ட்வின்ஸ்!! (மருத்துவம்)

Read Time:15 Minute, 13 Second

ஆச்சரியத் தொடர் ஆர்.வைதேகி

இரண்டு வயதிலேயே அச்சு கோர்த்தது போல அவ்வளவு அழகான கையெழுத்தில் அசத்தினான் என் இளைய மகன். மழலைகூட மாறாத அந்த வயதில் அடுக்கடுக்காக 25 திருக்குறள்களை மனப்பாடமாக ஒப்புவித்து ஆச்சரியம் தந்தான் என் மூத்த மகன். ஒருவனுக்கு நன்றாக வரும் விஷயத்தில் இன்னொருவன் கொஞ்சம் சுமாராக இருப்பான். இன்னொரு விஷயத்தில் சுமாரானவன் சூப்பரானவனாகவும், சூப்பரானவன் சுமாரானவனாகவும் இருப்பார்கள்.

பள்ளிக்கூடத்தில் சேர்த்த முதல் நாள், ஒருவன் டாடா’ காட்டி சந்தோஷமாக உள்ளே ஓட, இன்னொருவனோ உதடு பிதுக்கி, கண்கள் கலங்கி, என் விரலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு என் பின்னால் ஒளிந்து நின்ற காட்சி இப்போதும் மறக்கவில்லை. அது பொறுக்காமல் அவனை மட்டும் வீட்ல வச்சுக்கறேனே… ஆர்வம் உள்ளவன் ஸ்கூலுக்கு போகட்டும்’ என நானும் சேர்ந்து கண் கலங்கியிருக்கிறேன். அவங்க ட்வின்ஸுங்கிறதை மறந்துட்டுப் பேசாதே… ரெண்டு பேரும் எல்லா விஷயத்துலயும் ஒண்ணு போலத்தான் இருக்கணும்…’ என்கிற அட்வைஸ்களையும் மறக்கவில்லை நான்.

குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்த பிறகுதான் பல அம்மாக்களுக்கும் விலங்குகள் தகர்க்கப்பட்ட மாதிரி இருக்கும். ஒன்றுக்கே இப்படி என்றால் இரட்டைக் குழந்தைகளை வைத்திருக்கும் அம்மாக்களின் நிலைமையைச் சொல்லவா வேண்டும்? இரட்டையரைக் கருவில் சுமக்கும் போது, அவர்களது முகம் பார்க்கிற தருணத்தை எதிர்நோக்கி, நாட்களைக் கடத்துவது போலவே, அவர்கள் பிறந்ததும் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடம் செல்லப் போகிற நாளை நோக்கி இருப்பார்கள் என்பதுதான் நிஜம். அதிலும் உதவிக்கு ஆட்கள் இன்றி, ஒற்றை ஆளாக இரண்டு குழந்தைகளையும் சமாளிக்கிற அம்மாக்கள் நிச்சயம் இதை
உணர்ந்திருப்பார்கள்.

இரண்டரை வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, 2 மணி நேரத்தில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிற ஆனந்தம் இரட்டையரைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும் அமைவதில்லை. ஏன்? அதன் பின்னணி உணர்த்தி, பெற்றோருக்கு சில அட்வைஸ்களையும் தருகிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ். இரட்டையர் என்கிற காரணத்தினால் எல்லா விஷயங்களிலும் அவர்கள் ஒன்றுபோல இருந்தாக வேண்டும் என அவசியமில்லை. இருவரின் கருவிழிகள், ரேகை போன்றவைகூட வேறு வேறாக இருக்கும். இருவரும் அறிவு வளர்ச்சியில் வேறுபடலாம்.

