எங்களுக்கும் காலம் வரும்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 55 Second

‘‘நான் பி.காம். வரை படிச்சிருக்கேன். என் தோழி புவனேஸ்வரி எம்.எஸ்.ஸி. பி.எட். படிச்சுருக்காங்க” என நம்மிடம் பேசத் துவங்கிய செல்வலெட்சுமியும் அவரது தோழி புவனேஸ்வரியும் இப்போது பிஸினஸ் பார்ட்னர்ஸ்.

“திருமணம் முடிந்தாலே பெண்களுக்கு குடும்பத்தைப் பார்ப்பது, குழந்தைகளை கவனிப்பது என இரட்டைச் சுமைதான். இதில் வேலைக்குச் செல்வது என்பது
சுத்தமாக முடியாத காரியமாக இருந்தது. ஓரளவு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஏதாவது செய்து வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த எனக்குக் கை கொடுத்தது மதுரை வேளாண்மைக் கல்லூரி. தின இதழ் ஒன்றில் வந்த அவர்களின் ஒரு பக்க விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அந்தக் கல்லூரியினை அணுகினேன். என்னைப் போலவே புவனேஸ்வரியும் அதே எண்ணத்தோடு அங்கு வந்திருந்தார். ஒருநாள் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட பலரில் எங்கள் இருவரின் சிந்தனையும் ஒத்துப் போனது. இருவரும் இணைந்து சிறுதானிய உணவு தயாரிப்புத் தொழில் செய்வதென முடிவு செய்தோம்.

நானிருப்பது மதுரை அவனியாபுரத்தில். என் தோழி புவனேஸ்வரி இருப்பதோ அய்யர் பங்களா பகுதியில். இருவருக்குமான தொலைவு என்பது அதிகம் என்றாலும் எங்களின் தொழில் ஆர்வம் எங்களை தொடர்ந்து இணைத்திருக்கிறது. இருவருக்கும் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியும் என்பதால் எங்களின் தொழிலுக்கு அது மிகப் பெரிய உதவியாக இருக்கிறது” என்கின்றனர். மதுரை வேளாண்மைக் கல்லூரியின் ஒரு நாள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டோம். வீட்டிலிருந்தே பெண்கள் சம்பாதிப்பதற்கான பல யோசனைகளை வழங்கினார்கள். தொழில் துவங்குவதற்கான திட்டமிடல், மூலப் பொருள் வாங்குவது, தரமான தயாரிப்பு, சந்தைப்படுத்துதல், விளம்பரம் என அனைத்துக்கும் தொடர்ந்து வழி காட்டினார்கள்.

தொழில் தொடங்குவதற்குத் தேவையான பயிற்சி, தொடர் ஊக்குவிப்பு, தேவையான ஆலோசனை என அனைத்துத் தளத்திலும் இன்றுவரை எங்களுக்கு உதவியாக அதன் பேராசிரியர்கள் உள்ளனர். மூலப் பொருட்களை வாங்க, விவசாயிகளிடம் நேரடியாக எங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். நாங்களே எங்களுக்குத் தேவையான தானியங்களை நேரடி கொள்முதல் செய்து கொள்கிறோம். சிறுதானியங்களில் இருக்கும் தூசிகளை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் சவாலான வேலை. அதை சிறப்பாக செய்வதற்கான பயிற்சியும் எங்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறுதானியங்களை ஈரப்பதமின்றி சரியான விகிதத்தில் தீட்டி, பதப்படுத்தி அதனை தேவையான உணவுப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சியினைப் பெறவும் ஏற்பாடு செய்து தந்தார்கள்.

எங்களிடம் கம்பு, கேப்பை, சோளம், சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்களால் தயாரான ரெடி மிக்ஸ் பொருட்கள், 21 வகையான சத்தான சிறுதானியம் சேர்ந்த ஹெல்த் மிக்ஸ், கம்பு, கேப்பை, சோளம் போன்ற சிறுதானியத்தால் தயாரான தோசை மாவு, அடைமாவு, புட்டு, களி மிக்ஸ், சப்பாத்தி மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்குத் தேவையான டயட் ஹெல்த் மிக்ஸ் மேலும் சத்துமாவு உருண்டை, கம்பு மற்றும் ராகியால் தயாரான மிக்ஸர், வரகு அரிசி முறுக்கு, திணையில் தயாரான ரிப்பன் பக்கோடா போன்ற மாலைச் சிற்றுண்டி உணவுப் பதார்த்தங்களும் எங்கள் தயாரிப்பாய் குமரன் மில்லட்ஸ் பிராடக்ட்ஸ் என்ற பெயரில் வெளிவருகிறது.

