உண்ணுதல் கோளாறுகள் (Eating Disorders)! (மருத்துவம்)

Read Time:16 Minute, 30 Second

சென்ற இதழில், சிறு குழந்தைகளை பாதிக்கும் உண்ணுதல் கோளாறுகள் குறித்துப் பார்த்தோம். இவ்விதழில், குழந்தைகள் மற்றும் டீனேஜரை அதிகம் பாதிக்கும் பசியற்ற உளநோய் (Anorexia Nervosa) மற்றும் பெரும்பசி நோய் (Bulimia Nervosa) பற்றிப் பார்ப்போம். இவை எல்லாமே, ஒருவரின் உணவுப் பழக்கத்தை மாற்றி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மனநோய்கள். டீனேஜில் ஆரம்பிக்கும் இப்பிரச்னைகள், சில நேரங்களில் குழந்தைப் பருவத்திலேயே வந்து விடுவதும் உண்டு.

பொதுவாக டீனேஜினர், தங்களின் தோற்றம், (எடை குறித்து அதிக கவனம் செலுத்துவது வழக்கம். பருவமடைதலின் போது ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் மற்றும் சமுதாய எதிர்பார்ப்புகள் தரும் அழுத்தம் காரணமாக, தோற்றத்தைக் குறித்த கவலை அதிகமாகி ‘உண்ணுதல் கோளா’றாகவும் ஆகிவிடுகிறது. பெண்களிடையே அதிகமாகக் காணப்பட்டாலும், இது ஆண்களையும் பாதிக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பிரச்னையை, குடும்பத்தினரிடமிருந்தும் மாதக்கணக்கில்… ஏன் வருடக்கணக்கில் கூட மறைத்து விடுகின்றனர். இக்கோளாறுள்ள குழந்தைகளின் உண்மையான தோற்றத்துக்கும் தோற்றத்தை குறித்த அவர்களின் எண்ணத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1. பசியற்ற உளநோய் (Anorexia Nervosa)

இந்த மனநலப் பிரச்னை உள்ளவர்கள், தங்கள் எடை குறித்த தீவிர பயம் கொண்டிருப்பர். அதாவது, குண்டாகி விடுவோமோ என மிகவும் கவலைப்படுவர். அதோடு, தங்கள் உடல் அளவு / எடையைக் குறித்து தவறான கருத்தையும் கொண்டிருப்பர். அதாவது, அவர்கள் வயதுக்கும் உயரத்துக்கும் இயல்பாக இருக்க வேண்டிய எடையுடன் மிகக் குறைவாக இருந்தாலும், தாங்கள் குண்டாக இருப்பதாகவே நம்புவார்கள். இதனாலேயே, தங்கள் வயது, ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவைக் கூட உட்கொள்ள மாட்டார்கள் (Restrictive Type). அப்படியே அதீதமாக உட்கொண்டாலும், உடனே எடையைக் குறைப்பதற்காக, சாப்பிட்டதை வேண்டுமென்றே வாந்தி / பேதி மூலமாக வெளியேற்றியும் விடுவர் (Purging Type). இளைஞர்கள் இயல்பாக தங்கள் உருவத்தைக் குறித்து தங்களைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து கவலை கொள்வதும், டயட்டிங் இருப்பதும் மட்டுமே பசியற்ற கோளாறு ஆகிவிடாது. இதற்கென உடல்ரீதியான அறிகுறிகள் இருக்கின்றன. அவை…

1. எடை குறித்த பதற்றம், மனச்சோர்வு / களைப்புணர்வு.
2. மிகவும் ஒல்லியாக இருப்பினும் டயட்டில் இருப்பர்.
3. மனதின் கட்டாயத்தின் மேல் மிக அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள்.
4. எடை குறைவாக இருப்பினும், குண்டாகி விடுவது குறித்து அதிக பயம் கொள்வர்.
5. அடிக்கடி எடையை சரி பார்ப்பர்.
6. விழாக்கள் – குறிப்பாக விருந்து போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பர்.
7. அதிக அளவு எடை குறைந்ததை மறைக்க, தளர்வான உடை அணிவார்கள்.
8. வினோதமான உண்ணும் பழக்கம் கொண்டிருப்பர். (எ.டு: சாப்பிட மறுப்பர், தனிமையில் ரகசியமாக, ஒவ்வொரு வாய் உணவையும் கவனத்துடன் சாப்பிடுவார்கள்… சில வகை உணவுகளை மட்டும் குறைந்த அளவில் உண்பது உண்டு. மற்றும் ஒரு வேளை மட்டுமே உண்பது…)

