கரகாட்டக் கலையின் கதாநாயகி வாஞ்சூர் கஸ்தூரி!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 21 Second

எட்டு வயதில் ஆட்டத்திற்காக எட்டு வைத்த கால்கள், அதில் எட்டு திக்கும் அதிருகின்ற சலங்கை, உச்சந்தலையில் பச்சைக்கிளி கரகம் என கடந்த 35 ஆண்டுகளாக தமிழகம் முழுதும் இவரின் சலங்கை ஒலி கேட்காத மேடை… திருவிழா இல்லை. நள்ளிரவு காரிருளை விரட்டி விடியலை வரவழைக்கும் இவரின் குறவன் – குறத்தி நடன நாடகம் இன்றும் தமிழகத்தில் மிகவும் சிறப்பு. கரகக் கலையில் தனக்கென்று ஒரு சிறப்பினை பெற்றிருக்கும் ‘வாஞ்சூர் கஸ்தூரி’ தன் கலைப் பயணத்தை பற்றி பகிர்ந்தார்.

‘இல்லம் தேடி கல்வி’ என்ற தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை இயக்கத்தின் பரப்புரைக் கலைப்பணிக்காக, அரசு உயர்நிலைப் பள்ளியில், ஏராளமான நாட்டுப்புறக் கலைஞர்களுடன் ஒத்திகைக்காக வந்திருந்தவரை சந்தித்தோம். ‘‘பொதுவாகவே நாட்டுப்புறக் கலைகளை தலைமுறை தலைமுறையாகத் தான் தொடர்ந்து வருவார்கள். தாத்தா.. அப்பா… மகன் என குடும்பத்தொழிலாக இருக்கும் இந்த கலைக்கும் எங்களின் குடும்பத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. கலை மேல் இருந்த ஆர்வம் தான் என்னை இந்த கலைக்குள் இழுத்து வந்ததுன்னு சொல்லணும். நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் என்கிற சிற்றூர் தான் நான் பிறந்த ஊர். வாஞ்சூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தான் படிச்சேன்.

அதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடனமாடினேன். விழாவிற்கு வந்திருந்த எல்லாரும் என் நடனத்தை பாராட்டினாங்க. என்னுடைய நடனத்தைப் பார்த்து விழாவிற்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்த ரவணை வித்துவான் நடேசன் அவர்கள் என் பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி என்னைப் பற்றி விசாரித்துள்ளார். மேலும் எனக்கு நடனத்தில் முழுமையான பயிற்சிக் கொடுத்து, கலைத்துறையில் எனக்கு ஒரு இடம் அமைத்து தர இருப்பதாக அவரின் விருப்பத்தினை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.

அவரிடம் என்னுடைய வீட்டு விலாசம் பற்றி கேட்டறிந்தவர் நேராக வீட்டிற்கே வந்துவிட்டார். அம்மா, அப்பாவிடம் அவரின் விருப்பத்தை கூற அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. அந்த வயசில் காலில் சலங்கையை கட்டினேன். ஒரு பக்கம் பள்ளி பாடங்கள் மறுபக்கம் நடன பயிற்சின்னு ரொம்ப தீவிரமா பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். எட்டாம் வகுப்பு வரை பள்ளியில் படித்துக்கொண்டே, அக்கம் பக்கத்து ஊர்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன்’’ என்ற கஸ்தூரியின் கலைப்பயணம் மெல்ல மெல்ல கரகாட்டம், குறவன் – குறத்தி நடனம் பக்கம் திரும்பியது.

‘‘நடனம் தான் என்னுடைய எதிர்காலம்ன்னு ஆயிடுச்சு. அதனால் அதில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். முழு நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் என்னால் தொடர்ந்து படிக்க முடியல. அதனால் எட்டாவதோடு என்னுடைய படிப்பை நிறுத்திவிட்டேன். இதுநாள் வரை அக்கம் பக்கம் ஊரில் நடைபெறும் கலைநிகழ்ச்சியில் மட்டுமே பங்கு பெறுவேன். பெரிய அளவில் நான் நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றதில்லை. அதற்கான வாய்ப்பும் எனக்கு சரியாக அமையவில்லை.