புத்தகக் கண்காட்சி மற்றும் அரசு நடத்தும் பெண் சுயதொழில் முனைவோர்களுக்கான ஸ்டால்களில் நாங்களும் எங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பதற்கான வாய்ப்பை தொடர்ந்து ஏற்படுத்தித் தருகிறார்கள். மேலும் பண்டிகை, திருவிழா போன்ற நாட்களில் நிறைய ஆர்டர்களும் எங்களுக்கு வருகின்றன. இதுதவிர்த்து மிகப் பெரிய வணிக நிறுவனங்களிலும் நாங்களே சென்று ஆர்டர் பெற்று எங்களது தயாரிப்புகளை அவர்களுக்கு தொடர்ந்து சப்ளை செய்கிறோம். ஆர்டருக்கு ஏற்ப தேவைப்படும் உணவுப் பொருட்களை அவ்வப்போது தயார் செய்து தருகிறோம். எங்கள் தயாரிப்புகள் தரமானதாகவும், உடல் நலனுக்கு தீங்கு தராத வகையில் ஹோம் மேட் தயாரிப்பாக இருப்பதால் தொடர்ந்து ஆர்டர்கள் எங்களுக்கு கிடைக்கிறது. முதலில் 15 முதல் 20 கிலோவில் துவங்கிய எங்கள் தொழில் 50 கிலோவைத் தொட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இன்னும் நிறைய ஆர்டர்களை நோக்கி நானும் எனது தோழியும் ஓடிக் கொண்டிருக்கிறோம். 100 வாடிக்கையாளர்களை சந்தித்தால் அதில் பத்து ஆர்டர் கிடைத்தால் பெரிய வெற்றி. ஏனெனில் எங்கள் தொழிலில் நிறைய போட்டிகள் உள்ளன. மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இதில் முன்னணியில் உள்ளன. தினம் தினம் ஏதாவது புதுமையாக சுவையாக தயார் செய்து கொண்டுபோய் காட்டினால்தான் எங்கள் இடத்தை எங்களால் தக்கவைத்துக் கொள்ள முடியும். தேவைக்கு ஏற்ப தினக்கூலி ஆட்களை ஆர்டருக்கு ஏற்ப வேலைக்கு அமர்த்திக் கொள்கிறோம். மதுரையில் இயங்கிக் கொண்டிருக்கும் மடீட்ஷியா தொழில் முனைவோர் கூட்டமைப்பில் நாங்கள் உறுப்பினராக இருப்பதால் அவர்கள் மூலமாகவும் எங்கள் தொழிலை முன்னேற்றுவதற்கான அத்துனை வழிகாட்டுதலும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கிறது.

FSSAI (Food Safety and Standards Authority of India) எனப்படும் உணவுப் பாதுகாப்பு தரச்சான்றிதழ் எண் மற்றும் முறையான தொழில் பாதுகாப்பு பதிவு போன்ற வழிகாட்டுதல்களை SSI (Small Scale Industries) மற்றும் MADITSSIA (Madurai District Tiny & Small Scale Industries Association) போன்றவற்றின் அறிவுரைப்படி அதற்கான தரச் சான்று எண்களையும் முறைப்படி பெற்று வைத்திருக்கிறோம். ‘வீட்டுல நீ சும்மாதான இருக்க’ என அசால்டாக பெண்கள் மீது வீசப்படும் வார்த்தைகளை தகர்த்து, குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்கியதுபோக, நாங்கள் எங்களை வெற்றியின் பாதையில் நகர்த்தி இருக்கிறோம்.இப்போது எங்களுக்கு இருப்பது இரட்டைச் சுமை இல்லை ட்ரிபிள் சுமை என கைகளை உயர்த்தி வெற்றிப் புன்னகை காட்டு கின்றனர் இந்த சாதனைப் பெண்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டுநூல் ஆபரணங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post குளிர்கால கஷாயங்கள்!! (மருத்துவம்)