உடல்… மனம்… ஆன்மா… !! (மருத்துவம்)

Read Time:13 Minute, 6 Second

மனித உயிருக்குச் சிகிச்சை தருவதற்கு, அந்த உயிரின் உயிர் ஆற்றலைப் படிக்கத் தெரிந்தவரே மருத்துவம் செய்பவராக இருக்கமுடியும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நேர் நிலைக்குக் கொண்டுவந்து ஆரோக்கியத்தைத் தரக்கூடிய மருத்துவ முறையாக அக்குபங்சர் கருதப்படுகிறது. நவீன அக்குபங்சர் மருத்துவம் உலகம் முழுக்கத் தற்போது பிரபலமாக இருப்பதற்குச் சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மாவோதான் காரணம். இவர் 1949ற்கு முன்பே சீனா போன்ற பரந்த, மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டின் ஆரோக்கியப் பிரச்சினைகளை மேற்கத்திய மருத்துவர்களால் மட்டும் தீர்க்கமுடியாது என்பதை புரிந்துகொண்டிருந்தார். அக்காலத்தில் சீனாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 5-ல் 1 ஆக இருந்தது. ஆயிரம் பேருக்கு 30 பேர் வீதம் என ஆண்டுதோறும் இறந்து கொண்டிருந்தனர்.

ஊட்டச்சத்தின்மை, தொற்றுநோய்கள், நவீன மருத்துவர்கள் கேள்விப்பட்டிராத மர்ம நோய்கள், மலேரியா, பிளேக், அம்மை நோய்கள், காசநோய் எனப் பலவிதமான நோய்கள் சீனாவை உலுக்கி வந்த வேளை. அந்த சமயத்தில் சீனாவில் சிதறிக் கிடந்த பாரம்பரிய மருத்துவ முறைகளையும் பாரம்பரிய மருத்துவர்களையும் ஒருங்கிணைக்க அவர் கொண்டு வந்த திட்டம்தான் ‘பேர்ஃபுட் டாக்டர்ஸ்’. இதன் மூலம் ஐந்து லட்சம் பாரம்பரிய மருத்துவர்களை அவர் ஒருங்கிணைத்தார்.

அதே சமயம் மேற்கத்திய மருத்துவத்தையும் புறக்கணிக்கவில்லை. மேலும் அக்குபங்சர் மற்றும் மூலிகை மருத்துவக் குறிப்புகளைப் பாரம்பரிய மருத்துவர்களை வைத்து எழுதச் சொல்லி ஆவணப்படுத்தினார். 1949-ல் மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சி பெற்ற ஷூ லியான், நவீன அக்குபங்சர் குறித்து நூல் எழுதினார். அதுதான் இன்று வரை அக்குபங்சர் மருத்துவர்களுக்கு கையேடாக உதவுகிறது.

‘மருந்தில்லா மருத்துவம், மருத்துவர் வேண்டா உலகம்!’ என்னும் நோக்கத்துடன் அக்குபங்சர், ஹோமியோபதியில் உள்ள ஃப்ளார் மெடிசன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மருத்துவம் செய்துவருகிறார் சென்னையை சேர்ந்த மருத்துவர் சிவசங்கரி.‘‘அலோபதியில் d pharm முடித்தேன். அப்பாவின் இறப்புக்கு பிறகு அலோபதி மருந்தின் மீதிருந்த நம்பிக்கையின்மை
காரணமாக அக்குபங்சர் படித்தேன். அலோபதியில் ஒரு பிரச்சினைக்கு உடனடி தீர்வு இருந்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் நீங்குவது நாட்கள் ஆகின்றன. அக்குபங்சர் மருத்துவத்துடன் இணைந்து ஃப்ளார் மெடிசனும் சேர்ந்து கொடுத்து வருகிறேன்” என்கிற சிவசங்கரி, அக்குபங்சர் மருத்துவத்தின் சிறப்பினை பகிர்ந்தார்.