பசியற்ற உளநோயினால் ஏற்படும் விளைவுகள்

1. ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலை குறைந்து விடும்.
2. முடி கொட்டும்… நகம் உடையும்.
3. சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருக்கும் / நின்று போவதுமுண்டு.
4. எலும்புகள் தேய்மானம் மற்றும் மூட்டு வீக்கம்.
5. சீரற்ற இதயத்துடிப்பு.
6. முக்கிய உடலுறுப்புகளான மூளை, இதயம் மற்றும் சிறுநீரகம் பழுதடையும்.
7. குளிர் தாங்க முடியாது.
8. ரத்தசோகை.
9. கவனக் குறைவு / தலைச்சுற்றல்.

சிகிச்சை

பசியற்ற நோய் பாதித்த குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது மிகவும் சிரமமான காரியம். தங்களுக்கு பிரச்னை இருப்பதையே இவர்கள் நம்ப மறுப்பதுடன், கோபமும் எரிச்சலும் அடைவார்கள். சிகிச்சைக்குச் சென்றால் குண்டாகி விடுவோம் என்ற அதீத பயமும் அவர்களை, சிகிச்சையை நிராகரிக்கச் செய்யும். மறுத்தாலும், மருத்துவரின் ஆலோசனைப்படி இவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துவது மிகவும் முக்கியம்.

இவர்களுக்கு பழையபடி தேவையான அளவு எடையை ஏற்றுவதும் தகுந்த உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்துவதும்தான் சிகிச்சையின் குறிக்கோள். சிலநேரங்களில், உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாடு (Malnutrition) ஏற்படும்போது மருத்துவமனையில் சேர்த்து ட்யூப் மூலம் உணவை செலுத்த வேண்டியிருக்கும்.

நீண்ட கால சிகிச்சையாக, இவர்களுக்கு, உளவியல்-சார் சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால், மனச்சோர்வுக்கு மருந்தும் பரிந்துரைக்கப்படலாம். உணவியல் வல்லுனர்களின் ஆலோசனையும் இவர்களுக்கு உதவும். தங்கள் தோற்றம், சாப்பிடுவது, உணவு போன்ற விஷயங்களைப் பற்றிய இவர்களின் தவறான கருத்து / சிந்தனையை மாற்ற ஆலோசனை வழங்கப்படும். ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டால், குறைந்தகால சிகிச்சையே போதுமானது.

2. பெரும்பசி நோய் (Bulimia Nervosa)

இக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர், குறைந்த நேரத்தில் (2 மணி இடைவெளியில்), சராசரி மனிதரைக் காட்டிலும், மிகவும் அதிக அளவு உணவை தொடர்ந்து உட்கொள்வார்கள். பொதுவாக சுயகட்டுப்பாடு இன்றி இவர்கள் இப்படி அதிகமாக உண்பது வழக்கம். சாப்பிட்ட பிறகு, அதை நினைத்து வெட்கமும் வெறுப்பும் அடைவதும் உண்டு. இதனால், அதீத உடற்பயிற்சி, வெகுநேரம் உண்ணாமலிருத்தல் போன்ற செயல்களின் மூலம் எடை குறைப்பில் ஈடுபடுவது வழக்கம். இவர்களே வாந்தி / பேதியை (பிற மாத்திரைகள் மூலம்) வரவழைத்துக் கொள்வார்கள். அப்படி உணவை வெளியேற்றிய பிறகே நிம்மதி அடைவார்கள்.

