குறை மாத கண்மணிகளுக்கு கூடுதல் கவனம் தேவை! (மருத்துவம்)

Read Time:7 Minute, 56 Second

குழந்தை பிறந்ததும் அதன் கண்களைப் பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் பற்றி பார்த்தோம். அப்படிப் பாதிக்கிற பிரச்னைகள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவாகப் பார்ப்போம். குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளைப் பாதிக்கிற முக்கியமான பிரச்னை ஆர்.ஓ.பி. (ROP) எனப்படுகிற Retinopathy of Prematurity. ஆசிய நாடுகளின் 3வது பயங்கர நோயாகக் கருதப்படுகிற இந்த ஆர்.ஓ.பி. கொஞ்சம் கவனிக்கத் தவறினாலும் குழந்தையின் பார்வையைப் பறித்துவிடும் அளவுக்கு ஆபத்தானது.

அதென்ன ஆர்.ஓ.பி?

உங்கள் குழந்தை 35 வாரங்களுக்குள் பிறந்துவிட்டாலோ, அதன் எடை 2 கிலோவுக்கும் குறைவாக இருந்தாலோ, பிறக்கும்போதே மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் இருந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தாலோ, குழந்தையின் கண்களை அவசியம் பரிசோதிக்க வேண்டும். 10 மாதங்கள் முடிந்து பிறக்கும் குழந்தைகளின் உடல் மற்றும் கண்களின் வளர்ச்சியும் முழுமையாக இருக்கும். அதற்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரையில் ஏற்படுகிற பாதிப்பையே ஆர்.ஓ.பி. என்கிறோம்.

அறிகுறிகள்…

குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆர்.ஓ.பி. பிரச்னை இருப்பதற்கு வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இருக்காது. பிரச்னை தீவிரமாகி, விழித்திரை பிரிகிற அளவுக்குப் போகும் போதுதான் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும்.

காரணங்கள்…

நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரையில் உள்ள ரத்தக் குழாய்கள் முழுமையாக வளர்ச்சி யடைந்திருக்கும். குறைமாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த வளர்ச்சி முழுமை யடைவதில்லை. கண்களின் வளர்ச்சியும் முழுமைஅடைவதில்லை. தேவையற்ற ரத்தக் குழாய்கள் உருவாகும். அதன்விளைவாக விழித்திரையில் ரத்தக் கசிவும் விழித்திரை விலகலும் நிரந்தரமாக பார்வை பறிபோதலும் நிகழலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

குறைமாதத்தில் பிறந்தாலோ, 2 கிலோவுக்கும் குறைவான எடையுடன் இருந்தாலோ அந்தக் குழந்தையை குழந்தை நல மருத்துவர்கள், கண் சிகிச்சை நிபுணர்களிடம் பிறந்த ஒரு மாதத்திற்குள் அனுப்ப வேண்டும். சில குழந்தைகள் பிறந்து ஒரு மாதமாகியும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் கண் சிகிச்சை நிபுணரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று குழந்தையின் கண்களைப் பரிசோதிக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகும் கண் மருத்துவர் சொல்லும் இடைவேளைகளில் குழந்தையின் கண்களை பரிசோதிக்க வேண்டும்.

ரிஸ்க் உண்டா?

ஆர்.ஓ.பி. பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பார்வைப் பிரச்னைகள் அதிகரிக்கும் அபாயங்கள் மிக அதிகம். இந்தக் குழந்தைகளுக்கு வயதான பிறகு விழித்திரை விலகல், கிட்டப்பார்வை, சோம்பேறிக் கண் மற்றும் கண்புரை பிரச்னைகள் தாக்கும் வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகம்.

5 நிலைகள்…

ஆர்.ஓ.பியில் 5 நிலைகள் உள்ளன. முதல் நிலையில் குழந்தையின் விழித்திரையில் ரத்தக் குழாய்களின் அசாதாரண வளர்ச்சி மிக மிதமாக இருக்கும். 2வது நிலையில் அது சற்றே அதிகரிக்கும். இந்த 2 நிலைகளிலும் பிரச்னை தீவிரமாகாமல், சீக்கிரமே சரியாகி விடும். 3வது நிலையில் இந்த வளர்ச்சி இன்னும் கொஞ்சம் மோசமாகும். ரத்தக்குழாய்களின் வளர்ச்சியானது கண்களின் மையப்பகுதியை நோக்கி இருக்கும். இதுவும் எளிதாக குணப்படுத்தக்கூடியதே.

ஆனாலும், சில குழந்தைகளுக்கு விழித்திரையின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்தோ, முறுக்கிக் கொண்டோ இருக்கக்கூடும். சரியான நேரத்தில் கண்டு பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டால் இந்த நிலையிலும் விழித்திரை விலகலைத் தவிர்க்க முடியும். 4வது நிலையில் ஒரு பகுதியில் விழித்திரை விலகல் இருக்கலாம். அதன் விளைவாக அந்தப் பகுதியில் ரத்தக் கசிவும், அசாதாரண ரத்தக்குழாய்கள் விழித்திரையை இழுப்பதும் நடக்கலாம். 5வது நிலையில் விழித்திரை முற்றிலும் விலகி விடும்.

இந்த நிலையில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியப்படுத்தப்பட்டால், குழந்தைக்கு நிரந்தரப் பார்வையின்மை ஏற்படலாம். பெரும்பாலான குழந்தைகளுக்கு முதல் மற்றும் 2வது நிலை பாதிப்புதான் ஏற்படுகிறது. மிகச் சில குழந்தைகளுக்கே அது பார்வையைப் பறிக்கிற அளவுக்குத் தீவிரமடைகிறது.

சிகிச்சை என்ன?

குறைமாத விழித்திரைப் பாதிப்புக்கு சமீபகாலம் வரை க்ரையோதெரபி என்கிற சிகிச்சை தான் தீர்வாக இருந்தது. அது மயக்க மருந்து கொடுத்து செய்யப்படுகிற சிகிச்சை. இப்போது லேசர் சிகிச்சையின் மூலம் அது இன்னும் எளிதாகியிருக்கிறது. இந்த இரண்டு சிகிச்சைகளிலுமே விழித்திரையின் தேவையற்ற புறப்பகுதிகள் நீக்கப்பட்டு, அசாதாரண ரத்தக் குழாய் வளர்ச்சியும் தடை செய்யப்படும். லேசரில் குணப்படுத்த முடியாதபட்சத்தில் அறுவைசிகிச்சை தேவைப்படலாம். ஆனால், அதில் பார்வையைத் திரும்பப் பெறும் வாய்ப்பு வெறும் 30 சதவிகிதம் மட்டுமே.

ஒரு அட்வைஸ்…

பத்து மாதங்கள் முடிவதற்குள்ளேயே குழந்தை பெறும் பெண்கள் இந்தியாவில் மிக அதிகம். காரணம், கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் தொற்று. அதை சரியாக்கினாலே இந்த பாதிப்பு பெருமளவில் குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 மாதங்களில் கண் சிமிட்ட வேண்டும்! (மருத்துவம்)
Next post டீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)