‘‘அக்குபங்சர் பொறுத்தவரை நான்கு விஷயம் தான். பசித்து சாப்பிட வேண்டும். தாகம் எடுக்கும் போது கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும் போது நன்கு சுவைத்து, மென்று சாப்பிட வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் கண்டிப்பாக தூங்கிட வேண்டும். பலரது வாழ்க்கை முறையில் இதை பின்பற்றுவது அரிதாகி வருகிறது. நாம் எல்லோருமே கையில் கைபேசி வைத்துக் ெகாண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ தான் சாப்பிடுகிறோம். இங்கிருந்துதான் எல்லா பிரச்சினையும் துவங்குகிறது.

சாப்பிடும் முறை, தண்ணீர் குடிப்பது, தூங்குவது இம்மூன்றும் சரியாக அமைந்தாலே நோய் கண்டிப்பாக வராது. இதை தாண்டி அவரவர் வாழ்க்கை முறை, அதன் அடிப்படையில்
அவர்களுக்கு இருக்கும் மன நிலைமையினால் நோய்கள் வருகின்றன. எனவே நோயுடன் வருபவர்களுக்கு உடல் மட்டுமல்லாது, மனதையும் சீரமைத்து அவர்களுக்கான பிரச்சினையிலிருந்து விடுபடவைக்கிறது அக்குபங்சரில் பயன்படுத்தப்படும் நீடிலிங் (ஊசி) முறை.

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பரிசீலனை செய்து சிகிச்சை தருவதுதான் அக்குபங்சர். அக்குபங்சரில் பயன்படுத்தப்படும் ஊசி ஆத்மாவையும் தொடுகிறது. உடலை யின், யாங் என்று இரண்டாகப் பிரிக்கிறது. சந்திரன்தான் யின். சூரியன் யாங். அக்குபங்சர் ஊசி மூலமாகப் பிரபங்சத்தின் அதிர்வலைகளை உடலைச் நோக்கி ஈர்த்து உடலை சமநிலைப்
படுத்துவதால் நோய் குணமாகிறது என்பதே இம்மருத்துவத்தின் கோட்பாடு. இதில் பயன்படுத்தப்படும் ஊசிக்கு பயந்துதான் சிலர் வர தவிர்க்கிறார்கள்.

இங்கு வருபவர்கள் எந்த சூழலில் வருகிறார்கள், நோயை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பவைகளுக்காக ஃப்ளார் மெடிசன் கொடுக்கிறேன். அக்குபங்சரும், ஃப்ளார் மெடிசனும் சேரும் போது அந்த பிரச்சினைக்கான தீர்வு உடனடியாக கிடைக்கிறது. மீண்டும் அந்த பிரச்சினை அவர்களுக்கு வராதபடி மனப்பக்குவமும் கிடைத்துவிடுகிறது. எல்லாவித நோய்களுக்குமான மருத்துவமாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அக்குபங்சர் மருத்துவத்தை அரசும் சான்றிதழ் பாடமாக கொண்டு வந்துள்ளது. அலோபதியில் சிலர் ஏற்கனவே மருத்துவம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலரது உடல் அம்மருந்துகளுக்கு அடிமையாகியிருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு உடனடியாக அம்மருந்துகளை நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து வெளியே கொண்டு வந்து, சிகிச்சை அளிக்கிறோம். உதாரணமாக 15 வருடமாக நீரிழிவு நோய்க்காக இன்சுலின் எடுத்து வந்தவர்களின் சர்க்கரையின் அளவு மற்றும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்தின் அளவினை குறைத்திருக்கிறோம்” என்கிற மருத்துவர் சிவசங்கரி, அக்குபங்சருடன் ஃப்ளார் மெடிசனும் கொடுப்பதற்கான காரணத்தை பகிர்ந்தார்.

‘‘என்னதான் நோய்களுக்கான சிகிச்சை அளித்து, குணமாகியிருந்தாலும் மனதளவில் அவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். சிலரது ஆழ்மனதில் அது பதிந்தும் இருக்கலாம். சில நேரங்களில் ஏதாவது ஒரு பிரச்சினையின் போது அது வெளிப்படவும் செய்யலாம். எனவே அக்குபங்சர் மருத்துவத்தோடு இந்த ஃப்ளார் மெடிசனையும் கொடுக்கும் போது, தனது பிரச்னைகளிலிருந்து வெளியே வருவதோடு அவர்களது வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அமைகிறது” என்கிறவர், தைராய்டு பிரச்சினைகள், ஹீமோகுளோபின் நார்மலாக்குவது போன்றவைகளுக்கான தீர்வுகளும் அக்குபங்சரில் இருக்கிறது என்கிறார்.