இப்படி வாரம் ஒரு முறையேனும் 3 மாதங்கள் தொடர்ந்து காணப்பட்டால் அது பெரும்பசி நோயாக இருக்கலாம். பெரும்பசி நோய் கிட்டத்தட்ட பசியற்ற நோய் போலத்தான் இருக்கும். ஆனால், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக, சரியான உடல் எடையும் / சற்றே குறைந்த எடையுடன் காணப்படுவார்கள். இதனாலேயே, இந்நோயை சரிவர கண்டுபிடிக்கப்படாமலே வெகு நாட்கள் தள்ளிப் போய் விடுகிறது. நாளாக ஆக, ‘உண்ணாமல் இருப்பது-அதிகம் சாப்பிடுவது-அதை வெளியேற்றுவது’ என ஒரு சுழலில் இவர்கள் சுயகட்டுப்பாடு இழந்து சிக்கிக் கொள்வார்கள்.

அறிகுறிகள்

1. எடை ஏறுவதைக் குறித்து பயம் கொள்வார்கள்.
2. எடை, உடல் வடிவம் குறித்து பெரும் கவலை அடைவார்கள்.
3. சாப்பிட்டவுடன் ஏதேனும் காரணம் சொல்லி, கழிப்பறையைப் பயன்படுத்துவர்.
4. சிறுநீரிறக்கிகள் (Diuretics), ஈனிமா மற்றும் மலமிளக்கிகள் (Laxatives) வழக்கமாக உட்கொள்வதுண்டு.
5. உடற்பயிற்சி செய்வதில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவார்கள்.
6. போதைப்பொருள் மற்றும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கலாம்.
7. பதற்றம், மனச்சோர்வு, அடிக்கடி மாறும் மனநிலை (Mood swings), கவலை…
8. விரல்களை பயன்படுத்தி அடிக்கடி வாந்தி எடுப்பதினால், விரல்களில் தழும்பு / வடு காணப்படும்.
9. மிக அதிகமாக உணவை உண்பது (Binging)… மற்ற நேரங்களில் அதிகம் டயட் இருப்பது / குறைந்த கொழுப்புள்ள உணவைச் சாப்பிடுவது…
10. விழா, விருந்துகளுக்கு செல்வதை தவிர்ப்பது…

தொடர்ந்து வாந்தி எடுப்பதால், வயிற்றிலுள்ள அமிலம் பல கெட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இது குறித்துக் காண்போம்…

1. பற்களிலுள்ள எனாமல் சேதமடைவது.
2. உணவுக்குழாய் சுழற்சி.
3. கன்னங்களிலுள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கம்.
4. ரத்தத்திலுள்ள பொட்டாசியத்தை குறைவாக்கி விடக் கூடும். இதனால், இதயத்துடிப்பு சீரற்றுப் போகும் ஆபத்து உள்ளது.
5. வயிற்றுவலி, வயிறு உப்புவது, நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக் கூடும்.

சிகிச்சை

பெரும்பசி நோய் சிகிச்சையின் இலக்கு, பாதிக்கப்பட்டவரின் அசாதாரண உணவுப் பழக்கத்தை முறிப்பதுதான். உணவியல் நிபுணரின் ஆலோசனை, மனச்சோர்வுக்கான மருந்துகள், நடத்தை மாற்று சிகிச்சை (Behavior therapy), தனிநபர், குழு மற்றும் குடும்ப சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள், பெரும்பசி நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. உண்ணுதல் கோளாறுகளின் காரணிகள் குறித்தும், டீனேஜரை அதிகம் பாதிக்கும் மிதமிஞ்சி உண்ணும் கோளாறு (Binge-eating disorder) குறித்தும் அடுத்த இதழில் பார்ப்போம்.

கலா ஏன் ஒல்லி ஆனாள்?

