணமாகாத பெண்களுக்கு வயிறு வழியேவும், திருமணமான பெண்களுக்கு அடி வழியேவும் ஸ்கேன் செய்து, கர்ப்பப்பை மற்றும் சினைப்பையைப் பார்க்கலாம். பிசிஓஎஸ் இருந்தால் அது ஒருவித சிறப்பு அமைப்பில் தனியே தெரியும். அதாவது, சினைப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் கல் பதித்த நெக்லஸ் போன்று சினைப்பையின் ஓரத்தில் உருவாகிக் காட்சியளிக்கும். சினைப்பையின் மையப்பகுதி பளீரென இருக்கும்.

அடுத்தது AMH என்கிற ஹார்மோன் அளவைத் தெரிந்து கொள்வதற்கான ரத்தப் பரிசோதனை. இது 6.7க்கு மேல் இருந்தால் பிசிஓஎஸ் உறுதி செய்யப்படும்.

பிசிஓஎஸ் உள்ள எல்லாப் பெண்களுக்கும் மாதவிலக்கு சுழற்சி முறைதவறித்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. 70 சதவிகிதப் பெண்களுக்கு அப்படி இருக்கும். 80 சதவிகிதப் பெண்களுக்கு கருமுட்டை வெளியாகிற செயலே நடக்காது. மாதவிலக்கான 21வது நாள் ஒரு ரத்தப் பரிசோதனையின் மூலம் Serum progesterone அளவு கண்டறியப்படும். அது 5க்குக் கீழ் இருந்தால் கருமுட்டை வெளியேறுதல் நடக்கவில்லை என்பது தெரியும். தவிர, காலையில் வெறும் வயிற்றில் செய்யப்படுகிற ரத்தப் பரிசோதனையில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவானது 25க்கு மேல் இருந்தால் Insulin Resistance பிரச்னையும் இருக்கிறது என உறுதியாகும். சாதாரணமாக இந்த அளவு 25க்குக் கீழ் இருக்க வேண்டும்.

என்ன தீர்வு?

மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலமாகவே பிசிஓஎஸ் பிரச்னையை ஓரளவுக்கு குணப்படுத்திவிட முடியும். பிசிஓஎஸ் உடன் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பிரச்னையும் உள்ளவர்களுக்கு Hyperinsulinemia என்கிற பிரச்னை வரலாம். அதுவும் கருத்தரிப்பதற்குத் தடையாக அமையும். எனவே அவர்களுக்கு மெட்ஃபார்மின் (Metformin) மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். `மெட்ஃபார்மின் என்பது நீரிழிவுக்கு கொடுக்கறதாச்சே… அப்போ நமக்கும் டயாபடீஸ் வந்திருச்சா?’ என பயப்பட வேண்டாம். இது நீரிழிவு வராமல் தடுப்பதற்கான மாத்திரை. தவிர, கருமுட்டை வெளியேறுதலுக்கு உதவி செய்து, கருத்தரித்தால் அடிக்கடி கலைந்து போகாமல் காக்கவும் உதவக்கூடியது.

பருமன் அதிகமானவர்களுக்கு எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தப்படும். பருமனும் பிசிஓஎஸ்ஸும் சேர்ந்துள்ளவர்களுக்கு Sub fertility என்கிற குழந்தையின்மை பிரச்னை வரும் என முந்தைய இதழிலேயே பார்த்தோம். பருமனான பெண்களின் உடலில் உள்ள அனைத்துக் கொழுப்பு செல்களிலும் ஈஸ்ட்ரோஜென் சேர்ந்து கொண்டு, ஒவ்வொரு செல்லும் ஒரு கருத்தடை மாத்திரை மாதிரி வேலை செய்து, மிக மோசமான ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். அது கருமுட்டை வெளியேறுதலை பாதிக்கும்.

இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியும் முறையற்று இருப்பதால், திடீரென கர்ப்பமாகி இருந்தால்கூடத் தெரியாமலே போகும். 5-6 மாதங்கள் வரை மாதவிலக்கே வரவில்லை என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், கருத்தரித்திருக்கும். திடீரென கையிலோ, காலிலோ அடிபட்டு, அதற்காக எக்ஸ்ரே எடுப்பார்கள். கர்ப்பமாக இருக்கும் போது எக்ஸ்ரே எடுத்தால் அந்தக் கதிர்கள் கருவைப் பாதிக்கும்.