அதிலும் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாகப் பிறக்கும் இரட்டையர்களில் பெண் குழந்தை சற்றே அறிவுத்திறன் அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம். எனவே, இருவரையும் தனித்தனி மனிதர்களாகப் பார்ப்பதுதான் சரி. பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டி வரும் போது, ஆணும் பெண்ணுமாகப் பிறந்த இரட்டையர் இருவருமே அதற்குத் தயாராக இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கிற வயது வந்திருக்கும். மகள் அதில் ஆர்வம் காட்டுவாள். மகன் தயாராக இருக்க மாட்டான். அவனை இன்னும் சில நாட்கள் உங்களுடனேயே வைத்திருக்கலாம் என உங்கள் உள்ளுணர்வு சொன்னாலும், `ட்வின்ஸாச்சே… அதெப்படி?’ என மனது சமாதானமாகாது.

இருவரையும் எல்.கே.ஜியில் சேர்க்கிறீர்கள்… மகள் எல்.கே.ஜியிலேயே நல்ல பெயர் வாங்கி, யு.கே.ஜிக்கு தயாராகிறாள். மகன் கொஞ்சம் மந்தம்… இன்னொரு வருடமும் எல்.கே.ஜி படிக்கட்டும் என பள்ளித் தரப்பில் சொல்லும்போது, வேறு வழியின்றி, மகளை அடுத்த வகுப்புக்கும் மகனை அதே வகுப்புக்கும் அனுப்புவீர்கள். இந்தப் பிரிவை அந்த இரட்டையரால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பதில் முதலிலேயே உங்கள் உள்ளுணர்வு சொன்னது போல மகனை சில மாதங்கள் உங்களுடனேயே வைத்திருந்தால் இந்தக் குழப்பமே வந்திருக்காது.

இரண்டும் ஆணாகவோ, இரண்டும் பெண்ணாகவோ பிறக்கும்போது, பெரும்பாலும் இந்தப் பிரச்னை வருவதில்லை. இவர்களுக்குள் அறிவுத்திறன் வேறுபாட்டை உணர்ந்தாலுமே இருவரையும் பிரிக்காமல் ஒரே நேரத்தில் பள்ளிக்கு அனுப்புவதே சரியாக இருக்கும். காரணம், அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்த பந்தம்… அதுவே மந்தமான பிள்ளையை இன்னொரு பிள்ளைக்கு இணையாக உயர்த்திக் கொண்டு வந்துவிடும்.

சுட்டியாக இருக்கும் ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்காமல், மந்தமான இன்னொரு குழந்தையும் பள்ளிக்குத் தயாராகிற வரை காத்திருக்கச் செய்யலாம். அல்லது சுட்டிக் குழந்தையை முதலிலும், மந்தமான குழந்தையை சற்றே தாமதமாகவும் பள்ளியில் சேர்க்கலாம். இந்த விஷயத்தில் இதுதான் சரி, இது தவறு என எந்த விதிமுறைகளும் இல்லை. இது மிகவும் துணிச்சலான முடிவு என்பதால் எல்லா பெற்றோராலும் ஏற்க முடியாதுதான். அப்போது என்ன செய்யலாம்?

மந்தமான குழந்தையை முன்னேற்ற கொஞ்சம் அதிகம் மெனக்கெடலாம். அந்தக் குழந்தைக்கான சிறப்புப் பயிற்சிகள் மூலம் இதை சாதிக்கலாம். உங்கள் உள்ளுணர்வு சொல்வதற்கு மதிப்பளியுங்கள். உங்கள் குழந்தைகளைப் பற்றி உங்களைவிட அதிகம் அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இருவரையும் பிரிக்காமல் ஒரே மாதிரி அறிவுத்திறனுடன் வளர்த்துவிட முடியும் என நம்பினால், துணிந்து செய்யுங்கள்.

இருவரையும் பிரிக்காமல் ஒரே நேரத்தில் பள்ளியில் சேர்த்தாலும், மந்தமான குழந்தையின் மற்ற திறமைகளை அடையாளம் கண்டு ஊக்கப் படுத்துங்கள்.