அதே சமயம் நானும் என் குருவும், ஊரில் நடக்கும் பெரிய நிகழ்ச்சியை நேரில் சென்று பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தோம். அப்படி கீழ்வேளூரில் நடைபெற்ற ஒரு கரகாட்ட நிகழ்ச்சிக்கு போன போது, அது என் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும்ன்னு நான் நினைக்கல. அந்த நிகழ்ச்சியில் ஆட்டக்குழுவில் கரகம் ஆடுவதற்காக வந்திருந்த பெண் ஒருவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு விட்டது. அவரால் சரியாக நிற்ககூட முடியவில்லை.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஆரம்பிக்காத காரணத்தால் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியினை எப்படி நடத்துவதுன்னு சமாளிக்க முடியாமல் அந்த குழுவினர் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் என்னுடைய குருநாதர் அந்த பெண்ணிற்கு பதிலாக என்னை ஆடச் சொன்னார். நான் எப்படி ஆடுவேன்… கூட்டத்தை சமாளிக்க முடியுமான்னு முதலில் ஆட்டக்குழுவினர் தயங்கினர்.

ஆனால் நிகழ்ச்சியை நடத்த வேறு வழி இல்லை என்பதால், என் குருவின் கட்டளைக்கு ஏற்று நான் அந்த நிகழ்ச்சியில் நடனமாடினேன். என்னுடைய நடனத்தை பார்த்து பார்வையாளர் அனைவரும் கரவொலி எழுப்பியதால், அந்த நிகழ்ச்சி மிகவும் உற்சாகத்தோடு முடிந்தது. அந்த ஆட்டத்திற்கு பிறகு, ‘கஸ்தூரி இல்லையென்றால் கரகாட்டம் இல்லை’ என்கிற நிலை பட்டி தொட்டி எங்கும் பரவ ஆரம்பித்தது. தமிழகத்தில் உள்ள கோயில் திருவிழா, பொதுநிகழ்ச்சிகளைத் தாண்டி தில்லி, கர்நாடகம், ஒடிசா, ஆந்திரா, கொல்கத்தா என பல மாநிலங்களில் நடைெபறும் நிகழ்ச்சியிலும் நான் கரகமாடியிருக்கேன்’’ என்ற கஸ்தூரி தற்ேபாது வறுமையின் விளிம்பு நிலையில் தள்ளப்பட்டுள்ளார்.

‘‘ஊர் ஊாராக பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு ெபற்று உச்சத்தில் இருந்த நாட்களை என்னால் இன்றும் மறக்க முடியாது. ஆனால் காலச் சக்கர சுழற்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் வறட்சியை சந்திக்க ஆரம்பித்தார்கள். அந்த வறட்சி கரகாட்ட கலையையும் விட்டு வைக்கவில்லை. அதன் உச்சமாக கொரோனா காலக்கட்டம், கடந்த இரண்டாண்டுகளாக எங்களை வாழ்வின் விளிம்பிற்கே கொண்டு சென்று விட்டது. ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட ஆரம்பித்தோம்.

ஊர் சுற்றிப் பறந்த என்னுடைய கால்கள் ஊரடங்கால் வீடடங்கி போனது. மகனுடைய சொற்ப வருமானத்தைக் கொண்டு தான் தற்போது குடும்பத்தை நகர்த்தி வருகிறோம். இந்த சூழலில் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்த என் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தது பேரிடியாக விழுந்தது. ஊரடங்கு தளர்ந்துவிட்டாலும், முன்பு போல கோயில் மற்றும் பொது நிகழ்ச்சிகள் இன்னும் சூடு பிடிக்கவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் கர ஒலியை கேட்டு பழகிய என் கால்கள் அந்த ஒலிக்காக காத்துக் கொண்டு இருக்கிறது.

என்னுடைய ஆசை சபையில் ஆடிக் கொண்டு இருக்கும் போதே என் உயிர் பிரிய வேண்டும்’’ என்று கலங்கிய கண்களோடு பதிலளித்தார் கஸ்தூரி. இவரைப்போன்ற கலைஞர்கள் பலர் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழும் சூழலையும் உரிய அங்கீகாரத்தையும் பார்வையாளர்களாக நாம் மட்டுமில்லாமல் அரசும் ஏற்படுத்தி தரவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சருமத்தை பளபளப்பாக்கும் கரும்பு!! (மருத்துவம்)
Next post இசையையும் ஆன்லைனில் கற்கலாம்! (மகளிர் பக்கம்)