அனிமல் பிரின்ட் ஜார்ஜெட் புடவை… காஞ்சிபுரம் பட்டு பார்டர்!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 13 Second

உடை அலங்காரம் என்பது ஒரு கடல். அதில் பல டிசைனர்கள் மூழ்கி முத்தெடுத்து வருகிறார்கள். ஆனால் எந்த வித ஆரவாரம் இல்லாமல் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து வருகிறார் கீது. இவர் ‘கீது ஹாட் கோச்சர்’ என்ற பெயரில் டிசைனிங் ஸ்டுடியோ ஒன்றை நிர்வகித்து வருகிறார். கடந்த மாதம் சென்னை கிரவுன் பிளாசாவில் நடை பெற்ற ஃபேஷன் ஷோவில் தன் அழகான டிசைன்களை அறிமுகம் செய்திருந்த கீது தன் உடை அலங்காரம் குறித்த பயணம் பற்றி பகிர்ந்து கொண்டார். இவர் நடிகை ஸ்னேகாவின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

டிசைனிங் துறைக்கு நீங்க வரக்காரணம்?

நான் முதன் முதலில் ஸ்னேகாவிற்காக தான் டிசைன் செய்ய ஆரம்பிச்சேன். 2001ம் ஆண்டு அவ நடிச்ச ஒரு தெலுங்கு படத்திற்கு பாட்டு சீக்வென்ஸ் ரொம்ப பிரமாண்டமாக இருக்கணும்ன்னு கேட்டாங்க. அதில் ஸ்னேகாவிற்காக நான் ஸ்கெட்ச் மட்டும் தான் செய்து கொடுத்தேன். அதைப் பார்த்து ஸ்னேகா ரொம்பவே இம்பிரஸ் ஆயிட்டா. இனிமே என்னோட எல்லா படத்திற்கும் நீ தான் டிசைன் செய்யணும்ன்னு சொல்லிட்டா.

அப்படி நான் அவளுக்காக டிசைன் செய்த முதல் தமிழ் படம் ‘ஏப்ரல் மாதத்தில்’. அதில் கல்லூரி படிக்கும் பெண்ணா நடிச்சிருப்பா. அந்த படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு ஸ்னேகாவின் எல்லா படம் மட்டுமில்லாமல் அவ கல்யாணம் முதல் அவளுக்கு பர்ஸ்னலாவும் நான் டிசைன் செய்ய ஆரம்பிச்சேன். இதுவரை தமிழ், தெலுங்கு என 40 படங்களுக்கு மேல் டிசைன் செய்திருக்கேன்.

மற்ற நடிகைகளுக்கு டிசைன் செய்யாத காரணம்?

செய்யக்கூடாதுன்னு தனிப்பட்ட காரணம் எல்லாம் இல்லை. நான் துறைக்கு வந்த போது எனக்கு இரண்டு சின்ன பசங்க. சினிமாவில் முழுநேரம் என்னால் இருக்க முடியாது. டிசைனரா இருந்தால், ஷூட்டிங் போது நானும் முழு நேரம் ஸ்பாட்டில் இருக்கணும். ஸ்னேகா பொறுத்தவரை அப்படி இல்லை. அவ மேனேஜ் செய்துப்பா. எனக்கும் கம்பர்டபிளா இருந்தது. அப்படி இருந்தும் நமீதா, சந்தியா போன்றவர்களுக்கு ஒரு சில படங்களுக்கு நான் டிசைன் செய்திருக்கேன். அந்த சமயத்தில் தான் என்னோட அம்மா என்னை தனியா ஒரு டிசைனிங் பொட்டீக் ஆரம்பிக்க சொன்னாங்க. 2010ல் சிறிய அளவில் கீது ஹாட் கோச்சர் என்ற பெயரில் ஆரம்பிச்சேன்.

உங்களின் ஸ்பெஷாலிட்டி…

மணப்பெண் பிளவுஸ் தான் என்னுடைய பிராண்ட். ஸ்னேகாவின் கல்யாணம் முதல் இப்பவரைக்கும் அவளுடைய பிளவுஸ் நான் தான் டிசைன் செய்றேன். அவளின் கல்யாண பிளவுஸ் ரொம்பவே பேசப்பட்டது. ஆரம்பிச்ச போது இரண்டு பேர் தான் இருந்தாங்க. இப்ப 40 பேர் என்னுடைய பொட்டீக்கில் வேலைப் பார்க்கிறாங்க. பிரைடல் பிளவுசில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் அதில் பல புதுவித டிசைன்களை புகுத்தி எப்படி எல்லாம் அழகா வடிவமைக்கலாம்ன்னு தான் யோசிப்பேன். அதில் எல்லாரும் விரும்பியது பிளவுசில் நான் கைவேலைப்பாடு செய்த சரஸ்வதி, லட்சுமி, ராதா கிருஷ்ணர் போன்ற டிசைன்கள். எல்லாமே கைவேலைப்பாடு என்பதால், டிசைன்கள் மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