இந்த விஷயத்தில் ஏற்கனவே அனுபவம் உள்ள இரட்டையரின் அம்மாக்களிடமும் ஆலோசனை கேளுங்கள். யூகங்களையும் நம்பிக்கைகளையும் விட, அடுத்தவரது அனுபவங்கள் பல நேரங்களில் நமக்கான வாழ்க்கைப் பாடங்களாக அமைவதுண்டு.’’

பெருமித அனுபவம்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த கனிஷ்டா மேரியின் கதையைக் கேட்டால், மெகா சீரியல் தோற்கும். அத்தனை திருப்பங்கள்… வியப்புகள்…

அடுத்தடுத்த பிரசவங்களில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த கனிஷ்டாவுக்கு மூன்றாவது குழந்தையைப் பற்றிய எண்ணம்கூட இல்லை. மூன்றுக்கு பதில் நான்கு வந்தால்?

எனக்கு முதல்ல ரெண்டு ஆம்பிளைப் பசங்க. பெண் குழந்தை இல்லையேங்கிற ஏக்கம் இருந்ததே தவிர, மூணாவதா இன்னொரு குழந்தை பெத்துக்கிற ஐடியா இல்லை. பீரியட்ஸ் வரலைனு டாக்டர்கிட்ட போனேன். ஒருவேளை கர்ப்பமா இருக்குமோங்கிற சந்தேகத்துல யூரின் டெஸ்ட் பண்ணினேன். ஒரு முறை இல்லை… பல முறை… எல்லாத்துலயும் நெகட்டிவ்னு வந்தது.

அதை டாக்டர்கிட்ட சொன்னதும் ஸ்கேன் பண்ணச் சொன்னாங்க. அதுலயும் கர்ப்பம் இல்லைனு தெரியவே, பீரியட்ஸ் வர்றதுக்கு மாத்திரைகள் கொடுத்தாங்க. பீரியட்ஸும் வர்ற மாதிரி இல்லை. நானும் எப்போதும் களைப்பாவே ஃபீல் பண்ணினேன். வேற டாக்டர்கிட்ட போனப்ப மறுபடி யூரின் டெஸ்ட் பண்ணச் சொன்னாங்க. அதுல பாசிட்டிவ்னு வந்ததும் பயங்கர ஷாக்! உடனடியா ஸ்கேன் பண்ணிப் பார்த்ததுல ட்வின்ஸ்னு வந்தது.

அப்பவே கிட்டத்தட்ட ரெண்டரை மாசம் போயிருந்தது. ட்வின்ஸ்னு சொன்னதும் அழறதா, சிரிக்கிறதானு தெரியலை. ஏற்கனவே ரெண்டு குழந்தைங்க… இப்ப இன்னும் ரெண்டுன்னா வளர்க்க முடியுமானு ரொம்ப பயந்தேன். அப்புறம் என் கணவர், அம்மா, அப்பானு எல்லாரும் எனக்கு தைரியம் சொன்னாங்க.

கர்ப்ப காலம் ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்தது. முதல் ரெண்டும் எனக்கு சுகப்பிரசவம். மூணாவதும் அப்படியே அமைஞ்சது. பிரசவம் வரைக்கும் டாக்டர் எனக்கு என்ன குழந்தைங்கனு சொல்லலை. ஒரு குழந்தையை வெளியில எடுத்ததும், பெண் குழந்தைனு சொன்னாங்க. ஆனந்தக் கண்ணீரே வந்திருச்சு. அடுத்த ஒரு நிமிஷத்துல இன்னொரு குழந்தை… அதுவும் பெண்… என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை… ஒருத்தி 2 கிலோ, இன்னொருத்தி ரெண்டேமுக்கால் கிலோ எடையில பிறந்தாங்க. அமலரோஷிகா, அமலஜோஷிகானு பேர் வச்சுக் கொண்டாட ஆரம்பிச்சோம். ஆனா, யார் கண் பட்டதோ…’’ – சஸ்பென்ஸுடன் நிறுத்துகிற கனிஷ்டாவுக்கு அடுத்து நடந்தவை பிரசவ வலியைவிட கொடுமையானவை.