“தங்களது பணி சூழல் காரணமாக சரியான நேரத்துக்கு உணவு எடுக்க முடிவதில்லை என்று பலர் சொல்கிறார்கள். வாழ்க்கையின் ஒரு பகுதிதான் வேலை என்றில்லாமல், வாழ்க்கையே வேலையாக மாறியுள்ளது. அவர்களுக்கு என தனிப்பட்ட நேரத்தை ஒதுக்க பழகிக் கொள்ள வேண்டும். காலை எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் சாப்பிட வேண்டும். அந்த நேரத்தில் வயிறுக்கான ஆற்றல் நன்றாக இருக்கும். இது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். எதற்காகவும் காலை உணவை மட்டும் தவிர்க்கக் கூடாது.

மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணிக்குள் மதிய உணவு முடிக்கணும். 7.30-க்குள் இரவு உணவு முடிக்க வேண்டும். இரவு ஏழு மணிக்கு மேல் யாரெல்லாம் சாப்பிடாமல் இருக்கிறார்களோ அவர்களது உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறு எடுக்கும் உணவு அரை வயிற்றுக்கானதாக இருக்க வேண்டும். வயிறு முழுவதும் சாப்பிடக் கூடாது.

முடிந்த அளவு இரவு 9.30 முதல் பத்து மணிக்குள் படுக்கைக்கு சென்றுவிட வேண்டும். அப்படி போகும் போது பகலில் நம் உடலில் ஏற்பட்ட மன அமைதியின்மை, பணிச்சுமை காரணமாக ஏற்படும் உடல் சோர்வு போன்ற டாக்ஸிசும் வெளியேறும். இந்த நேரத்தில் நாம் ஓய்வு கொடுத்தால் தான் அது வெளியேறும். அப்படி தூங்கவில்லை என்றால் அவை வெளியேறாமல், உடல் ரீதியாக பிரச்னை ஏற்படும்.

இன்றும் பல கிராமங்களில் விவசாயிகள் இரவு சீக்கிரம் தூங்கியும், அதிகாலை நேரமாக எழுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர். இரவு 9.30-க்கெல்லாம் தூங்கிவிட்டு அதிகாலை நேரமாக எழும் போது நமக்கான நேரம் அதிகமாக இருக்கும். நம் வேலைகளை திட்டமிட்டு எந்த ஒரு அவசரமில்லாமல் பண்ணும் போது அன்றைய நாள் சிறந்த நாளாக அமைகிறது. இப்படியே தொடர்ந்தால் எல்லா நாளும் சிறந்த நாளாகவே அமையும்” என்கிறார் மருத்துவர் சிவசங்கரி.

அக்குபங்சர்…

அக்குபங்சர் என்பது லத்தீன் மொழியில் இருந்து உருவானது. அகுஸ் என்றால் ஊசி, பஞ்சர் என்றால் குத்துதல். இரண்டையும் சேர்த்து உருவான சொல் தான் அக்குபங்சர். ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் சரி செய்வதுதான் அக்குபங்சரின் அடிப்படை.

மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை உடற்கூறியல், உடலியக்கவியல், நோய்க்குறியியல், குறை களைவது ஆகிய நான்கு அடிப்படைகள் அவசியம். அக்குபங்சருக்கும் இத்தகைய நான்கு அடிப்படைகள் உண்டு. மனிதக் குலம் அனைத்துக்குமான தீர்வை அக்குபங்சர் கையில் வைத்திருக்கவில்லை. இது தத்துவார்த்த அடிப்படையிலான உருவான அறிவியல் மருத்துவம். அதை முழுமையாக உணர்ந்து மருத்துவம் செய்யக்கூடியவர்களின் கையில் உள்ள ஊசியால் பல அற்புதங்களைச் செய்துவிடமுடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் ரீதியான பரிசோதனை அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பித்தப்பை கற்களும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளும்! (மருத்துவம்)