டிசைனிங் குறித்து உங்கள் கருத்து…

நான் ஃபேஷன் குறித்து எதுவுமே படிச்சதில்லை. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில். அம்மா நல்லா தைப்பாங்க. துபாயில் எங்க வீட்டு பக்கத்தில் ஒரு பாகிஸ்தானி ஆன்டி இருந்தாங்க. அவங்க பாகிஸ்தானி உடைகள் எல்லாம் ரொம்ப நல்லா தைப்பாங்க. அம்மா அவங்ககிட்ட உடைகள் தைக்க கத்துக்கிட்டாங்க. எங்களுக்கு நினைவு தெரிந்த நாட்கள் வரை அம்மா தைச்ச உடையை தான் நானும் ஸ்னேகாவும் போட்டுக்குவோம்.

அம்மா தைப்பதைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அம்மா தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்னு சொல்லணும். அப்படித்தான் எனக்கு டிசைனிங் மேல இன்ட்ரஸ்ட் வந்தது. மேலும் எனக்கு நிறங்களுடன் விளையாட பிடிக்கும். குறிப்பா பிரைட் நிறங்கள். டல்லான நிறங்கள் எனக்கு எப்போதுமே பிடிக்காது. எல்லாவற்றையும் விட ஆர்வம், தனித்திறமை மற்றும் கிரியேட்டிவிட்டி மூன்றுமே இருக்கணும். இப்ப நிறைய பேர் ஃபேஷன் குறித்து படிக்கிறாங்க. ஆனால் அவங்களுக்குள் தனிப்பட்ட முறையில் ஆர்வம் இல்லைன்னா அவங்களால டிசைன் செய்ய முடியாது. படிப்பு முக்கியம் தான் அதையும் தான்டி கிரியேட்டிவிட்டி அவசியம்.

கிரவுன் பிளாசா ஃபேஷன் ஷோ…

இது தான் என்னுடைய முதல் ஃபேஷன் ஷோ. ஸ்னேகா கூட பல முறை சொல்லி இருக்கா… ஃபேஷன் ஷோவில் கலந்துக்க சொல்லி. ஆனா எனக்கு என்னமோ அதில் அப்ப பெரிய அளவில் ஈடுபாடு வரல. எனக்கு 365 நாளும் வேலை இருக்கும். அதனால என்னால் இதற்கு தனியே நேரம் ஒதுக்க முடியல. எல்லாத்தையும் விட கீது என்றால், பிரைடல் பிளவுஸ் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதைத்தாண்டி நான் இண்டோ வெஸ்டர்ன் மற்றும் வெஸ்டர்ன் உடைகளை வடிவமைச்சிருக்கேன்.

அதைப்பார்த்து பலர் ஆச்சரியப்பட்டு இருக்காங்க. அந்த நேரத்தில் தான் என் தோழி ரேணுகா பிரவீன் மூலமா கிரவுன் பிளாசாவில் நடைபெற்ற பிரமாண்டமான ஃபேஷன் ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைச்சது. முதலில் என்னால் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டேன். வெட்டிங் சீசன். நிறைய வேலை இருக்கும். இதற்காக தனிப்பட்ட முறையில் என்னால் கவனம் செலுத்த முடியாதுன்னு தோணுச்சு. ஸ்னேகாவும், அம்மாவும் கலந்து சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. எவ்வளவு காலம் தான் இப்படியே ஒரு சின்ன வட்டத்துக்குள்ள இருப்ப. கொஞ்சம் அதில் இருந்து வெளியே வந்து உன்னால் எதுவும் செய்ய முடியும்ன்னு நிரூபின்னு சொன்னாங்க. சரின்னு நானும் சம்மதிச்சேன்.