குழந்தைங்க பிறந்து சரியா 30 வது நாள்… ரெண்டு பேருக்கும் பேதியாச்சு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போற வழியில ரெண்டு பேர் உடம்பும் நீல கலர்ல மாறிடுச்சு. கொஞ்ச நேரத்துல ரெண்டு பேருக்கும் தலை விழுந்திருச்சு. எனக்கு பேச்சு, மூச்சே நின்னுடும் போல ஆயிடுச்சு. ஆஸ்பத்திரியில குழந்தைங்களைப் பார்த்துட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. அந்த ஆஸ்பத்திரியிலயும் எங்கக்கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு, ‘உத்தரவாதம் தர முடியாது…

பார்ப்போம்’னு சொன்னதும் எனக்கு அழுகை தாங்க முடியலை. ‘நான் கேட்காமலேயே ரெண்டு பொம்பிளைப் பிள்ளைங்களைக் கொடுத்துட்டு, அதை முழுசா ரசிக்கிறதுக்குள்ள இப்படிப் பண்ணிட்டியே கடவுளே’னு கதறிட்டிருந்தேன். ஒருநாள் நைட் முழுக்க ஆஸ்பத்திரியில வச்சிருந்து அடுத்தநாள் சரியாக்கி குழந்தைங்களைக் கொடுத்தாங்க. வீட்டுக்குப் போன பிறகும்கூட லைட்லயே வச்சிருக்கணும்னு சொன்னாங்க. 60 வாட்ஸ் பல்பை போட்டு, ரூமுக்குள்ள ரொம்ப சுத்தமா ரெண்டு பேரையும் வச்சுப் பார்த்துக்கிட்டேன்.

ஒரு வயசு தாண்டற வரைக்கும் நிம்மதியே இல்லை. அம்மா, அப்பா சப்போர்ட் இருந்ததால சமாளிக்க முடிஞ்சது. என்னோட ரெண்டு பெண் குழந்தைங்களுக்கும் பிறக்கும்போதே ரெண்டு பல் இருந்தது இன்னொரு ஆச்சரியம். ஒரு வருஷத்துல அது விழுந்து, வேற பல் முளைச்சது. இப்படி பிறக்கறதுக்கு முன்னாலேருந்து பிறந்த பிறகு, இப்போ வரைக்கும் எனக்கு ஆச்சரியங்களைக் கொடுத்திட்டிருக்காங்க என் இளவரசிகள். என்னோட மூத்த பையன் ஜாஃப்ரினும், இளைய மகன் நிஜின் சந்துருவும் ஒரு கட்சி. பொண்ணுங்க ரெண்டு பேரும் ஒரு கட்சி.

ஆனா, நாலு பேரும் ஒருத்தரோட ஒருத்தர் சண்டையே போட்டுக்க மாட்டாங்க. ஆரம்பத்துல நாலு குழந்தைங்களையும் கூட்டிட்டு வெளியில கிளம்பினா, இந்தக் காலத்துலயும் நாலு குழந்தைங்களா’ங்கிற மாதிரி கிண்டலா பார்த்திருக்காங்க. இப்ப எனக்குப் பெருமையா இருக்கு. பின்னே… இந்த அனுபவம் எல்லாருக்கும் கிடைச்சிடுமா என்ன?’’ என்கிற கனிஷ்டாவுக்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்குகின்றன.

கனிஷ்டாவின் டிப்ஸ்

பாசிட்டிவ் எனர்ஜியும், பயப்படாத மனசும்தான் கர்ப்ப காலத்துல உங்களுக்குத் தேவைப்படற பெரிய டானிக். இந்த ரெண்டும் இருந்தாலே எத்தனை பெரிய பிரச்னைகள்வந்தாலும் மீண்டு ஜெயிச்சிடலாம். நானே உதாரணம்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஃபுல் ஸ்டாப்!! (மருத்துவம்)
Next post திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)