கலாவுக்கு ஸ்வீட் 16 வயது வந்தது. கூடவே பிரச்னையும் சேர்ந்தே வந்தது. 12ம் வகுப்பு தரும் நெருக்கடியில் தவித்தாள். நடுத்தரமான குடும்பத்திலிருந்து பல கட்டுப்பாடுடன் வளர்க்கப்பட்ட கலாவுக்கு, சக மாணவர்களிடம் இயல்பாக பழக முடியாத சூழ்நிலை வேறு. வீட்டுக்கு வந்தால், தினம் தினம் பெற்றோரின் சண்டை வேறு. வாழ்க்கை அவள் கட்டுப்பாட்டை மீறி போய்க் கொண்டிருப்பதாக உணர்ந்தாள் கலா. தன்னம்பிக்கையை இழக்க ஆரம்பித்த கலாவுக்கு, உடல் தோற்றத்தின் மேல் அதிக அக்கறை வர ஆரம்பித்தது.

தான் உண்ணும் உணவு, அதை எப்படி, எப்போது. எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஆரம்பித்தாள். உடற்பயிற்சி மீதும் அவளின் கவனம் திரும்பியது. விரைவிலேயே எடை குறைய ஆரம்பித்தது. மேலும் டயட்டில் இருந்தாள். தீவிரமாக உடற்பயிற்சியும் செய்த வண்ணமே இருந்தாள். வாழ்க்கை அவள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர ஆரம்பித்தாள். நண்பர்கள், அவளின் ஒல்லியான தோற்றம் குறித்து விமர்சித்தால் அதை நம்ப மறுத்தாள்.

கண்ணாடி முன்னின்றும் பார்த்தாள். அவளுக்கு அவளின் உருவம் மிகவும் உருண்டையாக, குண்டாகத் தெரிந்ததுதான் காரணம். மனதின் கட்டாயத்தின் பேரில் தொடர்ந்து டயட் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாள். இதனால், முடி கொட்ட ஆரம்பித்தது. சருமம் வறண்டு, எலும்பு தேய்ந்து உடல் வலிக்க ஆரம்பித்தது. ஆனாலும், தான் ஒல்லியாகவில்லை என்பதை உறுதியாக நம்பினாள்.

ஒவ்வொருமுறை மருத்துவரிடம் செல்லும் போதும், அவர் நன்கு சாப்பிடச் சொல்லியே திருப்பி அனுப்பினார். ஒரு நாள் தேர்வின் போது மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் கலா. மருத்துவமனையில் அவளுக்கு மைனர் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது.அவளின் மனநலப் பிரச்னையின் (பசியற்ற நோய்-Anorexia Nervosa) தீவிரத்தை அறிந்த பொது மருத்துவர், கலாவை மனநல நிபுணரிடம் அழைத்துச் செல்லும்படி கூறினார். சில வாரங்களுக்குப் பிறகே, தன் உணர்வுகளை ஆலோசகரிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்.

அப்போதுதான் அவள் சிறு வயதில் நெருங்கிய உறவினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது. தன் உணர்வுகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என இத்தனை வருடங்களாக யாரிடமும் சொல்லாத விஷயத்தை முதல் முறை ஆலோசகர் காட்டிய அக்கறையினால் சொல்ல ஆரம்பித்தாள்.அவளின் தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு, தவறான உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக இருந்த இந்த விஷயம் வெளியில் வந்த பின், கலாவின் உடல்நலத்தில் கொஞ்ச கொஞ்சமாக முன்னேற்றம் தெரிந்தது.

அவளுக்கு உணவு / உடற்பயிற்சி குறித்த ஆரோக்கியமான சிந்தனையும் பயிற்றுவிக்கப்பட்டது. மெல்ல மெல்ல கலாவின் உணவுப்பழக்கவழக்கம் இயல்பாக ஆரம்பித்தது. ஏற்கெனவே, இக்கோளாறினால் ஏற்பட்டிருந்த உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவ்வப்போது சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் கலா இப்போது, நல்ல கல்லூரியில் தனக்கு பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுத்து மன ஆரோக்கியத்துடன் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை தாக்குது கொப்புள காய்ச்சல்!! (மருத்துவம்)
Next post ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை…!! (அவ்வப்போது கிளாமர்)