அதுவும் அவர்களுக்குத் தெரியாது. பிறகு கர்ப்பமானது தெரிய வரும் போது, அந்தக் கரு ஆரோக்கியமாக இல்லாமல் போய், அந்தச் சுமையையும் சேர்ந்து சுமப்பார்கள். எனவேதான் பிசிஓஎஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு எடைக் குறைப்பு கட்டாயமாக அறிவுறுத்தப்படுகிறது. பக்க விளைவுகள் இல்லாத பருமன் குறைக்கும் சிகிச்சைகளை மகப்பேறு மருத்துவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

மாத்திரைகளில் சரிப்படுத்த முடியாத பிசிஓஎஸ் பிரச்னையை Ovarian drilling முறைப்படி தீர்வு காணலாம். லேப்ராஸ்கோப்பி முறையில் சினைப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை உடைத்து விடலாம்.

கருமுட்டையே உருவாகாத Anovulation பிரச்னைக்கும் சிறப்பு மாத்திரைகளும் ஊசிகளும் உள்ளன. உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் அதைப் பற்றியும் ஆலோசிக்கலாம்.

பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெண்களுக்குக் கருத்தரிக்க பெரும்பாலும் மருத்துவ உதவியும் சிகிச்சையும் அவசியப்படும். கருமுட்டைகள் உருவாக அளிக்கப்படுகிற சிகிச்சையின் விளைவாக நிறைய முட்டைகள் உருவாகி, ஒன்றுக்கு மேலான கருக்கள் உருவாகலாம். இரட்டைக் குழந்தைகள் என்றால் மகிழ்ச்சி. 3, 4 குழந்தைகள் என்றால் ரிஸ்க் அதிகம். அத்தனை கருக்களையும் சுமப்பது ஆபத்து என்பதால், Selected fetal reduction முறையில் ஒன்றிரண்டு கருக்களை அழிக்க வேண்டிவரும். கர்ப்பம் தரிப்பது மட்டுமின்றி, சுமப்பது, பிரசவிப்பது வரை அவர்களுக்கு ஒவ்வொரு நாளுமே ஒரு யுகமாக மிகுந்த சிரமத்துடனேயே கழியும்.

சில நேரங்களில் பிசிஓஎஸ்ஸுக் கான சிகிச்சைகளினால் சிலருக்கு Ovarian Hyper Stimulation Syndrome (OHSS) என்கிற பிரச்னை வரலாம். இதில் வயிறு வீங்கிக் கொள்ளும். வயிற்றுக்குள் நீர் கோர்த்துக் கொள்ளும். அதற்குத் தனியே மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும்.

வெளிநாடுகளில் மூட்டு வலி, மார்பகப் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் சேர்ந்து தனித்தனி அமைப்புகளை நடத்துகிறார்கள். அதில் அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, அடுத்தவர்களுடன் ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். அது போன்ற விழிப்புணர்வு நம்மூர் பெண்களுக்கும் வரவேண்டும்.

பிசிஓஎஸ் வேறு என்ன செய்யும்?

கருமுட்டை உருவாகாது.

உருவானாலும் சரியாக வெளியேறாது. அதனால் கருத்தரிக்காது.

மாதவிலக்கான 2வது நாள் பெண்களின் உடலில் சுரக்கும்

LH என்கிற ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். 2 முதல் 6 வரை இருக்க வேண்டிய அந்த ஹார்மோன் 7 முதல் 12 வரை கூடப் போகும். அப்படி அளவுக்கதிகமாக இருந்து அந்தப் பெண் கருத்தரித்தால் அந்தக் கருமுட்டை யின் தரம் நன்றாக இருக்காது. தானாக அந்தக் கரு கலைந்துவிடும்.

நிறைய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகி, அதனால் Hyperplastic Endometrium என்கிற பிரச்னை வரும். அதாவது, கருமுட்டை வெளியேறினாலும் அது முறையாக பதிந்து வளர ஏதுவாக இல்லாமல் கருப்பையின் உட்புற லைனிங் பகுதி தகுதியற்றுப் போகும். சாதாரணமாக கருப்பையின் லைனிங் பகுதியானது கருமுட்டை வெளியேறும் போது ரோஜாப் படுக்கை மாதிரி இருக்கும். கருவைத் தாங்கி வளரச் செய்யத் தயாராக இருக்க வேண்டிய அந்தப் பகுதி, அதிக ஈஸ்ட்ரோஜென் சுரப்பினால் ரத்த ஓட்டம் மாறுபட்டு, குழந்தையை ஏற்றுக் கொள்ளும் தன்மையை இழக்கும். அதனாலும் குழந்தை தங்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோம்பேறிக் கண்!! (மருத்துவம்)
Next post படுக்கையறையில் படிகள் பல ? (அவ்வப்போது கிளாமர்)