எனக்கு இருந்தது ஒன்றரை வாரம் தான் நேரம். அதற்குள் 15 டிசைன்கள் நான் அறிமுகம் செய்யணும். என்னுடைய முதல் ஃபேஷன் ஷோ என்பதால், ஒவ்வொரு உடையும் கவனமா டிசைன் செய்தேன். அதில் மூன்று விதமான உடைகள். ஒவ்வொன்றிலும் ஐந்து டிசைன்கள்னு முடிவு செய்தேன். அதில் முதலில் கஃப்தான் உடைகள். இப்ப இது தான் டிரண்ட். பட்டர்ஃபிளை இறக்கைகள் போல் விரிந்து இருக்கும். அதை நான் நியான் நிறங்களிலும் மற்றும் ஒவ்வொரு கஃப்தானிலும் திரிசூல், பரதநாட்டிய கலைஞரின் பாதம், நந்தி.. என ஐந்து டிசைன்களை வடிவமைச்சேன். பொதுவா இதனை நான் பிளவுசில் தான் வடிவமைப்பேன். ஒரு மாற்றத்துக்காக கஃப்தானில் டிசைன் செய்திருந்தேன்.

அடுத்து வெல்வெட்டில் லெஹங்கா. எனக்கு வெல்வெட் வகை துணிகள் ரொம்ப பிடிக்கும். இந்த உடைகளை வெளிநாட்டில் இருந்து வரவழைச்சேன். இதில் கிரிஸ்டல் மற்றும் பிரஷியஸ் ஸ்டோன்ஸ் கொண்டு டிசைன் செய்திருந்தேன். எல்லாமே கைவேலைப்பாடு என்பதால், உடையின் அழகு மற்றும் ரிச்னெசை கொண்டு வர நினைச்சேன். கடைசியாக எனக்கு மிகவும் பிடிச்ச பாரம்பரிய உடையான புடவை. இதில் அனிமல் பிரின்ட் ஜார்ஜெட் புடவையில் காஞ்சிபுரம் பார்டர் கொண்டு அமைச்சேன். சாட்டின் மற்றும் கண்ணாடி வேலைப்பாடு செய்த புடவை, காஞ்சிபுரம் பட்டு பார்டரில் உடம்பு மட்டும் நெட் துணியில் இருக்கும். எல்லாமே கை வேலைப்பாடு தான். ஒவ்வொன்றும் ஒரு வித்தியாசமா செய்திருந்தேன். இப்ப இருக்கிற தலைமுறையினருக்கு பிடிச்ச மாதிரி செய்யணும்ன்னு தான் இந்த மாதிரி டிசைன்களை கொண்டு வந்தேன்.

முதல் ஷோ எப்படி இருந்தது..?

ரொம்பவே சந்தோஷமா இருந்தது. நான் இத்தனை வருடம் இந்த துறையில் இருந்தாலும், என்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். எனக்கு அதுவே போதுமானதா இருந்தது. ஸ்னேகா அடிக்கடி சொல்வாஃ பேஷன் ஷோவில் கலந்துக்கன்னு. அவ அப்ப சொன்ன போது அதோட அனுபவம் இப்படி இருக்கும்ன்னு தெரியல. இவ்வளவு நாள் எனக்கான வாய்ப்பை விட்டுவிட்டேன் கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. இப்ப இப்படி ஒரு டீம் கொண்ட ஷோவில் கலந்துக்கிட்டது ரொம்பவே பெருமையா இருக்கு. மேலும் இப்ப நிறைய டிசைனர் வந்துட்டாங்க. இந்த ஷோ மூலமா எனக்கான ஒரு பிராண்ட் கிடைச்சு இருக்கு. இனிமேல் இது போன்ற ஷோவில் கலந்து கொள்ளணும்ன்னு முடிவு செய்திருக்கேன்.

பிரைடல் பிளவுஸ்…

மணப்பெண்களுக்கு பிளவுஸ் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஒவ்வொருத்தரும் ஒரு விருப்பத்தோடு வருவாங்க. அதை எல்லாம் நான் பூர்த்தி செய்யணும். ஏனோ தானோன்னு செய்தா நமக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்காது. எதுவாக இருந்தாலும் நேர்த்தியா செய்யணும் அவ்வளவு தான். முன்பெல்லாம் சாதாரணமா தான் பிளவுஸ் இருந்தது. இப்ப புடவையை விட பிளவுஸ் கிராண்டா இருக்கணும்ன்னு நினைக்கிறாங்க.

இப்ப சாதாரணமா கல்யாணத்துக்கு போறவங்க கூட வேலைப்பாடு செய்த பிளவுஸ் விரும்பும் போது, மணப்பெண்கள் அதைவிட மேலாக விரும்புறாங்க. என்கிட்ட ஒரு பெண் அவங்க பிளவுசில் மணப்பையன் மேல் சாய்ந்து இருக்கணும், மணமகன் நெற்றியில் முத்தம் கொடுப்பது என்று அவங்களே பல வித்தியாசமான ஐடியாவோட வராங்க. அவங்க வாழ்க்கையின் முக்கியமான பகுதி, அது ஸ்பெஷலா இருக்கணும்ன்னு நினைக்கிறாங்க. இந்த மாதிரி அழகா மணப்பெண்களுக்கு அமைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஒரு உடையை பார்க்கும் போது தெளிவாகவும், அழகாகவும் இருக்கணும். யாராலும் அணிய முடியாத உடையினை நான் வடிவமைக்க மாட்டேன்.

இப்ப இருக்கிற டிரண்ட்ஸ்…

அது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும். அவங்க தான் பிளான் செய்றாங்க. கல்யாணம் என்பது டிரீம் வெட்டிங் மாதிரி ஆயிடுச்சு. டிரண்டியா இருக்கிற பெண்கள் கை மற்றும் முதுகு பகுதியில் நெட்டெட் வச்சு கேட்கிறாங்க. சிலர் பாரம்பரியமா இருக்கணும்ன்னு கைகளில் வங்கி போன்ற டிசைன் விரும்புறாங்க. 2010ல் பிளவுசில் காசு வைச்சு டிசைன் செய்தேன். அதன் பிறகு நிறைய பேர் டிசைன் செய்ய ஆரம்பிச்சாங்க. இப்ப மணப்பெண்களுக்கு இன்றை காலத்தில் இருக்கும் டிரண்டோடு போகணும். அதனால் அவங்களே பல வித டிசைன்களோடு வராங்க. ஒரு பொண்ணு பிளவுசில் அக்னியை சுத்தி வரமாதிரி வேணும்ன்னு கேட்டாங்க.

கல்யாண பிளவுசில் நெருப்பு இருக்கக்கூடாதுன்னு நான் கலசம் மாதிரி டிசைன் செய்து கொடுத்தேன். அடுத்து கான்ராஸ்ட் கலர்ஸ் இப்ப டிரண்டில் இருக்கு. அதேப்போல் நம்ம அம்மா போட்ட டிசைன்களை நமக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கிறேம். பழசை புதுசா டிசைன் செய்வது தான் ஃபேஷன். பெப்லம் டாப், நியான் நிறங்கள் பெரிய பெரிய பஃப் வச்ச கை வெஸ்டர்ன் உடைகளுக்கு என மறுபடியும் பழைய ஃபேஷன்கள் டிரண்டில் வருது. காலத்திற்கு ஏற்ப நாமும் நம்ம ஃபேஷனும் மாறணும்.

அடுத்தகட்ட திட்டம்?

முதலில் எனக்கு என்னோட டிசைனிங்கில் வித்தியாசம் காண்பிச்சா போதும்னு இருந்துட்டேன். அதிலேயே கவனம் செலுத்தி வி.ஐ.பி மட்டுமில்லை சாதாரண மக்களுக்கும் அவங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப டிசைன் செய்திருக்கேன். எனக்கு பின்னாடி இந்த துறைக்கு வந்தவங்க என்னை தாண்டி போயிட்டாங்க. இருந்தாலும் எனக்கான பிராண்டை நான் ஏற்கனவே கிரியேட் செய்திட்டேன். அதைத் தாண்டி கீதுவால இதுவும் செய்ய முடியும்ன்னு காண்பிக்கணும். எல்லாவற்றையும் விட என்னுடைய பிராண்டை நான் தமிழகம் முழுதும் தெரியபடுத்தணும். இதுநாள் வரை வாடிக்கையாளர்கள் கேட்பதை மட்டுமே டிசைன் செய்து வந்தேன். அடுத்து எனக்கான தனிப்பட்ட உடைகளை வடிவமைச்சு அதை டிஸ்பிளே செய்யணும். ஃபேஷனுக்கு வயது வரம்பே இல்லை. எந்த வயதினரும் அதை பின்பற்ற முடியும். வயதான காலத்திலும், ஒருத்தர் பார்க்க அழகாக இருக்காங்கன்னா அதுக்கு காரணம் ஃபேஷன்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனிது இனிது காமம் இனிது!! (அவ்வப்போது கிளாமர்)
Next post 1000 போர் தந்திரங்கள் கொண்ட அடிமுறை! (மகளிர் பக்கம்)